உமாமகேஸ்வரனால் தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட கந்தசாமி (சங்கிலி)
செல்வன், அகிலனுடன் மூதூரில் கைது செய்யப்பட்டு பின் யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தவரான கரோலினைத்(சக்தி) தொடர்பு கொண்டு அவரைச் சந்தித்துப் பேசுவதன் மூலம் செல்வன், அகிலனுக்கு உண்மையில் நடந்ததென்ன? என்ற விபரத்தை அறிய முயன்றோம். எம்மைச் சந்தித்துப் பேசுவதற்கு உடன்பாடு தெரிவித்திருந்த கரோலின்(சக்தி) திருநெல்வேலியிலுள்ள பாண்டியின் வீட்டுக்கு வந்திருந்தார். மூதூரில் S.R.சிவராம், வெங்கட் ஆகியேரால் கைது செய்யப்பட்டபோது நடந்த சம்பவங்களால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த கரோலின்(சக்தி) அந்தக் கோரச்சம்பவங்களிலிருந்து மீண்டு வரமுடியாதவராகக் காணப்பட்டதோடு செல்வன், அகிலன் கைது செய்யப்படும்போது நடந்த சம்பவங்களையும் விபரித்துக் கூறினார். செல்வன், அகிலனை கைதுசெய்வதற்கு தலைமைவகித்துச் சென்றது S.R.சிவராம் என்பதையும், S.R.சிவராமுடன் வெங்கட்டும் வேறு சிலரும் வந்திருந்தனர் என்பதையும் உறுதிப்படுத்தினார்.
இந்தியாவில் சந்ததியார் தலைமையில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்கள் சென்னையில் தங்கியிருந்து புளொட்டுக்குள் கடந்தகாலத்தில் ஏற்பட்ட தவறுகள் குறித்து மீளாய்வு செய்ததோடு தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபடுவதென்றும் முடிவெடுத்திருந்தனர். நீண்ட காலமாக காந்தீயத்திலும், புளொட்டிலும் செயற்பட்ட புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரான உஷா புளொட்டிலிருந்து வெளியேறி அரசியலிலிருந்து ஒதுங்கி சென்னையில் தங்கியிருந்தார். 1977 இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் குடியேற்றி அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கென உருவாக்கப்பட்ட "காந்தீயம்" என்ற அமைப்பின் தலைவராகச் செயற்பட்டவரும், இதன் காரணத்தால் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டவரும், 1983 மட்டக்களப்பு சிறையுடைப்பினையடுத்து அச்சிறையிலிருந்து தப்பியவருமான டேவிட் ஜயாவும்(அருளானந்தன் டேவிட்) புளொட்டிலிருந்து வெளியேறி அரசியலிலிருந்து ஒதுங்கி சென்னையில் தங்கியிருந்தார்.
சந்ததியார் தலைமையில் வெளியேறியவர்கள் புளொட்டுக்குள் கடந்தகாலத்தில் ஏற்பட்ட தவறுகள் குறித்து மீளாய்வு செய்துகொண்டிருக்கும் போதே புளொட்டிலிருந்து வெளியேறியிருந்தவர்களில் ஒருவரான, தமிழ்நாட்டில் இயங்கிய தமிழீழ மாணவர் அமைப்பான "TESO"வில் பணியாற்றியவரும், சென்னையில் கல்வி கற்றுக் கொண்டிருந்த இலங்கை மாணவர்களில் பலரை புளொட்டுடன் இணைத்தவருமான மைக்கல் இயக்கங்களுக்குள்ளே தோன்றி வளர்ந்து கொண்டிருந்தஅராஜகங்களால் போராட்டத்தில் நம்பிக்கை இழந்தவராய் வெளியேறிச் சென்றுவிட்டிருந்தார். சென்னையில் தொடர்ந்தும் தலைமறைவாக இருப்பது ஆபத்தானதெனக் கருதி சந்ததியார் தலைமையில் வெளியேறியோர் கேரள, கர்நாடக மாநில எல்லைப்பிரதேசத்தில் அமைந்திருந்த கூடலூர் என்னுமிடத்தில் பாதுகாப்பாகத் தங்கிக்கொண்டனர். இக்கால கட்டத்திலேயே புளொட்டின் மத்தியகுழுவில் அங்கம் வகித்தவரும், 1984 நடுப்பகுதியிலிருந்து 1985 ஆரம்பப் பகுதிவரை புளொட்டின் தளநிர்வாகப் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தவருமான டொமினிக்(நோபேட், கேசவன்) புளொட்டுக்குள் நடந்த உண்மைச் சம்பவங்களைத் தொகுத்து நாவல் ஒன்றை எழுத ஆரம்பித்தித்திருந்தார். இந்நாவல் ஈழவிடுதலை போராட்ட இயக்கத்துக்குள்ளும், ஈழவிடுதலைப் போராட்டத்துக்குள்ளும் தோன்றி வளர்ந்துவந்த அராஜகப்போக்குகளை முதன்முதலில் வெளிக்கொணர்ந்த நாவலாக "புதியதோர் உலகம்" என்ற பெயரில் உருப்பெற்று வெளிவந்ததோடு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது.
இந்தியாவில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்களுக்கு விசுவானந்ததேவன் தலைமையிலான தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியினர்(NLFT) முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர். குறிப்பாக, இந்தியாவில் புளொட்டிலிருந்து வெளியேறியோருக்கு நிதியுதவியும், தற்பாதுகாப்புக்காக கைக்குண்டுகளும் கைத்துப்பாக்கியும் வழங்கியிருந்தனர்.
அத்துடன் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து சந்ததியாருடன் நன்கு அறிமுகமாகவிருந்த தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் சிறீசபாரத்தினத்தையும் சந்தித்ததுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும், 1984 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறியிருந்தவருமான ராகவனையும், நிர்மலா நித்தியானந்தனையும் எம்மவர் சந்தித்துப் பேசியிருந்தனர். தமிழீழ விடுதலை புலிகளிலிருந்து வெளியேறியிருந்த ராகவன் எம்மவரின் தற்பாதுகாப்புக்கென கைத்துப்பாக்கி ஒன்றை வழங்கியிருந்தார்.
டொமினிக்கால் (நோபேட், கேசவன்) எழுதி முடிக்கப்பட்ட "புதியதோர் உலகம்" நாவலை அச்சிட்டு வெளிக்கொணர்வதற்கான செயற்பாடுகளில் "புதிய பாதை" பத்திரிகையின் ஆசிரியர் சுந்தரம் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டபின் வெளிவராது தடைப்பட்டிருந்த "புதிய பாதை" பத்திரிகையை 1983 பிற்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளிக்கொணர்ந்த அனுபவத்தைக் கொண்டிருந்தவரான கண்ணாடிச்சந்திரன் சென்னையில் அச்சிடும் பணிகளில் இறங்கியிருந்தார். "புதியதோர் உலகம்" அச்சிட்டு வெளிக்கொணர்வதற்கு தேவையான நிதியை தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியைச்(NLFT) சேர்ந்த விசுவானந்ததேவன் கொடுத்துதவியிருந்தார். சந்ததியாரும் அவருடன் புளொட்டிலிருந்து வெளியேறிவர்களும் அரசியலில் தொடர்ந்தும் முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
உமாமகேஸ்வரனுக்கும் அவரால் தலைமை தாங்கி நடத்தப்படும் அராஜகத்திற்கும் கொலைகளுக்குமெதிரான குரல்கள் புளொட்டுக்குள் பலமாகவும் வேகமாகவும் வளர்ந்து வருவதையும், இது தனது தலைமைக்கு ஆபத்தானதொன்று என்பதையும் உமாமகேஸ்வரன் இனம் கண்டுகொண்டிருந்தார். அதேவேளை தளத்தில் புளொட்டிலிருந்து வெளியேறிய எம்மை கைதுசெய்வதற்கோ அல்லது கொலைசெய்வதற்கோ புளொட்டின் இராணுவப் பொறுப்பாளராகச் செயற்பட்டுக் கொண்டிருந்த சின்னமென்டிஸால் முடியாமலிருப்பதையும், அல்லது அவ்விடயத்தில் சின்னமென்டிஸ் அதிக நாட்டமில்லாமல் இருப்பதையும் உமாமகேஸ்வரன் உணர்ந்திருந்தார். இதனால் புளொட்டை மீண்டும் உயிர்த்துடிப்புள்ள அமைப்பாக்குவதற்கு தளத்தில் வெற்றிகரமான இராணுவத்தாக்குதல் அவசியம் என்பதை உமாமகேஸ்வரன் உணர்ந்திருந்ததோடு, அத்தகைய இராணுவத் தாக்குதல்களின் வெற்றியுடன் புளொட்டிலிருந்து வெளியேறிய எம்மை அழித்தொழித்து விடலாம் என நினைத்திருந்தார். இதற்காகவேண்டி இராணுவப்பயிற்சி முடித்தவர்கள் பலர் இந்தியாவிலிருந்து தளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். இராணுவத்தாக்குதலுக்கான திட்டத்துடன் வாமதேவன் தலைமையில் ஒரு குழு தளம் வந்திருந்த அதேவேளை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தி இயக்கத்தில் இணைந்தவரும், பாலஸ்தீனத்தில் பயிற்சி முடித்து திரும்பியவர்களில் இராணுவத்துறையில் மிகுந்த அறிவுகொண்டவரும், இராணுவத் தொழில்நுட்பம் குறித்த விடயங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவருமான சுனில் உட்பட பலர் தளம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். இதேநேரம் தள இராணுவப்பொறுப்பாளர் சின்னமென்டிஸால் முடியாமலிருந்த அல்லது சின்னமென்டிஸ் அதிகநாட்டம் கொள்ளாமலிருந்த செயலான புளொட்டிலிருந்து வெளியேறிய எம்மை கைதுசெய்தல் என்ற விவகாரத்தை கையாள்வதற்கென புளொட் உளவுப்பிரிவின் பொறுப்பாளரும், பயிற்சி முகாம்களை கொலைக்களங்களாக மாற்றுவதில் முன்னின்று செயற்பட்டவரும், சுழிபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறு உறுப்பினர்களை கொன்று புதைத்தவருமான கந்தசாமி (சங்கிலி) இந்தியாவிலிருந்து தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருந்தவண்ணமே புளொட்டினை அம்பலப்படுத்தும் செயற்பாடுகளை தொடர்ந்தவண்ணமிருந்தோம். அன்றைய நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் மட்டுமே எமக்குப் பாதுகாப்பான ஒரு இடமாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே எமக்குப் பாதுகாப்பு அரணாகவும் விளங்கினர். யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் நாம் செல்வதென்பது மிகவும் ஆபத்து நிறைந்ததொன்றாகவும், எந்த நேரத்திலும் புளொட் அராஜகவாதிகளால் கைது செய்யப்படவோ கொல்லப்படவோ நேரலாம் என்பதால் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் செல்வதை பெருமளவுக்கு தவிர்த்து வந்தோம்.
இக்காலப்பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலாச்சாரக்குழுவினர் முன்முயற்சியில் "மண்சுமந்த மேனியர்" என்றொரு மேடைநாடகத்தையும் "மாயமான்" என்றொரு தெருக்கூத்தையும் தயாரித்து அரங்கேற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிதம்பரநாதன், கவிஞர் சேரன், மற்றும் குழந்தை சண்முகலிங்கம் போன்றோரின் நெறியாள்கையில் "மண் சுமந்த மேனியர்", "மாயமான்" ஆகியவற்றுக்கான தயாரிப்பு வேலைகளை ஆரம்பித்திருந்தனர். எமது முழுநேரத்தையுமே யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளே செலவிட்டு வந்த நாம், போராட்ட சூழலில் மக்களின் அவலங்களை மிகவும் தத்ரூபமாக எடுத்துக் காட்டும் "மண் சுமந்த மேனியர்" மேடைநாடகம், மற்றும் இலங்கை-இந்திய அரசுகளின் திம்புப் பேச்சுவார்த்தையையும் அதன் உள்நோக்கங்களையும் வெளிப்படுத்தும் "மாயமான்" தெருக்கூத்திலும் பங்குபற்றுவதென முடிவெடுத்தோம். இதனடிப்படையில் தர்மலிங்கம், விஜயன், பாலா ஆகியோர் "மண்சுமந்த மேனியர்" நாடகம் மற்றும் "மாயமான்" தெருக்கூத்தில் பங்கேற்கத் தொடங்கினர். " மண் சுமந்த மேனியர்" நாடகம் பாடசாலைகளில் அரங்கேறத் தொடங்கியிருந்ததுடன் "மாயமான்" தெருக்கூத்து கிராமங்கள் தோறும் நடத்தப்பட்டு வந்தது. பல்கலைக்கழக கலாச்சாரக் குழுவின் நிகழ்ச்சிகளில் தர்மலிங்கம், விஜயன், பாலா ஆகியோர் பங்குபற்றியதால் எப்பொழுதெல்லாம் பல்கலைக்கழக கலாச்சாரக் குழுவினர் நிகழ்ச்சிகளுக்கு செல்கின்றார்களோ அவர்களுடன் நாமும் பல்கலைக்கழகத்துக்கு வெளியே சென்றுவர ஆரம்பித்தோம்.
புளொட்டிலிருந்து வெளியேறிய எம்மை அழித்தொழிப்பதற்கான திட்டங்களை நிறைவேற்ற உமாமகேஸ்வரனால் தளம் அனுப்பிவைக்கப்பட்ட கந்தசாமி(சங்கிலி) தலைமையில் ஒரு குழுவினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தனர். கந்தசாமியின்(சங்கிலி) பல்கலைக்கழக வருகை எம்மை அடையாளம் கண்டுகொள்வதும் சரியானநேரம் வரும்போது எம்மைக் கடத்திச்சென்று கொலை செய்வதுமே ஆகும். இந்தியாவில் ஆட்கடத்தலிலும் கொலைகளிலும் கைதேர்ந்தவராக விளங்கிய கந்தசாமியை(சங்கிலி) "டம்பிங் கந்தசாமி" என்று பெரும்பாலானவர்கள் அழைக்குமளவிற்கு புளொட்டில் பயிற்சிக்கு சென்றவர்களைக் கொன்று புதைப்பதில் முதலாம்தரமானவராக விளங்கியிருந்தார்.
நாம் என்றும் போலவே பகலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளும், இரவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதியிலுமே தங்கிக் கொண்டிருந்தோம். இரவுவேளைகளில் நடமாடுவதையும் கூட தவிர்த்து வந்தோம். தளம் வந்திருந்த கந்தசாமி(சங்கிலி) எம்மை கடத்தி அழித்தொழிப்பது என்ற தனது இலக்கை அடைய தன்னாலான அனைத்தையும் செய்தவண்ணமிருந்தார். நாம் இரவில் தங்கியிருக்கும் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு வெளியே வெள்ளை நிற வான்களில் ஆயுதங்கள் சகிதம் கந்தசாமி(சங்கிலி) குழுவினர் பல நாட்களாக இரவுவேளைகளில் மறைவிடங்களில் காத்துக்கிடந்தனர்.
நாம் பல்கலைக்கழக மாணவர் விடுதியிலிருந்து வெளியே செல்லும்போது எம்மைக் கடத்திச் செல்வதே கந்தசாமி(சங்கிலி) குழுவினரின் ஒரே நோக்கமாகும். கந்தசாமி(சங்கிலி) குழுவினரின் திட்டங்கள் எப்படியானவையாக இருக்கும் என்பதை ஊகித்துக்கொண்ட நாம் இரவுவேளைகளில் மாணவர்விடுதியிலிருந்து வெளியேறுவதையோ, இரவுவேளைகளில் மாணவர் விடுதிக்குள் செல்வதையோ தவிர்த்து வந்தோம். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமுமே அன்றைய நிலையில் எமக்கு ஒரே பலமாக இருந்தது.
ஈழ விடுதலைப் போராட்டம் குறுந்தேசிய இனவாத வன்முறை வடிவத்தை நோக்கி...
இராணுவத் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்துவதற்கு தளம் வந்திருந்த வாமதேவன் குழு நிக்கரவெட்டியா பொலிஸ் நிலையத்தை தாக்கி வெற்றிகரமாக ஆயுதங்களைக் கைப்பற்றியிருந்ததுடன், நிக்கரவெட்டியா வங்கியையும் கொள்ளையிட்டுவிட்டு இந்தியா சென்றுவிட்டிருந்தனர். இந்த வெற்றிகரமான தாக்குதல்கள் புளொட்டுக்குள் கூர்மையடைந்துவிட்டிருந்த முரண்பாடுகளை தீர்ப்பதாகவோ அல்லது புளொட்டின் அராஜகங்களுக்கும் தவறான போக்குகளுக்கும் எதிராக புளொட்டுக்குள்ளேயே குரல் கொடுப்பவர்களை திருப்திப்படுத்துவதாகவோ அமையவில்லை என்பதுடன், எம்மைக் கடத்திச் சென்று கொலை செய்வதற்கு கந்தசாமி( சங்கிலி) குழுவால் மேற்கொள்ளப்பட்ட பகீரதப்பிரயத்தனம் கூட வெற்றிபெற்றிருக்கவில்லை.
பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சி பெற்றபின் தளம் வந்திருந்த சுனில் தனது இராணுவ தொழில்நுட்ப அறிவைக் கொண்டு தனது சொந்தத் திறமையால், யாழ்ப்பாணத்தில் கோட்டை இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல் நிகழ்த்தும் போது அதனை முன்கூட்டியே மக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பி உசார்ப்படுத்தும் கருவியை (Early Warning Alarm) அறிமுகப்படுத்தி இராணுவ எறிகணைத் தாக்குதலால் மக்களுக்கு ஏற்படும் உயிர்ச்சேதங்களை தவிர்ப்பதற்கு தன்னாலானவற்றை செயற்படுத்திக் கொண்டிருந்தார். புளொட் தவறான பாதையில் சென்றுகொண்டிருந்த போதும் கூட சுனிலின் இந்த முயற்சி அன்று பலரின் வரவேற்பைப் பெற்றிருந்ததுடன் பல பெறுமதிமிக்க உயிர்களைக் காப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. புலிகள் இராணுவத்தைத் தாக்கும் போது இராணுவம் மக்கள் மேல் திருப்பி தாக்கி அவலங்களை விளைவிக்கும் தந்திரோபாயங்களை கையாண்டனர். அப்பாவி மக்களின் அநியாயமான உயிரிழப்புகளை கண்ணுற்ற மக்கள் தங்களின் பின்னே அணிதிரள்வார்கள் என்று கணித்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இத்தாக்குதல்கள் மூலம் மக்களின் தொகையான இழப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளது பிரச்சாரத்துக்கு பயன்படும் வகையில் திட்டமிடப்படும். மாறாக, மக்களைக் காவுகொள்ள ஏவப்படும் எறிகணைத் தாக்குதல்களிலிருந்து அவர்கள் தற்பாதுகாப்பு தேடும் வகையில் ஒதுங்கி விலக எச்சரிக்கை ஒலிபெருக்கியால் மக்களை விழிப்படையச் செய்து மக்களது உயிர்சேதங்களை குறைக்கும் இந்நடவடிக்கை முதன்முதலில் சுனிலினால் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களின் விடுதலைக்காகப் போராடும் உண்மையான போராளிகள் இவ்வாறுதான் இருப்பார்கள் என மக்களால் இது பெரிதும் பேசப்பட்டது.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் இலங்கை அரசபடைகளுக்கெதிரான இராணுவரீதியான தாக்குதல்களை அனைத்து ஈழவிடுதலை இயக்கங்களும் முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில், அப்பாவிச் சிங்கள மக்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்துவதன் மூலம் எமது நேசசக்திகளாக இருக்க வேண்டிய சிங்கள மக்களை இனவாத இலங்கை அரசின் பக்கம் அணிதிரள வைக்கும் அபாயகரமான செயற்பாடுகளும், ஈழவிடுதலைப் போராட்டத்தை அதன் அழிவுப்பாதையை நோக்கி நகர்த்திச் செல்லும் செயற்பாடுகளும் தொடர்ந்த வண்ணமிருந்தன. மே 4, 1985 காரைநகர் கடற்படைத் தளம் மீது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) தாக்குதல் நடத்தியது. இச் சம்பவத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் (EPRLF) சேர்ந்த 25 போராளிகள் உயிரிழந்ததுடன், தாக்குதலின்போது விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதற்தடவையாக சோபா என்ற பெண்போராளி களப்பலியாகியிருந்தார். மே 9, 1985 மிசோ தலைமையில் தமிழீழ விடுதலை இயக்கத்தால்(TELO) கொக்காவில் இராணுவ முகாம் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் மிசோ உட்பட 9 தமிழீழ விடுதலை இயக்க (TELO) போராளிகள் உயிரிழந்தனர். மே 14, 1985 வில்பத்து காட்டுப்பாதை வழியாக விக்டர் தலைமையில் அநுராதபுரம் நகரத்தைச் சென்றடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள், நகரத்தின் மத்தியில் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் நிராயுதபாணிகளான அப்பாவிப் பொதுமக்கள் 146 பேர் (பெரும்பாலானவர்கள் சிங்கள மக்கள்) கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர்.
வீடியோ ஆவணத்தைப் பார்வையிட பிளே (அம்புக்குறி) பட்டனை அழுத்தவும்
இத்தாக்குதலின் எதிரொலியாகவும், இத்தாக்குததலுக்கு பழிவாங்கும் முகமாகவும் மே 15, 1985 நெடுந்தீவிலிருந்து நயினாதீவுக்கு சென்றுகொண்டிருந்த "குமுதினி" என்ற படகில் பயணித்துக் கொண்டிருந்த நிராயுதபாணிகளான 37 அப்பாவித் தமிழ்பயணிகளை இலங்கைக் கடற்படையினர் கோரத்தனமாக கொன்றொழித்திருந்ததுடன், மே 17, 1985 நற்பிட்டிமுனையில் 35 அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை அரசபடைகளால் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
"குமுதினி" என்ற படகில் பயணித்துக் கொண்டிருந்த நிராயுதபாணிகளான 37 அப்பாவித் தமிழ்பயணிகளை இலங்கைக் கடற்படையினர் கோரத்தனமாக கொன்றொழித்தனர்
சிங்கள பேரினவாத அரசுக்கெதிரான போராட்டமாக உருப்பெற்றெழுந்த ஈழவிடுதலைப் போராட்டம், அப்பாவிச் சிங்கள மக்களை கிராமங்களிலும், நகரங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரத்தனமாகக் கொன்றொழிக்கத் தொடங்கியதன் மூலம், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கானதும், இனஒடுக்குமுறைக்கெதிரானதுமான போராட்டம் என்ற நிலையில் இருந்து குறுந்தேசிய இனவாத வன்முறை வடிவம் கொண்ட போராட்டமாக சிங்கள மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துக்காட்டி நின்றது.
(தொடரும்)
1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1
2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2
3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3
4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4
5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5
6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6
7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7
8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8
9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9
10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10
11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11
12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12
13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13
14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14
15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15
16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16
17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17
18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18
19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19
20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20
21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21
22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22
23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23
24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24
25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25
26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26
27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27
28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28
29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29
30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30
31. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31
32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32
33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33