மூதூரில் படுகொலை செய்யப்பட்ட செல்வன், அகிலன்
தமிழீழ விடுதலை இயக்க(TELO) வட்டுக்கோட்டை முகாமிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்த போது புளொட்டின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் செல்வன் (சின்னத்துரை கிருபாகரன்), மூதூர் மாவட்டப் பொறுப்பாளர் அகிலன் (சாமித்தம்பி லோகேந்திரராஜா) ஆகியோர் பங்குனி 26,1985 மூதூரில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டதாக அறிந்தோம். இலங்கை அரசபடைகளால் தேடப்பட்ட நிலையிலும் புளொட்டின் வளர்ச்சிக்காக முழுநேரமாக தம்மை அர்ப்பணித்து செயற்பட்டவர்களை கடத்திச் சென்றது இலங்கை இராணுவமோ அல்லது இஸ்ரேலிய மொசாட் உளவுப்படையினரால் பயிற்றுவிக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினரோ அல்ல, புளொட்டுக்குள் தமது சொந்தத் தோழர்களை மட்டுமின்றி சக இயக்க உறுப்பினர்களையும் தனது பதவிவெறிக்காகக் கொன்றொழித்த உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் அவரது ஏவல்நாய்களாக தளத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்த பதவிமோகமும் கொலைவெறியும் கொண்ட ஒரு கும்பல்தான்.
செல்வன், அகிலன் புளொட்டினால் கடத்திச் செல்லப்பட்டதை அறிந்த நாம் அவர்களை விடுதலை செய்யக்கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சுற்றிய இடங்களில் இரவுவேளைகளில் சுவரொட்டிகளை ஒட்டினோம். இதன் மூலம் புளொட்டின் தொடர்ந்துவரும் அராஜகப் போக்கை அம்பலப்படுத்தினோம்.
செல்வன், அகிலன் எதற்காகப் புளொட்டினால் கடத்தப்பட்டனர்? காந்தியம் என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து திருகோணமலையில் காந்தீயப் பணிகளில் ஈடுபட்டுவந்த செல்வன், அகிலன் அதன் தொடர்ச்சியாக புளொட்டுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். ஆனால் பின்னாட்களில் புளொட்டின் நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்களையும், அதிருப்தியையும் செல்வன், அகிலன் கொண்டிருந்தனர். இதனால் உமாமகேஸ்வரனின் பார்வையில் செல்வன், அகிலன் தலைமைக்கு எதிரானவர்கள் எனக் கணிக்கப்பட்டிருந்தனர்.
அதேவேளை மத்தியகுழு உறுப்பினரான ஈஸ்வரன், அவரை நான் அறிந்த காலத்திலிருந்து (1983 நடுப்பகுதியிலிருந்து) கடின உழைப்பாளியாக இருந்தபோதும் எப்பொழுதும் அமைப்பை முதன்மைப்படுத்துவது என்பதை விட, பிரதேசவாதத்தை முன்னிறுத்தி சிந்திக்கும் ஒருவராகவும், திருகோணமலையைச் சேர்ந்தவர்களிடத்தில் நல்லுறவற்றும் காணப்பட்டார். குறிப்பாக திருகோணமலையைச் சேர்ந்த பார்த்தன், செல்வன், அகிலன் போன்றவர்களுடன் ஈஸ்வரனுக்கு நல்லுறவு இருக்கவில்லை. இந்த முரண்பாடு அரசியல் கருத்துக்கள் பற்றிய முரண்பாடாக அமையவில்லை. மாறாக, தனிநபர் முரண்பாடுகளாகவே காணப்பட்டது.
நீண்டகாலமாக காந்தீயம், புளொட் அமைப்புக்களில் செயற்பட்டு வந்த மத்தியகுழு அங்கத்தவரான ஈஸ்வரன் அரசியல் அறிவில் மிகவும் பலவீனமான ஒருவராகக் காணப்பட்ட அதேவேளை, மத்தியகுழுவில் அங்கம் வகிக்காத செல்வன் அரசியலில் ஓரளவு வளர்ச்சியடைந்தவராகவும், அரசியல் வகுப்புக்கள், அரசியல் பாசறைகளை நடத்தும் ஒருவராகவும் காணப்பட்டதோடு தலைமைத்துவப் பண்புகளையும் கூட தன்னகத்தே கொண்ட ஒருவராகவும் விளங்கினார். இதன் காரணத்தால் செல்வன் யாழ்ப்பாணம் வந்து தங்கி நிற்கும் போதெல்லாம் அரசியல் கருத்தரங்குகளையும், அரசியல் வகுப்புக்களையும் மேற்கொண்டு வந்தார். இலங்கை அரசபடைகளால் தேடப்படும் நிலை இருந்தபோதும் கூட திருகோணமலை, மூதூர் பிரதேசங்களில் புளொட்டை ஒரு பலமான அமைப்பாக செல்வனும் அகிலனும் கட்டியெழுப்பியிருந்ததோடு, அம்பாறை மாவட்டத்தில் புளொட்டின் அமைப்பை பலமானதாக மாற்றுவதற்கு அம்பாறை மாவட்டப் பொறுப்பாளர் ரகுவுடன் இணைந்து செல்வன் செயற்பட்டிருந்தார். செல்வனிடம் காணப்பட்ட இத்தகைய பண்புகள் அரசியல் அறிவில் மிகவும் பலவீனமான ஈஸ்வரனுக்கு இயல்பாகவே செல்வன் மீது காழ்ப்புணர்வு ஏற்படக் காரணமாய் அமைந்திருந்தது.
திருகோணமலையிலிருந்து டொமினிக்கை சந்திப்பதற்கென செல்வன் யாழ்ப்பாணம் வந்திருந்தவேளையில் உரும்பிராயில் புளொட் உறுப்பினர்களுடன் S.R.சிவராம் நிற்பதைக் கண்டிருந்தார். S.R.சிவராமை கண்ட உடனேயே S:R.சிவராமை புளொட்டுக்குள் உள்வாங்கியது யார் என்ற கேள்வியையும் கூடவே எழுப்பியிருந்தார். மட்டக்களப்பை சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவனான S.R. சிவராமைப் பற்றி நன்கு அறிந்திருந்த பேராதனைப் பல்கலைக்கழக பல்வைத்தியத்துறை மாணவனான செல்வனால் எழுப்பப்பட்டிருந்த கேள்வி S.R.சிவராம் காதுகளுக்கு சென்றிருந்தது. இதனால் செல்வன் மீதான வெறுப்பை தனக்கு நெருக்கமானவர்களுக்கு S.R.சிவராம் வெளிப்படுத்தியிருந்தார். நாம் புளொட்டிலிருந்து வெளியேறிய பின்னர் புளாட்டில் பாசறை வகுப்புகளை நடத்தியவர்களில் ஒருவரும், தற்போது மேற்கு ஜரோப்பாவில் வசித்துவரும் "இடதுசாரி"யுடன் பேசும்போது "கிழக்கு மாகாணத்தில் சில களையெடுப்புக்களை செய்தால்தான் நாம் முன்னுக்கு வரமுடியும்" என்று S.R சிவராம் கூறியதாக தெரிவித்தார். அந்தளவுக்கு செல்வன் மீதான S.R சிவராமின் வெறுப்பும், S.R சிவராமினது பதவிவேட்கையும் காணப்பட்டது.
சதிகளிலும் கொலைகளிலும் "மாமனிதன்" S.R.சிவராம்
புளொட்டிலிருந்து நாம் வெளியேறிய பின்பு தளத்தில் தனது தலைமையைப் பாதுகாப்பதையே ஒரே நோக்கமாகக் கொண்டு உமாமகேஸ்வரனால் "சுத்திகரிப்பு" வேலைகள் திட்டமிடப்பட்டிருந்தன. ஜீவன், விபுல், சிவானந்தியை இந்தியாவுக்கு கொண்டு செல்லும் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, செல்வன், அகிலனை இந்தியாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். உமாமகேஸ்வரனினதும் அவரது ஏவல்நாய்களதும் நயவஞ்சகமான திட்டங்களை ஓரளவு இனம்கண்டு உணர்ந்திருந்த செல்வனும், அகிலனும் திருகோணமலையிலேயே தங்கியிருந்தனர்.
ஆனால் செல்வன், அகிலனை என்ன செய்வது?, எப்படிக் கையாளுவது? என்ற திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்தன. உமாகேஸ்வரனின் ஏவல்நாய்களாக செயற்பட்ட S.R.சிவராமும், மத்தியகுழுவைச் சேர்ந்த ஈஸ்வரனும் இணைந்து ஏற்கனவே செல்வன், அகிலன் குறித்து வகுக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வந்தனர். திருகோணமலை, மூதூர், அம்பாறைப் பகுதிகளில் புளொட்டின் வளர்ச்சிக்காக உழைத்த செல்வனும், அகிலனும் இப்பொழுது உமாமமகேஸ்வரனுக்கு வேண்டப்படாதவர்களாக மாறியிருந்ததோடு, செல்வன் மீதான தனது காழ்ப்புணர்ச்சியை ஈஸ்வரன் தீர்த்துக் கொள்ள வேண்டியவராகவும், S.R.சிவராமின் பதவி வேட்கைக்கு செல்வன், அகிலன் களையெடுக்கப்பட வேண்டியவர்களாகவும் இருந்தனர்.
செல்வன், அகிலனை கைது செய்வதற்கு அல்லது கொன்றொழிப்பதற்கு இராணுவப்பயிற்சியும், உமாமகேஸ்வரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், கொலைகளில் தேர்ச்சிபெற்றவருமான ஒருவர் ஈஸ்வரனுக்கும் சிவராமுக்கும் தேவைப்பட்டது. இந்தியாவில் பயிற்சி முகாம்களில் சித்திரவதைகளையும் கொலைகளையும் செய்து கைதேர்ந்தவரும், சுழிபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறு உறுப்பினர்களை சங்கிலி என்ற கந்தசாமியுடன் இணைந்து கொன்று புதைத்தவரும், தற்போது பிரான்ஸ் நாட்டில் அல்ஜீரியப் பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருபவருமான சுழிபுரத்தைச் சேர்ந்த வெங்கட்(கண்ணதாசன்) தமது திட்டங்களை கச்சிதமாக நிறைவேற்றுவதற்குப் பொருத்தமானவராக இனம் காணப்பட்டார்.
ஏ.கே 47 சகிதம் S.R சிவராமும், வெங்கட்டும் ஈஸ்வரனின் ஆசீர்வாதத்துடன் திருகோணமலை புறப்பட்டனர். செல்வன், அகிலன், கரோலின்(சக்தி) ஆகியோர் மூதூரில் S.R.சிவராமாலும் வெங்கட்டாலும் கைது செய்யப்பட்டனர். செல்வன், அகிலனிலிருந்து கரோலின்(சக்தி) தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார். செல்வனையும் அகிலனையும் கைதுசெய்த S.R. சிவராமும் வெங்கட்டும் அவர்களை மோசமாக சித்திரவதை செய்தபின் கொலை செய்து புதைத்தனர். நிராயுதபாணிகளான செல்வன், அகிலனை கோழைத்தனமாக கொலை செய்து தமது கொலைவெறியை தீர்த்துக்கொண்ட S.R சிவராமும் வெங்கட்டும் (கண்ணதாசன்) அந்த "மகிழ்ச்சி" தரும் தகவலை ஈஸ்வரனுக்கும் உமாமகேஸ்வரனுக்கும் தெரியப்படுத்தினர்.
( அன்றைய தீப்பொறி வெளியீடு தாங்கி வந்த செய்தி )
பேராதனைப் பல்கலைக்கழக பல்வைத்தியத்துறை மாணவனான செல்வன்(சின்னத்துரை கிருபாகரன்), 1981ல் காந்தீயம் திருகோணமலை மாவட்டத்தில் தனது வேலைத்திட்டங்களை ஆரம்பித்தபோது பார்த்தனுடன் இணைந்து முன்னின்று உழைத்தவர்களில் ஒருவர். உமாமகேஸ்வரன் இலங்கை அரசினால் தேடப்பட்ட போது அவருக்கு திருகோணமலையில் புகலிடம் கொடுத்து பாதுகாப்பளித்த பணியை செல்வன் பொறுப்பெடுத்து செவ்வனே செய்தவராவர். மட்டக்களப்பில் புளொட்டில் செயற்பட்ட அசோக்(யோகன் கண்ணமுத்து) கைதாகி இருந்த வேளையில், அவரை விடுதலை செய்யக் கோரி போராட்டங்களை மட்டக்களப்பில் செய்த வேளை அரச படைகளால் கைது செய்யப்பட்டவர். அக்கால கட்டத்தில் புளட்டின் தென்னிலங்கை இடதுசாரிகளுடனான தொடர்பில் முக்கிய பங்கை வகித்த செல்வன் பலத்த சித்திரவதையின் போதும் அமைப்பையோ, அமைப்பின் தோழர்களையோ, தொடர்பில் இருந்த தென்னிலங்கை இடதுசாரிகளையோ காட்டிக் கொடுக்காத மனஉறுதி மிக்கவராகத் திகழ்ந்தவர்.
அமைதியான சுபாவமும் ஆரவாரமில்லாத கடின உழைப்பையும் கொண்ட அகிலன்(சாமித்தம்பி லோகேந்திரராஜா) மூதூரில் புளொட்டை பலமிக்க அமைப்பாக மாற்றுவதற்கு கடினமாக உழைத்துக் கொண்டிருந்த அதேவேளை, மூதூரில் இனக்கலவரம் ஏற்பட்டபோது தமிழ் முஸ்லீம் மக்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்துக்காக முன்னின்று உழைத்தவர்.
செல்வன், அகிலன் படுகொலைகள் மூலம் கிழக்கு மாகாணத்தில் "ஒளிமயமான" எதிர்காலம் பிறக்கும் என ஈஸ்வரனும் S.R. சிவராமும் எண்ணினர். உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில், மத்தியகுழு உறுப்பினரான ஈஸ்வரனினனதும், S.R.சிவராமினதும் சதித்திட்டத்தின்படி, தன்னை ஒரு "மார்க்சிஸ்ட்" என்று நாகூசாமல் அழைத்துக் கொண்ட (மார்க்சிசத்துக்கும் S.R.சிவராமுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது) S.R.சிவராமினதும் வெங்கட்டினதும் கரங்களால் செல்வன், அகிலன் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இதன்மூலம் சதிகளிலும், கொலைகளிலும் "மாமனிதன்" ஆக S.R. சிவராமால் முடிந்தது.
"மாமனிதன்" ஆன S.R. சிவராம்(தராக்கி)
செல்வனையும் அகிலனையும் மூதூரில் கொன்று புதைத்துவிட்டு செல்வன், அகிலன் இருவரையும் இந்தியாவுக்கு விசாரணைக்கு அனுப்பிவிட்டதாக மத்தியகுழு உறுப்பினர் ஈஸ்வரனும், S.R.சிவராமும் தளத்தில் அனைவருக்கும் தெரிவித்திருந்தனர். செல்வன், அகிலனின் படுகொலை மூலம் ஈஸ்வரனினதும் S.R.சிவராமினதும் கிழக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நீண்டகாலக் "கனவை" நனவாக்க முயன்றனர்.
செல்வன், அகிலன் கொலையை அடுத்து அவர்களின் இடத்துக்கு தன்னை ஒரு "இடதுசாரி" பாரம்பரியத்திலிருந்து வந்தவரெனக் கூறியவரும், பாசறைகளில் அரசியல் வகுப்புக்களை எடுத்துவந்தவரும், எந்தவித பொறுப்புகளுமில்லாமல் எப்பொழுதுமே வெறுமனே அரசியல் வகுப்புக்களை எடுத்துக் கொண்டிருப்பதாக குறைப்பட்டுக் கொண்டிருந்தவரும், ஈஸ்வரனினதும் S.R.சிவராமினதும் மிகமிக நெருங்கிய நண்பனாகத் திகழ்ந்தவருமான பிரசாத் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் கிழக்கு மாகாணத்தை தமது கைக்குள் கொண்டுவரும் "கனவை" ஈஸ்வரனும் S.R.சிவராமும் செயல்வடிவமாக்க முயன்ற அதேவேளை பிரசாத்தின் நீண்டநாட்களாக இருந்து வந்த "பொறுப்புகளின்றி வேலை செய்துகொண்டிருக்கின்றேன்" என்ற குறையும் கூட நிறைவேறியது.
ஈஸ்வரனும் S.R.சிவராமும் இந்தியாவுக்கு விசாரணைக்கென செல்வனையும் அகிலனையும் அனுப்பிவைத்துள்ளதாக கூறியபோதும், இந்தவிடயத்தை புளொட்டுக்குள் இருந்த ஒரு பிரிவினர் - ஈழ விடுதலைப் போராட்டத்தில் உளசுத்தியுடனும், தன்னலமற்றும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டுவந்த ஒரு பிரிவினர் - ஈஸ்வரனினதோ, தளநிர்வாககுழுவினதோ அல்லது தளநிர்வாகப் பொறுப்பாளரது புனைகதைகளை நம்புவதற்கு தயாராக இருக்கவில்லை. இவர்கள் செல்வன், அகிலனுக்கு நடந்ததென்ன? என்ற உண்மைநிலையை அறிய முற்பட்டதோடு, புளொட்டில் உள்ள அராஜகவாதிகளுடன் ஒத்துழைக்க மறுத்து உண்மைக்காகவும், சரியான திசைவழியில் ஈழவிடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தனர்.
தளத்திலும் இந்தியாவிலும் புளொட்டுக்குள் அணிச்சேர்க்கைகள் உருவாகத் தொடங்கின. நான் அறிந்தவரை மகளிர் அமைப்பைச் சேர்ந்த செல்வி(செல்வநிதி தியாகராஜா), வனிதா(சாந்தி), நந்தா, மீரா, மித்திரா, கரோலின்(சக்தி) உட்பட மகளிர் அமைப்பில் ஒருபகுதியினரும், மாணவர் அமைப்பைச் சேர்ந்த விமலேஸ்வரன், சுகந்தன்(சிறி), கலா, குரு, கவிராஜ், ஹப்பி, அர்ச்சுனா, திரு, சியாமாஸ்டர் உட்பட மாணவர் அமைப்பில் ஒருபகுதியினரும், மக்கள் அமைப்பில் செயற்பட்ட சுண்ணாகம் ஜ.பி, கரவெட்டி சிறீ, கணேஷ், சேனா, பத்தன், வவுனியா மாவட்டத்தில் செயற்பட்ட வவுனியா மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்(சிறி), கபிலன், வண்ணன், தவராசா, யோகன், ராஜன், வவுனியா தம்பி, சண்முகம், பெரியண்ணை, அந்து உட்பட புளொட்டின் அராஜகங்களுக்குக்கெதிராகவும், உமாமகேஸ்வரனைப் பாதுகாக்க முனையும் அராஜகவாதிகளுக்கெதிராகவும், "அனுபவமுதிர்ச்சி" கொண்ட "இடதுசாரி"களின் மௌனத்துக்கும், திசைவிலகல்களுக்கும் எதிராகவும் குரல் எழுப்பத் தொடங்கியிருந்தனர்.
செல்வி(செல்வநிதி தியாகராஜா) (புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதைகளின் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.)
(விமலேஸ்வரன்)
( மக்களுக்கெதிரான அனைத்து இயக்கங்களின் அராஜகங்களுக்கும் கடத்தப்பட்டு காணாமல் போன பல்கலைக்கழக மாணவர் விஜிதரனை விடுவிக்கக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரதப் போராளிகளில் ஒருவராக விமலேஸ்வரன். பின்னர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். )
புளொட்டுக்குள் அங்கம் வகித்த கீழணி உறுப்பினர்களாகவும் இடதுசாரி அரசியலில் "அனுபவமுதிர்ச்சி" அற்றவர்களாகவும் இருந்த பலர் உண்மைக்காகவும், நீதிக்காகவும் வேண்டி போராடத் தொடங்கிவிட்டிருந்தனர். ஈழவிடுதலைப் போராட்டத்தில் உமாமகேஸ்வரனினதும், புளொட் என்ற அமைப்பினதும் தலைமைப்பாத்திரம் குறித்து பலமான கேள்விகளை எழுப்பத் தொடங்கியிருந்தனர்.
ஆனால் மத்தியகுழு உறுப்பினர்களாக இருந்த குமரன்( பொன்னுத்துரை), பெரியமுரளி, அசோக்(யோகன் கண்ணமுத்து) ஆகியோர் தளத்தில் செல்வன், அகிலன் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட பின்னரும் கூட, செல்வனும் அகிலனும் விசாரணைக்காக பின்தளம் அனுப்பப்பட்டுவிட்டதாக் கூறிக் கொண்டிருந்தனர்.
குமரன்(பொன்னுத்துரை) பெயரளவில் மட்டுமே தளநிர்வாகப் பொறுப்பாளராகக் செயற்பட்டுக் கொண்டிருந்தார். உமாமகேஸ்வரனுடனான நேரடித்தொடர்பில் தளத்தில் ஈஸ்வரன் அனைத்துச் சதிவேலைகளையும் திட்டமிட்டு செயற்படுத்திக் கொண்டிருந்தார்.
"அனுவப முதிர்ச்சி" பெற்ற "இடதுசாரிகள்" என தம்மை அழைத்துக் கொண்ட சுப்பையா (கௌரிகாந்தன்), பாசறை ரவி(முத்து), பிரசாத் போன்றோர் செல்வன், அகிலன் கடத்தப்பட்டதையோ அல்லது அவர்கள் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டதையோ அறிந்திராத அப்பாவிகள் போல் கவைக்குதவாத அரசியல் பேசிக்கொண்டிருந்தனர். இந்த இடதுசாரிகள் சிலருக்கு கிழக்கு மாகாணத்தில் சில களையெடுப்புக்களின் அவசியம் குறித்து S.R.சிவராம் ஏற்கனவே கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
புளொட்டினுள் நடந்த அராஜகம் குறித்து குமரன்(பொன்னுத்துரை), பெரியமுரளி போன்றோர் மௌனம் சாதித்ததற்கு ஒரு காரணம் உமாமகேஸ்வரனின் கொலைக்கரங்கள் தம்மை நோக்கியும் நீண்டிருந்தன என்று கருதலாம். "சந்ததியாரின் ஆட்கள்" என்ற வகையான பார்வை குமரன்(பொன்னுத்துரை), பெரியமுரளி போன்றோர் மேல் விழுந்திருந்தது உண்மைதான். ஆனால், எம்முன்னுள்ள கேள்வி என்னவெனில் இலங்கை அரசின் இனஒடுக்குமுறைக்கெதிராக, இலங்கை அரசின் இனப்படுகொலைக்கெதிராக, அநீதிகளுக்கெதிராக போராட முன்வந்த நாம், ஈழவிடுதலைப் பேராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற எமது அமைப்புக்குள் அராஜகமும் கொலைவெறியும் மேலோங்கி அமைப்பில் அங்கம் வகித்தவர்களையே பலியெடுத்துக் கொண்டிருக்கையில், ஈழவிடுதலைப் போராட்டத்தை அதன் அழிவுப்பாதையில் இட்டுச் சென்று கொண்டிருக்கையில் எம் ஒவ்வொருவரினதும் கடமை என்ன? என்பதே ஆகும்.
குமரன் (பொன்னுத்துரை), பெரிய முரளி ஆகியோர் காந்தீயம் உருவாக்கப்பட்ட காலங்களிலும் சரி, புளொட் உருவாக்கப்பட்ட காலங்களிலும் சரி தமது "சொந்தப் பாதுகாப்பு" கருதாமல் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தனர். ஆனால் புளொட்டுக்குள் அராஜகம் கோலோச்சத் தொடங்கி பலரின் உயிர்களை பலிகொண்ட பின்பும் கூட புளொட்டின் அராஜகங்களுக்கெதிராகப் போராடுவதற்கு தவறியிருந்தனர்.
தமிழீழ விடுதலை இயக்க(TELO) பாதுகாப்பிலிருந்து வெளிவந்த நாம் பல்கலைக்கழக மாணவர் மத்தியில் இருப்பதன் மூலம் புளொட்டின் அராஜகங்களில் இருந்து எம்மைப் பாதுகாக்க முற்பட்டோம். எம்முடன் தலைமறைவாகியிருந்த கொக்குவில் செல்வனும், கைதடியில் எமக்குப் பாதுகாப்பளித்த சண்முகநாதனும் தமது வீடுகளுக்குச் செல்வதாகக் கூறிச்சென்று விட்டனர். தர்மலிங்கம், பாலா, விஜயன் ஆகியோருடன் நானும் பகல்வேளைகளில் பல்கலைக்கழக வளாகத்தினுள் புளொட்டை அம்பலப்படுத்தும் செயலை ஆரம்பித்தோம். இரவுவேளைகளில் பல்கலைக்கழக மாணவர்களுடன் அவர்களது தங்குவீடுதிகளில் தங்கினோம். பகலில் பல்கலைக்கழக வளாகமும் இரவில் பல்கலைக்கழக மாணவர் தங்குவிடுதியும் என நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பலர் எம்மை பாதுகாப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்ததோடு, எமது உணவுத் தேவையையும் கூட ஆரம்பகாலங்களில் கவனித்து வந்தனர். இவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள் கண்ணன்(மட்டக்களப்பு), விஜயரட்ணம்(மட்டக்களப்பு), ஈசா(மட்டக்களப்பு), தில்லைநாதன்(யாழ்ப்பாணம்), அருள்(கல்வியங்காடு), பரம்(அராலி), ராஜ்மோகன்(நவாலி), யோகன்( புளொட் இராணுவப் பொறுப்பாளர் காண்டீபனின் சகோதரன் - நவாலி), சிறி(கரவெட்டி) ஆகியோராவர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் எம்மை வந்து சந்திப்பவர்களுக்கு புளொட்டுக்குள் உண்மையில் நடந்ததென்ன? நடந்துகொண்டிருப்பதென்ன? என்பதை தெளிவுபடுத்தத் தொடங்கினோம்.
(தொடரும்)
1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1
2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2
3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3
4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4
5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5
6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6
7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7
8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8
9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9
10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10
11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11
12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12
13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13
14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14
15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15
16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16
17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17
18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18
19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19
20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20
21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21
22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22
23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23
24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24
25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25
26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26
27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27
28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28
29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29
30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30
31. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31
32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32