1977 ஆம் ஆண்டு தேர்தலில் போது வண்ணை ஆனந்தன் என்ற ஆசாமி “மரம் பழுத்தால் வெளவால்களை” (வெளிநாடுகளை) அழைக்கத் தேவையில்லை. அவை தாமாக பறந்து வரும் என கதை விட்டு, இளைஞர்களின் இரத்தத்தினை சுடாக்கி இரத்தத் திலகமிடவைத்தும்; தாழ்த்தப்பட்ட சாதியினைச் சேர்ந்த உடுப்பிட்டி வட்டாரக்கல்வி அதிகாரியாக இருந்த இராசலிங்கம் அவர்களை உடுப்பிட்டி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி, உலகமே உடுப்பிட்டி தொகுதியின் முடிவினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது என்று தமிழ் குறுந்தேசிய வெறியினை ஊட்டி தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் வென்று பாராளுமன்றம் சென்றதுடன் மக்களிற்கு கொடுத்த தமிழீழ வாக்குறுதியினையும் காற்றில் பறக்கவிட்டனர்.
தமிழ் காங்கிரஸ் கட்சியிலோ, தமிழரசுக் கட்சியிலோ எந்தக் காலத்திலும் தாழ்த்தப்பட்ட சாதியினரை உள்வாங்கி அவர்களை வேட்பாளர்களாகக் கூட நிறுத்தியது கிடையாது. காங்கிரசும், தமிழரசுக் கட்சியும் தமிழ் வேளாள ஆதிக்க சாதியினரின் கட்சிகளாகவே இருந்தன. தேர்தல் காலங்களில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் வாக்குகளை வெல்வதற்க்காக பல நாடகங்களை அரங்கேற்றினர். குறிப்பாக சமபந்தி போசனம், தேனீர்க் கடைகளில் மூக்குப் பேணியிலிருந்து கண்ணாடி தம்ளரில் தேனீர் வழங்குதல் போன்றவற்றினை கூறலாம்.
1983 இனக் கலவரத்தின் பின்னர் இயக்கம் ஒன்று “பயிற்சி எடுக்கும் ஒரு சில ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் இந்திரா அம்மையாரின் இந்திய ராணுவம் இறங்கி தமிழீழம் பிடித்துத் தரும்” எனக் கூறியது.
இன்னுமொரு இயக்கம் 1985 பொங்கலுக்கு முன் தமிழீழம் நிச்சயமாக அமைப்போம் என்றது.
புலிகள் இயக்கம் இறுதி யுத்தத்திற்க்கான ஆயுதக் கொள்வனவுக்கான நிதி சேகரிப்பு என்று கூறி உள்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் பொன்னும், கோடி கோடியாக பணமும் சேர்த்தனர்.
முள்ளிவாய்க்காலில் புலிகளும் மக்களும் சிக்குண்டு உயிருக்காக இரந்த போது, “வணங்காமண்” கப்பலில் வெளிநாட்டினருடன் போய் மனிதாபிமான உதவி வழங்கி, அவர்களை காப்பாற்றப்போகின்றோம் என புலம்பெயர் தேசமெங்கும் தாய் நாட்டையும், சொந்த உறவுகளையும் நேசித்த மக்களிடம் பணமும், பொருளும் திரட்டினர் புலிகளின் பினாமிகள். மேலும இவர்கள் வெளிநாடுகளின் படை வன்னியில் இறங்கி மக்களையும், புலிகளையும் காப்பாற்றும். எனவே அனைவரும் புலம்பெயர் நாடுகளில் நடந்து கொண்டிருந்த போராட்டங்களில் பெரும்திரளாக வந்து பங்குபற்றி எமது பலத்தினை காட்டுங்கள் என மறைமுகமான கதைகளை புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.
இப்போது அரியநேசன் என்னும் பாராளுமன்ற உறுப்பினர் அமெரிக்கா கனடா போன்ற சர்வதேச நாடுகள் எம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என 35 வருடங்களிற்கு முன்னர் நாம் கேட்ட மரம் பழுத்தால் வெளவால்கள் தானாக வரும் என்னும் கதையினை மீளக் கூறுகின்றார்.
கடந்த காலம் முழுவதும் தமிழ் மக்களின் அரசியலை தீர்மானித்தவர்கள் கூறியது இது தான்.
1. வெளிநாடு வரும் எல்லாம் வென்று தரும்.
2. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எங்களிற்கு வாக்கு மட்டும் போட வேண்டியது தான்
3. நீங்கள் நாம் கேட்கும் பணம் பொருட்களை தந்து விட்டால் மட்டும் போதும் நாங்கள் எல்லாம் வென்று வருவோம்.
4. அதிநவீன ஆயுதங்களால் போராட்டத்தினை வென்று விடலாம்.
இவற்றினை மீறி யாராவது கேள்வி கேட்டு விட்டால் அவர்களை ஓரம்கட்ட “தமிழினத் துரோகிகள்”, “சிங்களவனிற்கு பிறந்ததுகள்” ,“எட்டப்பர் கூட்டம்” போன்றவற்றில் ஏதாவது ஒரு பட்டத்தினை வழங்கி கொலை செய்தனர் அல்லது தமிழ் பகுதிகளை விட்டு விரட்டப்பட்டனர்.
தமிழ் மக்களின் தேசிய உணர்வினை குறுந்தேசியவாத வெறியாக வளர்த்து அந்த நெருப்பில் பதவி சுகங்களைப் பெற்று, தமது சொந்த குடும்ப நலன்களையே பிரதானமானதாக கொண்டு செயற்படுபவர்களே இந்த தமிழர் கூட்டமைப்பினர். புலம்பெயர் தேசங்களிற்கு விஜயம் செய்யும் போது, இங்குள்ள மக்களை குளிர்விக்க புலுடாக் கதைகளை அவிட்டு விடுவதே இவர்களின் வேலை.
இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையினை இந்த அரசோ அல்லது வெளிநாடுகளோ தீர்த்து வைக்கமாட்டா. மாறாக தமிழ் மக்கள் தாம் ஏனைய சிறுபான்மை இன மக்களுடனும், சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடனும் ஜக்கியப்பட்டு பரந்து பட்ட மக்கள் வெகுஜன எழுச்சினை ஏற்படுத்தி ,இந்த மக்கள் விரோத அரசினை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, தமிழ் மக்களினதும் ஏனைய சிறுபான்மை இன மக்களினதும், பெரும்பான்மை சிங்கள ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களினதும் உரிமைகள் அனைத்தும் சாத்தியமானதாக்க முடியும்.
இது நடக்காதவரை மரம் பழுத்தால் வெளவால்கள் பறந்து வரும் எனக் கதைகள் கூறுபவர்களின் பிழைப்பு வெகு ஜோராக தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.