புளொட்டின் அராஜகங்களுக்கு துணை போன "இடதுசாரிகள்"
புளொட்டுடன் தன்னை இணைத்துக் கொள்வதற்கு முன்பு இடதுசாரி அரசியலில் ஈடுபட்டு வந்த குமரன் (பொன்னுத்துரை) புளொட்டின் நீண்டகால உறுப்பினராகவும் விளங்கினார். மத்தியகுழு உறுப்பினராக இருந்த பெரியமுரளியும் கூட காந்தீயம், மற்றும் புளொட் அமைப்புக்களில் நீண்டகாலமாக செயற்பட்டு வந்த ஒருவர் என்பதோடு தோழர் தங்கராஜாவின் அரசியல் கருத்துக்களுடன் - இடதுசாரிய அரசியல் கருத்துக்களுடன் - மிகவும் நெருக்கமாக இனம் காணப்பட்டிருந்தார். இடதுசாரிக் கருத்துக்களுடன் காணப்பட்ட இவர்கள் இருவரையும் உமாமகேஸ்வரனும் அவரது உளவுப்பிரிவும் கூட "சந்ததியாரின் ஆட்கள்" என்ற கண்ணாடிக்கூடாகவே நோக்கியிருந்தபோதும் இவர்கள் இருவரும் "சந்ததியாரின் ஆட்கள்" என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
புளொட் என்ற அமைப்பு நடைமுறையில் புரட்சிகர அமைப்பு என்ற கொள்கையிலிருந்து விலகி வெகுதூரம் சென்று விட்டிருந்தது. புளொட்டின் மத்தியகுழு என்பது, பெயரளவில் மட்டுமே மத்தியகுழுவாக இருந்ததோடு, உமாமகேஸ்வரன் "தன்னிகரில்லாத் தலைவன்" என்ற நிலைக்கு சென்றுவிட்டிருந்தார். அனைத்து முடிவுகளும் உமாமகேஸ்வரனாலும் அவரது உளவுப்படையினராலுமே மேற்கொள்ளப்பட்டு வந்தனவே தவிர மத்தியகுழுவால் அல்ல. தமிழீழவிடுதலைப் புலிகளின் ஒவ்வொரு தவறான செயற்பாட்டையும் அதன் ஆரம்பகாலங்களிலிருந்தே கடுமையான விமர்சனம் செய்து வந்த நாம், புளொட் அமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புரட்சிகர அமைப்பு என்று கூறியிருந்தோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநபர் பயங்கரவாதத்தையும் தனிநபர் படுகொலைகளையும் கருத்து ரீதியாக எதிர்த்து வந்த நாம், இயக்கத்திலிருந்து விலகினோலோ அல்லது இயக்கத்திலிருந்து விலகி வேறொரு அமைப்பை உருவாக்கினாலோ மரணதண்டனை என்ற தமிழீழவிடுதலைப் புலிகளின் கொள்கை தவறானதென பகிரங்கமாகவே விமர்சித்துவந்த அதேவேளை, புளொட்டில் ஒருவர் தனது சுயவிருப்பின் பேரில் இணைந்து கொள்வதற்கும், தனது சுய விருப்பத்தின் பேரில் புளொட்டில் இருந்து விலகிச் செல்வதற்கு உரிமை உண்டென்றும் கூறியிருந்தோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் இடம்பெற்ற உட்படுகொலைகளையும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலங்களில் செயற்பட்டு பின்பு கருத்து முரண்பாடுகள் காரணமாக அவ்வியக்கத்திலிருந்து விலகியவர்கள் மீதான படுகொலைகளையும் அரசியல் ரீதியில் விமர்சித்து வந்த நாம், எமது தலைமை இராணுவத்தலைமையோ அல்லது தனிநபர்தலைமையோ அல்ல அரசியல் தலைமையென்றும், தனிநபர் ஒருவரால் எடுக்கப்படும் முடிவுகளல்ல மத்தியகுழுவால் எடுக்கப்படும் கூட்டுமுடிவுகளே எமது அமைப்பின் முடிவுகள் என்றும் கூறியிருந்தோம். ஆனால் புரட்சிகர கருத்துக்கள், புரட்சிகர சுலோகங்கள், புரட்சிகர அமைப்புவடிவங்களைக் கொண்டிருந்த புளொட், நடைமுறையில் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து எந்தவிதத்திலும் மாறுபட்டதாக இருக்கவில்லை என்பதை நாம் அனைவரும் தெளிவாகக் கண்டுகொண்டிருந்தோம். இந்நிலையில் புளொட்டை ஒரு புரட்சிகர அமைப்பென்று கூறிக் கொண்டிருந்த மத்தியகுழு உறுப்பினர்களான குமரன்(பொன்னுத்துரை), பெரியமுரளி, புதிதாக மத்திய குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்த அசோக் ஆகியோர் புளொட்டினுள் அராஜகம் மேலோங்கி தனது பிற்போக்குத்தனங்களுடன் வெளிப்படுத்திக் காட்டியபோது, புளொட்டின் அராஜகங்களுக்கெதிராக போராடுவதற்குப் பதிலாக, ஆழ்ந்த மௌனம் காத்ததன் மூலம் புளொட்டினுடைய அராஜகங்களுக்கு அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அங்கீகாரம் வழங்கியிருந்தனர். நாம் புளொட்டிலிருந்து வெளியேறியபோது எம்மீது சுமத்தப்பட்ட உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு தமது மௌனத்தின் மூலம் ஆதரவு வழங்கியவர்களாக காணப்பட்டனர்.
அரசியல் பாசறைகளையும் அரசியல் வகுப்புக்களையும் தளத்தில் நடாத்திவந்த தோழர் தங்கராஜா 1984 இன் ஆரம்பப்பகுதியில் இந்தியா சென்றதன் பின்னர், இடதுசாரி அமைப்புக்களில் செயற்பட்டுவந்ததாகக் கூறி புளொட்டுடன் இணைந்த பாசறைரவி(முத்து), சுப்பையா(கௌரிகாந்தன்) மற்றும் பிரசாத் போன்றோர் அரசியல் பாசறைகளில் அரசியல் வகுப்புக்கள் நடத்துவதில் குறிப்பிடத்தக்கவர்களாய் இருந்தனர். இவர்களுடன் செல்வன்(கிருபாகரன் - திருமலை), ஜீவன், பத்தர்(இளங்கோ), வரதன்(முல்லைத்தீவு), பெரியபத்தர்(இளவாலை) போன்றோரும் கூட அரசியல் வகுப்புக்களை மேற்கொண்டு வந்தபோதும் இவர்களில் எவருமே இடதுசாரி அமைப்புக்களில் செயற்பட்டு வந்தவர்களல்ல. இவர்கள் புளொட்டுடன் இணைந்த பின்பே பெருமளவுக்கு இடதுசாரி அரசியலுடனான பரிச்சயம் ஏற்பட்டிருந்தது.
ஆனால் இடதுசாரிய பின்னணியிலிருந்து வந்த, இடதுசாரிய அமைப்புக்களில் செயற்பட்ட "அனுபவ முதிர்ச்சி" கொண்ட பாசறைரவி(முத்து), சுப்பையா(கௌரிகாந்தன்) மற்றும் பிரசாத் போன்றோர் புளொட்டுக்குள் அராஜகம் மேலோங்கி புளொட் உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டும், புளொட் உறுப்பினர்கள் புளொட்டிலிருந்து வெளியேறியிருந்தபோது அவர்களை அழிப்பதற்கு புளொட் இராணுவம் கொலைவெறியில் அலைந்து திரிந்தவேளையில் புளொட்டில் அங்கம் வகித்த முற்போக்கு சக்திகளைச் சரியான பாதையில் வழிநடத்துவதற்கு மாறாக, புளொட்டுக்குள் எதுவுமே நடைபெற்று விடவில்லை என்றவர்களாக தமது கண்களை இறுக மூடிக்கொண்டு மார்க்சிசம் என்று தாம் அறிந்தவற்றை வேதமாக ஓதிக்கொண்டிருந்தனர். உட்கொலைகளாலும் உள்முரண்பாடுகளாலும், புளொட் என்ற அமைப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது அந்தப் பிரச்சனைகள் எதையும் கருத்திற்கெடுக்கவோ அல்லது அவைபற்றி விவாதிப்பதற்கோ தயாராக இல்லாதவர்களாக தமக்குத் ஏற்றாற்போல் மார்க்ஸையும், லெனினையும், மாவோவையும் வளைத்து மேற்கோள் காட்டி, நடைமுறைப் பிரச்சனைகளுக்கு வெளியே நின்று அரசியல் பாசறைகளை நடத்திக் கொண்டிருந்தனர்.
இடதுசாரி அரசியல்வாதி என்பவன் மார்க்சியத்தின் துணை கொண்டு ஸ்தூலமான நிலைமைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தன்முன்னுள்ள உடனடிக் கடமைகளை தன் கைகளில் எடுத்து செயலாற்றுபவனாகவும், தனது உயர்ந்த நோக்கங்களுக்காகப் போராடுபவனாகவும் இருக்கவேண்டுமே ஒழிய ஸ்தூலமான நிலைமைகளை கவனத்தில் கொள்ளாது ஸ்தூலமான நிலைமைகளுக்கு வெளியே நின்று, மார்க்சியத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவனாக இருக்கமுடியாது. புளொட்டுக்குள் ஜனநாயகம் என்பது மறுக்கப்பட்டிருந்த நிலையில், புளொட்டிலிருந்து நாம் வெளியேறுவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருந்த நிலையில், எம்மை கொன்றொழிப்பதற்கு புளொட்டின் இராணுவப்பகுதியினரில் ஒருபகுதியினர் அலைந்து திரிந்த நிலையில், குறைந்தபட்சம் ஒரு ஜனநாயகவாதியாக இருப்பவனே இவையனைத்துக்கும் எதிராக குரல் கொடுப்பவனாக இருப்பான், இவை அனைத்துக்கும் எதிராகப் போராடியிருப்பான், ஆனால், தம்மை இடதுசாரிகள் என அழைத்துக்கொண்டு அரசியல் பாசறைகளில் அரசியல் வகுப்புகளை மேற்கொண்டவர்கள் புளொட்டினுடைய தவறான போக்குகளுக்கு எதிராகப் போராடத் தவறியிருந்ததோடு அரசியல் பாசறைகளில் இவ்விடயங்களை பேசுவதையும் தவிர்த்துக் கொண்டனர். சிலர் இதற்கும் ஒருபடி மேலே சென்று புளொட்டிலிருந்து வெளியேறிய எம்மை நாம் புளொட்டில் இருக்கும்போதே உளவு பார்த்ததன் மூலம் இடதுசாரியத்தின் பேரில் அராஜகவாதிகளுக்கு துணைபோயிருந்தனர்.
தளத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த முற்போக்கு சக்திகளுக்கு தலைமை தாங்கி வழிநடத்த வேண்டிய பொறுப்பையும் கடமைகளையும் கொண்டிருந்த மத்தியகுழு உறுப்பினர்களும் இடதுசாரிகள் என்று தம்மை அழைத்துக்கொண்டவர்களும் பிற்போக்கு சக்திகள் தற்காலிகமாகவேனும் பலமுடன் திகழக் காரணமாய் இருந்தனர். இவ்விடத்தில் இந்தியாவில் பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்று வந்தவர்களுக்கு நடந்த அநீதிகளையும், பயிற்சி முகாம்களில் நடைபெற்ற சீர்கேடுகளையும், பயிற்சி முகாம்களுக்கு அரசியல் வகுப்புகள் எடுப்பதற்கென சென்றபோது அறிந்து கொண்ட தோழர் தங்கராஜா - இடதுசாரி என்று அழைப்பதற்கும் தோழர் என்று விழிப்பதற்கும் அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்த தோழர் தங்கராஜா - அவர்களது பிரச்சனைகளை உரியமுறையில் அணுகி தீர்வுகாண முற்பட்டதால், ஒரு உண்மையான இடதுசாரி என்ற வகையில் தனது கடமையை செய்ய முற்பட்டதால், பயிற்சி முகாம்களில் குழப்பத்தை ஏற்படுத்த முற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு இராணுவக் காவலில் வைக்கப்பட்டார்.
பேச்சளவில் மட்டுமல்லாது நடைமுறையிலும் ஒரு உண்மையான இடதுசாரியாக புளொட்டுக்குள் விளங்கிய தோழர் தங்கராஜா, அவர் ஒரு மத்தியகுழு உறுப்பினரான இல்லாமல் இருந்தபோதும் கூட புளொட்டுக்குள் நிலவிய அநீதிகளுக்கெதிராக, சீர்கேடுகளுக்கெதிராக, பயிற்சி முகாம்களில் ஆரம்பித்திருந்த அராஜகங்களுக்கெதிராக தன்னால் முடிந்தவரை போராடியிருந்தார்.
புளொட்டிலிருந்து வெளியேறிய எம்மை கைது செய்தேதீருவோம் என்று புளொட் இராணுவத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் திடசங்கற்பம் பூண்டு அலைந்து திரிந்த அதே வேளை புளொட்டை அதன் அழிவிலிருந்து காப்பதன் மூலம் தனது தலைமையை காப்பாற்றுவதற்கு உமாமகேஸ்வரனும் அவரது விசுவாசிகளும் தளத்தில் வெளியேறி இருந்தவர்களின் பொறுப்புகளுக்கு புதியவர்களை நியமிப்பதன் மூலம் புளொட்டை ஒரு அமைப்பாக தொடர்ந்தும் செயற்பட வைக்க முடியும் என எண்ணினர்.
அவசர அவசரமாக புளொட்டிலிருந்து வெளியேறியவர்களின் பொறுப்புகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியாக இருந்து 1983ல் மகளீர் அமைப்பு பொறுப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருந்த செல்வியுடன் முழுநேரமாக மகளீர் அமைப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த வனிதா(சாந்தி) யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படும் அனைத்து பிற்போக்கு நடவடிக்களையும் யாழ் மாவட்ட அமைப்பில் செயற்பட்டவர்களுக்கு முற்போக்கு நடவடிக்கைகளென விளக்கம் கொடுப்பதற்கு மகளீர் அமைப்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருந்த வனிதாவை(சாந்தி) ஒரு கருவியாக களமிறக்கினர். ஆனால் புளொட்டுக்குள் உண்மையிலேயே என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று அறிந்து கொள்ள முடியாமல் இருந்த வனிதாவும்(சாந்தி), மற்றும் மக்கள் அமைப்பு, மகளீர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்பை சேர்ந்த பலரும், புளொட் இராணுவத்தை சேர்ந்த பலரும் கூட நிலைமைகள் எதுவுமே சரியான திசைவழியில் செல்லவில்லை என சிந்திக்கத் தலைப்பட்டிருந்தனர்.
(தொடரும்)
1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1
2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2
3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3
4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4
5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5
6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6
7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7
8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8
9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9
10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10
11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11
12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12
13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13
14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14
15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15
16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16
17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17
18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18
19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19
20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20
21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21
22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22
23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23
24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24
25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25
26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26
27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27
28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28
29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29
30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30