09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

சீல் வைக்கப்பட்ட கடைகளும், சீல் வைக்கப்படாத பாராட்டுகளும்

சில நாட்களுக்கு முன்னர் சென்னை தியாகராய நகரிலுள்ள சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் உட்பட பல வணிக வளாகங்கள் கட்டிட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதால் இழுத்து மூடப்பட்டன.  இதற்கு முன்னரும் இதுபோன்ற சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.  அவ்வப்போது இதுபோன்ற கண்துடைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும், அபராதம் வசூலித்துவிட்டு கண்டுகொள்ளாமல் விடுவதும் தொடர்ந்தே வந்திருக்கிறது.  ஒவ்வொருமுறை இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள், பின்னணிகள் மீது எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் இந்தமுறை அதிகாரிகளும் இலக்காக்கப்படுவார்கள் என்று கூறப்படுவது, ஒரு நேர்மையான தோற்றத்தையும், மக்களிடம் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறது.

ஜெயா ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து சமச்சீர் கல்வி தொடங்கி நூலக இடமாற்றம் வரை தொடர்ச்சியாக மக்களிடம் கசப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.  அதற்கு மாறாக தி நகர் வணிக வளாகங்களை முடக்கியிருப்பது மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.  பெருநகர் வளர்ச்சிக் குழும வழிகாட்டல்களை மீறி அடுக்குமாடிகளை கட்டியிருப்பதும், போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தாமல் இருப்பதும் விதி மீறல்கள் தான் என்றாலும் இதனால் பொதுமக்கள் நேரடி பாதிப்புகளுக்கு உள்ளாவதில்லை, முடக்கியிருப்பதால் உடனடி பலன்கள் எதையும் மக்கள் பெற்றுவிடவில்லை.  என்றால், மக்களின் வரவேற்பு எதிலிருந்து கிளர்ந்திருக்கும்?  குறிப்பிட்ட நிறுவனங்களின் வியாபார அத்துமீறல்கள், வளர்ந்த நிறுவனங்களை எதிர்த்து துணிச்சலாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் தோற்றம் ஆகியவற்றிலிருந்து தான் இருக்க முடியும். அதனால் தான் இது போன்ற நடவடிக்கைகள் தொடருமா? தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் விதிமீறல்களும் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுமா எனும் எதிர்பார்ப்பும் இணைந்திருக்கிறது.

 

விதிமீறல்கள் நடைபெறுகின்றன என்றாலே அங்கு அரசின் ஆசியும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இருக்கிறது என்பதே பொருள். இந்த ஆசியையும், ஒத்துழைப்பையும் மீறி எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நிர்ப்பந்தங்கள் காரணமாக இருக்க வேண்டும், அல்லது பேரத்தை உயர்த்தும் நோக்கமிருக்க வேண்டும்.  நீதி மன்ற உத்தரவை மாற்ற கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டம் கடந்த ஜூலையிலேயே காலக்கெடு முடிந்து விட்ட நிலையில் கடந்த மூன்று மாத காலம் ஏன் தேவைப்பட்டது என தெரியவரும் போது தான் இந்த நடவடிக்கையின் நோக்கம் அம்பலப்படும்.

 

தற்போது விதிமீறல்களில் ஈடுபட்டதாக சுட்டப்படும் தி நகர் வணிக முதலாளிகள் ஆக்கிரமிப்பு, அனுமதி பெறாமல் கட்டிடம் எழுப்பியது, அனுமதி பெற்ற உயரத்தை விட அதிக மாடிகளை கட்டியது என்று பலவிதமான குற்றங்களில் ஈடுபட்டிருக் கொண்டிருப்பது அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் முறையாக எச்சரிக்கை அனுப்பப்பட்டு அதை கண்டு கொள்ளாததன் பின்னர் வியாபாரத்தை முடக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறது.  இனி அவைகள் இடிக்கப்படுமா என்பது அந்த முதலாளிகளின் ஈட்டு மதிப்பிலிருந்து தீர்மானிக்கப்படும். ஆனால் இந்த அணுகுமுறைகள் உழைக்கும் மக்களின் குடிசைகளை ஆக்கிரமிப்புகளாக பார்க்கும் போது கடைப்பிடிக்கப் படுகிறதா? வர்க்கப் பாசம் என்பது அரசின் எல்லா நடவடிக்கைகளிலும் வெளிப்படுகிறது.

 

உயர்ந்த கட்டிடங்களும், வழுக்கிச் செல்லும் சாலைகளும், குடிசைகளற்ற நகருமே அழகின் இலக்கணம் என்று விதி வகுத்துக் கொண்டு செயல்படுகிறது மாநகராட்சியும், பெருநகர வளர்ச்சிக் குழுமமும்.  உழைக்கும் மக்களை அவர்களின் பொருளியல் வாழ்வோடு தொடர்பற்று பிரிதொரு இடத்தில் பிய்த்துப் போடுவதும், சாலையோர கடைகளை அப்புறப்படுத்துவதிலும், சுவரொட்டி, சுவரெழுத்து எழுத தடை விதிக்கப்பட்டு அங்கு அழகிய(!) ஓவியங்களை தீட்டி வைப்பதும் நகரை அழகு படுத்துவதற்காக என்று கூறப்பட்டாலும், அதில் ஏகாதிபத்திய நோக்கமும் ஒழிந்திருக்கிறது. நகருக்குள் கூலிவேலை முதல் அனைத்து உடலுழைப்பு வேலைகளையும் ஆகக் குறைந்த ஊதியத்தில் செய்பவர்கள் நகருக்குள் இருந்தால் நகரின் அழகு கெட்டு விடும் என்று குடிசைகள் வன்முறையாய் அகற்றப்படும்போது அதை பொதுமக்கள் ஆதரிக்கவே செய்கிறார்கள்.  வாழிடங்களிலிருந்து பிய்த்தெரியப்படுவதும், நகருக்குள் வந்து செல்வதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டியதிருப்பதும் அன்னியப்பட்டு நிற்பதுமாய் அவர்களின் பாதிப்புகள் கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை. நகர் என்றால் மேட்டிமைக்காரர்களின் விருப்பிலிருந்து, அவர்களின் ரசனை, அவர்களின் பொழுதுபோக்கு, அவர்களின் வசதிகள் ஆகியவைகளுக்கு ஏற்ப அமைந்திருப்பதே அழகு. அந்த அழகுக்காக உழைப்பவர்களை அசிங்கமாய் கருதும் மனோநிலை மக்களுக்கு இயல்பாகவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில் விளம்பரங்களாக செய்திகளாக தங்களின் கருத்தை மக்களிடம் திணிக்கும் ஆதிகாரவர்க்கம் அதற்கு வழியில்லாத மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் முறைகளை தடை செய்கிறது. ஒரு பொதுக்கூட்டச் செய்தியை, அரசின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை என்பதை சில நூறு ரூபாயில் நகரெங்கும் மக்களால் பரப்பிவிட முடியும். தங்களுக்கு எதிரான கருத்து பரப்பப்படக் கூடாது எனக் கருதும் அதிகாரவர்க்கம் நகரின் அழகு கெட்டுவிடும் என்று நிலப்பிரபுத்துவ கால அடக்குமுறை மாண்புகளை ஓவியங்களாக தீட்டி வைக்கிறது.

 

இந்த அதிகாரவர்க்க மனோநிலை ஏகாதிபத்தியத்துடன் இணைந்து சீல் வைக்கும் நடவடிக்கைகளிலும் படிந்திருக்கிறது.  இப்போது முடக்கப்பட்டிருக்கும் வணிக வளாக முதலாளிகள் தங்கள் தொழிலாளிகளை கசக்கிப் பிழிபவர்கள் தாம்.  தங்களின் லாபத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பவர்கள் தாம்.  தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இதுவரை அநீதியான வழிமுறைகள் மூலமே நீர்த்துப் போக வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் இருப்பு குறைந்த அளவிலேனும் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக இருக்கிறது. பன்னாட்டு வணிக நிறுவனங்கள் சில்லரை விற்பனை வரை நுழைந்திருக்கும் இன்றைய சூழலில், உலகளாவிய நிறுவனங்களின் காட்சியரங்குகள் (ஷோ ரூம்கள்) நகரின் எல்லா பகுதிகளுக்கும் விரிவடைந்திருக்கும் நிலையில்,  உள்நாட்டு முதலாளிகளின் வணிகத்தை முடக்குவது அரசின் ஏகாதிபத்திய முகத்தையே எதிரொலிக்கிறது.

 

இவர்களின் சுரண்டல்தனங்களை, அநீதிகளை எதிர்ப்பது என்பது வேறு, ஏகாதிபத்தியங்களுக்கு உதவும் வகையில் வணிகத்தை முடக்குவதை எதிர்ப்பது வேறு. இந்த முடக்க நடவடிக்கையில் அரசுக்கு இரண்டு நோக்கத்தைத்தவிர வேறொன்று இருக்க முடியாது.  ஒன்று, ஏகாதிபத்திய நிறுவனங்களின் தூண்டலின் பேரில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இரண்டு,  வணிகத்தை முடக்கி மிரட்டுவதன் மூலம் தங்களுக்கு இசைவான பேரத்திற்கு சம்மதிக்க வைக்க நடத்தப்பட்டிருக்க வேண்டும். நீதிமன்ற உத்திரவு என்பதெல்லாம் பொருட்டே அல்ல. அவசரச் சட்டத்தை நீட்டிப்பதும் தேவைப்பட்டால் அந்த இடத்தில் வேறொரு சட்டம் இயற்றிக் கொள்வதும் அரசுகளுக்கு வழக்கமானது தான்.

 

இதை மக்களின் மீதான அக்கரையின் பாற்பட்ட நடவடிக்கையாக புரிந்து கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை.  தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கில் இது போன்ற கட்டிடங்கள் நிற்கின்றன.  அனைத்தையும் முடக்க முடியுமா? கும்பகோணத்தில் நூறு குழந்தைகளை இழந்த பின்பும் அதே நிலையில் அது போன்ற பல கட்டிடங்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன.  தொழிற்சாலைகள் உள்ளிட்ட வேலை வாய்ப்புகளை மாநகர்களிலே குவிப்பதும், இது போன்ற வணிக வளாகங்களை குறிப்பிட்ட ஒரு இடத்தில் குவிப்பதும் மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தவே செய்யும். அவைகளை பரவலாக்குவதற்கு செய்யப்படும் முயற்சிகளே மக்களுக்கு பலன் தரும்.

http://senkodi.wordpress.com/2011/11/05/t-nagar/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்