மாற்றுக்கருத்தாளர்களிடம் சில கேள்விகள்

 

இரண்டு வினோதமான அரசியல், கருத்தியல் போராட்டம் இன்றைக்கு புலம் பெயர் தமிழர்களிடமும், "மாற்றுக் கருத்தாளர்" களிடமும் தோன்றியுள்ளது.

 

ஓன்று - இலங்கை அரசாங்கமா விடுதலைப்புலிகளா இவர்களில் யார் முதலாவது எதிரி யார் இரண்டாவது எதிரி என்ற ஒரு அற்புதமான ஜட்ஜ்மென்ற்.

 

இரண்டாவது - இலங்கை முஸ்லிம் மக்களின் அரசியல் தீர்வுக்காக பிரதேச அலகுகளா அல்லது யூனியன் பிரதேசங்களா என்கின்ற கேள்விகட்கு திரொக்சிய சார்பில் முடிவெடுப்பதா இல்லை ஸ்ராலினிஸ கருத்தியல் அடிப்படையில் முடிவு எடுப்பதா என்பது.

 

நாங்கள் வருத்தப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் யதார்த்த நிலைகளை புரிந்து கொண்டு மக்கள் நலனை நேசிக்கும் சக்திகள் முன்னெடுக்கவேண்டிய வேலைகளை இந்த யதார்த்த நிலமைகளை மக்கள் விரோத சக்திகளிடம் விட்டுவிட்டு மேலே குறிப்பிட்ட காத்திரமற்ற விடயங்களில் கவனம் செலுத்துகின்றோம்.

 

முதல் விடயத்தை முதலில் பார்ப்போம். இருபது இருபத்தைந்து வருடங்களிற்கு முன்னரே இலங்கை அரசு இனவாத அரசுதான் என்பதை முடிவெடுத்து விட்டோம். பதினைந்து வருடங்களிற்கு முன்னரே விடுதலைப்புலிகள் பாசிட்டுக்கள் என்று முடிவெடுத்து விட்டோம். இன்று வரையில் இந்த இரண்டு பகுதிகளிடமும் முன்னேற்றமோ அல்லது முற்போக்கான அரசியல் மாற்றங்களோ அல்லது மனித உரிமை மீறல்களைப் பற்றிய எந்தவித மாறுதல்களோ ஏற்படவில்லை. ஆனால் முன்னர் இந்த இரண்டு பகுதிகளையும் நிராகரித்த "மாற்றுக்கருத்தாளர்கள்" பலர் இப்போது இந்த இரண்டு கோதாக்களில் ஏதோ ஒன்றுக்குள் பாய்ந்துவிட்டார்கள்.

 

தங்களின் தோல்விகள், தங்களின் சுயநலங்கள், தங்களின் வெற்றிடங்கள், போன்றவற்றின் தாழ்வு சிக்கல்களின் வெளிப்பாடாக தங்களையே நியாயப்படுத்த, தங்களுக்குள்ளேயே குறுகிய வட்டப்போட்டியை நிர்ணயம் செய்கின்றனர்.

 

"பிரித்தாளும் தந்திரம்" உருவாக்கிய பிரித்தானியாவை முதலாம் எதிரி என்;று சிந்தனை செய்ய எல்லோரும் மறந்துவிட்டார்கள். அத்தோடு உலக வங்கி, சர்வதேச நாணயநிதியம் என்பவற்றையும் மேற்கத்தைய வல்லரசுகளையும மறந்து விட்டார்கள். உலகமயமாதலை மறந்து விட்டார்கள்.

 

வறுமையில் வாழும் கரையோர சிங்களவர்களும், சாலையோர வியாபார முஸ்லிம்களும், லயன்களில் பரிதவிக்கும் மலையகத்தவர்களும், வெளிநாடு செல்லப் பணமற்ற தமிழர்களும் இன்று ஒருவருக்கொருவர் எதிரியாகி தேசியப் போராட்டம் செய்வதில் யார் முதலாம் யார் இரண்டாம் எதிரி என்று கணிப்பீட்டுப் போராட்டம் செய்தழிகிறார்கள்.

 

இதன் பின்னர் சதாமுடன் சேர்ந்து புஸ்சுக்கு அடிப்பமோ? அல்லது புஸ்சுடன் சேர்ந்து சதாமுக்கு அடிப்பமோ? என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். (பிரபாகரனுடன் சேர்ந்து ராஜபக்ஸவிற்கு அடிப்பமோ அல்லது ராஜபக்ஸவுடன் சேர்ந்து பிரபாகரனுக்கு இடிப்பமோ? என்பது போன்று.)

 

இன்றைக்கு இந்த "மாற்றுக்கருத்தாளர்களின்" பிரதான கடமை என்ன?

 

இலங்கையிலோ அல்லது தமிழ் பேசும் மக்களிடமோ உருவாக, அல்லது உருவாக்க வேண்டிய "மாற்று அரசியல் களம்" என்பது நிச்சயமாக இலங்கையிலிருந்துதான் தோற்றம் பெற வேண்டும்.

 

இதைவிடுத்து இனிமேல் அப்படியான ஒன்று தோன்றவே தோன்றாது, இது ஒரு கற்பனாவாதம், அதற்குரிய காலகட்டம் கடந்து விட்டது, இரண்டில் ஒன்றை தீர்மானிக்க வேண்டும் போன்ற வாதங்கள் "மாற்றம் என்பது மாறாதது" என்ற நம்பிக்கையை இழந்தவர்களாலேயே எடுக்கப்படும். இது பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடிப்பது போன்ற நிலைப்பாடு. தொடர் கொலைகளும், உடைவுகளும், உருவாக்கங்களும் அடக்குமுறைகளும் தொடர்கின்ற எமது சமூகத்திலிருந்து முற்போக்கான சக்திகளே உருவாகாது என்ற அவநம்பிக்கைகளை நாங்களே தான் உடைக்கவேண்டும். இலகுவானதல்ல, மிகவும் கடினமான காலகட்டத்தில் உள்ளோம் என்பது நிதர்சனமானதே.

 

இவற்றுக்கெல்லாம் அடிப்படை எம்மை நாமே சுயவிமர்சனம் செய்வதிலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும்.

 

"மாற்றுக்கருத்து" என்பதன் வரைவிலக்கணம் எதுவாக இருக்க முடியும்?

 

புலிகளை எதிர்த்;தால் மட்டும் மாற்றுக்கருத்தா? அப்படி என்றால் அரசாங்கத்தை மட்டும் எதிர்த்தால் மாற்றுக்கருத்து என்று ஏன் கூறமுடியாது? இது முற்றிலும் குழுவாதமே ஆகும்.

 

"மாற்றுக்கருத்து" என்பது பொது நீரோட்டத்தில் சமூகத்தில் பெரும்பான்மையினரால் நியாயம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அனைத்து அநீதிகளையும் மறுத்து கூறும், அல்லது மறுக்கமுயற்சிக்கும் கருத்தாக்கமே மாற்றுக்கருத்தாகும்.

 

உதாரணத்திற்கு ஒரு நண்பண் கூறிய ஒரு வார்த்தை "காலமை கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுப் போட்டு, மத்தியானம் வாய்காட்டின மனிச்pக்கு பளாரென்று அறைஞ்சு கதைய நிப்பாட்டிப்போட்டு, பின்னேரம் பிள்ளையளுக்கு பக்கத்து வீட்டில கறுவல் முன்வீட்டில சப்பட்டை என்று விளக்கம் குடுத்துப்போட்டு இரவு பியர் குடிக்கேக்க மாத்திரம் பு. . . புலிகள் எண்டு பேசிப்போட்டு தன்னை தானே மாற்றுக்கருத்தாளன் எண்டு சொல்லுறான்" என்று சொன்னான்.

 

பொதுப் போக்கில் உள்ள பெண்ணடிமைத்துவத்தை நிராகரிக்க வேண்டும், பொது நீரோட்டத்தில் உள்ள புலிகளாலும் அரசாலும் சொல்லப்படுகின்ற "தேசியம்" என்ற இனவாதத்தை நிராகரிக்கவேண்டும். மூட மதவாதத்தை நிராகரிக்க வேண்டும். நிறவாதத்தையும் ஒருபாலின எதிர்ப்பு வாதத்தை நிராகரிக்க வேண்டும். சாதி, மொழி, பிரதேச. . .இன்ன இன்ன பிற வாதங்களையும் நிராகரிக்க வேண்டும்.

 

இதை விடுத்து "மாற்றுக்கருத்தை" ஒரு fashion ஆக எங்கள் மேல் நாங்களே முத்திரை குத்திக் கொள்ளக்கூடாது.

 

புலிகளின் அராஜகம் பலமுனைகளிலும் பலரையும் பாதித்ததும் உண்மை. அது தமிழ் சமூக வரலாற்றின் இயங்கியலை பின்தள்ளியது. இதன் காரணமாக பல தனிநபர்களையும், பல இயக்கங்களையும் அரசாங்கத்தின் பக்கம் தள்ளியதும் உண்மையே.

 

புலிகளின் அராஜகம் காரணமாக தவிர்க்கமுடியாமல் அரசாங்கத்தின் பால் போவது வேறு. சிங்கள இனவாத அரசின் அரசியலை அப்படியே உள்வாங்குவது என்பது வேறு.

 

புலிகளின் செயல்களால் கொழுத்தியும் கொல்லப்பட்டும் விரட்டியடிக்கப்பட்ட மற்றைய இயக்கங்களின் மேல் ஒரு பச்சாத்தாப உணர்வு உண்டாவது உண்மைதான். இது மனித நேயம் கொண்ட எவருக்கும் தவிர்க்கமுடியாதது.

 

இப்போது கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆனந்தவிகடனுக்கு கூறிய கதை ஒன்று நினைவுக்கு வருகின்றது.

 

சிங்கள இராணுவத்தின் மேல் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் என்பது "பலாத்காரம் செய்யப்படுகின்ற ஒரு பெண் உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் பலவீனமான நிலையில் கையில் கிடைப்பதை கொண்டு தன்னை பலாத்காரம் செய்யும் ஆணை தாக்குவது போன்றது. எனவே இதனை வன்முறை என்ற பதத்தில் சேர்க்கமுடியாது." காரணம் இவைகள் அடக்குமுறைக்கு எதிராக அடக்கப்படுகின்றவர்கள் தற்பாதுகாப்பிற்கு செய்கின்ற தாக்குதல்களே! ஆகவே இவற்றை வன்முறை என்ற பதத்தினுள் கருதக்கூடாது! என்றார்.

 

ஆகா என்ன புதிய கண்டுபிடிப்பு!

 

சரி அப்படியே ஏற்றுக்கொள்ளுவோம்

 

இந்த வாதம் கூறுவதாவது "பாதிக்கப்படுகின்ற, சிறுபான்மையான, பலம் குறைந்த, அதிகாரமற்ற சமூகப்பகுதி தான் எதிர்க்கும் அதிகாரத்துவத்தின் மீது செலுத்துகின்ற பதில்தாக்குதலை "வன்முறை" என்ற வகைக்குள் சேர்க்கமுடியாது." என்பதேயாகும்.

பாலியல் வல்லுறவில் பாதிக்கப்படும் பெண் திருப்பித் தாக்கினால் ?

 

வன்முறையில் சேர்க்கமுடியாது!

 

தலித்துக்கள் பிராமணன் மேல் திருப்பித் தாக்கினால்?

 

வன்முறையில் சேர்க்கமுடியாது!

 

கறுப்பர்கள் வெள்ளையர் மேல் திருப்பித்தாக்கினால்?

 

வன்முறையில் சேர்க்கமுடியாது!

 

சிங்கள பெரும்பான்மையினர் மீது தமிழ் சிறுபான்மையினர் திருப்பித்தாக்கினால்?

 

வன்முறையில் சேர்க்கமுடியாது!

 

பெரும்பான்மை கிறிஸ்த்தவர்கள் மேல் சிறுபான்மை முஸ்லிகள் திருப்பித்தாக்கினால் ?

 

வன்முறையில் சேர்க்கமுடியாது

 

ஆனால். . . ஆனால். . . ஆனால் . . .

 

பலத்தில் குறைந்த மட்டக்களப்பான்,


பலத்தில் குறைந்த முஸ்லிம்கள் திருப்பித்தாக்கினால் மட்டும்


"துரோகி" "தொப்பி பிரட்டி"

 

இதையும் தாண்டி அது புனிதமானது!

 

ஆயுத பலம் கொண்ட புலிகள் ஆயுத பலத்தில் நாட்டமில்லாத சிறு இயக்கங்களை அழிக்கும் போது திருப்பித்தாக்கினால் . . . ?

 

வாசகர்களின் முடிவுக்கே இதனை விட்டு விடுகின்றேன்.

 

இப்போது அவசரப்பட்டு எவரும் முடிவெடுக்கவேண்டாம. இது புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் செய்யும் கொலைகளை நியாயப்படுத்த வேண்டும் என்பதாக அர்த்தப்படாது. கொலைகள், கொலைகள் தான். ஆயுதம் தாங்கியவர்கள் ஆயுதம் தாங்கியவர்களை தாக்கியழிப்பது வேறு, ஆயுதமற்ற அப்பாவிகளை, செய்தியாளர்களை, எதிர்த்து கருத்து கூறுபவர்களை, ஜனநாயகவாதிகளை ஆயுதம் ஏந்தியவர்கள் கொலை செய்து பணியவைப்பது என்பது வேறு. இந்த இரண்டாவது வகை தான் அராஜகம் என்பது.

இன்றைய மாற்றுக்கருத்தாளர்களுக்கு மட்டுமல்ல அனைத்து ஜனநாயக சக்திகளின் முதல் கடமை அரசியல் படுகொலைகள் எந்தத்தரப்பினரால் நடத்தப்பட்டாலும் ஒன்றுபட்டு உரத்தகுரலில் தவறை தவறு என்று முகத்துக்கு முன்னால் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதே. . ! இந்த உறுதியான ஜனநாயகப் போராட்டம் என்பது "ஆயுதம் தாங்கி எவரையும் அழித்துவிடுவோம்" என்கின்ற அராஜகத்தை விடவும் பலமடங்கு வலிமை கூடியது.

 

சபேசன் (கனடா)
24.01.2007