சமூக முரண்பாடுகள் எந்த சமூக அமைப்பில் தீர்க்கப்படும்?

வர்க்கமற்ற கம்யூனிச சமூகத்தில் தான், வர்க்க ரீதியான சமூக முரண்பாடுகள் தீர்க்கப்படும். இந்த உண்மை என்பது ஒருபுறம் இருக்க, முரண்பாடுகள் அதுவரை தீர்க்கப்படாமல் இறுகிய நிலையில் இருப்பதில்லை. அதாவது முரண்பட்ட வர்க்கங்கள், முரண்பட்ட சமூகங்கள் தமக்குள் தீர்வுகளை காண்பதை மார்க்சியம் மறுப்பதில்லை. இந்த வர்க்க அமைப்பினுள், அவை தீர்வு காண முற்படுபடுகின்றது. கம்யூனிச சமூகத்தில் தான் முரண்பாடுகள் தீர்க்கப்படும், அதுவரை முரண்பாடுகள் நீடிக்கும் என்பது இயங்கியல் அல்ல. உதாரணமாக நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கேயுரிய முரண்பாடுகள் முதலாளித்துவ சமூக அமைப்பில் தீர்வு காணப்படுகின்றது. சமூகப் பொருளாதார மாற்றங்கள் முதல் போராட்டங்கள் வரை, முரண்பாடுகளை இந்த வர்க்க அமைப்பிற்குள்ளாக களைய முனைகின்றது அல்லது மற்றொன்றாக மாற்றுகின்றது. உதாரணமாக இந்திய சாதிய அமைப்பு சார்ந்த சாதியத்திற்கு, முரணற்ற முதலாளித்துவ சமூக அமைப்பில் தீர்வு காணமுடியும். அதாவது மதம் மற்றும் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான, அதேநேரம் தேசிய முதலாளித்துவத்தை உயர்த்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முதலாளித்துவப் புரட்சி மூலம் இதை முடிவுகட்ட முடியும்.

ஆனால் ஏகாதிபத்திய அமைப்பு முறையினுள் முரணற்ற முதலாளித்துவத்தை தனித்து நிறுவக்கூடிய வகையில் அந்த வர்க்கம் இல்லை என்பதும், ஏகாதிபத்தியம் அதை அனுமதிக்காது என்பதையும் மார்க்சியம் முரணற்ற வகையில் முன்வைக்கின்றது. ஆக இதை பூர்த்திசெய்யும், புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் தான் சாத்தியம் என்பதை மார்க்சியம் முரணற்ற வகையில் முன்வைக்கின்றது. இது போல் தேசியம் கூட முரணற்ற முதலாளித்துவ ஜனநாயகத்தில் தீர்க்கப்பட முடியும். இங்கு சுயநிர்ணயம் என்பது கூட, முரணற்ற முதலாளித்துவத்தின் அடிப்படையிலான ஜனநாயகக் கோரிக்கையாகத்தான் மார்க்சியம் முன்னிறுத்துகின்றது.

ஆக முரணற்ற முதலாளித்துவ ஜனநாயகக் கோசத்தை பாட்டாளி வர்க்கம் உயர்த்தும் போது, அது பாட்டாளி வர்க்கத்தின் கோசமல்ல. மார்க்சியம் முரணற்ற ஜனநாயக கோரிக்கையை, இந்த சமூக அமைப்பின் உள் தீர்வாக முன்னிறுத்தி போராடுகின்றது. ஆக கம்யூனிச சமூகம் தோன்றும் வரை, மக்கள் இடைக்காலத் தீர்வுகளை, சீர்திருத்தங்களை பெற முடியாது என்று மார்க்சியம் என்றும் கூறுவது கிடையாது. இப்படி மார்க்சியம் கூறுவதாக கூறுவது இங்கு திரிபாகும். உண்மையில் மற்றைய வர்க்கங்கள், தங்கள் முரணான ஜனநாயகக் கோரிக்கையை மக்கள் மேல் திணிக்க, மாhக்சியம் இப்படிக் கூறுவதாக கூறுகின்றனர். ஆக அவர்கள் தங்கள் வர்க்க நலனை உயர்த்திப் பிடிக்க, இப்படி முன்வைக்கின்றனர். மார்க்சியம் இப்படிக் கூறுவதாக கூறி முன்வைக்கும் தீர்வுகள், கம்யூனிச சமூக அமைப்பை நோக்கி போராடும் பாதைக்கு நேர் எதிரானதாகும்.

பாட்டாளி வர்க்கம் தன் வர்க்கத்தை சார்ந்து தன் சொந்த கோரிக்கையுடன் போராடுகின்றது. அது குறைந்தபட்சம் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையை முன்வைத்துப் போராடுகின்றது. இந்த நிலையில் மற்றைய வர்க்கங்கள் முரணற்ற வகையில் தீர்வுகளை முன்வைக்கும் போது அதை ஆதரிக்கின்றது, முரண் உள்ளதை எதிர்க்கின்றது. தீர்வுகளை காணும் போது இதே அளவுகோலைத்தான் கையாளுகின்றது. இங்கு மற்றைய வர்க்கங்கள் தீர்வாக முன்தள்ளும் சீர்திருத்தங்கள் முதல் முரண்பாட்டை மற்றொன்றாக மாற்றுதல் வரையான அனைத்தையும், தன் சொந்த வர்க்க நலனில் இருந்து சீர்தூக்கிப் பார்க்கின்றது. இப்படி தன்சொந்த தீர்வுக்கு வெளியில் காணும் தீர்வுகளை அங்கீகரித்து, அதை வர்க்கக் கண்ணோட்டத்துடன் முரணற்ற வகையில் அணுகுகின்றது.

வர்க்க அமைப்புக்கேயுரிய முரண்பாடுகள், வர்க்க அமைப்பு இருக்கும் வரை புதிது புதிதாக தோன்றிக் கொண்டு இருக்கும். இதில் சில மறையும், புதிதாக சில தோன்றும். வர்க்க அடிப்படையிலான சுரண்டல் என்பது தீர்க்கப்படாது, அதை மூடிமறைக்கும் சமூக முரண்பாடாக அது இடம்மாற்றப்படும். இங்கு நடக்கும் போராட்டங்கள், தீர்வுகள் மூலம் பண்பு மாற்றம் பெறும். அப்படியே காணாமல் போய்விடும் வரை இங்கு மாற்றங்களுக்கு இடமுண்டு. வர்க்க அமைப்பில் இடையில் தோன்றும் சமூக முரண்பாடுகள், இந்த வர்க்க சமூக அமைப்பினுள் தீர்க்கப்படும் எல்லை வரை வர்க்கங்களின் அணிச்சேர்க்கைகள் காணப்படுகின்றது. இந்தச் சமூக அமைப்பில் மார்க்சியம் வர்க்கமற்ற கம்யூனிச சமூகத்தில் எப்படி வர்க்க அமைப்பின் சமூக முரண்பாடுகள் இல்லாமல் போகும் என்பதை முரணற்ற வகையில் விளக்கி, அதற்காக தொடர்ந்து போராடுகின்றது. அதேநேரம் எடுத்த எடுப்பில் வந்தடைந்துவிட முடியாது. ஒரு தலைமுறையில் இவை தீர்க்கப்பட்டு விடாது. இங்கு பல இடைக் கட்டத்தை கடந்தேயாக வேண்டும் என்பதை மார்க்சியம் முன்வைக்கின்றது. ஆக இடைக்கால தீர்வுகளைக் கொண்டுதான் அது இயங்குகின்றது.

முரண்பாடுகளையும் அதனால் ஏற்படும் சமூக ஓடுக்குமுறைகளையும் களையும் வண்ணம் குறைந்தபட்ச கோசங்களையும் தீர்வுகளையும் முன்வைத்தபடிதான் மார்க்சியம் தன்னை நிலைநிறுத்துகின்றது. கம்யூனிச சமூகத்தை தனது இலட்சியமாகக் கொண்ட பாட்டாளிவர்க்கம், புதிய ஜனநாயக சமூகத்தையும் சோசலிச சமூகத்தையும் இடைநிலை சமூக அமைப்பாக முன்வைக்கின்றது. இங்கு இக்கால கட்டத்தில் முரண்பாடுகளை தீர்க்கும் வண்ணம், இடைநிலை கோசங்களைக் கொண்டு, அமைப்பு வடிவங்களைக் கொண்டு, வேறுபட்ட வர்க்க பிரிவுகளுடன் இணைந்து அணுகுகின்றது. அதாவது குறைந்தபட்சம் முரணற்ற முதலாளித்துவ ஜனநாயகக் கோசங்கள் வரை முன்வைத்து சமூகத்தை அணுகுகின்றது.

இதற்கு வெளியில் மற்றைய வர்க்கங்கள் முரண்பாடுகளை கையாளுகின்றது. இவை கூட சில தீர்வுகளை வர்க்க அமைப்பினுள் தம்மளவில் காண்கின்றது. உதாரணமாக தென் ஆபிரிக்காவில் வெள்ளையின ஆட்சி நீக்கம், அமெரிக்காவின் கறுப்பின அடிமைகளின் விடுதலை என்ற பலதை நாம் காணமுடியும். சுரண்டும் வர்க்க நலனை தக்கவைக்க தீர்வுகள் முதல் சீர்திருத்தங்கள் வரை அமுல்படுத்துவது, வர்க்க அமைப்பில் பொதுவாக காணப்படுகின்றது. உதாரணமாக இந்திய சாதி அமைப்பு முறைமை 50 வருடத்துக்கு முந்தைய ஓடுக்குமுறை வடிவில் இன்று இல்லை. குழந்தை மணம், விதவைகள் நிலை என்று அனைத்திலும், இதை நாம் திரும்பிப் பார்க்கலாம். ஒரு முரண்பாடு தனித்து இயங்குவதில்லை. பல முரண்பாடுகளுடன் சேர்ந்து இயங்குகின்றது. இவை ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றது.

இங்கு ஒன்றையொன்று சார்ந்தும் எதிர்த்தும் தீர்வுகளைப் பெறுகின்றது. இல்லையென்றால் ஓன்று மேல்நிலையை அடைய முடியாது. அடிமை ஓழிப்பு, சிறுவயது திருமணத் தடை, உடன்கட்டை ஏறுதல் என்று இந்த சமூக அமைப்பினுள்ளான தீர்வுகளை மார்க்சியம் எதிர்க்கின்றதா எனின் இல்லை. முரணற்ற எந்தக் கூறையும் எதிர்ப்பதில்லை, அதன் முரண் கூறுகளை மட்டும் எதிர்க்கின்றது.

உண்மையில் பல்வேறு வர்க்கங்கள் சமூக பிரிவுகள் போராடுவது போல், பாட்டாளி வர்க்கமும் தன்சொந்த கோசத்துடன் போராடுகின்றது. இங்கு பல்வேறு தீர்வுகள், வழிமுறைகள் முரண்பாடுகளுடனும் இணங்கியும் இணங்காமலும் கூட செயல்படுகின்றது. இங்கு அவை தீர்வு காணப்படும் போது, வர்க்க அடிப்படையில் நின்று அணுகுகின்றோம். வர்க்கத்தின் நலனுக்கு எதிரானதாக இருந்தால் அதை நிராகரிக்கின்றோம் அல்லது ஏற்றுக் கொள்கின்றோம்.

ஆக இங்கு வர்க்கத்தின் நலன் தான், அதைத் தீர்மானிக்கின்றது. இங்கு கோட்பாட்டு தூய்மைக்காக எதையும் மார்க்சியம் முன்வைப்பது கிடையாது. மாhக்சியம் அனைத்து சமூக எதார்த்தத்தையும் வெளிப்படையாக எதிர்கொள்கின்றது. இதற்குள் கோசங்களை, தீர்வுகளை முன்வைக்கின்றது.

இலங்கை தளுவிய சில உதாரணங்கள் ஊடாக இதைப் பார்ப்போம்.

1. இந்திய - இலங்கை மீனவர்கள் விவகாரம் வந்த போது புதிய ஜனநாயக சமுதாயம் அல்லது சோசலிச சமுதாயம் அல்லது கம்யூனிச சமூகத்தின் தீர்வுகளையும் கோசங்களையும் முன்வைத்து, அந்த விவகாரத்தில் இருந்து நாம் அன்னியமாகவில்லை. குறித்த சூழல் சார்ந்த நாம் வைத்த முரணற்ற தீர்வைக் கடந்து, இந்திய இலங்கை சேர்ந்த எவரும் முரணற்ற வகையில் இதை அணுகவில்லை. இன்றுவரை அதைக் கடந்து ஒரு தீர்வைக் காணமுடியாது. இங்கு நாம் கோட்பாட்டு தூய்மை சார்ந்த வரட்டுவாதிகளாக இருக்கவில்லை. எம் கோசத்தைக் கடந்து, ஆளும் வர்க்கங்கள் சிறு மீனவர்களின் மீன்பிடி உரிமையை இல்லாதாக்கியோ அல்லது கடல் மீதான செயற்பாடடை முடக்கியோ அல்லது வேறு வடிவில் இந்த முரண்பாட்டை இல்லாதாக்கலாம் என்பதை நாம் மறுப்பதில்லை. இதை நாம் எம் வர்க்க கண்ணோட்டத்தில் நின்று அணுகுகின்றோம்.

2. புலிகளின் அழிவின் போது, நாம் வைத்த தீர்வும் அப்படித்தான். நாம் வைத்ததைத் தாண்டி எவரும் இதை சரியாக அன்று அணுகி இருக்கவில்லை. எதார்த்தத்தைக் கடந்து, சூழலைக் கடந்து நாம் எந்தத் தீர்வையும் முன்வைக்கவில்லை.

3. தமிழ்மக்களின் தீர்வை நாம் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையான சுயநிர்ணயம் ஊடாகத்தான் தீர்க்க முடியும் என்பதை தெளிவாக முன்வைக்கின்றோம். இதுதான் எங்கள் வர்க்க அரசியல். இதைக் கடந்து வைப்பது பாட்டாளி வர்க்க அரசியல் அல்ல. இவையல்லாத அனைத்தையும் விமர்சிக்கின்றோம்.

இந்த நிலையில் எமக்கு வெளியில் புலிகள் முதல் கூட்டமைப்பும், மகிந்த முதல் ஜே.வி.பியும், இந்தியா முதல் அமெரிக்கா வரை தீர்வை முன்வைக்கின்றது. இதை நாம் எம் வர்க்க நிலையில் நின்றுதான் தொடர்ந்து அணுகுகின்றோம். சுயநிர்ணயமல்லாத வகையில் இதை தீர்வு காண்பார்கள் என்றால், அது எமது வர்க்கத்தின் நலனுக்கு உதவுமாக இருந்தால், முரணான கூறுகளை விமர்சித்தபடி அதை அணுகுவதில் எமக்கு எந்தத் தயக்கமும் கிடையாது.

இங்கு பாட்டாளி வர்க்கம் ஒரு வர்க்கமாக தன்னை அணிதிரட்டாத இன்றைய இலங்கைச் சூழலில் கூட, இதுதான் எமது கொள்கையும் கோட்பாடுமாகும்.

4. வடக்கு கிழக்கில் இனவழிப்பும் இனச் சுத்திகரிப்பும் நடந்த, நடக்கும் நிலையில், மக்கள் வாக்களிக்க வேண்டுமா? கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டுமா என்று கேள்வி எம்மிடம் எழுப்பப்பட்டது.

பார்க்க : இனவழிப்பிலான இந்தத் தேர்தலில், (திருகோணமலை) மக்கள் என்ன செய்ய முடியும்!? 

இந்தச் சூழலில் நாம் அங்கு இருந்து இயங்கினாலும் இதுதான் எம் நிலை. மண்ணில் இயங்கக் கூடிய கட்சிகள் கூட, இதன் மீது முடிவெடுக்கக் கூடிய நிலையை அல்லது தீர்மானிக்க கூடிய நிலையை அடைவது என்பது நீண்ட போராட்டத்தின் ஊடாகத்தான் நடக்கும். அதுவரை அக்கட்சியின் போராட்டம் என்பது மட்டுப்படுத்தப்பட்டதாக, புறநிலையை மாற்றுவதாகவோ, தீர்மானிப்பதாகவோ அமையாது.

இப்படி இருக்க நாம் எமது நிலையை கைவிட்டு அந்த போக்குடன் செல்வது, எமது வர்க்க அரசியலை கைவிட்டுவிட்டு அரசியல் நடத்துவதில் தான் போய் முடியும்.

மீனவர் விவகாரத்தினை எடுத்தால் இந்திய இலங்கை அரசுகள் முதல் பல்வேறு வர்க்கங்கள் எமது தீர்வை கோசத்தைக் கடந்து தான் இதை அணுகுகின்றது. அதனால் அதை நாம் ஆதரிக்க முடியுமா எனின் இல்லை. அதை விமர்சிக்காமல் விட முடியுமா எனின் இல்லை. அதற்கு எதிராக போராடாமல் இருக்க முடியுமா எனின் இல்லை. ஆக நாங்கள் எங்கள் வர்க்கத்தின் கோசத்தைச் சார்ந்து தான், அனைத்தையும் அணுகமுடியும். வர்க்கத்தைக் கடந்தல்ல. அவர்கள் காணும் தீர்வுகளின் போது கூட, இதுதான் எமது அரசியல் நிலை. அவர்கள் போல் நாம் எம் வர்க்கத்திற்காக போராடுகின்றோம்.

பி.இரயாகரன்

14.11.2011