Mon02172020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

இனவழிப்புக்கு உதவிய சிங்கள "அறிவுத்துறையினர்", தங்கள் "சுதந்திரத்தை" பறிகொடுத்தனர்

  • PDF

ஊடகங்கள் மேலான வன்முறைகளைத் தொடர்ந்து, அதன் தடைக்குரிய அரசியல் பின்னணி என்ன? இது எப்படி சாத்தியமாகின்றது? இந்த நிலைமை இன்று தமக்கு உருவாக, அவர்களே காரணமாக இருந்தனர். ஆம், சிங்கள "அறிவுத்துறையினர்", "புத்திஜீவிகளே" காரணமாக இருந்திருக்கின்றனர். புலி அழிப்பின் பெயரில் இனவழிப்பு யுத்தத்தை நடத்தியவர்கள் ஆளும் வர்க்கம் என்பதை இவர்கள் மறந்தார்கள். இதுவொரு அடக்குமுறை இயந்திரம் என்பதைக் காணத் தவறினார்கள். யுத்தத்தின் போக்கில் தங்கள் உரிமைகளையும் அது காவுகொள்ளும் என்ற உண்மையை உணரத்தவறினார்கள். இப்படிப்பட்ட இவர்கள் தான், "அறிவுத்துறையினர்", "புத்திஜீவிகள்" என்று தம்மை அடையாளப்படுத்தினர். இந்தப் போக்கு அரசு – புலி என்று இருதரப்பும் சார்ந்து, மக்கள்விரோத யுத்தத்தை ஆதரித்து நின்ற "அறிவுத்துறையினர்", "புத்திஜீவிகளால்" தான், மக்கள் தங்கள் உரிமைகளை இழந்தனர். இவர்கள் யாரும் மக்களுடன் நிற்கவில்லை. இனம் கடந்து நேர்மையாக உண்மையாக நிற்கவில்லை.

இதன் பின்னணியில் இனவாத யுத்தத்தை ஆதரித்து நின்ற சிங்கள "அறிவுத்துறையினர்" மற்றும் "புத்திஜீவிகள்" பரிதாபகரமாக தங்கள் சுதந்திரத்தை இன்று இழந்து வருகின்றனர். இதேபோல் தான் யுத்தத்தை ஆதரித்து அரசைப் பலப்படுத்தி ஜே.வி.பி. உடைந்ததுடன், அந்த போலி இடதுசாரிய அரசியலும் கூட அரசியல் அனாதையானது. மற்றவர்களின் உரிமைகளை மறுத்து அதற்கு உதவியவர்கள், தங்கள் உரிமைகளையும் இழந்த பரிதாபகரமான அரசியல் சூழலை இலங்கையில் மீண்டும் நாம் பார்க்கின்றோம். இழந்த உரிமைகளை மீண்டும் மீட்டு எடுப்பது என்பது, மற்றவர்களின் உரிமைகளை அங்கீகரித்து அதற்காக இணைந்து போராடுவதுடன் தொடர்புடையது. இதன் அர்த்தம் மக்களுடன் சேர்ந்து நின்று, அவர்களின் உரிமைக்காக போராடுவது தான்.

புலியைப் போலவே மக்களைக் கண்டு அஞ்சும் இலங்கை அரசு. தான் அல்லாத அனைத்தையும் கண்டு அஞ்சுவதான வெளிப்பாடுதான் இன்று ஒடுக்குமுறையாக மாறுகின்றது. தன்னையொத்த வர்க்க அரசியல் நலன் கொண்ட முரண்பட்ட பிரிவுகளின் சுதந்திரத்தை கூட அனுமதிக்காத எதிர்வினைகள் மூலம், இலங்கை அரசு தனக்குத் தானே குறுகிய வட்டத்தை போட்டு அதை வேலியாக்குகின்றது.

இந்தவகையில் அண்மையில் ஊடகங்கள் மீதான தடை, மறுபடியும் மகிந்தா தலைமையிலான குடும்பத்தின் கும்பல் ஆட்சியின் அரசியல் வெட்டுமுகத்தை எடுத்துக் காட்டியிருக்கின்றது. இப்படி தடை செய்யப்பட்ட ஊடகங்கள், ஆளும் வர்க்கத்தை எதிர்த்தல்ல அந்த வர்க்கத்தின் நலனை முன்னிறுத்தித்தான் இயங்கியவை. தடைசெய்யப்பட்ட இந்த ஊடகங்கள் ஆளும் வர்க்கத்தினருக்கு தலைமை தாங்க மகிந்தாவை கொண்டு வந்தது முதல், யுத்தத்தை ஆதரித்தது. இதன் மூலம் மகிந்தாவின் குடும்ப சர்வாதிகாரத்தை முன்னிறுத்தி, அதை பாசிசமயமாக்க உதவிய ஊடகங்கள் இன்று தடைக்குள்ளாகியுள்ளது.

இந்த வகையில் இந்த மகிந்த அரசு முன்பு பலரை போட்டுத்தள்ளியும், காணாமல் போனவர்களாக்கியும், தன்னை மக்களிடமிருந்து தற்காத்துக் கொண்டது. அதன் தொடர்ச்சியில் இன்று ஊடகங்களை தடை செய்கின்றனர். இதன் பின்னணியில் மக்களைக் கண்டு அஞ்சும் நிலையில், மக்களுக்கு உண்மைகளை மூடிமறைப்பதன் மூலம், தான் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக தொடர்ந்து இருக்க ஆசைப்படுகின்றது.

இதனால் தான் அல்லாத அனைத்தையும் ஒடுக்குவதும், மற்றவர்கள் இதைப் பார்த்து தாமாகவே தமக்கு சுயதணிக்கையை செய்து கொள்வதன் மூலம், தமக்கு அடங்கிப் போகக் கோருகின்றனர். இதுதான் இன்றைய எதார்த்தம், இதற்கு வெளியில் அரசியலுக்கு இடமில்லை என்ற பாசிச சூழலை இன்று திணித்து விடுகின்றனர். இந்த நிலையில் இதை எதிர்த்து நிற்பது சாத்தியமற்றது என்ற திரிபுவாதக் கோட்பாட்டையும், இணங்கிப் போவதன் மூலம் தான் அரசியல் செய்யமுடியும் என்ற சந்தர்ப்பவாத பிழைப்புவாத அரசியலையும், எதிர்ப்பு அரசியலாக மாற்றி விடுகின்றது.

மறுதளத்தில் அரசு தன் குறுகிய வட்டத்தைச் சுற்றி இராணுவத்தை பலப்படுத்துகின்றது. மக்களை கண்காணிப்பதன் மூலம் தன்னை பலப்படுத்துகின்றது. மக்களின் தனிப்பட்ட சொத்தை தனதாக அபகரிக்க, திட்டம் போட்டு இயங்குகின்றது. எதையும் விமர்சிக்கவும், கேள்வி கேட்கவும் முடியாத வண்ணம் அனைத்தையும் முடக்குகின்றது. புலிகள் முன்பு எதைச் செய்தனரோ, அதை சமூகத்தின் மேல் இராணுவத்தின் துணையுடன் பலமடங்காக திணிக்கின்றது.

புலிகளை தோற்கடிப்பதன் பெயரில் தமிழ் மக்களை இனவழிப்பு செய்ய உதவிய சிங்கள "புத்திஜீவிகள்" "அறிவுத்துறையினர்" தங்கள் சுரண்டும் வர்க்க சுதந்திரத்தைக் கூட இன்று இழந்து நிற்கின்றனர். பாசிச சூழலில் மற்றவர்கள் உரிமைகளை மறுக்கின்றவர்கள், அதற்கு பலியாவது என்பது உலக வரலாறு எங்கும் நடந்ததுதான். புலிப் பாசிசத்தை நியாயப்படுத்திய பின்னணியில் தான், தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை இழந்தது மட்டுமின்றி தமிழினமே அழிக்கப்படும் நிலைக்கு காரணமானது. பேரினவாத பாசிச யுத்தத்தை சிங்கள "புத்திஜீவிகள்" "அறிவுத்துறையினர்" ஆதரித்து நியாயப்படுத்திய பின்னணியில் தான், சிங்கள மக்கள் தங்கள் உரிமைகளை தமிழ் இனத்துக்கு நிகராக இன்று இழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மற்றவர்களின் உரிமைக்காக போராடுவதன் மூலம்தான், தங்கள் உரிமையை பெறமுடியும் என்ற உண்மை எங்கும் தளுவிய நடைமுறை அரசியலாகும் போதுதான், இலங்கையில் பாசிச ஆட்சியும் முடிவுக்கு வரும். இதைச் செய்யும்படி தான், ஊடகங்கள் மேலான தடை எம்மை நோக்கிக் கோருகின்றது.

 

பி.இரயாகரன்

13.11.2011

Last Updated on Sunday, 13 November 2011 08:40