Language Selection

மணியம் போல் நானும் புலிகளின் வதைமுகாமில் சித்திரவதைகளை அனுபவித்தவன் தான். அதனால் என்னைவிட மற்றவனுக்கு நடந்த சித்திரவதைகள் குறைவானது என்று கூற முடியுமா!? அரசு புலிகள் போல் செய்யவில்லை என்று, நான் கூற முடியுமா!? இப்படிக் கூறுவது உள்நோக்கம் கொண்ட, உண்மைக்கு புறம்பானதுமான மக்கள்விரோத அரசியலாகும். அதுவும் மார்க்சியவாதியாக கூறிக்கொண்டு சொல்வது பொறுக்கித்தனமாகும்.

 

.

இந்த வகையில் எதார்த்ததைக் கடந்த மக்கள்விரோத அரசியல் தான், புலியெதிர்ப்பு அரசியலாகும். இதைத்தான் மணியம் செய்கின்றார். அன்று புலிகளால் அழிக்கப்பட்ட இயக்கங்கள், இந்திய இலங்கைக் கைக்கூலிகளாக எப்படிச் செயல்பட்டனரோ அதைத்தான் மணியம் செய்கின்றார். மணியம் தன் மீதான புலிகளின் சித்திரவதை சார்ந்த உண்மை அனுபவத்தை, அரசைச் சார்ந்து நின்று சொல்லுகின்றார். இவர் ஆதரித்து நிற்கும் அரசு, சித்திரவதை செய்யவில்லையா, கொலை செய்யவில்லையா? இனந்தெரியாத கடத்தல்கள் மூலம் காணாமல் போகவைக்கவில்லையா? இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று இல்லையா? புலியைவிட பத்து மடங்கு அதிகமாக அரசு இந்தக் குற்றங்களை செய்திருக்கின்றது. இப்படி உண்மை இருக்க மணியம் கூறுகின்றார் "இலங்கைப் பொலிசாரால் - அதுவும் பெரும்பாலும் சிங்களப் பொலிசாரால் - கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும், அவர்கள் இவர்கள் போல எந்த நேரமும் கேலியும் கிண்டலுமாக எம்முடன் அநாகரிகமாக நடந்து கொள்ளவில்லை" என்கின்றார்.

 

ஆக இங்கு இப்படி உண்மைகளைத் திரிப்பதன் மூலம், அரசைப் பாதுகாக்கும் கேடுகெட்ட மக்கள்விரோத அரசியலைச் செய்கின்றார். ஒரு உண்மையை ஆதாரமாகக் கொண்டு, திரித்துப் பொய் சொல்வது இங்கு கேவலமானது, கேடுகெட்ட தனமானதுமாகும். புலிகள் படுமோசமான மனிதவிரோத குற்றங்களை செய்தனர் என்பது, எங்கும் தளுவிய ஒரு உண்மைதான். இதைக் கொண்டு எதிரியைப் பாதுகாக்கின்ற அரசியல் என்பது, மற்றொரு மனிதவிரோதக் குற்றம் தான். இலங்கையில் பல முரண்பட்ட பிரிவினரால் பாதிக்கப்பட்ட, அதனால் துயரங்களைச் சுமந்து வாழும் மனிதர்களை கொண்டது தான், எம்மைச் சுற்றிய எதார்த்தம். இதை திரிப்பதை, நாம் அனுமதிக்க முடியாது.

மணியம் மீதான புலிகளின் இழைத்த குற்றங்கள் எவ்வளவு உண்மையோ, அதேபோல இந்த உண்மை மூலம் இன்று அவர் சொல்லும் அரசியல் பொய்மைகளால் நிறைந்தது. புலிகள் செய்தது போல் இந்த அரசு பல மடங்காக குற்றங்களைச் செய்யவில்லையா? இல்லை என்கின்றார் மணியம். இந்தப் புரட்டை, திரிபை மௌனமாக நாம் அங்கீகரிக்க முடியாது.

மணியம் மார்க்சியவாதியாக தன்னைக் காட்டிக் கொண்டு கூறுவதைப் பாருங்கள். "இந்த ‘விடுதலைப் போராளிகள்’ மக்களை நடாத்தும் முறையைப் பார்க்கையில், தமிழ் மக்கள் தெரியாத்தனமாகத் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப் போட்டதை எண்ணி, அவர்கள் மீது அனுதாபம்தான் வந்தது. நான் எமது கட்சி 1960களில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை நடாத்திய காலத்திலும், பின்னர் இனப்பிரச்சினை தீவிரமடைந்து, நாம் ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’யை அமைத்து வேலை செய்த காலத்திலும், சில தடவைகள் இலங்கைப் பொலிசாரால் - அதுவும் பெரும்பாலும் சிங்களப் பொலிசாரால் - கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும், அவர்கள் இவர்கள் போல எந்த நேரமும் கேலியும் கிண்டலுமாக எம்முடன் அநாகரிகமாக நடந்து கொள்ளவில்லை என்பதை நினைக்க, இவர்களது ஒழுக்கங்களின் தன்மையை இட்டு கவலையும் கோபமும்தான் ஏற்பட்டது." என்கின்றார். இங்கு மிக நுட்பமாக புலியைப் போல் அரசு செய்யவில்லை என்கின்றார். இப்படி புலியை விட பத்து மடங்கு அதிகமாக இதே போன்ற குற்றங்களை செய்த அரசை மூடிமறைத்து, தன் சொந்த கதையூடாக அரசை பாதுகாக்கும் வரலாற்றுப் புரட்டை முன்வைக்கின்றார்.

1970 களில் ஜே.வி.பி. உறுப்பினர்களை பத்தாயிரக்கணக்கில் படுகொலை செய்த அரசு சித்திரவதைகளை நாடெங்கும் கட்டவிழ்த்துவிட்டது. அக்காலத்தில் சண் தலைமையிலான கட்சியை கைது செய்து சிறைகளில் வைத்து வதைத்தது. இதன் பின் தமிழ்மக்களின் போராட்டம், மீண்டும் ஜே.வி.பி. என்று பின்னணியில் இலட்சக்கணக்கில் கொன்ற குவித்த வரலாற்றுப் பின்னணியில் தான், இதையெல்லாம் மூடிமறைத்து மணியம் "இலங்கைப் பொலிசாரால் - அதுவும் பெரும்பாலும் சிங்களப் பொலிசாரால் - கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும், அவர்கள் இவர்கள் போல எந்த நேரமும் கேலியும் கிண்டலுமாக எம்முடன் அநாகரிகமாக நடந்து கொள்ளவில்லை" என்கின்றார். இவர்கள் எல்லாம் தம்மைத்தாம் மார்க்சியவாதிகள் என்று வேறு கூறிக்கொண்டு, புலியைவிட பலமடங்கு குற்றமிழைத்த அரசை தலைகீழாக நின்று பாதுகாக்க முனைகின்றனர்.

தனக்கு புலிகளால் கிடைத்த அனுபவத்தில் இருந்து, ஒப்பிட்டாவது அரசினால் பாதிக்கப்பட்டவர்கள் மேலான கரிசனையையோ, அக்கறையையோ கூட வெளிப்படுத்தாத அரசியல் புரட்டை, புலியெதிர்ப்பு அரசியல் தளத்தில் இருந்து முன்வைக்கின்றார்.

இங்கு அரசு இதைச் செய்யவில்லை என்று காட்டுவதும் அல்லது இது செய்யப்பட வேண்டியது அவசியம் என்று கருதுகின்ற அரசியலை அடிப்படையாகக் கொண்டதுதான் இவர்கள் அரசியல். அதாவது புலியை அழிக்க அரசுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் ஆதரவாக குரல் கொடுத்தவர்கள், தொடர்ந்தும் குரல் கொடுப்பவர்களாக உள்ளனர்;. இந்த அரசியல் நிலையில் நின்றுதான், புலிச் சித்திரவதை பற்றி பேசும் மணியம் அரசு இது போன்றவற்றை செய்யவில்லை என்ற திரித்தும் புரட்டியும் காட்ட முற்படுகின்றார்.

அரசு புலியை விட 10 மடங்கு அதிகமாகவே இதைச் செய்திருக்கின்றது. லட்சத்துக் மேற்பட்ட மக்களை கொன்று குவித்திருக்கிறது. மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்ததாக இருக்கட்டும், இன்று வரை மக்களின் உரிமைகளை மறுப்பதாகட்டும், சிறுபான்மை இனங்களை ஓடுக்கி இனவழிப்பையே தொடர்ச்சியாக அது செய்து வருகின்றது.

இந்த இனவாத சுரண்டல் அரசை ஆதரித்து தான், புலிகளால் தனக்கு நடந்த உண்மைக் கதையை சொல்ல முற்படுகின்றார். தனக்கு நடந்தது போல் அரசு எதையும் செய்யவில்லை என்ற சொல்லியபடிதான், தன் கதையை சொல்லுகின்றார். அனைத்துக்கும் புலிகளும், தமிழ் தேசியமும் தான் காரணம் என்று குறுகிய அரசியல் பேச முற்படுகின்றார்.

இவரின் புரட்டுகள் பல. "தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’யை அமைத்து வேலை செய்த காலம் .." பற்றி, இவரின் இன்றைய புலியெதிர்ப்பு அரசு சார்பு அரசியல் தேவையூடாக முன்வைக்கும் புரட்டுகள் வேறு. இது பற்றி விசுவானந்ததேவன் கூறியது என்ன என்பதை அடுத்த கட்டுரையில் தனியாக பார்ப்போம்.

பி.இரயாகரன்

09.11.2011

1. புலிகளின் வதையை அனுபவித்த மணியண்ணை, பேரினவாதத்துடன் நின்று அதை வரலாறாக்குகின்றார் - (மணியத்தின் அரசு ஆதாரவு அரசியல் - 01)

2. "தமிழ் ஈழ" கோரிக்கையும், மணியண்ணையின் புரட்டும் - (மணியத்தின் அரசு ஆதாரவு அரசியல் - 02)