Language Selection

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புளொட்டின் அராஜகங்களுக்கெதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்

திருநெல்வேலியில் விபுல், பாண்டி, சுரேன், இடிஅமீன்(ஞானம்) ஆகியோர் தங்கியிருந்த மறைவிடம் மகளிர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் புளொட் இராணுவப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது தப்பிய பாண்டிக்கு அவரது நண்பரும் தமிழீழ விடுதலை இயக்க(TELO) அமைப்பில் அங்கம் வகித்தவருமான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஜே.பீ பாதுகாப்பளிக்க முன்வந்ததுடன் தனது அமைப்பின் தலைமையுடன் பேசி கைதடியில் தலைமறைவாக இருக்கும் ஏனையோருக்கும் பாதுகாப்பளிக்க முடியும் எனக் கூறியிருந்தார்.

புளொட் இராணுவப் பிரிவினரால் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டிருந்த விபுல், சுரேன், இடிஅமீன்(ஞானம்) போன்றோரை கொடூரத்தனமாகத் தாக்கியதுடன் மூவரையும் அவர்கள் கண்களும் கைகளும் கட்டப்பட்டு சண்டிலிப்பாய் புளொட் முகாமுக்கு கொண்டு சென்றனர். சண்டிலிப்பாயில் அமைந்திருந்த புளொட் இராணுவ முகாமுக்கு மூவரையும் கொண்டு சென்ற புளொட் இராணுவப்பிரிவின் ஒரு பகுதியினர் "கள்வர்கள்" எனக் கூறிய அவர்களது கைகள் கட்டப்பட்ட நிலையில் மூவரையும் மோசமாக தாக்கியதன் மூலம் தமது வெறியைத் தீர்த்துக் கொண்டதுடன் இலங்கை இராணுவத்திலிருந்து தாம் எந்தவகையிலும் மாறுபட்டவர்கள் அல்ல என்பதையும், தமது அமைப்பைச் சேர்ந்தவர்களையே கொடூரத்தனமாக சித்திரவதை செய்வதில் எப்படிக் கைதேர்ந்தவர்கள் என்பதையும் தளத்தில் உள்ள அனைவருக்கும் எடுத்துக் காட்டியிருந்தனர். புளொட் இராணுவப் பிரிவினர் தமது உளவுப்படையின் உதவியுடன் கைதடியில் நாம் அனைவரும் தலைமறைவாக தங்கியிருக்கின்றோம் என்ற தகவலை அறிந்துகொண்டனர்.

கொழுத்தும் வெய்யிலுக்கு அஞ்சிய விவசாயிகள் உடலில் வியர்வை வழிந்தோட தமது வீடுகளுக்குள் சென்று முடங்கிக் கொண்டிருந்தனர். ஜீவனும், நானும் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் மணி அண்ணை தோட்டத்திலிருந்து மதிய உணவருந்தி ஓய்வெடுக்கவென வீட்டுக்கு வந்திருந்தார். எம்முடன் இணைந்து மதிய உணவு உண்டுவிட்டு ஓய்வெடுப்பதற்காக தனது கட்டிலுக்குச் சென்றவர் எழுந்து வந்து வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்துவிட்டு வீட்டுக்குள் இருந்த வெப்பத்தை குறைப்பதற்கு முயன்றவர், இயற்கையின் கொடூரத்திலிருந்து தப்பித்துக் கொண்டாலும், மனிதர்களின் கொடூரத்திலிருந்து – அதுவும் விடுதலைப் போராளிகள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களின் கொடூரத்திலிருந்து – தப்பித்துக் கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல என்று கூறி பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

முழுமையாகவே திறந்துவிடப்பட்டிருந்த யன்னல்கள் வழியாகவும் கதவுகள் வழியாகவும் அனல்காற்றுடன் கலந்து பெரும்வாகன இரைச்சல்கள் வந்துகொண்டிருந்தன. சிறிய ஒழுங்கைகளும் வாகனப் போக்குவரத்துக்கள் மிகவும் குறைந்த இடமுமான கைதடியில் வழமைக்கு மாறானதாக தொடர்ச்சியான வாகன இரைச்சல் கேட்டவண்ணமிருந்தது. கைதடிக்கு அருகாமையில் அமைந்திருந்த நாவற்குழி இலங்கை இராணுவமுகாமிலிருந்த இராணுவத்தினர் கைதடிப்பகுதியை சுற்றிவளைக்கிறார்களோ என எண்ணத் தோன்றியது. "மணி அண்ணை” என்று அழைத்தவாறு பதட்டத்துடன் வீட்டுக்கு வந்த ஒருவர் புளொட் இராணுவப் பிரிவினர் கைதடி சனசமூக நிலையத்துக்கு முன்வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர் என்றும் தலைமறைவாக இருக்கும் எம்மைத் தேடி ஜீப் வண்டிகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் தேடியலைவதாகவும் குறிப்பிட்டார். தனது களைத்துப் போய்விட்டிருந்த உடலுக்கு சிறிதுநேர ஓய்வு கொடுக்கச் சென்ற மணி அண்ணை அவசரஅவசரமாக தனது மேற்சட்டையை அணிந்துகொண்டு "நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம் நான் நிலைமையைப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று எமக்குக் கூறிவிட்டு தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு புளொட் இராணுவப் பிரிவினர் குவிந்துகொண்டிருந்த சனசமூக நிலையத்துக்குச் சென்றவர் சென்ற வேகத்திலேயே வீடு திரும்பினார். நிலைமை மிகவும் மோசமடைந்து விட்டது எனத் தெரிவித்த மணி அண்ணை ஆயுதங்களுடனும் தொலைத்தொடர்பு கருவிகளுடனும் புளொட் இராணுவப் பிரிவினர் பெருமளவில் குவிந்துள்ளனர் என்று கூறி "நீங்கள் வீட்டுக்குள் இருங்கோ யார் வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவர் கண்களிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்த அச்சத்தை சொற்களில் வெளிக்காட்டா வண்ணம் உறுதியுடன் கூறினார். அவரின் படபடத்த்துக் கொண்டிருந்த கைகளிலிருந்து நரம்புகள் புடைத்தெழுந்து கொண்டிருந்தன. ஆனால் உமாமகேஸ்வரன் உத்தரவிட்டால் புளொட் இராணுவப் பிரிவின் ஒரு பகுதியினர் எத்தகைய கொடூரத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதை மணி அண்ணை அறிந்திருக்கவில்லை.

ஈழவிடுதலைப் போராட்டம் என்றவுடன் கண்மூடித்தனமான ஆதரவை வழங்கிவிட்டோமோ என எண்ணியவர் போல் நடப்பவற்றையும் வீட்டுக்குள் நாம் பேசிக் கொண்டிருப்பதையும் கண்ணிமைக்காமல் நோக்கிய வண்ணமிருந்த மணி அண்ணையின் மனைவி வாயடைத்து நின்றார்.

கைதடியில் எம்மைப் பாதுகாப்பதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருந்த சண்முகநாதன்(சண்) நாம் தங்கியிருந்த மணி அண்ணை வீட்டை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்ததை அவதானித்த நாம் நிலைமைகள் மோசமாகிக் கொண்டிருக்கின்றன என அனுமானித்துக் கொண்டோம். ஓடிவந்த களைப்பில் மூச்சுவாங்கிக் கொண்டிருக்க, முகத்தில் வழிந்தோடிக் கொண்டிருந்த வியர்வையை தனது கைகளால் துடைத்துவிட்டபடி சண்முகநாதன்(சண்) "நாம் இங்கிருந்து உடனடியாக புறப்பட்டாக வேண்டும்” என்று கூறினார். சண்முகநாதன்(சண்). தோட்டத்தில் வேலைசெய்துவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்ததாகவும் அப்பொழுது புளொட் இராணுவத்தினர்- இலங்கை இராணுவத்தினர் அல்ல - வீடுவீடாக சோதனையிடுவதாகவும் கூறிய சண்முகநாதன் நாம் மணி அண்ணை வீட்டிலிருந்து தோட்டங்கள் வழியாக தப்பியோடிவிடலாம் என்றார். நாம் மணி அண்ணை வீட்டிலிருந்து தோட்டங்களுக்குள் பதுங்கியவாறு சென்று கொண்டிருந்தோம். புளொட் இராணுவப் பிரிவினரின் மோட்டார் சைக்கிள்களிலிருந்தும் ஜீப் வண்டிகளிலிருந்தும் எழும்பிய சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது. நாம் வீதியைக் கடந்து தப்பிச் செல்லமுடியா வண்ணம் இரண்டு பிரதான வீதிகளிலும் ஆயதங்களுடனும் கொலைத்தொடர்பு கருவிகளுடனும் கொலைவெறி பிடித்த முகங்களுடன் புளொட்டின் இராணுவப் பிரிவின் ஒரு பகுதியினர் அலைந்து திரிந்தனர். 1984 முற்பகுதியில் கொக்குவில் இலங்கை இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டபோது அச்சுற்றிவளைப்புக்குள் சிக்கிக்கொண்ட நாம் கொடியவர்களின் கரங்களில் அகப்பட்டு சித்திரவதையை அனுபவிக்க நேருமோ என்ற உணர்வு மேலிட்டது. அதே போன்றதொரு உணர்வு இப்பொழுது எனக்குள் மீண்டும் ஏற்பட்டது. இப்பொழுது நாம் தப்பிச்செல்வதற்கு வழியெதுவும் இருக்கவில்லை. "மிளகாய்த் தோட்டத்துக்குள் சென்று பதுங்கிக் கொள்வது தான் ஒரே வழி; வேறு வழியேதும் இல்லை" என்று சண்முகநாதன் (சண்) கூறினார். சண்முகநாதனும்(சண்) ஜீவனும் நானும் மிளகாய்த்தோட்டத்தின் நடுவில் சென்று பதுங்கியிருந்தவாறு எமது தலைகளை சற்று மேலே உயர்த்தி நன்கு வளர்ந்து காய்களுடன் செழிப்பாக இருந்த மிளகாய் செடிகளூடாக பார்த்தோம். நாம் பதுங்கியிருந்த தோட்டத்திற்கு முன்னே அமைந்திருந்த சனசமூக நிலையத்திலேயே தங்கிநின்று எம்மைத்தேடி அழிப்பதற்கான புளொட்டின் இராணுவ நடவடிக்கைளை வழிநடத்திக் கொண்டிருந்தார்கள்.

புளொட் இராணுவப் பிரிவின் ஒரு பகுதியினர் கைதடி முழுவதும் அலைந்து திரிந்து பெரும்பாலான வீடுகளில் எம்மைத் தேடிப் பார்த்தனர். கைதடி மக்களால் முன்கூட்டியே எமக்குக் கிடைத்த தகவல்களால் நாமனைவரும் வீடுகளிலிருந்து வெளியேறி மிளகாய்த் தோட்டங்களுக்குள்ளும் பனைவடலிகளுக்குள்ளும் பதுங்கிக் கொண்டோம். எம்மை கைது செய்ய இயலாமையால் ஆத்திரமுற்ற புளொட் இராணுவப் பிரிவினர் புளொட்டில் மக்கள் அமைப்பில் செயற்பட்டவரும், நாம் வெளியேறிய பின்பு தலைமறைவாக இருப்பதற்கு சண்முகநாதனுடன்(சண்) இணைந்து நாம் தங்குவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டவருமான கைதடிகிழக்கைச் சேர்ந்த விக்கி(தற்போது இவர் சுவிற்சலாந்தில் உள்ளார்) என்பவரை கைது செய்து நாம் ஒழிந்திருக்கும் இடத்தைக் காட்டுமாறு கேட்டு சனசமூக நிலையத்துக்கு முன்வைத்து தாக்கத் தொடங்கினர். ஆனால் விக்கியோ தலைமறைவாகி இருப்பவர்கள் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது எனத் தெரிவித்துக் கொண்டிருந்தார். வீதிகளில் குழுமியிருந்த மக்கள் புளொட் இராணுவப் பிரிவினரின் "புரட்சிகர வன்முறையை" கண்டு அதிர்ந்து போயினர். புளொட் இராணுவப் பிரிவினரின் ஒரு பகுதியினரின் அடாவடித்தனங்களையும், எத்தகைய தீராத கொலைவெறியுடன் எம்மை அழிப்பதற்கு அலைந்து கொண்டிருக்கின்றனர் என்பதையும், யார், யார் எம்மை தேடியழிப்பதற்கென அலைந்து கொண்டிருந்தனர் என்பதையும் சண்முகநாதனும், ஜீவனும், நானும் மிளகாய்த் தோட்டத்திற்குள் பதுங்கியிருந்தவாறு அவதானித்துக் கொண்டிருந்தோம். ஆறு மணித்தியாலங்களாக எம்மை கைது செய்து கொன்றொழிக்க துடித்தவர்கள் தமது திட்டம் நிறைவேறாததால் கைதடியில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறிக் கொண்டிருந்தனர். புரட்சிகர இராணுவம் எனக் கூறி எம்மால் வளர்த்துவிடப்பட்ட புளொட் இராணுவம் குறைந்தபட்ச மனிதத்தன்மை கூட இன்றி எத்தகைய "புரட்சிகர" இராணுவமாக செயற்பட்டுக் கொண்டிருந்தது என்பதை சண்முகநாதனும், ஜீவனும், நானும் எமது கண்களால் நேரடியாகவே கண்டுகொண்டோம். நாம் எங்கோ மிகப் பெரிய தவறை இழைத்துவிட்டோம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அதைப்பற்றிச் சிந்திப்பதற்குரிய நேரமாக அது இருக்கவில்லை.

பகலை தன்வசமாக்கிக் கொண்டிருந்த ஆதவன் விடைபெற்றுக் சென்று கொண்டிருந்தான். மங்கிய மாலைப்பொழுதில் நாம் ஒழித்திருந்த இடங்களிலிருந்து எமக்கு பாதுகாப்புக் கொடுத்தவர்களின் உதவியுடன் மிளகாய்த் தோட்டங்களிலிருந்தும், பனைவடலிகளுக்கிடையிலிருந்தும் வெளியே வந்தோம். ஆறுமணி நேரமாக புளொட் இராணுவப் பிரிவினரின் நடவடிக்கைகள் அனைத்தையும் கண்ணுற்றிருந்த கைதடி மக்கள் இப்பொழுது எமக்கு தாமாகவே உதவ முன்வந்தனர். நாம் அனைவரும் இரவுநேரம் அடர்ந்த பனைமரங்கள் நிறைந்த இடத்தில் ஒன்று சேர்ந்தோம். கைதடி மக்களால் உணவு, தேனீர் என்பன எமக்கு வழங்கப்பட்டன. எம்மை பாதுகாக்க முன்வந்த சண்முகநாதன்(சண்), மணி அண்ணை, லிங்கம், புவி, ஜெயா, ரவி ஆகியோர் மீண்டும் எமக்கு தங்குவதற்கு இடம் தேடத்தொடங்கினர். கைதடி இனிமேலும் பாதுகாப்பற்ற இடம் எனக் கருதிய நாம் கைதடியிலிருந்து வெளியேறுவதை நோக்கமாகக் கொண்டு கைதடி வடக்கில் அமைந்திருந்த நவபுரம் பகுதிக்குச் சென்றோம்.

திருநெல்வேலியில் புளொட் இராணுவப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட விபுல், சுரேன், இடிஅமீன்(ஞானம்) ஆகியோரை சண்டிலிப்பாயிலிருந்த புளொட் இராணுவ முகாமில் வைத்து தொடர்ச்சியான சித்திரவதைகளுக்கு ஆளாக்கிக் கொண்டிருந்ததோடு அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதற்கான முயற்சியிலும் இறங்கியிருந்தனர். இந்தியாவில் அமைப்பிலும், பயிற்சி முகாம்களிலும் இருந்த தமது சொந்தத் தோழர்களையே சித்திரவதை செய்வதிலும் கொலைசெய்வதிலும் தைதேர்ந்தவர்களாக விளங்கி மனநோயாளிகளாகிவிட்டிருந்த புளொட்டின் இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்களில் ஒருபகுதியினர் தளத்திலும்கூட தம்மால் அத்தகைய சித்திரவதைகளையும் கொலைகளையும் செய்யமுடியும் என நிறுவுவதற்கு முனைந்து நின்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்திருந்ததுபோல் விடயங்கள் எதுவும் அமைந்துவிடவில்லை. இந்தியா போலல்லாமல் தளத்தின் மாறுபட்ட சூழலை புளொட்டின் இராணுவப்பிரிவினர் சரியாகப் புரிந்து கொண்டார்களில்லை. இந்தியாவில் உமாமகேஸ்வரனும் அவரது உளவுப்படையினரும் தமக்கு வேண்டப்படாதவர்களை அல்லது தமது பிற்போக்கு தலைமைக்கு சவாலாக விளங்கங் கூடியவர்களை "சதிகாரர்கள்", "உளவாளிகள்", "சந்ததியாரின் ஆட்கள்" என சித்திரவதைகளையும் கொலைகளையும் செய்தவர்களால் தளத்திலும் அவ்வளவு சுலபமாக செய்யமுடியும் என்ற அவர்களின் கனவு நனவாகிவிடவில்லை.

விபுல், சுரேன், இடிஅமீன்(ஞானம்) ஆகியோர் புளொட் இராணுவப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட விவகாரம் அவர்களது உறவினர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் வேகமாகப் பரவியது. விபுல் புளொட்டின் மக்கள் அமைப்பில் (அரசியல் பிரிவில்) செயற்பட்டிருந்த ஒருவர். சுரேனும், இடிஅமீனும் (ஞானம்) தொழிற்சங்க அமைப்பிலும் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் முழு நேரமாக செயற்பட்டிருந்தனர். மக்களுடன் நெருங்கிய, உயிரோட்டமான உறவுகளைக் கொண்டிருந்த மூவரையும் மக்களின் விரோதிகள் என்றும் விடுதலைப் பேராட்டத்தின் விரோதிகள் என்றும் சித்தரிக்க முனைந்த புளொட்டின் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. விபுல், சுரேன், இடிஅமீன்(ஞானம்) ஆகிய மூவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மன் கோவில் முன்றலில் மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். மூவரையும் விடுதலை செய்யக்கோரி துண்டுப்பிரசுரம் மக்களால் வெளியிடப்பட்டதுடன் திருநெல்வேலிப் பகுதியில் அமைந்திருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டு திருநெல்வேலிச் சந்தையும் கூட செயலிழந்தது. இதே நேரம் திருநெல்வேலியிலுள்ள பாரதிபுரம், புதியகொலனி போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மத்தியில் சுரேனும் இடிஅமீனும் அமைப்பு வேலைகளில் ஈடுபட்டு அவர்களுடன் நெருக்கமான உறவைப் பேணிவந்ததன் காரணமாக அப்பகுதியில் அமைந்திருந்த காளிகோவிவில் அவ்விடத்து மக்கள் விபுல், சுரேன், இடிஅமீனை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதன்முதலாக ஈழவிடுதலைப் போராட்ட அமைப்பொன்றுக்கு எதிராக - புளொட்டுக்கு எதிராக - தளத்தில் நடத்தப்பட்ட வெற்றிகரமான மக்கள் போராட்டமாக இது அமைந்திருந்தது.

பார்க்க அன்றைய இலக்கு சஞ்சிகை பக்கம் 28

புளொட்டின் பிற்போக்கு தலைமைக்கும்,அந்த தலைமையை பாதுகாத்து நிற்கும் புளொட்டின் இராணுவப் பிரிவினரின் ஒரு பகுதியினருக்கும், புளொட்டை இன்னமும் ஒரு முற்போக்கு இயக்கமெனக் கூறி அவர்களின் கொலைவெறித் தனத்தை நியாயப் படுத்திக் கொண்டும் புளொட்டிலிருந்து வெளியேறிய எம்மைத் தூற்றிக் கொண்டும் தம்மை "மார்க்சிஸ்டுகள்" எனக் கூறித்திரிந்த ஒரு பகுதியினருக்கும் ,மக்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் ஒரு செய்தியை தெளிவாகச் சொல்லியிருந்தது. புளொட் தலைமையினுடைய அராஜகச் செயல்களையும், கொலை வெறித்தனங்களையும் மக்கள் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை என்பதுதான் அந்தச் செய்தி.

புளொட்டின் இராணுவப் பிரிவினரின் ஒரு பகுதியினர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுடன் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுப்பார்த்தனர். உண்ணாவிரதத்தில் பங்குபற்றியவர்களோ கைது செய்யப்பட மூவரும் உடனடியாக் விடுவிக்கப்படவேண்டும் என்ற கருத்தை உறுதியாக முன்வைத்த அதேவேளை மூவரும் விடுவிக்கப்படும் வரை உண்ணாவிரதப்போராட்டம் தொடருமென தெரிவித்திருந்தனர். மக்கள் போராட்டத்தின் பலனாக புளொட்டினால் கைது செய்யப்பட்ட விபுல், சுரேன், இடிஅமீன்(ஞானம்)ஆகிய மூவரும் அவர்கள் காயங்களுக்கு மருந்தளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். தமது பிற்போக்கு தலைமைக்கு எதிரானவர்களென அடையாளம் காணப்பட்டவர்களை கைதுசெய்து சித்திரவதையின் பின் கொலை செய்வதில் தொடர்ச்சியாக "வெற்றி" ஈட்டிவந்தவர்கள் முதற்தடவையாக மக்கள்சக்தியின் முன் மண்டியிட்டு நின்றனர். மக்கள் போராட்டத்தின் மூலம் விபுல், சுரேன், இடிஅமீன்(ஞானம்) ஆகியோர் புளொட்டினால் விடுதலை செய்யப்பட்டது எமக்கு புது நம்பிக்கையை கொடுத்து மட்டுமல்லாமல் உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்தை முன்னெடுக்கும் மக்கள் சக்தியால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும் கூட நாம் நடைமுறையில் கண்டிருந்தோம். ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோருக்கு புளொட் தலைமையினால் பாதுகாப்பு பிரச்சனை என வந்திருந்த போது மக்கள் பற்றியும், மக்கள்சக்தி பற்றியும் எப்போதும் பேசிக்கொண்ட நாம் ஆயுதம் தரித்த தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் ஈரோஸிடம் பாதுகாப்பை கோரியதையிட்டு இப்போது வெட்கப்பட வேண்டியவர்களாகவிருந்தோம். இப்போதோ நிராயுதபாணிகளான மக்கள்தான் எமக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்தனர். நிராயுதபாணிகளான மக்களின் எழுச்சி மிக்க போராட்டத்தால்தான் எமது தோழர்கள் மூவரும் புளொட் தலைமையினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். எந்தவொரு போராட்டத்திலும் மக்கள்சக்தியே - ஆயுதங்கள் அல்ல- தீர்க்ககரமானசக்தி என்பதயும், எந்தவொரு போராட்டமும் உணர்வுபூர்வமான மக்களின் பலம் கொண்டே- ஆயுதங்களின் பலம் கொண்டல்ல - வெல்லப்பட முடியும் என்பதையும் உலகளாவிய போராட்ட வரலாறு மட்டுமல்லாமல் எமது சொந்தப் போராட்ட வரலாறும் எடுத்துக் காட்டிநின்றது.

(தொடரும்)

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18

19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19

20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20

21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21

22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22

23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23

24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24

25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25

26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26

27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27

28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28