முதலில் நாம் கிறீஸ் நெருக்கடி என்ன என்பதைப் பார்ப்போம். வாங்கிய கடனை மீள திருப்பிக் கொடுக்கும் தவணைகளையும், கடனுக்கான வட்டித் தவணைகளையும், கிறீஸ் கொடுக்க முடியாது போயுள்ளது. இதைக் கொடுப்பதற்காக தொடர்ந்து புதிய கடனை வாங்க முடியாது போய் இருக்கின்றது. ஆக இது நெருக்கடி. யாருக்கு நெருக்கடி? வட்டிக்குப் பணம் கொடுத்து, இந்த நெருக்கடியை உருவாக்கிய நிதிமூலதனத்துக்கு தான். அதாவது கிறீசை சூறையாடி இந்த நிலைக்குக் கொண்டுவந்த மூலதனத்துக்குத்தான். அதை தலைமை தாங்கும் தலைவர்களுக்குத்தான். ஆக இந்த கொடுப்பனவை செய்ய வைப்பதன் மூலம் தான் ஏகாதிபத்திய உலகமயமாதலை காப்பாற்றமுடியும்; என்ற நிலையும், கவலைகளும். பிரான்ஸ் உள்ளிட்ட ஜெர்மனிய வங்கிகள் இந்தக் கொடுப்பனவை செய்ய முன்வைக்கும் தீர்வு தான் என்ன? அரசுதுறைகளை தனியார் மயமாக்கல், அரசுதுறைகளில் ஆட்குறைப்பு, சம்பள வெட்டுகள், ஓய்வூதிய குறைப்புகள், சமூக வெட்டுகள், சமூக கட்டமைப்புக்கான நிதிகளை (மருத்துவம், கல்வி) வெட்டுதல் … மூலம், அந்தப் பணத்தை நிதிமூலதன தவணைக்கு கொடுக்கக் கோருகின்றனர். மூலதனத்தின் அறாவட்டிக்காரனின் கொள்ளையைக் காப்பாற்ற, மக்களை தியாகம் செய்யக் கோருகின்றனர். இதை மீறி மக்கள் போராடினால் அதை ஒடுக்கக் கோருகின்றனர். இது தான் ஐரோப்பிய ஜனநாயகத் தலைவர்கள் கூறுகின்ற தீர்வு. மூலதனம் எல்லா பாசாங்குத்தனத்தையும் கடந்து, கோர முகத்தோடு தாண்டவமாடுகின்றது.

 

இதுதான் ஜனநாயகத்தின் பெயரில் பிரான்ஸ் உள்ளிட்ட ஜெர்மனிய அரச தலைவர்கள் முன்வைக்கும் திட்டம். மக்களைச் சுரண்டுவதன் மூலமான தமது தீர்வை நடைமுறைப்படுத்தினால், மேலும் கடன் தரமுடியும் என்கின்றனர். நாங்கள் முந்தி உங்களிடம் சூறையாடித் தந்த கடனின் ஒரு பகுதியை இல்லாதாக்குவதாக கூறுகின்றனர்.

இப்படி ஏன் கூறுகின்றனர் என்றால்,

1. இந்தக் கடனைக் கொடுத்து கிறீசை சுரண்டியவர்கள், பிரான்ஸ் உள்ளிட்ட ஜெர்மனிய வங்கிகள் தான்.

2. மூலதன நலன் சார்ந்த ஏகாதிபத்திய உலகமயமாதல் காப்பாற்றப்பட வேண்டும். அதாவது கிறீஸ்சை சுரண்டி இந்த நிலைக்குக் கொண்டு வந்த மூலதனத்துக்கு எதிராக அணிதிரளும் மக்களிடமிருந்து, ஏகாதிபத்திய உலகமயமாதல் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆக வெடிகுண்டு வெடிக்கும் நிலையில், ஏகாதிபத்திய உலகமயமாதல் சங்கிலித் தொடர் அறுந்துவிடும் நிலையில் உலக மூலதனம் தலையில் கையை வைக்கின்றது. இந்த ஏகாதிபத்திய உலகமயமாதலை காப்பாற்ற மீள் கடனைக் கொடுக்கவும், அதேநேரம் மக்களை சூறையாடவும் கோருகின்றது. இரண்டையும் ஒன்றாக முன்வைக்கின்றனர்.

இப்படியிருக்க கடன் தவணையை, வட்டித் தவணையை கொடுப்பது தவறிப்போனால் என்ன நடக்கும்?

1. கடனை கொடுத்து வங்கிகள் திவாலாகும். அந்த வங்கிகள் கொடுத்த பணம், வேறு யாருடையதுமல்ல. மக்களுடைய பணமாகும். இதனால் கடன் கொடுத்த நாடுகளின் வங்கி திவாலாகும். அந்தந்த நாட்டில் நெருக்கடிகள் உருவாகும்.

2. உலகமயமாதலில் நிதி மூலதனம் மூலமான நிதிக் கட்டமைப்பில், நம்பிக்கையில் தகர்வு ஏற்படும்;. ஊகவாணிபமாக உள்ள நிதி மூலதனம் சரிந்துவிழும். உலகக் கடன் சார்ந்த நீதி மூலதனம் தவிடுபொடியாகும்.

3. கிறீஸ் ஈரோவில் இருந்து வெளியேறி கடன் தவணை தரமுடியாது என்று அறிவித்தால், பணம் கொடுக்கும் தவணையை ஒத்திவைத்தால், இதைப் பின்பற்றி பல நாடுகள் இதை செய்யும். உலகமயமாதல் அச்சாணியான நிதி மூலதனம் தானாகவே ஈடாடத் தொடங்கிவிடும்.

4. கடன் மற்றும் வட்டித் தவணை ஏகாதிபத்தியம் நோக்கி வருவது நின்று போனால், ஏகாதிபத்தியத்தின் உள்நாட்டுக் கட்டமைப்பு திவாலாகிவிடும்;. இது உலகப் பொது நெருக்கடியாக மாறிவிடும்.

இப்படி ஏகாதிபத்திய உலகமயமாதல் தனக்குத்தானே குண்டை வைத்துவிட்டு, கிறீஸ் நெருக்கடி பற்றிப் பேசுகின்றது. ஈரோ நாணயத்தை அடிப்படையாகக் கொண்ட ஐரோப்பா நிதி மூலதனம் தகர்த்து விழும் நிலையில் ஓலமிடுகின்றது.

இந்த நிலையில் கிறீஸ் ஐரோப்பாவில் தொடர்ந்து இருப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க, மக்கள் வாக்கெடுப்பை நடத்தப் போவதான அறிவிப்பும், அதை அடுத்து ஆளும் வர்க்கத்துக்கு இடையில் நெருக்கடிகளும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் மக்கள் வாக்களிப்பதா, மக்கள் தெரிவு செய்வதா என்ற குழுறி எழுகின்றனர், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிய ஏகாதிபத்திய ஜனநாயகத் தலைவர்கள்.

கிறீஸ் மக்கள் தமக்கு எதிரான ஈரோவை விட்டு வெறியேறுவதற்கு ஆதரவளிப்பார்கள் என்பதும், இதுதான் ஈரோவை மையப்படுத்திய அனைத்து நாட்டு மக்களின் நிலையுமாகும். இப்படி வெடிகுண்டாகிவிட்ட கிறிஸ் நெருக்கடி, ஏகாதிபத்திய உலகமயமாதலை தகர்க்க முனைகின்றது. மக்கள் வாக்களிப்பை நடத்தப்போவதாக கூறுவதன் மூலம், கிறீஸ் கோருவது என்ன? கடனை முற்றாக தள்ளுபடி செய் அல்லது நாங்கள் வெறியேறி அதைத் தருவதை நிறுத்தப்போகின்றோம் என்பது தான்.

இதை கிறீஸ் நாட்டை ஆளும் வர்க்கங்கள் செய்யவில்லை. கிறீஸ் மக்கள் போராட்டங்கள் ஆளும் வர்க்கத்தை தகர்த்துவிடும் என்ற நிலையில்தான், இதில் இருந்து தம்மை பாதுகாக்க முனையும் விதத்தில், ஈரோவில் இருந்து வெளியேறும் வாக்களிப்பு முன்வைக்கப்பட்டு இருக்கின்றது. தம்மிடமிருந்து மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி விடுவார்கள் என்ற கிறீஸ் ஆளும் வர்க்கத்தின் அச்சம், ஈரோவில் இருந்து வெறியேறும் முயற்சியாக முன்வைக்கப்படுகின்றது. இதன் விளைவு ஈரோவை மையப்படுத்தி, மூலதனத்தின் தகர்வை முன்தள்ளுகின்றது. உலகமயமாதலின் வெடிப்பாக மாறமுனைகின்றது.

கிறீஸ் நெருக்கடி என்பது, ஐரோப்பிய ஒன்றியம் தனது நாணயமாக ஈரோவை மையப்படுத்தி மூலதன சுரண்டலை தீவிரமாக்கியதன் மூலம் உருவானது. கிறீஸ்சுக்கு கடனைக் கொடுத்து சூறையாடியதன் மூலம், அது திவாலாக்கியது. மறுதளத்தில் கீழ் இருந்து மக்களின் உரிமைகளை மையப்படுத்தி ஐக்கியத்தை கட்டமைக்காமல், மேல் இருந்து சூறையாடலை குவியப்படுத்தி மையப்படுத்தினர். மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்க, அந்த உரிமைகள் இல்லாத மற்றைய ஐரோப்பிய நாடுகளை காட்டி மக்களின் உரிமைகளை படிப்படியாக பறித்தனர். மக்கள் பல முனையில் பல வழிகளில் சூறையாடப்பட்டு ஓடுக்கப்பட்டனர்.

இன்று மக்கள் வடிவில் எழும் போராட்டங்கள், வெடிகுண்டுகளாக மாறி நிதி மூலதனத்தை நடுநடுங்க வைக்கின்றது. ஏகாதிபத்திய உலகமயமாதலை தகர்த்துவிடும் என்ற அச்சத்துடன், மக்களைக் கண்டு நடுங்கிறது மூலதனம்;.

 

பி.இரயாகரன்

03.11.2011