01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

பாரிசில் புலிக்குள் நடந்த வெட்டுக்குத்து, இனி உலகெங்கும் புலிக்குள்ளான அரசியலாகத் தொடரும்

மக்களின் நிமித்தம் நாம் அன்று கூறியது போல் புலி பினாமிச் சொத்தை தமிழ்மக்களின் பொது நிதியமாக்கி இருந்தால், புலிக்குள்ளான இந்த வெட்டுக்குத்துக்கு இடமிருந்திருக்காது. பல புலிக் குழுக்கள் தோன்றி இருக்காது. புலியைச் சொல்லி தமிழ்மக்களை தின்ற பிழைப்புவாதக் கூட்டம் தானாக கழன்று ஓடியிருக்கும். புலியின் பெயரில் புலியை பப்பா மரத்தில் ஏற்றி வயிறுபுடைக்கத் தின்ற கூட்டம், இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கும். பினாமிச் சொத்து தான் புலியாக, புலிப் பிரச்சனையாக மாறியுள்ளது. புலிப் பினாமிச் சொத்துகளை அபகரிக்கும் போராட்டம் தான், அரசியல் வேஷம் போட்டுக்கொண்டு வெட்டுக்குத்தை நடத்துகின்றது. இன்று கூட புலிப் பினாமிச் சொத்தை தமிழர் பொதுநிதியமாக மாற்றினால், இந்தக் குழுக்கள் எல்லாம் தானாக மறைந்துவிடும். இந்த வெட்டுக் கொத்துகள் நின்றுவிடும். "புலித்தேசிய"த்தின் பின்னான புரட்டுப் பேர்வழிகளும், போலிகளும் காணாமல் போய்விடுவார்கள். இப்படி புலி பினாமிச் சொத்தை அபகரிக்கும் போட்டி, குழுப்போட்டியாக, அதுவே முரண்பட்ட புலி அரசியலாக மாறிவிட்டது. அது தன்னைதான் வெட்டிக் கொள்கின்றது.

இதுவொன்றும் எமது வரலாற்றுக்கும், எமக்கும் புதிய விடையமல்ல. 1980 களில் தாம் அல்லாதவரைக் கொன்று, அதை தேசிய விடுதலைப் போராட்டம் என்று நியாயப்படுத்திய அதே அரசியல் வழியில் இது தொடருகின்றது.

இதன் பின்னணியில் தமிழ்மக்கள் உரிமைகளை மறுத்து, அவர்கள் போராடுவதை மறுத்து, போராட்டத்தையே அழித்தவர்கள், குறுகிய மாபியாக் கும்பலாக மாறினர். தமக்காக தியாகம் செய்ய வைத்தவர்கள், அந்த தியாகத்தை தேசவிடுதலைப் போராட்டம் என்றனர். இதன் பின்னணியில் அண்டிப் பிழைக்கும் பிழைப்புவாதிகள், மற்றவர்களை அதிகாரம் செய்யும் அதிகார வெறியர்கள், மற்றவர் மீது வன்முறை செய்வதில் நாட்டம் கொண்ட காடையர்கள், உழைத்து வாழவிரும்;பாத பொறுக்கிகள், புலி நிதியை மோசடி செய்து வாழும் மோசடிக்காரர்கள், புலி நிதியைக் கொண்டு வட்டிக்கு விட்டவர்கள், பினாமிச் சொத்தைக் கொண்ட சொத்துடமைவாதிகள் என்று பலர் சூழந்து கொள்ள, நேர்மை, நியாயம் உண்மைக்கு எல்லாம் சாவுமணி அடிக்கப்பட்டது. இப்படி தானாக செத்துப் போன புலிக்குத்தான், அரசு ஆணி அடித்துப் புதைத்தது.

புலியைக் காட்டிக் கொடுத்த வியாபாரிகள் முதல் உலகம் தளுவிய சர்வதேச உளவாளிகளுடன் கூடி போராட்டத்தை வழிநடத்திய தரகர்கள் தான், புலத்தில் புலிக்கு தலைமை தாங்கி புலியை அழித்தனர். இப்படி புலியை அழித்தவர்கள் துணையுடன் தான், அரசு புலியையே புதைத்தது. இரகசிய சதிப் பேரங்கள் மூலம் சரணடைந்த புலிகளும், நயவஞ்சமாக அதன் தலைவர்கள் கொல்லப்பபட்ட பின்னணியில், மூடிமறைப்புகளும் காட்டிக்கொடுப்புகளும் இதன் பின்னணியில் புளுத்துக் கிடக்கின்றது.

இப்படி உண்மை இருக்க, இதை மூடிமறைத்தபடி புலிப் பினாமிச் சொத்துக்கான சண்டையை நடத்துகின்றனர். பாரிசில் நடத்த வாள் வெட்டு, இந்த சொத்துச் சண்டையில் முதலுமல்ல இதுவே இறுதியுமாக இருக்காது. முள்ளிவாய்க்காலில் கிடைத்த பல நூறு கோடி புலிச் சொத்தை மகிந்த குடும்பம் தமக்குள் பங்கிட்ட போது, இராணுவ அதிகரிகளுக்கு எலும்பை போட்டு அதை மூடிமறைத்தது. இதை புலத்தில் புலிகள் செய்ய முடியாது போக, ஆளுக்காள் அடிபட்டபடி அதை மூடிமறைக்கவே அரசியல் செய்கின்றனர்.

 

ஒரு தரப்பிடம் இருந்து மறுதரப்பு புலியின் பினாமிச் சொத்துகளை கைப்பற்றும் போராட்டம், அரசு-புலிகள் 2001 இல் பேச்சுவார்த்தை நாடகத்தை தொடங்கிய போது தொடங்கியது. கஸ்ரோ தலைமையிலான புலிக் குண்டர்கள், இதை உலகளாவில் நடத்தினர். பல அதிகாரமட்ட தலைகள் ஓரங்கட்டப்பட்டு உருட்டபட்டன. சொத்துகள் புதிய பினாமிகளிடம் கைமாறியது. இதன்போது மிரட்டப்பட்டனர், அவதூறுகள் பொழியப்பட்டது. இங்கு கொள்கை கோட்பாடுகள் எல்லாம் கடந்த, பினாமிச் சொத்துகளைச் சுற்றி உருவான மாபியா தலைமை தான் புலத்து புலியின் தலைமையாகியது. இந்த பினாமிச் சொத்தை தமதாக்க, வன்னி புலி தலைமையை அழிப்பது அவசியமாக இருந்தது. சர்வதேச உளவு அமைப்புகளுடன் சேர்ந்து, அவர்களின் வழிகாட்டலுடன், புலியை முழுமையாக இல்லாதழிக்கும் சதியை திட்டமிட்டுக் கட்டமைத்தனர்.

இப்படி புலியின் இறுதி அழிவு நோக்கி பயணித்த போது, பழைய புலத்து புலித் தலைமை மீண்டும் தன்னை ஒரு எதிரணியாக உள்நுழைத்துக் கொண்டது. வன்னித் தலைமையூடாக மீள தன்னை புனரமைத்துக் கொண்டு, அக்கபக்கமாகவே காட்டிக் கொடுத்தனர்.

இப்படி வன்னி தலைமையைக் கூடி அழித்ததன் மூலம், புலத்தில் சொத்தை அபகரிக்கும் சண்டையை தமக்குள் தீவிரமாக்கினர். இந்த சொத்துச் சண்டை பல குழுக்களாக உருவாக, அதை மூடிமறைக்க தமக்கு தாமே அரசியல் வேஷம் போட்டனர். இதன் ஒரு அங்கமாகத்தான் முரண்பட்ட புலிக் குழுக்கள் தனித்தனியாக மாவீரர் தினக் கூட்டம் நடத்தும் அறிவுப்புகளுடன், வாள்வெட்டில் தொடங்கியுள்ளனர். பினாமி புலிச் சொத்துகள் இருக்கும் வரை, புலிக்குள்ளான அடிபிடிதான் அரசியலாகி மிதக்க விடுகின்றனர். மக்களின் பணத்தை தின்று கொழுக்கும் புலி மாபியாக் கூட்டம், அதைத் தன் தனிப்பட்ட சொத்தாக்குவதற்காக தமிழ்மக்களை ஏய்க்கும் அரசியலையும் செய்கின்றனர். தமிழ் மக்கள் சொந்த அரசியல் வழியை சார்ந்து நிற்க தடையாக, இந்த சொத்துச் சண்டை மூகமுடி போட்டுக் கொண்டு மக்களை கட்டுப்படுத்துகின்றது. இந்த அரசியல் கபடங்களை கடந்து தங்கள் உண்மை முகத்தையும், தங்கள் சொத்துச் சண்டையையும், வாள் வெட்டுகள் மூலம் உலகறிய பச்சையாகவே பறைசாற்றி நிற்கின்றனர். மாபியா குழுக்களுக்கு இடையில் நடக்கும் இந்தச் சண்டை தமிழ் மக்களுக்காக அல்ல, தமிழ்மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக என்பதை புரிந்து கொண்டு, தமிழ்மக்கள் தமது சொந்த அரசியல் வழியை தேர்ந்தெடுப்பது வரலாற்றின் இன்றைய கடமையாகும்.

பி.இரயாகரன்

02.11.2011


பி.இரயாகரன் - சமர்