08142022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

இலங்கையில் பாட்டாளிவர்க்கக் கட்சி உருவாகிவிடக் கூடாது என்பது இனியொருவின் தேசியவாத அரசியல் - சுயநிர்ணயம் பகுதி -08

ஜே.வி.பி யிலிருந்து பிளவுற்ற குழுவின் உறுப்பினரான வருண ராஜபக்சவுடன், இனியொரு இணையத்தை நடத்தும் தமிழ் தேசியவாதிகள் நடத்திய தர்க்கத்தினை கேள்வி பதிலாக வெளியிட்டுள்ளனர். மார்க்சியத்தின் பெயரில் இந்த தேசியவாதிகள் லெனினியத்தை திரித்துப் புரட்டுகின்றனர்.

"சுவீடன் தொழிலாளர்களின் போராட்டமே நோர்வேயின் பிரிவினையை விரைவுபடுத்தியது."

என்று லெனினின் பெயரில் கூறி, அதையே ஜேவிபி செய்யவேண்டும் என்ற கூறுகின்ற, இதையே மார்க்சியமாக ஜே.வி.பிக்கு விளக்குகின்ற தேசியவாதத்தின் நோக்கம் மிகத் தெளிவாக இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி உருவாகிவிடக் கூடாது என்ற அரசியலின் வெளிப்பாடாகும்.

 

 

 

இந்த நோக்கிலான இனியொருவின் தேசியவாத தர்க்கங்கள் பல.

"இனங்கள் ஒடுக்கப்படும் சூழலில் பிரிந்து செல்லலையும், பிரிவினையையும், அதற்கான உரிமையையும் கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டும் என்று லெனின் ஓட்டோபவர், ரோசா லக்ஸம்பேர்க் போன்றவர்களுடன் நடந்த விவாதங்களில் பல தடவைகள் சுட்டிக் காட்டியிருக்கிறார்."

என்று லெனினின் பெயரிலான இனியொருவின் புரட்டு இங்கு முன்தள்ளப்படுகின்றது.

இங்கு "பிரிவினையை விரைவுபடுத்த" வே பிரிந்து செல்லும் உரிமையை முன்வைப்பதாக கூறும் இனியொரு தன் தேசியவாத மொழியில் அதை

"பிரிந்து செல்லலையும், பிரிவினையையும், அதற்கான உரிமையையும்"

என்று புரட்டிக்காட்டுகின்றது. இப்படி ஒன்றுக்கு ஒன்று சம்மந்தமில்லாத மூன்று வெவ்வேறு விடையங்களை ஒரே குட்டையில் வைத்து "பிரிவினையை" கோருகின்றது. வர்க்க ரீதியாக இதற்குரிய அர்த்தங்கள் வேறானவை, நேர் எதிரானவை.

லெனினின் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை கோட்பாடு என்றும் எப்போதும் 'பிரிவினையை" ஆதரித்து முன்வைத்தது கிடையாது. லெனினின் கோட்பாடுகள் எங்கும் எப்போதும் தொழிலாளர் விடுதலையை அடிப்படையாகக் கொண்டவை. "பிரிவினையை விரைவுபடுத்தியது." கிடையாது. அதற்காக போராடியது கிடையாது. ஆக இங்கு பிரிந்து செல்லும் உரிமை வேறு, பிரிவினை வேறு. இது இரண்டும் ஒன்று என்று காட்டுகின்ற இனியொரு தன் தேசியவாத புரட்டு மூலம், லெனினை திரிக்கின்றது. "பிரிந்து செல்லலையும், பிரிவினையையும், அதற்கான உரிமையையும்" என்று கூறுகின்ற வாதம் அரசியல் உள்ளடக்கத்தில் எந்த விதத்திலும் தேசியவாதிகளின் கோரிக்கையில் இருந்து முரண்பட்டதல்ல. பாட்டாளி வர்க்கத்தின் பெயரில் இங்கு முதலாளித்துவ தேசியவாதிகளின் கோரிக்கையாக ஜே.வி.பி யை நோக்கி முன்வைக்கப்படுகின்றது.

 

லெனின் பெயரில் கம்யூனிஸ்டுகள் "பிரிவினையை" ஆதரிக்க வேண்டும் என்பது, பிரிந்து செல்லும் உரிமைக்காக கம்யூனிஸ்டுகள் போராடுவதை மறுக்கின்றது. கம்யூனிஸ்டுகள் பிரிந்து செல்லும் உரிமைக்காக போராடுவதா அல்லது பிரிவினைக்காக போராடுவதா!? "பிரிவினையை விரைவுபடுத்த" போராடுவது தான் மார்க்சியம் என்று கூறுகின்ற தேசியவாதிகளை இங்கு நாம் காண்கின்றோம். இங்கு தேசியவாத புரட்டுவாதிகள், மார்க்சியத்தின் பெயரில் தேசியவாத திட்டத்தை பின்பக்கத்தால் முன்வைக்கின்றனர். இந்த தேசியவாதிகளின் கோரிக்கையில் இருந்து, பாட்டாளி வர்க்கக் கோரிக்கையை எந்த வடிவத்திலும் வேறுபடுத்தாத, தெளிவுபடுத்தாத புரட்டு இது.

 

இந்த வகையில் ஜே.வி.பி யை நோக்கி இனியொருவின் தர்க்கத்தைப் பாருங்கள்.

 

"இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து இடதுசாரிக் கட்சி தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக பிரிந்து செல்லும் உரிமைக்காகக் குரல் கொடுப்பார்களானால் தமிழ் மக்கள் இணைந்து வாழ விரும்பும் நிலை உருவாகும். சிங்களத் தொழிலாளர்கள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து அறியாதவர்களாகவே உள்ளனர். இலங்கையில் அவ்வாறான ஒரு இடதுசாரிக் கட்சி உருவாகி பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடினால், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் இல்லாது போகும் அதேவேளை தமிழ்ப் பேசும் மக்களும் பிரிவினை குறித்துச் சிந்திக்க மாட்டார்கள். அவ்வாறு பிரிவினையை ஆதரிக்கும் போராட்டத்தை முன்னெடுக்க நீங்கள் தயாரா?"

 

ஒரு பக்கமாக தங்கள் குறுகிய தேசியவாதத்துக்கு சாதகமாக தர்க்கம் முன்வைக்கப்படுகின்றது. இதன் மற்றொரு பக்கம் என்ன?

 

தமிழ் மக்கள் மத்தியில் பாட்டாளி வர்க்கம் முன்வைக்க வேண்டியது என்ன? பிரிந்து செல்வதுடன் கூடிய ஜக்கியத்தை முன்வைக்க வேண்டும். ஒன்று இன்றி மற்றது கிடையாது. இங்கு சிங்களத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவது குறித்து, அவர்கள் ஒடுக்கப்படுவது குறித்து தமிழ் மக்கள் அறியாதவர்களாகவே உள்ளனர். இந்தளவில் தமிழ்மக்களின் மத்தியில் குறுகிய இனவாதம் காணப்படுகின்றது. எப்படி சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் உள்ளதோ, அப்படி தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் உள்ளது. இரண்டு இன கம்யூனிஸ்டுகளின் கடமையும் வேறுபட்டன. ஓன்றை மட்டும் முதன்மைப்படுத்தி இதைக் குறுக்கி அணுக முற்படுவது கம்யூனிஸத்தின் பெயரிலான புரட்டாகும்.

தன் சொந்த தர்க்கத்தின் இறுதியில் "பிரிவினையை ஆதரிக்கும் போராட்டத்தை முன்னெடுக்க நீங்கள் தயாரா?" என்று கோமாளித்தனமாக வக்கரிக்கின்றனர். பிரிவினையை எந்த கம்யூனிஸ்டும் ஆதரிப்பதும், முன்னெடுப்பதும் கிடையாது. பிரிந்து செல்லும் உரிமையைத்தான் தன் சொந்த வேலைத்திட்டமாக கம்யூனிசம் முன்னெடுக்கின்றது. "பிரிவினையை ஆதரிக்கும் போராட்டத்தை முன்னெடு"ப்பது கிடையாது. "பிரிவினையை விரைவுபடுத்"துவது கிடையாது. அதை இல்லாதாக்குகின்றது போராட்டத்தைத் தான் முன்னெடுக்கின்றது.

 

இந்த வகையில் இனியொரு லெனின் பெயரில் ஜே.வி.பி.யுடன் தர்க்கிப்பதைப் பாருங்கள்

"1905 ஆம் ஆண்டு நோர்வே சுவீடனிலிருந்து பிரிந்து சென்ற போது லெனின் அதனை ஆதரித்தது மட்டுமன்றி, சுவீடிஷ் தொழிலாளர்களை நோர்வேயின் பிரிவினையை அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுத்தார். சுவீடிஷ் தொழிலாளர்களின் போராட்டமே நோர்வேயின் பிரிவினையை விரைவுபடுத்தியது. அவ்வாறு இடதுசாரிகள் என்று கூறும் நீங்கள் சிங்களத் தொழிலாளர்களை இணைத்து தமிழ்ப் பேசும் சிறுபான்மை இனங்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடத் தயாரா?"

என்கின்றனர். இங்கு "சுவீடிஷ் தொழிலாளர்களின் போராட்டமே நோர்வேயின் பிரிவினையை விரைவுபடுத்தியது." என்பது லெனினை பற்றி திரித்துப் புரட்டும் அரசியல் கோமாளிகளின் அபத்தமாகும். பிரிவினையை விரைவுபடுத்துவதற்காக, பிரிவினை செய்வதற்காக பிரிந்து செல்லும் உரிமையை லெனின் என்றும் முன்வைக்கவில்லை. இதை இல்லாதாக்குவதற்காகத்தான் லெனின் பிரிந்து செல்லும் உரிமையை முன்வைத்தார். இதை மறுத்து பிரிவினையை செய்வதற்காக, அதை விரைவுபடுத்தவதற்காகத்தான் லெனின் சுயநிர்ணய உரிமையை முன்வைத்தார் என்ற இனியொருவின் திரிப்பும் அதன் நோக்கமும் என்ன?

 

இலங்கையில் சரியான இடதுசாரிக் கட்சி உருவாகிவிடக் கூடாது என்ற இனியொருவின் தேசியவாத குறுந்தேசிய அரசியல் தான், பிரிந்து செல்லும் உரிமைக்கு பதில் பிரிவினையை ஆதரவளிக்க அல்லது முன்னெடுக்கக் கோருவதை மார்க்சியமாக முன்வைத்து ஜே.வி.பி.யுடன் தர்க்கிக்கின்றது. தன்னை தேசியவாதத்தில் இருந்து வேறுபடுத்தாத தர்க்கம், இங்கு "பிரிவினையை ஆதரிக்கும் போராட்டத்தை முன்னெடு"க்க கோருகின்றது. "பிரிவினையை விரைவுபடுத்துவதற்காக" போராடக் கோருகின்றது.

 

பி.இரயாகரன்

10.10.2011

1. பிரிவினைக்கும், பிரிவினை மறுப்புக்கும் எதிரானது சுயநிர்ணயம் (சுயநிர்ணயம் பகுதி : 01)

2. பிரிந்து செல்லும் உரிமையற்ற சுயநிர்ணயம் என்பது மார்க்சியமல்ல (சுயநிர்ணயம் பகுதி : 02)

3. மார்க்சியத்தின் பெயரில் முன்வைக்கும் பிரிவினைவாதம் (சுயநிர்ணயம் பகுதி : 03)

4. சுயநிர்ணயத்தின் செயல்பூர்வமான வடிவமே பிரிவினை என்பது புரட்டு (சுயநிர்ணயம் பகுதி : 04)

5. "ஒரு தேசிய இனம் பிரிந்து போவ"தற்காக "போராடு"வது முற்போக்கானதா!? (சுயநிர்ணயம் பகுதி : 05)

6. பிரிவினைவாதத்துக்கு எதிரான பிரிந்து செல்லும் சுயநிர்ணயவுரிமை (சுயநிர்ணயம் பகுதி : 06)

7. தன்னாதிக்கத்தை அங்கீகரித்தல் வேறு, "தன்னாதிக்கத்திற்காகப் போராடுதல்" வேறு (சுயநிர்ணயம் பகுதி : 07)


பி.இரயாகரன் - சமர்