10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஒரு நிமிடம்..!

அரைவாசி வண்டில் நிறைந்து விட்டாலும் இன்னும் ஒரு சில பொருட்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. தான் வாங்க வந்ததை.., பிள்ளைகள் சொல்லிவிட்டது.., எல்லாம் எடுத்தாச்சு. ஆனால், மனுசி சொல்லி விட்டதைத் தான் இன்னும் எடுக்கவில்லை.

அதை எந்த மூலைக்குள் கொண்டுபோய் வைச்சிருக்கிறாங்களோ..?

நேரம் பன்னிரண்டு மணி ஆகப்போகிறது. ஒரு மணிக்கு வேலைக்கு வேறை இறங்க வேணும். ஆனா, மனுசி சொன்னதை வாங்காமல் போகமுடியாது. வாங்காது விட்டால், வெள்ளிக்கிழமை அதோ கதியாகிவிடும்.

 

 

 

இந்த நகரத்திலேயே பெரிய ‘சுப்பர் மார்க்கட்” இதுதான். எந்த நேரமும் சனக்கூட்டம் அதிகமாக இருக்கும். அவசரத்திற்கு வாங்கிக் கொண்டு போகமுடியாது. அங்கும் இங்கும் கண்களை ஓடவிட்டபடி, வண்டிலை வேகமாக தள்ளிக் கொண்டு அவன் நடந்தான்.

பன்னிரண்டு மணிக்கு பத்து செக்கன்கள் இருக்கிறது. ஒலிபெருக்கியில் ஒரு பெண்ணின் இனிமையான குரல் ஒலித்தது…!

‘… இப்போது சரியாக 12மணி..!” எல்லோரும் சிலையாக நின்றார்கள்…!

ஆனால் அவனோ எதையும் உள்வாங்கி கொள்ளாதவனாய்.., யாரையும் சட்டை செய்யாமல் தலையை சற்று குனிந்தபடி, மற்றவார்களைப் பார்க்காமல், தான் வாங்க வேண்டிய பொருளைத் தேடி நகர்ந்து கொண்டிருந்தான். சிலையாக நின்றாலும் சிலர் தன்னை வெறித்துப் பார்ப்பதை அவனால் உணர முடிந்தது..! ஆயினும் அவன் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தான்.

‘இதோ.., இடதுபக்கம் சவுக்காரத்துக்குப் பக்கத்துத் தட்டில் இருக்குது…” வண்டிலை கரையிலை விட்டிட்டு, விரைந்து சென்று அதை எடுத்து வந்து வண்டிலுக்குள் போட்டான். பின்னர் அவசர அவசரமாக வண்டிலை இழுத்துக் கொண்டு கவுண்டரை நோக்கி நடந்தான். அந்த கவுண்டரில் இரண்டு பேர் மட்டும் தான் நின்றார்கள். அவர்களும் சிலை போலத் தான் நின்றார்கள். அவன் வண்டிலை அவர்களுக்குப் பின்னால் நிறுத்தி விட்டு, வண்டிலில் கைகளை ஊன்றிச் சரிந்தபடி அமைதியாக நின்றான்.

‘நேரம் பன்னிரண்டு மணி… ஒரு நிமிடம்…!” ஒலிபெருக்கியில் அதே இனிய பெண் குரல்..! ‘நன்றி” என்று மட்டும் சொன்னது.

எல்லோரும் நகரத் தொடங்கினார்கள். ஒரு சிலர் அவனை வித்தியாசமாகப் பார்த்தார்கள். அவன் எதையும் பொருட்படுத்தாதவனாக வெளியில் வந்து.., காரை நோக்கி நடந்தான். அவனுக்கு முன்னால் நின்ற வயது போன தம்பதிகளில் ஒரு கிழவி, தன் கணவனுக்கு இவனைக் காட்டி ஏதேதோ சொல்லிக் கொள்ள, கிழவன் அவனை நிமிர்ந்து பார்த்தார். அவன் மெல்லியதாக புன்னகைத்து விட்டு காரிலே ஏறிக் கொண்டான்.

‘பாவம் இவர்கள்..! இந்த அதிகார வர்க்கத்தின் கருத்துக்களாலேயே வளர்க்கப்பட்டவர்கள். ‘ஒஸ்லோவில் நூறுபேர் கொலை செய்யப்பட்ட கவலை இவர்களோடு..!” ‘எங்களுக்கோ, சாவு பழக்கப்பட்டுவிட்டது. 30 வருடங்களாக மௌனமாக நின்று நின்று, இந்த ஒரு நிமிடம் என்பது எங்களுக்கு பழக்கமாகி விட்டது.” ஆனால் இவர்கள் எப்போதாவது ஒருநாள் தான் இதை சந்திக்கிறார்கள்.

‘எதற்காக இந்த மௌன அஞ்சலி..! இந்த மௌனம் இழப்புக்களை திருப்பித்தருமா..!! இது இன்னொரு இழப்பு ஏற்படாமல் தான் தடுத்துவிடுமா, என்ன..!?”

‘நாங்களும் பல தடவை மௌனமாகி நின்று விட்டோம். ஆனால், மாவீரரின் எண்ணிக்கை கூடிக்கொண்டு தான் போனதேயொழிய, வேறு ஒன்றும் நடக்கவில்லை. எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத, இந்த மௌன அஞ்சலி எதற்காக..?”

‘எல்லாமே ஒரு நாடகம் தான்..,”

மக்களை சுரண்டிப் பிழைப்பவர்கள் மக்களை ஏமாற்றவும், தங்களை மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக காட்டிக் கொள்ளவும், இந்த ஒரு நிமிடத்தினை பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

இந்த மேலைத்தேய அதிகாரவர்க்கமும் இந்த ஒரு நிமிடத்திற்குள் தங்கள் போலி ஜனநாயகத்தை மறைத்துக் கொள்கிறார்கள். தங்கள் சுரண்டலுக்கும் சுய இலாபத்திற்கும் அப்பாவி இளம் இராணுவ வீரர்களை ஆசை காட்டி, தாங்களே அவர்களை போருக்கு அனுப்பி வைத்து.., ஆப்கான் மண்ணிலும், ஈராக் மண்ணிலும் அவர்களை மரணிக்க வைத்து.., அவர்களின் மனைவி பிள்ளைகளை அனாதையாக்கும் இந்த ஜனநாயகவாதிகள், இந்த ஒரு நிமிட மௌன அஞ்சலிக்குள், தங்களின் கொலைகளை மக்களுக்கு மறைத்து விடுகின்றார்கள்.

‘மக்களை ஏமாற்ற இதுவும் ஓர் சிறந்த வழி” இதை எல்லாம் இந்த அப்பாவி மனிதர்களுக்கு எப்படி புரியவைக்க முடியும்..? சொன்னாலும் இவர்கள் யாரும் இதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை..!

‘இதுபோல இன்னும் எத்தனை.., ஒரு நிமிடங்கள் வரப்போகின்றதோ..?”

நினைவு வன்னியை நோக்கிச் செல்ல, மனசு கனக்கத் தொடங்கியது. காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, பொருட்களை இறக்கத் தொடங்கினான்.

‘மனசை ஏதோ ஒரு பாரம்.., தொடர்ந்து அழுத்திக் கொண்டே இருந்தது…!!!”

தேவன்


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்