ஏன் சுயநிர்ணயம் என்று மட்டும் முன்வைக்கக் கூடாது, என்று கேள்வி எழுப்பப்படுகின்றது. சுயநிர்ணயம் என்றால் பிரிந்து செல்வதைக் குறிக்கும் தானே, ஏன் அதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கேட்கின்றனர். இப்படி பல கேள்விகள். இதுமட்டுமல்ல பல அரசியல் விலகல்கள். இதைச் சரியாக எடுத்துப் பேசாவிட்டால், பாட்டாளி வர்க்கம் ஒரு வர்க்கத்தின் கட்சியாக இருக்க முடியாது. இதுதான் எமது கடந்தகால வரலாறு.

 

 

 

பிரிவினைவாதத்துக்கு எதிரான பிரிந்து செல்லும் சுயநிர்ணயவுரிமை என்பது, பிரிவினையை மாத்திரம் மறுக்கவில்லை. பிரிவினை மறுப்புவாதத்தையும் மறுக்கின்றது. இது பாட்டாளிவர்க்கம் ஒரு வர்க்கமாக தன்னை அணிதிரட்டும் ஆயுதமாகும்.

பிரிவினைவாதத்துக்கு எதிராக பிரிந்து செல்லும் சுயநிர்ணயவுரிமை போல், பிரிவினை மறுப்புவாதம் ஐக்கியத்துக்கு எதிராக பிரிந்து செல்லக் கூடிய சுயநிர்ணயத்துடன் கூடிய ஜக்கியத்தை வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் பாட்டாளிவர்க்கம் தன்னை தனித்துவமாக அணிதிரட்ட வேண்டும்.

ஆக இங்கு பிரிவினை, பிரிவினை மறுப்புவாதம் என்ற இரண்டும், தத்தம் இனம் சார்ந்த சுரண்டும் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இதை எதிர்த்து பாட்டாளிவர்க்கம் தன்னை அணிதிரட்ட வேண்டும். இங்கு ஒடுக்கும் இன சுரண்டும் வர்க்கத்தை எதிர்த்து ஒடுக்கப்பட்ட இன சுரண்டும் வர்க்கம் போராடும் போது, முரணற்ற ஜனநாயகக் கோரிக்கைகளை மட்டும் எதிர்க்காமல் முன்னெடுக்க வேண்டும். முரணான கோரிக்கைகளை எதிர்த்துப் போராட வேண்டும்.

இந்த வகையில் போராடுவதற்கான பாட்டாளி ஆயுதம் சுயநிர்ணயம் என்றால், அதைப் பற்றிய தெளிவும், விளக்கமும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். எல்லாச் சந்தர்ப்பவாத மற்றும் விலகல்களுக்கும் எதிராக இருக்கவேண்டும். இந்த வகையில்தான் ஜே.வி.பியின் உள்முரண்பாட்டை அடுத்து, அரசியல்ரீதியாக சரியான வகையில் வழிநடாத்த, பிரிவினைவாதத்துக்கு எதிரான பிரிந்து செல்லும் உரிமையை முன்னிறுத்தக் கோரினோம். சரியான அரசியல் போராட்டத்துக்குரிய ஒரு கிளர்ச்சி ஆயுதத்தை முன்வைத்தோம்.

பிரிவினை, பிரிவினை மறுப்பு என்ற எல்லைக்குள் அரசியல் நீடித்திருப்பதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. இந்த வகையில் பொதுவாக சுயநிர்ணயம் பற்றிய தெளிவற்ற விளக்கங்கள் இன்று பலவாக உள்ளதால், இது பல அரசியல் விலகல்களை கொண்டுள்ளதால் இதைப் பற்றிய தெளிவு இன்று அவசியமாகின்றது. இன்று வெறுமனே சுயநிர்ணயம் உண்டு இல்லை என்று கூறிவிட்டு செல்வது, சுரண்டும் வர்க்கங்களுக்கு தொடர்ந்து உதவுவதுதான். பிரிவினைவாதிகளை திருப்திப்படுத்தவும், பிரிவினையை மறுப்புவாதத்தை திருப்திப்படுத்தவும், அந்தந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் முனைவதும், சுயநிர்ணயத்தை திரிப்பதும் தொடர்ந்து இன்று அரங்கேறுகின்றது. இன்றைய இலங்கைச் சூழலில் இது பற்றிய தெளிவு மிக அவசியமானது. இந்த வகையில்

1. இலங்கையில் அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டின் மேல் இனமுரண்பாடே இன்னமும் பிரதான முரண்பாடாக உள்ளது.

2. பிரிவினைவாதமும், பிரிவினை மறுப்புவாதமும் இன்னமும் அனைத்து அரசியலை நிகழ்ச்சியையும் நிர்ணயிக்கும் போக்காக தொடர்ந்து உள்ளது.

3. பிரிவினைவாதம் தன் நிலையை சுயநிர்ணயமாக காட்டுகின்ற போக்கும், பிரிவினை மறுப்புவாதம் தன் நிலையை சுயநிர்ணயமாக காட்டுகின்ற போக்கும் தொடர்ந்து காணப்படுகின்றது.

4. தத்தம் இனம் சார்ந்த இடதுசாரிய போக்கும் கூட, இனம் சார்ந்த சுரண்டும் வர்க்கத்தின் நிலைக்கு முரண்பாடாத எல்லைக்குள், சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி விளக்க முனைகின்றது.

5. தமிழ் மக்களுக்கு சுயநிர்ணயம் கிடையாது என்ற வாதமும், சுயாட்சிதான் என்ற பழைய தவறான இடதுசாரிய வாதங்கள் மூலம் பேரினவாதத்தை பலப்படுத்தும் போக்கும்.

6. சுயநிர்ணயமே தேசிய இனங்களுக்கு கிடையாது என்ற, திரோஸ்கியவாத கோட்பாடுகளும்

வர்க்க அரசியலை மறுத்த இன அரசியல் இலங்கை மக்களை பிளந்து, தொடர்ந்து அவர்கள் வாழ்வைப் படுகுழியில் தள்ளிப் புதைக்கின்றது. இதன் பின்னணியில் இனமுரண்பாட்டில் மார்க்சியவாதிகளின் தொடர்ச்சியான தவறான கொள்கைகள், பேரினவாதத்தையும், குறுந்தேசியவாதத்தையும் வளர்த்ததே ஒழிய பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டவில்லை. இது தான் எமது கடந்தகால வரலாறு.

தொடர்ந்து பிரிவினைவாதமும், பிரிவினை மறுப்புவாதமும் இலங்கை அரசியலின் தீர்மானகரமான கூறாக இருப்பதால், இது பற்றிய தெளிவான பார்வை பாட்டாளி வர்க்கத்துக்கு அவசியமானது. இதில் ஊசலாட்டடத்துக்கு, மூடிமறைப்புக்கு இடமில்லை. இலங்கை அரசு பிரிவினையைக் காட்டி தன்னை ஒருங்கிணைத்து இருப்பதும், ஜே.வி.பி உள்ளிட்ட இடதுசாரிகள் பிரிவினைவாதத்துக்கு எதிராக அரசின் அதே கொள்கையுடன் தங்களை அணிதிரட்டி நிற்பதில் இருந்து, வர்க்க சக்திகளை விடுவிப்பதற்கான மார்க்சிய ரீதியான வர்க்க பார்வை அவசியமானது மட்டுமின்றி, அதை முன்னிறுத்த வேண்டியுள்ளது.

ஆக இந்த வகையில் இங்கு பிரிவினைவாதம் வேறு, பிரிந்து செல்லும் உரிமை வேறு என்பதை அடிப்படையாகக் கொண்டு, வர்க்க ரீதியாக இனத்தை பிளக்க வேண்டியிருக்கின்றது. பிரிவினைவாதத்தைச் சொல்லியும், காட்டியும் அரசு தன்னை வர்க்கம் கடந்த இன அரசாக முன்னிறுத்தும் நிலையில், அதை வர்க்க ரீதியாக பிளந்தாக வேண்டும். இதே போல் சுரண்டும் வர்க்க பிரிவினை வாதத்தையும் வர்க்க ரீதியாக பிளக்க வேண்டியுள்ளது. பிரிவினைவாதத்தை மறுத்து பிரிந்து செல்லும் உரிமைக்காக போராடுவதன் மூலம், அரசுக்கு எதிரான போராட்டமாக அதை மாற்ற வேண்டும். மறுதளத்தில் ஒடுக்கும் இன சுரண்டும் வர்க்கம் முன்தள்ளும் பிரிவினை வாதத்துக்கு எதிராக பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய ஜக்கியத்துக்காகப் போராட வேண்டும்.

பாட்டாளி வாக்கம் தன் ஆயுதத்தை உயர்த்துதன் மூலம்தான், அதை ஆணையில் வைப்பதன் மூலம் தான், பிரிவினை மற்றும் பிரிவினை மறுப்புவாதத்தை முறியடிக்க முடியும்.

 

பி.இரயாகரன்

03.10.2011

 

1. பிரிவினைக்கும், பிரிவினை மறுப்புக்கும் எதிரானது சுயநிர்ணயம் (சுயநிர்ணயம் பகுதி : 01)

2. பிரிந்து செல்லும் உரிமையற்ற சுயநிர்ணயம் என்பது மார்க்சியமல்ல (சுயநிர்ணயம் பகுதி : 02)

3. மார்க்சியத்தின் பெயரில் முன்வைக்கும் பிரிவினைவாதம் (சுயநிர்ணயம் பகுதி : 03)

4. சுயநிர்ணயத்தின் செயல்பூர்வமான வடிவமே பிரிவினை என்பது புரட்டு (சுயநிர்ணயம் பகுதி : 04)

5. "ஒரு தேசிய இனம் பிரிந்து போவ"தற்காக "போராடு"வது முற்போக்கானதா!? (சுயநிர்ணயம் பகுதி : 05)