வதைமுகாம்களாக மாறிய பயிற்சி முகாம்கள்
ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்கள், ஈழவிடுதலைப் போராட்டத்திலும் இலங்கை அரசியலிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது. இந்தியாவில் பயிற்சி பெற்ற ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் போராளிகள் பெருமளவில் தளம் திரும்பிக் கொண்டிருந்ததுடன் அரச படைகளுக்கெதிரான இராணுவத் தாக்குதல்களையும் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் இந்தியாவுக்கும் தளத்துக்குமிடையிலான கடல்போக்குவரத்தால் பாக்குநீரிணையில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் பிரசன்னம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. இதனால் இலங்கைக் கடற்படையினர் ஈழவிடுதலை போராளிகளை இலங்கைக் கடற்பரப்பில் குறிவைத்து செயற்பட ஆரம்பித்திருந்தனர்.
ஏற்கனவே ஜெயவர்த்தன அரசால் அமுல்படுத்தப்பட்டிருந்த "உயர் பாதுகாப்பு வலய" சட்டத்தாலும், ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களை குறிவைத்து செயற்பட்ட இலங்கைக் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகளாலும், அவ்வவ்போது இலங்கைக் கடற்படையினருக்கும் ஈழவிடுதலை இயக்கப் போராளிகளுக்குமிடையே கடலில் ஏற்படும் மோதல்களாலும் கடற்தொழிலாளர்களே பெரிதும் பாதிப்படைந்தவர்களாக காணப்பட்டனர். கடற்தொழிலாளர்கள் தமது அன்றாட தொழிலுக்கு கடலுக்கு செல்லமுடியாமல் இருந்ததோடு வறுமைநிலைக்கு சென்றுகொண்டிருந்தனர். கடற்தொழிலாளர்களின் இத்தகைய வறியநிலையை, பட்டினி நிலையை கண்ணுற்ற புளொட்டின் படகோட்டியாக இருந்த பாண்டி, கரைப் பொறுப்பாளர் குமரன் (பொன்னுத்துரை), போத்தார் போன்றோர் கடற்தொழிலாளர்களின் பட்டினிநிலையை தற்காலிகமாகவேனும் தீர்த்துவைக்க விரும்பினர். இதனால் இந்தியாவுக்கு படகு சென்று திரும்பும் போதெல்லாம் உணவுப் பொருட்களை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து பட்டினியால் அல்லல்படும் கடற்தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்துவந்தனர். இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் உணவுப் பொருட்கள் சனசமூக நிலையங்களுக்கூடாக கடற்தொழிலாளர் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தன.
ஜெயவர்த்தன அரசால் மேற்கொள்ளப்பட்ட வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளிலிருந்து உயிர்தப்பிய பாண்டி, மட்டக்களப்பு சிறையுடைப்பிலிருந்து தப்பியதிலிருந்து இந்தியாவுக்கும் தளத்துக்குமிடையில் படகோட்டியாக செயற்பட்டு வந்தார். தனது சாவு கடலில்தான் என எப்பொழுதும் கூறிக் கொள்ளும் பாண்டி இந்தியாவிலிருந்து பயிற்சி பெற்றவர்களையும் உணவுப் பொருட்களையும் தளத்துக்கு கொண்டுவரும் வேளை இலங்கைக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் கடலிலேயே கொல்லப்பட்டார். பொலிகண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பாண்டியுடன், கொழும்பில் பிறந்து வளர்ந்து 1977 இனக் கலவரத்தினால் பாதிக்கப்பட்டு சாவகச்சேரிக்கு இடம்பெயர்ந்து யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்ற சின்னமலையும்(சுதாகரன்) மற்றும் இந்தியாவில் பயிற்சி பெற்ற நான்கு போராளிகளும் கொல்லப்பட்டனர். இவர்களின் மரணத்தையொட்டி "மரணம் வாழ்வின் முடிவல்ல" என்ற துண்டுப்பிரசுரம் ஜீவனால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது.
சின்னமலை(சுதாகரன்)
இந்தியாவில் இராணுவப்பயிற்சியும் தொலைத்தொடர்புப் பயிற்சியும் முடித்துக்கொண்ட ஒரு குழுவினர் தளம் வந்து சேர்ந்தனர். இக்குழுவில் திருநெல்வேலியைச் சேர்ந்த விஜயன், பாண்டி, வடமராட்சியைச் சேர்ந்த ரவி போன்றோரும் அடங்கியிருந்தனர். பல்கலைக்கழகங்களில் கல்விகற்றுக் கொண்டிருந்த இவர்கள் 1983 யூலை இனக்கலவரத்தைத் தொடர்ந்து புளொட்டுடன் இணைந்து இந்தியாவுக்கு பயிற்சிக்கென சென்றிருந்தனர். இவர்களில் விஜயனும் பாண்டியும் செய்தி மக்கள் தொடர்பு திணைக்களப் பொறுப்பாளர் விபுலின் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததால் இந்தியாவில் எமது அமைப்பின் செயற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்த தகவல்களை விபுலுக்கு தெரிவித்திருந்தனர். விஜயனும் பாண்டியும் விபுலுக்கு தெரிவித்திருந்த தகவல்களை நாமும் அறிந்துகொள்ளும் பொருட்டு விஜயனையும் பாண்டியையும் சந்தித்துப் பேசுவதற்கு விபுல் ஒழுங்கு செய்திருந்தார்.
விஜயனும் பாண்டியும் எமக்குத் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் எம்மால் நம்பமுடியாமல் இருந்த அதேவேளை அதிர்ச்சிதரும் தகவல்களாகவும் இருந்தன. அரசியல்துறைச் செயலர் சந்ததியார் அமைப்புக்குள் ஏற்பட்ட முரண்பாட்டால் அமைப்பு வேலைகளிலிருந்து ஒதுங்கி இருப்பதாகத் தெரிவித்தனர்.
தோழர் தங்கராஜா பயிற்சிமுகாம்களில் சந்ததியாருக்கு ஆதரவாக அரசியல் வகுப்புகளை மேற்கொண்டு முகாம்களில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கூறினர்.
இராணுவப் பயிற்சி முகாம் ஒன்றில் "B காம்ப்" என்ற ஒரு சித்திரவதைமுகாமை உருவாக்கி, அந்த "B காம்ப்"பில் பயிற்சிக்கென சென்றவர்களை புலிகளின் உளவாளிகள், இலங்கை அரசின் உளவாளிகள் என்ற போலிக் காரணத்தைக் காட்டி சித்திரவதை செய்வதும், கொலை செய்வதும் நடைபெறுகிறது என்றனர்.
இதே "B காம்ப்"பில் வைத்தே புளொட்டின் ஆரம்பகால உறுப்பினரும், உமாமகேஸ்வரன் இலங்கை அரசாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாலும் தேடப்படும் போது பாதுகாப்புக் கொடுத்து வைத்திருந்தவருமான உடுவில் சிவனேஸ்வரன்(காக்கா), புளொட்டின் ஆரம்பகால உறுப்பினர்களான சுண்ணாகம் அகிலன்(ஜயர்), பவான் ஆகியோர் கொடூரமான சித்திரவதையின் பின்னர் கொல்லப்பட்டனர் என்று கூறினர்.
பயிற்சிமுகாம்களில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றவர்கள் என்றும், சந்ததியாரின் ஆட்கள் என்றும், உளவாளிகள் என்றும் பயிற்சிமுகாம்களில் இருபபவர்கள் "B காம்ப்" கொண்டு செல்லப்பட்டு கொடூரமான சித்திரவதைகளின் பின் கொல்லப்பட்டு சவுக்கங் காடுகளில் புதைக்கப்படுகின்றனர் என்றனர்.
பயிற்சி முகாம்களில் அரசியல் பேசக்கூடாது என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்ததோடு அதையும் மீறி அரசியல் பேசுபவர்கள் அமைப்புக்கு எதிரானவர்கள், சதிகாரர்கள் என முத்திரை குத்தப்படுகின்றனர் என்றனர்.
ஒருவரை தோழர் என விளிப்பது, அமைப்பை விமர்சிப்பது, கேள்வி கேட்பது அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறினர்.
உண்மையான விடுதலைப் போராட்ட உணர்வுடன் எம்முடன் இணைந்து பயிற்சிக்கென இந்தியா சென்ற இளைஞர்கள் பயிற்சிமுகாம்களில் சொல்லொண்ணா கொடுமைகளுக்கும், சித்திரதைகளுக்கும் உள்ளாவதோடு, கொலைசெய்யவும்படுகிறார்கள் என்று கூறினார். சாராம்சத்தில் இந்தியாவில் எமது அமைப்புக்குள் அராஜகம் தான் கோலோச்சுகிறது என்று கூறினர்.
ஏனைய இயக்கத்தவர்களால் சந்ததியார் அமைப்பு செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கி இருப்பதாகவும், தோழர் தங்கராஜா அரசியல் வகுப்புக்கள் எடுத்து பயிற்சிமுகாம்களில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் முன்பு தகவல்கள் கசியவிடப்பட்டிருந்தன. ஆனால் அந்நேரத்தில் அத்தகவல்களை நாம் நம்புவதற்கு தயாராக இருக்கவில்லை. அமைப்பு மீதான அதீதவிசுவாசமும், எமது அமைப்பின் வளர்ச்சி கண்டு காழ்ப்புணர்ச்சி கொண்டோரே இத்தகைய உண்மைக்குப் புறம்பான விடயங்களை வெளியிடுகின்றனர் என கூறி அவர்கள் கருத்தை நிராகரித்திருந்தோம்.
உமாமகேஸ்வரன் தளம் வந்திருந்தபோதும் கூட யாழ்ப்பாண மாவட்ட அமைப்புக்குழுவினரால் அரசியல் செயலர் சந்ததியார் பற்றியும், தோழர் தங்கராஜாவின் நிலைபற்றியும் வெளிப்படையாகவே கேள்விகள் உமாமகேஸ்வரனை நோக்கி முன்வைக்கப்பட்டிருந்தன. அரசியல் செயலர் சந்ததியார் அமைப்புடன் தான் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் எனக் குறிப்பிட்டிருந்த உமாமகேஸ்வரன் தோழர் தங்கராஜா பற்றிய கேள்விக்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்து எதிர்மறையாக "தோழர் தங்கராஜாவைப் பார்த்தால்தான் அல்லது அவருடன் பேசினால்தான் நம்புவீர்களா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால் இந்தியாவிலிருந்து வந்த விஜயனும் பாண்டியும் தரும் தகவல்கள் அரசியல் செயலர் சந்ததியார், தோழர் தங்கராஜா பற்றி உமாமகேஸ்வரனால் யாழ் மாவட்டக்குழுவுக்கு கூறப்பட்டவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை எமக்கு எடுத்துக் காட்டியது. 1984 நடுப்பகுதியில் உமாமகேஸ்வரனால் தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கொக்குவில் ரவிமூர்த்தி "சந்ததியாரின் ஆட்களின் பேச்சைக் கேட்காமல் ஒழுங்காக வேலை செய்" என்று என்னிடம் கூறியதின் பின்னணி என்ன என்பதை இப்பொழுது என்னால் ஊகிக்கமுடிந்தது.
மத்தியகுழு உறுப்பினரான பெரியமுரளி 1984 நடுப்பகுதியில் தளம் வந்து திரும்பியபோது "இங்கு (தளத்தில்) நீங்கள் எவ்வளவோ பாதுகாப்புப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் உங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறீர்கள், ஆனால் அங்கு (இந்தியாவில்) இருக்கும் நம்மவர்கள் இதை உணர்ந்துகொண்டது போல் இல்லை" என சூட்சுமமாக கூறிச்சென்றதன் பின்னணி என்ன என்பதை இப்பொழுது என்னால் ஊகிக்கமுடிந்தது.
இந்தியாவுக்கு இராணுவப் பயிற்சிக்கெனச் சென்று பின்பு சுகவீனம் காரணமாக 1984 பிற்பகுதியில் தளம் திரும்பியிருந்த கொக்குவிலைச் சேர்ந்த செட்டியும் சின்னத்தம்பியும் என்னை வந்து சந்தித்தபோது "அங்கு (இந்தியாவில்) எல்லாமே தலைகீழாக நடந்து கொண்டிருக்கின்றது, நீங்கள் இங்கு கஸ்டப்பட்டு வேலை செய்கிறீர்கள்" எனச் சொல்லிச் சென்றதன் பின்னணி என்ன என்பதை இப்பொழுது என்னால் ஊகிக்கமுடிந்தது.
இந்தியாவில் பயிற்சிமுகாமில் இடம்பெற்ற தோழர் தங்கராஜாவின் அரசியல்பாசறையில் பங்குபற்றி, அரசியல் செயலர் சந்ததியாரால் தெரிவு செய்யப்பட்டு அரசியல் வகுப்புகள் எடுப்பதற்கு என தளம் அனுப்பி வைக்கப்பட்ட டானியல், சத்தியன், பிரகாஷ் போன்றோர் ஆன்மாவை இழந்துவிட்டவர்கள் போலக் காணப்படவும், சத்தியனிடம் முன்பு காணப்பட்ட வெளிப்படையாகப் பேசும்தன்மை, நட்புறவாகப் பழகுதல் என்பனவெல்லாம் தொலைந்துவிட்டிருந்தது ஏன் என்பதையும் அதற்கான காரணத்தையும் கூட இப்பொழுது என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது.
சுந்தரத்தால் ஆரம்பிக்கப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளால் சுந்தரம் படுகொலை செய்யப்பட்ட பின்னர் கண்ணாடிச்சந்திரனால் அச்சிட்டு தொடர்ந்து வெளியிடப்பட்ட "புதிய பாதை"யில் வெளிவந்த புளொட்டின் புரட்சிகரக் கருத்துக்கள், எமது அமைப்பின் வானொலிச் சேவையான "தமிழீழத்தின் குரல்" வெளிக் கொணர்ந்துகொண்டிருந்த புரட்சிகர கருத்துக்கள், புரட்சிகரப் பாடல்கள், தோழர் தங்கராஜாவால் அரசியல் பாசறைகளிலும், அரசியல் வகுப்புகளிலும், கருத்தரங்குகளிலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களான ஜனநாயக மத்தியத்துவப்படுத்தப்பட்ட புரட்சிகர அமைப்பு, உழைக்கும் மக்களின் அதிகாரம், அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம், விமர்சனம், சுயவிமர்சனம், புரட்சிகர இராணுவம் என்பவை புளொட்டினுடைய கருத்துக்கள்தான் என்று இதுவரை நம்பியிருந்தோம்.
ஆனால் உமாமகேஸ்வரனுக்கோ, அவரை சுற்றி இருந்தவர்களுக்கோ இத்தகைய புரட்சிகர கருத்துக்களுடன் எதுவித சம்பந்தமும் இல்லை என்பது தற்போது தெரியவரத்தொடங்கியது.
புளொட்டினுடைய உருவாக்கமும் சரி, அதன் வளர்ச்சியும் சரி, குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களது தவறான கொள்கை மற்றும் நடைமுறைகளையும் கடுமையாக விமர்சனம் செய்வதாகவே இருந்து வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை மக்கள் சக்தியில் நம்பிக்கையற்ற தனிநபர் பயங்கரவாதக்குழு என்றோம்; சுத்த இராணுவக் கண்ணோட்டம் உடையவர்கள் என்றோம்; தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஜனநாயகம் இல்லை, கருத்துச் சுதந்திரம் இல்லை, விமர்சன சுதந்திரம் இல்லை என்றோம். உண்மை தான். தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி நாம் சொன்னவை அனைத்தும் சரியானவைதான்.
ஆனால் இப்பொழுது உமாமகேஸ்வரனினதும், அவரை சுற்றி இருப்பவர்களினதும் நடவடிக்கைகள், செயல்கள் அனைத்தும் எந்தவகையில் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து வேறுபட்டுள்ளது? தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுவிம்பமாக அல்லவா உமாமகேஸ்வரனும், அவரை சுற்றி இருப்பவர்களும் இன்று காணப்படுகின்றனர். இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் தார்மீகபலம் இனியும் எமக்கு உண்டா? இதற்கு மேலும் எமது தலைமையை ஒரு புரட்சிகரத் தலைமை என்று எப்படிக் கூறமுடியும்?
நான் புளொட்டில் இணையும் போது புளொட்டினுடைய கொள்கை, கோட்பாடு என்ன என அறிந்துகொண்டு இணைந்திருக்கவில்லைத்தான். அன்று நானிருந்த நிலையில் கொள்கை, கோட்பாடு என்பதைவிட, இனவாத அரசுக்கெதிராக ஆயுதமேந்திப் போராட வேண்டும் என்பதுதான் முன்னிலையில் இருந்தது. ஆனால், எப்பொழுது பெரியமுரளியால் தோழர் தங்கராஜா எனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டாரோ அன்றிலிருந்து எனக்குள் ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கியிருந்தது.
எனது அரசியல் பார்வைகள், சிந்தனைகள், கருத்துக்கள், அனைத்திலுமே தோழர் தங்கராஜா மாற்றத்தை ஏற்படுத்திவிட்டிருந்தார். வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கும் ஒரு சமத்துவமற்ற சமுதாய அமைப்பில் தோன்றி வளரும் முரண்பாடுகளை ஒரு வர்க்கப்பார்வைக்கூடாக மட்டுமே அணுகமுடியும் என்று தனது அரசியல்பாசறைகள், அரசியல் வகுப்புக்களில் குறிப்பிட்டு வந்த தோழர் தங்கராஜா, பிரச்சனைகளை விஞ்ஞான ரீதியாக, மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தில் அணுகித் தீர்வு காணவேண்டியதன் அவசியத்தையும் எமக்கு வலியுறுத்திக் கூறியிருந்தார்.
எந்த ஒரு போராட்டத்திலும் மக்களே, மக்கள் மட்டுமே தீர்க்ககரமான சக்தி எனக் குறிப்பிட்ட தோழர் தங்கராஜா, சரியான கருத்தை பற்றிக்கொண்ட மக்களின் உணர்வுபூர்வமான பங்களிப்பினால் தான் உணர்வுபூர்வமான போராட்டத்தினால் தான் ஈழவிடுதலைப் போராட்டம் வெல்லப்பட முடியும் என்றார். தோழர் தங்கராஜா எமது அமைப்புப்பற்றி குறிப்பிடுகையில், எமது அமைப்பானது ஜனநாயக மத்தியத்துவப்படுத்தப்பட்டதாக இருக்கும் அதேவேளை, அமைப்புக்குள் முழுமையான கருத்துச் சுதந்திரமும், விமர்சன சுதந்திரமும் நிலவும் என்று குறிப்பிட்டிருந்தார். எமது இராணுவம் ஒரு புரட்சிகர இராணுவமாக, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக செயற்படும் இராணுவமாக இருக்கும் என்றும், நாம் தனிநபர் பயங்கரவாதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல, மக்களில் குறிப்பாக உழைக்கும் மக்களில் நம்பிக்கை கொண்டவர்கள், புரட்சிகர அரசியலில் நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் தோழர் தங்கராஜா தெரிவித்திருந்தார்.
இத்தகைய கருத்துக்களையே "புதிய பாதை" பத்திரிகையும், "தழிழீழத்தின் குரல்" வானொலியும் கூட வெளிக்கொணர்ந்து கொண்டிருந்தன. தளத்தில் தோழர் தங்கராஜாவின் வழிகாட்டலில் வளர்ந்த நாம், அதே கருத்தை "புதிய பாதை" பத்திரிகை, "தமிழீழத்தின் குரல்" வானொலி போன்றவையும் பிரதிபலித்ததால் எமது அமைப்பில் உள்ளவர்களும் அதே கருத்தில் வளர்த்தெடுக்கப்பட்டனர்.
ஆனால் இந்தியாவிலிருந்து வந்திருந்த விஜயனும் பாண்டியும் வெளியிட்ட தகவல்கள் எமது அமைப்பின் கருத்துக்களுக்கும் எமது தலைமையின் நடைமுறைகளுக்குமிடையில் எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது என்பதை துல்லியமாக எடுத்துக்காட்டியது. இப்பொழுது இந்த விடயம் குறித்து பேசுவதற்கு தளத்தில் எந்தவொரு மத்தியகுழு உறுப்பினரும் இருக்கவில்லை. டொமினிக் மத்தியகுழுக் கூட்டத்துக்கென இந்தியா செல்லும்போது ஒரு நல்லமுடிவுடன் திரும்பி வருவதாகவே உறுதியளித்துச் சென்றிருந்தார். ஆனால் இந்தியாவில் எமது அமைப்பு செயற்பாடுகள் குறித்து வந்துள்ள தகவல்கள் எத்தகைய நல்லமுடிவையும் மத்தியகுழுவால் எடுக்க முடியாது என்பதையும், டொமினிக் கூறியது போல் நல்லமுடிவுடன் அவரால் திரும்பி வரமுடியாது என்பதையும்தான் எமக்கு காட்டி நின்றது. இருந்தபோதும் தளத்தில் அமைப்புச் செயற்பாடுகளை தொடர்ந்து கவனிக்கவேண்டியவர்களாக நாமிருந்தோம்.
ஆனால் இபபொழுது புளொட் என்ற அமைப்பிலிருந்து அந்நியமாகிக் கொண்டிருப்பதான ஒரு உள்ளுணர்வு என்னுள் ஏற்படத் தொடங்கியிருந்தது. மத்தியகுழுக் கூட்டத்துக்கென இந்தியா சென்ற தளநிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்கின் வருகையின் மூலம் மட்டும்தான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவுகட்ட முடியும் என நினைத்தவாறு திருநெல்வேலியிலுள்ள சனசமூக நிலையத்திலிருந்து உரும்பிராய் நோக்கி சைக்கிளில் செல்லத் தயாரானேன்.
இந்தியாவில் இருந்து வந்த கண்ணாடிச் சந்திரனின் கடிதம்
திருநெல்வேலியிலுள்ள சனசமூக நிலையத்துக்கு முன்னாள் நின்றவாறு மகளீர் அமைப்பை சேர்ந்த சத்தியா உட்பட சிலர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களினது பேச்சுக்களும் முகபாவனைகளும் ஏதோ ஒரு முக்கியமான விடயத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பது போல தெரிந்தது. மதியநேர வெய்யிலின் கொடூரத்தை வெறிச்சோடிக் கொண்டிருந்த வீதிகள் உணர்த்தி நின்றன. உரும்பிராய் நோக்கி சென்று கொண்டிருந்த நான் திருநெல்வேலி அம்மன்கோவிலை அண்மித்த போது சின்னமென்டிஸும் அவரது உதவியாளரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருப்பதை அவதானித்தேன். சின்னமென்டிஸ் என்னுடன் பேசுவதற்குத் தான் வருகின்றார் என உணர்ந்து கொண்டு அண்மையில் உள்ள மரநிழலில் ஒதுங்கி நின்றேன். என்னை நோக்கி வந்த சின்னமென்டிஸ் என்னிடம் "பெரிசு" (உமாமகேஸ்வரன்) தகவல் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
(சின்னமென்டிஸ்)
வழமைக்கு மாறாக தனது பற்களால் உதடுகளை மாறி மாறி கடித்தவண்ணம் சின்னமென்டிஸ் தொடர்ந்து பேசினார். ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படியும், அவர்களுக்கு அங்கு முக்கியபொறுப்புகள் கொடுப்பதற்கு இருப்பதாகவும் "பெரிசு"(உமாமகேஸ்வரன்) தகவல் அனுப்பியிருப்பதாக சின்னமென்டிஸ் கூறினார்.
இந்தியாவில்தான் அனைத்து மத்திய குழு உறுப்பினர்களும், பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களும்கூட இருக்கின்றார்களே அப்படி இருக்க ஏன் இவர்கள் மூவரையும் இங்கிருந்து இந்தியா அனுப்பும்படி உமாமகேஸ்வரன் கேட்கிறார் என எனக்குள் கேள்விய எழுப்பியபடி, விஜயனும் பாண்டியும் ஏற்கனவே எம்மிடம் சொன்ன தகவல்களையும் ஒருகணம் இரைமீட்டுப் பார்த்தேன்.
ஜீவன், விபுல், சிவானந்தி ஆகிய மூவரையும் ஏதோ உள்நோக்கத்தில்தான் உமாமகேஸ்வரன் இந்தியாவுக்கு அழைக்கிறார் என்பது மட்டும் நன்கு புலனானது. ஏனெனில் இந்த மூன்றுபேரும் தான் உமாமகேஸ்வரன் தளம் வந்திருந்தபோது அவர் எதிர்பார்த்திராத அல்லது விரும்பியிராத பல கேள்விகளை எழுப்பியிருந்ததோடு விமர்சனங்களையும் கூட முன்வைத்திருந்தனர். மூவரையும் உடனடியாக இந்தியாவுக்கு அனுப்புவது சாத்தியமில்லை என ஒரு கணப்பொழுது மௌனத்தின் பின் சின்னமெண்டிஸிடம் தெரிவித்திருந்தேன்.
ஏனென்று சின்னமென்டிஸ் என்னிடம் கேள்வி எழுப்பினார். ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோர் ஒவ்வொரு துறைக்கு பொறுப்பாக இருப்பதால் அவர்களிடம் இருக்கும் பொறுப்புக்களை சரிவர வேறு பொருத்தமான நபர்களிடம் கையளித்த பின்புதான் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பமுடியும் என்றேன். எத்தனை நாட்களில் மூவரையும் அனுப்ப முடியும் என சின்னமென்டிஸ் வினவினார். குறைந்தது மூன்று நாட்களாவது தேவை என்றேன். "பெரிசு" (உமாமகேஸ்வரன்) உடனடியா... என்று சின்னமென்டிஸ் தொடர்ந்து பேச முற்பட்டபோது, மூன்று நாட்களில் மூவரையும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கின்றேன் எனக் கூறி சின்னமென்டிஸை அனுப்பி வைத்தேன்.
எனது முடிவில் சின்னமென்டிஸுக்கு முழுமையான உடன்பாடு இல்லாதுவிட்டாலும் கூட அவர் திரும்பிச் சென்றுவிட்டார். சுழிபுரம் ஆறு இளைஞர் படுகொலை, தமிழீழ விடுதலை இராணுவத்தை(TELA) அழித்ததோடு அதன் உறுப்பினர்கள் மீதான கோரத்தனம் என்பவற்றோடு பயிற்சிமுகாம்களை வதைமுகாம்களாக மாற்றிவிட்டிருந்த உமாமகேஸ்வரன் தனது அடங்காத கொலைவெறிக்கு ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரை இந்தியா அனுப்பி வைக்கும்படி தகவல் அனுப்பியிருந்ததன் மூலம் தனது உண்மையான சுயரூபத்தை தெளிவாக்கியிருந்தார்.
உமாமகேஸ்வரனினதும் அவரை சுற்றி இருந்த பதவி மோகம் கொண்ட கொலை வெறிபிடித்தவர்களினதும் செயற்பாடுகளை எமக்கு வெளிச்சத்துக்கு கொண்டுவந்த விஜயனும் பாண்டியும் ஒரு உண்மையான விடுதலைப் போராளி மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கி இருந்தனர்.
சின்னமென்டிஸுக்கு ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரை மூன்று நாட்களில் இந்தியா அனுப்புவது என்று உறுதியளித்து விட்டு உரும்பிராய் செல்லாது மீண்டும் திருநெல்வேலி சனசமூக நிலையத்துக்கு சென்றேன். மகளீர் அமைப்பை சேர்ந்த சத்தியாவும் ஏனையோரும் இன்னமும் கூட முடிவுக்கு வராத பேச்சுக்களுடன் சனசமூக நிலையத்துக்கு முன் நின்று கொண்டிருந்தனர்.
சின்னமென்டிஸ் என்னிடம் பேசிய விடயத்தை எப்படி மூவரிடம் தெரிவிப்பது என்று நான் குழம்பிக் கொண்டிருந்த வேளையில் விபுல் சனசமூக நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். எப்போதும் ஒருவித புன்னகையுடனும், தனது பொறுப்புக்களில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்பவர் போல் முகபாவத்துடனும் தோற்றமளிக்கும் விபுலின் முகத்தில் புன்னகையை காண முடியவில்லை. எதையும் அலட்சியம் செய்யும் ஒருவர் போல மௌனமே உருவாக விபுல் காணப்பட்டார். விபுலின் மௌனத்தை கலைக்க வேண்டி எப்படி இருக்கிறீர் என்று பேச்சுக் கொடுத்தேன். என்னத்தை நான் சொல்வது என பெருமூச்சுடன் விபுல் பதிலளித்தார். இந்தியாவில் இருந்து கண்ணாடிச்சந்திரன் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார் என்று கூறினார். அந்தக் கடிதத்தை படித்த பின்பு யாரை நம்புவது, என்னத்தை சொல்வது என்று தெரியவில்லை என்று கூறிய விபுல் இந்தியாவில் இருந்து கண்ணாடிச்சந்திரனால் அனுப்பப்பட்ட கடிதத்தை என்னிடம் கொடுத்து படித்து பார்க்குமாறு கூறினார்.
(தொடரும்)
1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1
2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2
3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3
4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4
5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5
6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6
7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7
8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8
9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9
10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10
11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11
12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12
13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13
14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14
15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15
16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16
17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17
18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18
19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19
20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20
21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21
22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22
23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23