உங்களைப் போல் ஓர் ஏழை

உழைத்து வாழ்ந்த மண் இது

சின்னஞ்சிறுசுகள் பாதத்து மிதிப்பில்

சொந்தமண் சிரித்து எத்தனை தசாப்தங்கள்

 

 

 

 

இன்னம் எங்களை

அன்னியமாக்குவதிலும் பகையாய் நோக்குதலுக்கும்

பேரினவாதம் வெற்றிகொள்கிறது.

விளைநிலங்கள் அடுக்குமாடியாகவும்

வயிற்றுக் கஞ்சிக்காய் உழுதநிலம்

அன்னிய நிறுவனங்கள் கொள்ளைக்குமாய்

எந்த மக்களிடமாவது ஒரு வார்த்தை பேசியதாயில்லை

கொக்கிளாயில் மட்டும்

உங்களை குடியேறென கொண்டுபோவதில்

ராஜபக்ச அரசுக்கு

அப்படியென்ன அக்கறை உறவுகளே.

ஏழ்மைக்கெதிராய் கொதித்தெளாதிருப்பதற்காய்

மசூதிகள் இடித்து காண்பிக்கப்படுகிறது

புத்தரின் சிலையை நிறுவ நிறுவ

ஏகப்பெரும்பான்மை உறுதி செய்யப்படுகிறதாம்

ஓற்றுமை பேசியபடியே தான்

பிரித்து ஆளுதல் நாசுக்காய் அரங்கேறுகிறது.

யுத்தம் காவுகொண்டது

எந்த அரசியல்வாதிகளின் பிள்ளைகளுமில்லை

வல்லாதிக்கப்போட்டிக்கும்

ராஜபக்ச குடும்ப இருப்புக்குமாய்த்தான்

பலியெடுப்பு நடந்திருக்கிறது

மிருகபலிக்காய் உருகுகின்ற பௌத்தபீடாதிபதிகளும்

பாராளுமன்ற பேட்டைரவுடிகளும்

மனித அவலத்தின் போது

மௌனமாகி இருந்தது விசித்திரமில்லை.

இனியொரு எழுச்சி

இலங்கை மக்கள் ஒருமித்தெழுதல்

நிகழுமென்பது

அடக்குமுறையாளர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது

இனத்தை காப்பதாய்

பிரித்து ஆளுதல் மேலும் வீரியம் கொள்கிறது

கொக்கிளாயில் குடியேறவரும் உறவுகளே

எம் கரங்களை இறுகப்பற்றுவோம்.

கங்கா

23/09/2011