இலங்கையில் வர்க்கக் கட்சியாக மாற்றி அமைக்கும் போராட்டத்தை நடத்துமாறு ஜே.வி.பி.யின் உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக அறை கூவுகின்றோம். இனவாத அரசியலைக் களைந்து, தேர்தல் அரசியலைக் கைவிட்டு, தன்னை ஒரு வர்க்கத்தின் கட்சியாக வெளிப்படுத்துமாறு அறைகூவுகின்றோம். கடந்தகால தனிநபர் பயங்கரவாத அரசியலை சுயவிமர்சனம் செய்து கொண்டு,  வெகுஜன அரசியலை முன்னெடுக்குமாறும் கோருகிறோம்.

 

 

 

ஜே.வி.பி.யின் உள் முரண்பாடுகள் பிளவாகவும், மறுதளத்தில் தலைமையைக் கைப்பற்றும் போராட்டமாகவும் நடப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. மறுதளத்தில் மகிந்தாவுக்கு ஆதரவு அளித்தது முதல் சரத்பொன்சேகரவை ஆதரித்தது வரை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்தப் பின்னணியில் ஜே.வி.பி.யின் இனப்பிரச்சனை தொடர்பான பார்வையும், தேர்தல் அரசியலும் கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. இது சாராம்சத்தில் வர்க்க அரசியலை முன்னிலைப்படுத்தி இருக்கின்றது. இதன் பின்னணியில் நடந்த துல்லியமான விவாதங்கள் பற்றி இதுவரை தெரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் பொதுவான அரசியல் சாரம் இதுதான்;.

 

ஆக இந்த முரண்பாடு அவசியமானது, அடிப்படையானது. இது புரட்சிகரமான சூழலுக்கு சாதகமானது. இது எப்படி வெளிப்பட்டாலும், இது இலங்கையின் அரசியல் போக்கில் ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரும். சிங்கள மக்கள் மத்தியில் மார்க்சியம் என்பதை ஜே.வி.பி.யின் இனவாதம் ஊடாகவும், தேர்தல் அரசியல் ஊடாகவும் அடையாளம் கண்டு வந்த போக்கு, முதன் முதலாக இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது.

 

ஜே.வி.பி.யின் தiiமையுடன் முரண்பட்ட பிரிவு தாங்கள் பிரிவினைவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற அறிவிப்பு, அங்கு பிரிவினை வாதத்தை ஆதரிப்பதாக இவர்கள் மேல் எதிர்த்தரப்பு குற்றஞ்சாட்டுகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அதேநேரம் முரண்படும் பிரிவினர் றோகண விஜேவீரவின் இனக் கொள்கைக்கு மாறாக  செயல்படுவதாக ஜே.வி.பி.யின் தலைமை குற்றம் சாட்டுகின்றது.

 

ஆக இந்த விவாதம் இலங்கையின் பிரதான முரண்பாடான இனப்பிரச்சனையின் பின்னணியில் நடக்கின்றது. இங்கு பிரிவினை வாதத்துக்கு எதிராக பிரிந்து செல்லும் உரிமையை முன்வைத்து ஒரு மாற்றம் நிகழுமானால், இலங்கை இடதுசாரிய வரலாற்றில் புதிய அத்தியாயத்தை இது தொடக்கி வைக்கும். இந்த அரசியல் கண்ணோட்டத்தை இதுவரை எந்தக் கட்சியும் கொண்டிருக்கவில்லை. ஜே.வி.பி. அதைத்தான் வெளிப்படுத்துகின்றதா என்பது துல்லியமாகத் தெரியவில்லை.

 

இந்த முரண்பாட்டில் "தமிழன் தலைமையில் பிரிவு" என்ற இலங்கை அரசினதும் மற்றவர்களினதும் இனவாத பிரச்சாரத்தைக் கடந்து, சிங்கள இளைஞர்கள் இதை அரசியல் ரீதியாக அணுகுவார்களேயானால் அதுவும் ஒரு அரசியல்ரீதியான மாற்றம் தான்.

 

இன்று இலங்கையில் ஒரு புரட்சிகர சூழலுக்குரிய மாற்றங்களுக்கு அவசியமானதாக, ஜே.வி.பி.க்குள் முன்னெடுக்க வேண்டியதுமான

 

1. பிரிவினைவாதத்துக்கு மாறாக பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை முன்வைத்து போராடுதல்.

 

2. கடந்தகால தனிநபர் பயங்கரவாதம் முதல் வர்க்க அரசியல் அல்லாத அரசியல் வழிமுறையை நிராகரித்து, வெகுஜன வர்க்க அரசியலை முன்னெடுத்தல்

 

3. வர்க்கப் போராட்டத்தை அரசியலாக ஆணையில் வைத்தல்

 

4. தேர்தல் பாதையை நிராகரித்தலும், கடந்தகால தேர்தல் வழியை சுயவிமர்சனம் செய்தல்.

 

5. கடந்;தகால இனவாதத்தை கேள்விக்குள்ளாக்குவதும், சுயவிமர்சனம் செய்வதும் அசவசியமாகும்

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

28.09.2011

துண்டுப்பிரசுர இலக்கம் 009