வடக்கு கிழக்கில் அபிவிருத்தி பணிக்காகவே இராணுவத்தை நிறுத்தி இருப்பதாக, மகிந்த அமெரிக்காவில் வைத்து கூறுகின்றார். மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பது பற்றி, மக்களை ஆளும் ஜனாதிபதிக்கு அக்கறை கிடையாது. தமிழ் மக்களின் கோரிக்கை என்ன? இராணுவத்தை அங்கிருந்து அகற்றும்படி மக்கள் கோருகின்றனர். இப்படியிருக்க தமிழ் மக்களை வகைதொகையின்றி ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த இராணுவம், தொடர்ந்து அந்த மக்களின் இயல்பான சிவில் நடத்தைகளை இல்லாதாக்குகின்றது. இதன் மூலம் இராணுவ ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்து வருகின்றது. இது தமிழர் பகுதியில் சட்டபூர்வமான சிவில் சமூக நடத்தைகளை இல்லாதாக்குகின்றது. ஆக சட்டவிரோதமாகவே செயல்படக் கோருகின்றது. இதுதான் மகிந்தா வழங்கும் ஜனநாயகம். இதற்கு தலைமை தாங்கும் டக்ளஸ் முதல் கருணா வரையான கைக்கூலிகள்.

 

 

 

வடக்குகிழக்கில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் முதல் பொது அமைப்புகள் வரை சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை. தங்கள் கருத்தை முன்வைக்கும் சுதந்திரத்தை, அங்கு இந்த அரசு அனுமதிப்பதில்லை. தனிமனிதர்களை அஞ்ச வைக்கும் அளவுக்கு, பொது நடத்தைகளை தலைவிரிகோலமாக அங்கு அரசு அமுல்படுத்துகின்றது.

தமிழர் பகுதியில் கூட்ட மண்டபங்களை வாடகைக்கு விடுவதை, மகிந்த தலைமையிலான அரசு திட்டமிட்டு இன்று முடக்கி இருக்கின்றது. தாம் அல்லாத எவருக்கும் கூட்ட மண்டபங்களை வழங்கக் கூடாது என்பது, அங்கு எழுதப்படாத சட்டம். இப்படித்தான் அங்கு ஜனநாயகத்தை அமுல்;படுத்தி கண்காணிக்கும் அடிவருடி அரசியலுக்கு கைக்கூலி டக்ளஸ் தலைமை தாங்குகின்றார்.

சாதாரண இரண்டு மனிதர்கள் பேசுவதைக் கூட டக்ளஸ்சின் ஒற்றர் படை கண்காணிக்கின்றது. இந்த பின்னணியில் அரசு அல்லாத தரப்புக் கருத்துக்கள், செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு அவை திட்டமிட்டு முடக்கப்படுகின்றது. இதன் பின்னணியில் உளவுப்படை முதல் இராணுவம் வரை அட்டகாசம் புரிகின்றன. ஊமையாக்கப்பட்ட மக்கள், நுகர்வு மூலம் மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டப்படுகின்றது.

மறுதளத்தில் தனிநபர்களை கண்காணிப்பது, பின்தொடர்வது, கடத்துவது, சித்திரவதை செய்வது முதல் கொல்வது வரை, யுத்தத்தின் பின் இன்றுவரை தொடருகின்றது. புலிகள் தாம் அல்லாத எதையும் அனுமதிக்காது எதைச் செய்தனரோ, அதையே தான் அரசும் இன்று தொடர்ந்து செய்கின்றது.

மக்கள் மூச்சுவிடுவதற்கு கூட அக்கம் பக்கம் பார்க்க வேண்டியுள்ளது. கலாச்சார சீரழிவுகளை திட்டமிட்டு வளர்ப்பதன் மூலம் லும்பன்தனத்தையும், அதன் அடிப்படையிலான களியாட்டங்களையும், தனிமனித சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் ஊட்டி வளர்க்கப்படுகின்றது. நுகர்வுவெறியை அடிப்படையாகக் கொண் லும்பன் தனத்தை, சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் காட்டி ஊக்கப்படுத்தப்படுகின்றது. இதை அபிவிருத்தியாக காட்டி, மக்களை மூச்சுவிடாது இராணுவத்தைக் கொண்டு அடக்குகின்றனர்.

தனிப்பட்ட மனிதனின் ஜனநாயக உரிமையை மறுப்பதும், சுதந்திரமான சமூக இருப்பை இல்லாதாக்குவதும் தான், மகிந்தா அரசின் இலங்கை தழுவிய பொதுக் கொள்கை. தமிழர் பகுதியில் இதை தன் இனவொடுக்குமுறை ஊடாக இன்று உச்சளவில் இது அமுல்படுத்தப்படுகின்றது.

தமிழ்மக்களைக் கொன்று அவர்கள் கொள்ளையிட்ட மகிந்தவின் குடும்ப ஆட்சி, தன்னை தன் இன மக்களின் இனவாட்சியாளராக காட்டி அவர்களை ஏமாற்றி அடக்கியொடுக்க முனைகின்றது. இதற்காக தமிழ் பகுதியில் திட்டமிட்ட இனவாட்சியை அமுல்படுத்துகின்றது. இதில் இருந்து எழும் எதிர்ப்பை ஒடுக்க, இராணுவத்தை நிறுத்தியிருக்கின்றது. தனக்கு எதிராக எதுவும் அங்கு உருவாகாத வண்ணம், ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மறுத்து சிவில் சமூக கட்டமைப்பை இல்லாதாக்குகின்றது. வடக்கு கிழக்கில் அபிவிருத்தி அரசியல் என்பதும், இராணுவம் அபிவிருத்தி பணியில் செயல்படுவதாக கூறுவதும் உண்மையில், அங்கு மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மறுத்து அவற்றை இல்லாதாக்குவதை அடிப்படையாகக் கொண்டது.

 

பி.இரயாகரன்

26.09.2011