01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

தமிழ் ஊடகங்களில் கொழுந்து விட்டெரியும் இனவாதமும், தலைமறைவு பற்றிய கோட்பாடுகளும்

இலங்கையில் நடக்கும் ஓவ்வொரு நிகழ்வையும் தங்கள் சொந்த இனவாதம் ஊடாக அணுகுவது தான் அறிவாகி, அது பரப்புரையாகின்றது. இப்படி கிணற்றுத் தவளைகளாக இருக்கின்றவர்களின் அறியாமையும், மடமையும், எம் இனத்தையே குட்டிச் சுவராக்குகின்றது. அண்மையில் அமைச்சரின் காலில் விழ மறுத்த சிறுவனின் செயலை தமிழன் வீரச் செயலாகவும், ஜே.வி.பி இற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு தமிழனின் தலைமையில் என்று கூறின தமிழினவாத ஊடகங்கள். இப்படி தமிழ் மக்களுக்கு பட்டை நாமம் போட்டபடி, அவர்களை மொட்டை அடித்தனர். குறுகிய குருட்டுப் பார்வை கொண்ட தங்கள் ஊடகவியல் வக்கிரங்களை, தமிழ் என்ற அடையாளத்தை முன்னிறுத்திய இனவாதம் ஊடாகவே உலகை காட்டி நஞ்சை ஊட்டுகின்றன.

 

 

 

அமைச்சரின் காலில் வீழ்ந்து வணங்க மறுத்த சிறுவன், பிரபாகரனின் காலில் வீழ்ந்து வணங்கி இருப்பானா!? இல்லை. மற்றொரு மனிதனை வணங்குவது மட்டுமின்றி, அதை எதிர்பார்ப்பதும் கூட அடிமைத்தனத்தின் எடுப்பான வடிவம். (சிங்கள) அமைச்சரின் காலில் விழ மறுத்ததை வீரமாகக் காட்டி குண்டியை நக்கும் பன்றிக் கூட்டங்கள், பிரபாகரனின் காலில் விழ மறுத்து இருந்தால் அதை துரோகமாக காட்டிக் குலைத்திருப்பார்கள். இப்படி இந்த எல்லைக்குள் ஊடக வக்கிரங்கள் மூலம் இனவாதத்தைக் கக்கி தமிழ்தேசிய அரசியல் செய்யும் எல்லைக்குள் தான், தமிழ் மக்களை மந்தையாக்கியுள்ளனர்.

இலங்கையில் காலில் வீழ்ந்து வணங்கும் தன்மை பொது மரபாக இருந்தது கிடையாது. இந்திய சினிமா ஊடக மேட்டுக்குடி கும்பல் இடையே உதிரியான அடக்குமுறை வடிவமாக, தம் குழந்தைகள் மேலான பெற்றோரின் திணிப்பாக இருந்தது. ஒவ்வொரு குழந்தையும் இதை செய்வதற்கு எதிரான எதிர்ப்பையும், செய்ததன் பின் வெட்கப்படுவதும் அதை மூடிமறைப்பதும் என்பதும் பொதுவான இயல்பாக இருந்தது. இப்படி காலில் வீழ்தல் வழக்கில் இ;ல்லாத ஓன்று.

புலிக்கு பின் நின்று தாளம்போட்டு வாழ்ந்த அதிகார வர்க்க கூட்டங்கள், இன்று அரசுக்கு தன் விசுவாசத்தைக் காட்ட இல்லாத வழக்குகளை குழந்தைகள் மேல் திணிக்கின்றனர். சுயமரியாதையை இழக்க வைக்கும் வண்ணம் இது அங்குமிங்குமாக புகுத்தப்;படுகின்றது. அதிகாரத்தில் உள்ளவர்களின் காலில் வீழ்ந்து தான் எதையும் பெற முடியும் என்று நடைமுறை வக்கிரமடைகின்றது. இங்கு அதிகார வர்க்கம் தன்னைப் போல், பிறரை வாழக்கோரும் நக்குண்ணித்தனத்தை சமூகம் மேல் திணிக்கின்றனர். இதில் பழக்கப்படாத குழந்தைகள், இது போன்ற வெட்கப்படக் கூடிய அடிமைத்தனத்தை மறுப்பது இயல்பானது, இயற்கையானது.

இந்த இடத்தில் இதை புலிகள் கோரியிருந்தாலும், அதைச் செய்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். ஊடகவியல் அதை துரோகமாக காட்டி இருக்கும். இன்று தமிழனின் வீரமாக காட்டும் இந்த ஊடக நக்குண்ணித்தனம்தான், அங்கு காலில் வீழ்ந்து வாழவும் கோருகின்றது.

இந்த ஊடகங்கள் தான் ஜே.வி.பியின் உள் முரண்பாட்டை தமிழனின் தலைமையிலான போராட்டமாக சித்தரிக்கின்றது. அது ஒரு அமைப்பின் உள் நடக்கும் அரசியல் ரீதியான கோட்பாட்டு போராட்டமாகும். தமிழன் சிங்களவன் என்று, நடத்தும் போராட்டமல்ல. தமிழன் - சிங்களவன் போராட்டமாக காட்டுகின்ற இனவாத ஊடகங்கள், ஏட்டிக்குப் போட்டியாக அனைத்துக்கும் இனவாத சாயம் பூசுகின்றது.

சிங்கள இனவாத ஊடகங்கள் தமிழன் தலைமையிலான பிளவு, மீண்டும் தமிழன் தலைமையில் ஆயுதப் போராட்டம் என்று வக்கரிக்க, தமிழினவாதம் தமிழன் தலைமையில் என்று கதை சொல்லுகின்றது. டெயிலி மீரர் தமிழன் தலைமையில் தலைமறைவான ஆயுதப் போராட்டம் பற்றி ஆள்காட்டியாக செயல்பட்டு ஆதாரமற்ற அவதூறுகளை செய்கின்றது. (பார்க்க: Highly placed party sources said that there was a plan by Gunaratnam group to go underground and pave the way for an armed struggle.")

இப்படி இருக்க இனியொரு நாவலன் ".. தமிழ் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் தேவையையும் அதனை நிறுவனமயப்படுத்தும் கட்சியையும் அதன் பின்பலமாக அமையவல்ல தலைமறைவு இயக்கங்களையும் அதற்கான புதிய சிந்தனை முறையினதும், வழிமுறையினதும் தேவையும் இன்று என்றுமில்லாதவாறு உணர்த்தி நிற்கிறது." என்கின்றனர். இப்படி இனவாத அரசு ஊடகங்கள் முதல் இனியொருவரை ஓருபுள்ளியில் "தலைமறைவு" பற்றி பேசுவதுடன், ஆள்காட்டி வேலையும் செய்கின்றன.

இங்கு தலைமறைவு பற்றிய கோட்பாட்டுத் திரிபு புகுத்தப்படுகின்றது. கட்சி வெகுஜனங்கள் மத்தியில் "தலைமறைவாக" இருப்பது என்பதைத் திரித்து, "தலைமறைவு" கட்சியைக் கட்டுவதும் கோசமாவதும் புரட்சிக்கு எதிர்மறையானது. இன்று மக்களை அணிதிரட்டும் கட்சிதான் தேவை. குண்டுவைக்கும் தலைமறைவு கட்சியல்ல.

இப்படிப்பட்ட "தலைமறைவு" இயக்கம் அவசியமானதா!? இது குண்டு வைக்கும் தனிநபர் பயங்கரவாத அரசியலாகும்;. இலங்கையில் "தலைமறைவு" இயங்கங்கள் அதாவது ஜே.வி.பி முதல் புலிகள் வரை இருந்துள்ளது. இந்த "தலைமறை"வில் இருந்து வேறுபட்ட வடிவம் தான் என்ன? "புதிய சிந்தனையும்" "வழிமுறையும்" இந்த "தலைமறைவு" வடிவத்தை மாற்றிவிடாது. "தலைமறைவு" என்பது மக்களுக்கு தலைமறைவாக இருந்ததுடன், மக்களை ஓடுக்கும் இயக்கமாகத்தான் என்றும் இருந்துள்ளது. "தலைமறை"வாக இருந்தபடி மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் போட்டார்கள். மக்கள்தான் தமக்காக தாம் போராட வேண்டும் என்பதை "தலைமறைவு" கோட்பாடு மறுக்கின்றது.

இன்று தேவை "தலைமறைவு" கட்சியல்ல. இதுபோல் ஆயுதமேந்திய "தலைமறைவு" வன்முறையுமல்ல. வெகுஜனங்களை அணிதிரட்டும் கட்சியும், வெகுஜன கட்சி அமைப்புகளும் தான் இன்று அவசியமானது. வெகுஜனங்களுக்குள் தான் கட்சி இருக்க முடியும். இன்று "தலைமறைவு" கட்சி உடனடித் தேவை என்பது, வெகுஜனங்களை அணிதிரட்டும் கட்சி வடிவத்தை நிராகரிக்கிற அரசியலாகும். கட்சி வெகுஜனங்கள் மத்தியில் தலைமறைவாக இருப்பது என்பதை திரித்து, தலைமறைவையே அரசியல் இயக்கமாக்குவது தனிநபர் பயங்கரவாதத்தின் அரசியல் மூலமாகும். இது தலைமறைவும் ஆயுதப்போராட்டமும் என்ற பழைய, ஆனால் "புதிய சிந்தனை" புதிய "வழிமுறை" என்ற புதிய சட்டிதான்.

இங்கு ஜே.வி.பி யின் உள் மோதல் மூலம் உருவாகும் புதிய பிரிவு, இலங்கை ஊடகங்கள் சொல்லும் நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் அந்த நிகழ்வுகள் நடக்கின்றனவா அல்லது சரியான அணி மீதான அவதூறா என்பதை காலம் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இதனை வழிமுறையாக முன்வைக்கும் இனியொருவின் அரசியல் இங்கு வெளிப்படுகின்றது.

இன்று ஜே.வி.பியின் உடைவு அவசியமானது. சரியான ஒரு அரசியல் பிரிவாக உருவாகாவிட்;டாலும் கூட, இந்த உடைவு இலங்கையில் புரட்சிகர அரசியல் சூழலுக்கு அவசியமானது, சாதகமானது.

 

பி.இரயாகரன்

24.09.2011


பி.இரயாகரன் - சமர்