பிரிந்து போவதற்காக போராடுவது பிற்போக்கானதல்ல என்ற பூர்சுவா வர்க்கத்தின் கோசத்தை, மார்க்சியத்தின் பெயரில் முற்போக்குக் கோசமாக காட்டி முன்வைக்கின்றனர். இங்கு "ஒரு தேசியம் பிரிந்து போவ"வதற்காக "போராடு"வது தான் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை என்று கூறுகின்ற மிக நுட்பமான அரசியல் புரட்டு முன்வைக்கப்படுகின்றது. அதாவது "ஒரு தேசிய இனம் பிரிந்து போவதும் அது தன்னாதிக்கத்திற்காகப் போராடுதலும் பிற்போக்கானது என்ற வாதம் வெவ்வேறு நோக்குநிலைகளிலிருந்து முன்வைக்கப்படுகின்றது. ஒரு புறத்தில் உழைக்கும் மக்களைக் கூறுபோடுகின்ற பிற்போக்கு முழக்கமாகவும் மறுபுறத்தில் இனவாதக் குரலாகவும் புனையப்படுகின்றது" என்று கூறி, "ஒரு தேசியம் பிரிந்து போவ"வதற்காக "போராடு"வது முற்போக்கானது, அது உழைக்கும் மக்களை கூறு போடாது என்று மார்க்சியத்தின் பெயரில் கூற முற்படுகின்றனர்.

 

 

 

பூர்சுவா வர்க்கம் முன்வைக்கும் பிரிவினைவாதம் தான் இங்கு "ஒரு தேசியம் பிரிந்து போவ"வதற்காக "போராடு"ம் வாதமாக இங்கு மீள முன்வைக்கப்படுகின்றது. இங்கு இந்த திரிபு மிக நுட்பமானது. ஒடுக்கும் இனப் பாட்டாளி வர்க்கம், ஒடுக்கப்பட்ட இன மக்கள் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக்காகப் போராட வேண்டும் என்பதைத்தான், தலைகீழாக்கி "ஒரு தேசியம் பிரிந்து போவ"வதற்காக ஒடுக்கப்பட்ட இன பாட்டாளி வர்க்கத்தின் "போராடு"தலாக காட்டுகின்றனர். அதாவது ஒடுக்கும் இன பாட்டாளி வர்க்கத்தின் ஸ்தூலமான கடமையை, ஒடுக்கப்பட்ட இனப் பாட்டாளி வர்க்கத்தின் ஸ்தூலமான கடமையாக திரித்துக்காட்டி விடுகின்ற புரட்டை, ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்து முன்வைக்கின்றனர். இங்கு ஒடுக்கப்பட்ட இனப் பாட்டாளி வர்க்கத்தின் ஸ்தூலமான அரசியல் கடமையை மறுக்கின்றனர். இங்கு பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை, "பிரிந்து போவ"தற்கான உரிமையாக, அதற்காக "போராடு"ம் ஸ்தூலமான கடமையாக முன்வைக்கப்படுகின்றது.

ஒடுக்கும் இனப் பாட்டாளிவர்க்கத்தின் ஸ்தூலமான கடமை பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக்காக தன் இன மக்கள் மத்தியில் போராடுவதுதான். இது "ஒரு தேசியம் பிரிந்து போவ"வதற்காக "போராடு"வதல்ல. மாறாக பிரிந்து போகாமல் இருப்பதற்காக, பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை வைத்து போராடுதலாகும். அதுவும் இங்கு ஒடுக்கப்பட்ட இனப் பாட்டாளி வர்க்கத்தை குறித்தல்ல இந்த வாதம். இது எந்தவிதத்திலும் ஒடுக்கப்பட்ட இனத்தின் "ஒரு தேசியம் பிரிந்து போவ"தற்காக "போராடு"ம் பிரிவினைவாதத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளாது. மாறாக ஒடுக்கப்பட்ட இன பாட்டாளி வர்க்கம் பிரிவினை வாதத்துக்கு எதிராக நடத்தும் ஒடுக்குமின ஒடுக்கப்பட்ட மக்களுடனான ஐக்கியப்பட்ட போராட்டத்துடன்தான் தன்னை இணைத்துக் கொள்ளும்.

இங்கு ஒடுக்கப்பட்ட இனப் பாட்டாளி வர்க்கத்தின் கடமை "ஒரு தேசியம் பிரிந்து போவ"வதற்காக முனையும் பூர்சுவா வர்க்கத்துக்கு எதிராக, ஒடுக்கும் இன ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஐக்கியத்தை முன்னிறுத்திப் போராடுதலாகும்.

இங்கு "ஒரு தேசியம் பிரிந்து போவ"வதற்காக "போராடு"ம் நிகழ்ச்சி நிரல், ஒடுக்கப்பட்ட ஒடுக்குகின்ற இரு பாட்டாளி வர்க்கத்தினதும் நிகழ்ச்சி நிரலுக்கும் எதிரானது.

இங்கு "ஒரு தேசிய இனம் பிரிந்து போவதும் அது தன்னாதிக்கத்திற்காகப் போராடுதலும்" என்பது மார்க்சியத்தை திரிப்பதாகும். ஒரு தேசிய இனம் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை கொண்ட அதன் தன்னாதிக்கத்தை அங்கீகரித்துப் போராடுவது என்பது, "பிரிந்து போவ"தற்காக போராடுவதில் இருந்து முற்றிலும் நேர்மாறானது. இங்கு பிரிந்து போவதை தடுக்கத்தான், பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை முன்வைத்து மார்க்சியம் போராடுகின்றது. ஆக "ஒரு தேசிய இனம் பிரிந்து போவ"தற்காக, அதற்காக போராடுவதற்காக மார்க்சியம் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை முன்வைக்கவில்லை. இங்கு மிகத் தெளிவாக பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையைத்தான் மார்க்சியம் முன்வைக்கின்றதே ஒழிய "தேசிய இனம் பிரிந்து போவ"தற்hக அது என்றும் போராடாது. இங்கு பிரிந்து போகும் சூழல் ஏற்படும் போது, முரணற்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் அதை அணுகும். இங்கு பிரிந்து செல்லும் உரிமைக்காக போராடும், பிரிவினைக்காக போராடாது. இங்கு பிரிவினை முரணற்ற ஐனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. இந்த அரசியல் வேறுபாட்டை மார்க்சியத்தின் பெயரில் இல்லாதாக்குகின்ற நுண்ணிய வார்த்தைஜாலங்கள் மூலம் தான், இங்கு பிரிவினைவாதம் முன்வைக்கப்படுகின்றது.

இங்கு ஒடுக்கப்பட்ட இனப் பாட்டாளிவர்க்கம் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை முன்வைத்துப் போராடும் போது

1. தன் இன பூர்சுவா வர்க்கம் முன்வைக்கும் பிரிவினையை எதிர்த்துப் போராட வேண்டும்.

2. ஒடுக்கம் இனத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்திப் போராட வேண்டும்

இதை முரணற்ற ஐனநாயகத்தை அடிப்படையாக கொண்டு அணுக வேண்டும். இதைச் செய்யாத அரசியல் படுபிற்போக்கானது. ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் ஒடுக்கும் இனப் பாட்டாளி வர்க்கத்திடம் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை முன்வைத்து போராடக் கோருகின்றது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட இனத்திடம் இருந்து பிரிவினைக்கு எதிரான ஐக்கியத்துக்கான போராட்டத்தை உருவாக்குகின்றது. இது போல் ஒடுக்கும் இனம் சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிராக பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை சார்ந்து, ஒடுக்கப்பட்ட இனத்துடன் ஐக்கியப்பட்ட போராட்டத்தை உருவாக்குகின்றது. இங்கு பரஸ்பரம் தன் சொந்த இன பூர்சுவா வர்க்கத்தை எதிர்த்துப் போராடும் உத்தியை தான், பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை பாட்டாளி வர்க்கத்துக்கு வழங்குகின்றது. இங்கு இரு இனப் பாட்டாளி வர்க்கத்தினதும் ஸ்தூலமான கடமைகள் துல்லியமாக வேறுபட்டது. இதை திரிக்க புரட்ட முனைவது மார்க்சியமல்ல.

பி.இரயாகரன்

22.09.2011

1. பிரிவினைக்கும், பிரிவினை மறுப்புக்கும் எதிரானது சுயநிர்ணயம் (சுயநிர்ணயம் பகுதி : 01)

2. பிரிந்து செல்லும் உரிமையற்ற சுயநிர்ணயம் என்பது மார்க்சியமல்ல (சுயநிர்ணயம் பகுதி : 02)

3. மார்க்சியத்தின் பெயரில் முன்வைக்கும் பிரிவினைவாதம் (சுயநிர்ணயம் பகுதி : 03)

4. சுயநிர்ணயத்தின் செயல்பூர்வமான வடிவமே பிரிவினை என்பது புரட்டு (சுயநிர்ணயம் பகுதி : 04)