08142022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

சிறுபான்மை மதங்களுக்கு எதிராக பௌத்த அடிப்படைவாதத்துடன் கைகோர்க்கும் பேரினவாதம்

சிறுபான்மை இனங்களை ஒடுக்கியதன் மூலம் தனிமைப்பட்டு வரும் பேரினவாதம், பௌத்த அடிப்படைவாதத்துடன் கூட்டுச்சேர்ந்து சிறுபான்மை மதங்களை ஒடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை மதம், இனம் சார்ந்து தன்னை தக்கவைக்க முனைகின்றது. இலங்கை அரசு வேகமாகவே சர்வதேச அளவில் தனிமைப்பட்டு வரும் இன்றைய நிலையில், இதை எதிர்கொள்ள மத இன அடிப்படைவாதத்தை முன்னிறுத்தி சிறுபான்மையினரை மேலும் கூர்மையாக ஒடுக்கத் தொடங்கியுள்ளது. எல்லா மக்கள்விரோத சர்வாதிகார அரசுகள் போல் தான், இன்று மகிந்த குடும்ப சர்வாதிகாரமும் இதைத் தேர்ந்தெடுத்திருக்கின்றது. இனம் சார்ந்த பிளவுகளும் மோதல்களும் நாட்டின் பிரதான முரண்பாடாக இருக்கின்ற நிலையில், மேலதிகமாக மதம் சார்ந்த மோதல்களையும் பிளவுகளையும் திட்டமிட்டு விதைத்து வருகின்றது.

இந்த வகையில் இலங்கை அரச இனரீதியாக மட்டுமல்ல, மதரீதியாகவும் தன்னை குறுக்கிச் செல்லுகின்றது. இந்த வகையில் அண்மையில் பேரினவாத அரசின் ஆதரவுடன் குறிப்பிடத்தக்க இரு சம்பவங்கள் அரங்கேறியது.

1.முனீஸ்வரம் கோயிலில் மிருகபலி சடங்கு நடைபெற்ற நாள், அமைச்சர் ஒருவர் பௌத்தத்தை முன்னிறுத்தியபடி, மற்றயை மதங்களை நிந்தனை செய்தபடி காடைத்தனத்தைப் புரிந்துள்ளார்.

2. அனுராதபுரத்தில் மிகப் பழைமை வாய்ந்த தர்கா ஒன்றை, அரசின் துணையுடன் பௌத்த அடிப்படைவாதிகள் தகர்த்துள்ளனர்.

இவ்விரு சம்பவங்களும் நடைபெற்ற போது, சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிசார் முன்னிலையில் தான் இவை அனைத்தும் அரங்கேறியது.

மக்களை மதத்தின் பெயரில் துண்டாடியதற்காக, மதக் குரோதத்தை தூண்டியதற்காக, சட்டத்தை மீறியதற்காக எவரையும் இந்த அரசு கைது செய்யவில்லை. இதுதான் சட்டத்தின் ஆட்சியாகின்றது. இது இன்று இலங்கை அரசின் பொதுக்கொள்கையாகி விட்டது. இலங்கை அரசு இனவாதத்தை மட்டும் கொண்டு மக்களை ஒடுக்கி ஆளுகின்ற தன் போக்கில், மேலதிகமான பௌத்தமத அடிப்படைவாதத்தையும் இன்று முன்னிறுத்தியிருக்கின்றது. ஆக இனி அரசின் நிழலில் திரியும் இனப் பூதங்கள் போல், மதப் பூதங்கள் மதப் பூசல்களை உருவாக்கும்.

சிங்கள - பௌத்தம் என்ற பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு, சிறுபான்மை இனங்களையும் மதங்களையும் ஒடுக்குகின்ற போக்கு கூர்மையாகி வருகின்றது. இதை கொண்டு தான் இலங்கை அரசு உலகளாவிய பொது நெருக்கடிகளை எதிர்கொள்ள முனைகின்றது. உள்நாட்டில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் குறுகிய இன மத உணர்வை மேலும் தூண்டுவதன் மூலம, அதற்குள் மக்களை சிறைவைப்பதன் மூலம், தன் மீதான சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தன்னை விடுவிக்க முடியும் என்று கருதுகின்றது.

இனவழிப்பு முதல் சிறுபான்மை மதங்களை இழிவுபடுத்தி தூண்டும் குறுகிய உணர்வுகளைக் கொண்டு, பெரும்பான்மையினரின் ஆதரவுடன் மகிந்த குடும்ப சர்வாதிகாரத்தை தக்கவைக்க முனைகின்றது. இதுதான் இலங்கை அரசின் கொள்கையாக உள்ளது.

சிங்கள மக்கள் மத்தியில் இன மற்றும் மதம் சார்ந்த குறுகிய உணர்வுகளை விதைக்கின்ற அரசுக்கு எதிராக, சிறுபான்மை மக்கள் தங்களுக்கு எதிரான இந்த அரசின் ஒடுக்குமுறைகளை அந்த மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதன் மூலம் பெரும்பான்மை மக்களை அரசிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். இதற்காக சிறுபான்மை மக்கள் தங்கள் குறுகிய உணர்வுகளில் இருந்து விடுபட வேண்டும். அரசை தனிமைப்படுத்துகின்ற அரசியல் வழிமுறை மூலம் தான், இந்த ஒடுக்குமுறையை நாம் எதிர்கொள்ள முடியும்;. எம்மை நாம் தனிமைப்படுத்திக் கொண்டு இதை வெல்ல முடியாது.

பெரும்பான்மை மத்தியில் இன மத குறுகிய உணர்வை விதைக்கின்ற அரசுக்கு எதிராக நாம் போராடுவது என்பது, இன மத குறுகிய உணர்வுகளுக்கு அவர்கள் பலியாவதை தடுக்க போராடுவதுதான். இதை நாம் எம் குறுகிய உணர்வுடன் ஒருநாளும் செய்ய முடியாது. இதை பயன்படுத்தித் தான் சிறுபான்மை இன மற்றும் மதங்களை அரசு மிக இலகுவாக ஒடுக்கி வருகின்றது. எம்மை நாம் குறுகிய உணர்வில் இருந்து விடுவிக்காத வரை, பெரும்பான்மை சார்ந்த ஒடுக்குமுறைக்கு நாம் பலியாவது தொடரும்.

பி.இரயாகரன்

21.09.2011


பி.இரயாகரன் - சமர்