08142022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

சுயநிர்ணயத்தின் செயல்பூர்வமான வடிவமே பிரிவினை என்பது புரட்டு (சுயநிர்ணயம் பகுதி : 04)

மார்க்சியத்தின் பெயரில் முன்வைக்கப்படும் பிரிவினை, பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை செயல்பூர்வமற்ற ஒன்றாகக் காட்டுவதன் மூலம், பிரிவினையை செயல்பூர்வமான ஒன்றாகக் காட்ட முனைகின்றது. சாராம்சத்தில் சுயநிர்ணயத்திற்கு பதில் பிரிவினையை இது முன்வைக்கின்றது. இரண்டும் ஒன்றுதான் என்கின்றது. மறுதளத்தில் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் தர்க்கம், இதை செயல்பூர்வமற்றதாகக் காட்டி, பாட்டாளிவர்க்க ஆட்சி அதிகாரத்தின் கீழ் தான் இது தீர்க்கப்படும் என்கின்றது. இப்படி பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை "செயல்பூர்வமற்ற" ஒன்றாக காட்டி அதை மறுக்கின்ற பிரிவினைவாதமும், பிரிவினை மறுப்புவாதமும் மார்க்சியத்துக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றது.

 

 

 

இது இன்று மட்டுமல்ல அன்றும் முன்வைக்கப்பட்டது. லெனின் இது பற்றிக் கூறுகையில் "தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை மட்டுமின்றி, அரசியல் ஜனநாயகத்துக்கான எல்லா அடிப்படைக் கோரிக்கைகளுமே ஏகாதிபத்தியத்தின் கீழ் ஓரளவுக்குத்தான் 'செயல்பூர்வமானவை", அதுவும் ஒரு முழுமையற்ற திரிந்த முறையில் … காலனிகள் உடனடியாக விடுதலை பெறவேண்டும் என்று எல்லாப் புரட்சிகர சமூக-ஜனநாயகவாதிகளும் கோருகிறார்களே. அது கூட, தொடர்ச்சியான புரட்சிகள் இல்லாமல் முதலாளித்துவத்தின் கீழ் "செயல்பூர்வமற்றவைதான்" ஆனால் இதைக் காரணமாகக் கொண்டு சமூக ஜனநாயகவாதிகள் தங்களது இக் கோரிக்கைகள் அனைத்துக்காகவும் உடனடியாக, மிகவும் உறுதியாகப் போராடுவதை விட்டுவிட வேண்டும் என்பதல்ல – அப்படி விட்டுவிடுவதானது பூர்ஷவாக்களின் பிற்போக்கின் நோக்கத்தை ஈடேற்றுவதாகும்." என்றார். இதற்கு பதிலாக "இக் கோரிக்கைகளை முறையாக வகுத்து புரட்சிகரமான முறையில் - சீர்திருத்தவாத முறையில் அல்லாமல் - அவற்றை நிறைவேற்றுவது அவசியம், பூர்ஷ்வாக்களின் சட்டமுறை வரம்புக்குள் நாம் கட்டுண்டு விடக் கூடாது, அவற்றை உடைத்தெறிய வேண்டும்;" என்றார்.

இங்கு பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை செயல்பூர்வமற்றதாக காட்டிக்கொண்டு இயங்குகின்ற இருபிரிவினரும், செயல்பூர்வமானதாக பிரிவினையையும், பிரிவினை மறுப்பையும் முன்வைக்கின்றனர். அதாவது பூர்ஷ்சுவா வர்க்கத்தின் செயல்பூர்வமான கோசத்தை, மார்க்சித்தின் பெயரில் செயல்பூர்வமானதாக மீளக் காட்டி முன்தள்ளுகின்றனர். ஆக இங்கு மார்க்சியத்தின் பெயரில் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை, செயல்பூர்வமற்றதாக காட்டி மறுக்கின்றனர்.

இங்கு பிரிவினை மற்றும் பிரிவினை மறுப்புக்கெதிராக பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை முன்தள்ளும் செயல்பூர்வமான, அதாவது இனங்களுக்கு இடையில் கீழ் இருந்து கட்டும் ஐக்கியத்தை மறுத்து, பிளவையே செயல்பூர்வமானதாக காட்டி நிறுவ முனைகின்றனர். பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை உருவாக்கும் மக்களுக்கு இடையிலான ஐக்கியம், மக்களை பிளக்கும் செயல்பூர்வமான பிரிவினை மற்றும் பிரிவினை மறுப்புக்கு எதிரானது. பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை இனங்களுக்கு இடையில் ஏற்படுத்தும் புரிந்துணர்வும் ஐக்கியமும், பிரிவினையையும் பிரிவினை மறுப்பையும் தனிமைப்படுத்துகின்றது. இதைத் தடுக்க தான் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை, பிரிவினையாகவும் பிரிவினை மறுப்பாகவும் தொடர்ந்து திரிக்கப்படுகின்றது.

இந்தத் திரிபு அரசியல் ஐனநாயகத்தின் முரண் மற்றும் முரணற்ற தன்மைக்கிடையிலான வேறுபாட்டை, அரசியல் ரீதியாக எதுவுமற்றதாக்குகின்றது. பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை முரணற்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது. பிரிவினை மற்றும் பிரிவினை மறுப்புவாதம் முரணுள்ள ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது.

இந்தவகையில் மார்க்சியத்தின் பெயரில் பிரிவினையை முன்வைக்கும் தர்க்கத்தை எடுப்போம். "ஒரு தேசிய இனம் பிரிந்து போவதும் அது தன்னாதிக்கத்திற்காகப் போராடுதலும் பிற்போக்கானது என்ற வாதம் வௌ;வேறு நோக்குநிலைகளிலிருந்து முன்வைக்கப்படுகின்றது. ஒரு புறத்தில் உழைக்கும் மக்களைக் கூறுபோடுகின்ற பிற்போக்கு முழக்கமாகவும் மறுபுறத்தில் இனவாதக் குரலாகவும் புனையப்படுகின்றது" இப்படி முன்வைக்கப்படும் தர்க்கம், மார்க்சியத்தை திரிக்கின்றது மட்டுமின்றி படுபிற்போக்கானதுமாகும். இது பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக்கு எதிரானது.

முதலில்

1."உழைக்கும் மக்களைக் கூறுபோடுகின்ற பிற்போக்கு முழக்கமாக" "பிரிந்து போவது" இல்லை என்பது முதலில் மார்க்சியமல்ல. இங்கு "பிரிந்து போவது" என்ற வாதம், பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக்கு முரணானது. இங்கு "ஒரு தேசிய இனம் பிரிந்து போவது" என்பது, பிரிவினைவாதமாக இருப்பதை இது அரசியல் ரீதியாக மறுக்கின்றது. "ஒரு தேசிய இனம் பிரிந்து போவ"தற்கான உரிமையில் இருந்து வேறுபட்டது பிரிவினைவாதம். இங்கு பிரிவினைவாதம் உழைக்கும் மக்களை கூறுபோடுகின்ற அரசியலைக் கொண்டது. "ஒரு தேசிய இனம் பிரிந்து போவ"தற்காக "போராடு"வது பிரிவினைவாதமாகும். இது உழைக்கும் மக்களை கூறுபோடுகின்றது. "ஒரு தேசிய இனம் பிரிந்து போ"காமல் இருக்கப் போராடுவது தான் உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்தும். "ஒரு தேசிய இனம் பிரிந்து போ"காமல் இருக்க, பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக்காக போராட வேண்டும். இது இரண்டு இன பாட்டாளி வர்க்கத்தின் வெவ்வேறு ஸ்தூலமான கடமைக்கு ஏற்ப கிளர்ச்சி வடிவங்கள் வேறுபடுகின்றது.

2."ஒரு தேசிய இனம் பிரிந்து போ"க "போராடு"வதை "இனவாதக் குரலாகவும் புனையப்படுகின்றது" என்பதை மறுப்பதன் மூலம், பிரிவினைவாதம் இங்கு இனவாதக் குரலாக இருப்பதையும் இது மறுக்கின்றது. இங்கு ஒடுக்கப்பட்ட இனத்தில் இனவாதமும், உழைக்கும் மக்களை கூறுபோடுகின்ற பிரிவினைவாதமும், பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக்கு எதிராக இயங்குவதை மறுத்தபடி இந்தத் தர்க்கம் முன்வைக்கப்படுகின்றது.

பி.இரயாகரன்

20.09.2011

 

1. பிரிவினைக்கும், பிரிவினை மறுப்புக்கும் எதிரானது சுயநிர்ணயம் (சுயநிர்ணயம் பகுதி : 01)

2. பிரிந்து செல்லும் உரிமையற்ற சுயநிர்ணயம் என்பது மார்க்சியமல்ல (சுயநிர்ணயம் பகுதி : 02)

3. மார்க்சியத்தின் பெயரில் முன்வைக்கும் பிரிவினைவாதம் (சுயநிர்ணயம் பகுதி : 03)


பி.இரயாகரன் - சமர்