ஆக இது தமிழ் மக்களுக்கானதல்ல. ஆனால் தமிழ் மக்களின் பெயரில் நடக்கின்றது. தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுகின்ற அரசியல். இதை பேரினவாதம் மட்டும் செய்யவில்லை, தமிழ் குறுந்தேசிய அரசியலும் கூட இதைத்தான் செய்கின்றது. இதை விட்டால் தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை என்ற அரசியல் சூழலை உருவாக்கி வைத்துக்கொண்டு தான், தமிழ்மக்களை மேய்கின்றனர். இந்த பின்னணியில் இதைவிட்டால் வேறு தீர்வை தமிழ்மக்கள் பெற முடியாது என்று கூறி, தமிழ்மக்களை மொட்டை அடிக்கும் அரசியல் தீர்வையும் நாளை திணிப்பார்கள். தமிழ் - சிங்கள மக்கள் தாம் விரும்பிய ஒரு தீர்வைக் காணப்போவது கிடையாது. இதற்குரிய அரசியல் சூழலை உருவாக்காமல் வைத்திருப்பதுதான், தமிழ் - சிங்கள் அரசியல்வாதிகளின் தொடர் அரசியலாகும்.

 

 

 

மக்கள் தீர்வு காணமுடியாத அரசியல் வெளியில், தாமாக முன்வந்து இணங்கி வழங்காத எந்தத் தீர்வும் குறைந்தபட்ச அரசியல் தீர்வாக கூட அமையாது. இந்த எல்லைக்குள்ளான பேச்சுவார்த்தைகள் என்பது, மோசடித்தனமானது. மக்களை தொடர்ந்து ஏய்க்;கின்ற, தங்கள் குறுகிய அரசியல் நலன்களை அடைகின்ற, அன்னிய நலனை பூர்த்தி செய்கின்ற நோக்கத்தின் பாலானது. இதைத் தாண்டியதல்ல. இன்னும் குறிப்பாக இன்றைய சர்வதேச நெருக்கடிளை பின்போடுகின்ற, தவிர்க்கின்ற எல்லைக்குள் நடக்கும் அரசியல் சூதாட்டம் தான் இது. இப்படி இதற்குள் தமிழ் மக்கள் மேய்க்கப்படுகின்றனர்.

முந்தைய பேச்சுவார்த்தையின் போது தமிழ் மக்களின் பெயரில் நிபந்தனை விதித்து வெளியேறியவர்கள், மீண்டும் நிபந்தனையின்றி பேசச் செல்லுகின்றனர். இப்படி இதன் அரசியல் பின்னணியில் அன்னிய சக்திகள் தான் அனைத்தையும் இயக்குகின்றனர். ஆக இங்கு தமிழ்மக்கள் அன்னிய நலனுக்கு பலியாக்கப்படுகின்ற பகடைக் காய்கள்.

கூட்டமைப்பின் அரசியல் இந்த வகையில் எந்த வகையிலும் சுயாதீனமானதல்ல. அன்னிய நலனுக்கு உட்பட்டது மட்டுமின்றி, அவர்களால் இயக்கப்படுகின்ற குறுகிய அரசியலானது. இங்கு தமிழ் மக்கள் சார்ந்த அரசியல் என்பது பெயரளவிலானது. பேரினவாதத்தை எதிர்கொள்வது என்பது, அன்னிய சக்திகளின் நலன்களுடன் இணைந்து கொள்வதல்ல. ஆனால் இதைத்தான் கூட்டணி முதல் புலிகள் வரை காலங்காலமாக செய்து வருகின்றனர்.

சொந்த மக்களை நம்பி, அவர்களை அணிதிரட்டி, அவர்கள் மூலம் பேரினவாதத்தை எதிர்கொள்வது கிடையாது. மக்களை அரசியல் அனாதையாக்கி அனாதரவாக கைவிட்டுவிட்டு, பேரினவாதத்துக்கு இரையாகும் வண்ணம் வழிநடத்திக்கொண்டு, அன்னிய சக்திகளின் நலன்களுடன் சேர்ந்து இதற்கு தீர்வு காணமுனைவதாக கூறுவது தான் தொடர்ந்து அரங்கேறுகின்றது.

தமக்கு மக்கள் வாக்குப் போட்டால் போதும் என்ற எல்லையில் மக்களுக்கு வேலியை போட்டுவிட்டு, நாங்கள் பேசி தீர்வு காண்கின்றோம் என்று கூறியபடி, அன்னிய சக்திகளின் நலன்களுக்குள் தமிழ் மக்கள் பிரச்சனையை திணித்தபடி கூடிக் குலாவுகின்றனர். இதைப்போல் தான் புலிகள் எமக்கு ஆதரவாக வாயைப் பொத்திக்கொண்டு இருந்தால் சரி, நாங்கள் போராடி விடுதலையை தருகின்றோம் என்று கூறிக்கொண்டு, அன்னிய சக்திகளின் நலன்களுக்குள் போராட்டத்தை திணித்து அதை அழித்தனர்.

இப்படி கடந்த 70 வருட தமிழ் அரசியல் மக்களைச் சார்ந்து இருந்தது கிடையாது. மக்களை பார்வையாளராக வைத்திருக்கும் அரசியலை முன் வைத்தனர். பின் இதன் மூலம் தாங்கள் தீர்வு காணவுள்ளதாக கூறி, இதற்கு ஆதரவு தாருங்கள் என்று சொல்லியபடி, தமிழ் மக்களை அழிக்க பேரினவாதத்துக்கு உதவினர்.

சொந்த மக்கள் தான் இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதை மறுத்தவர்கள், தாம்தான் தீர்வு காணமுடியும் என்றனர். இதற்காக பேரினவாதிகளுடன் கொஞ்சிக் குலாவியபடி பேசியவர்கள் தான், யுத்தமும் செய்தனர். ஆனால் சிங்கள மக்களிடம் தங்கள் பக்க நியாயத்தை என்றும் எடுத்துச் சென்றது கிடையாது.

சிங்கள மக்களை தமிழ் மக்களின் எதிரியாக காட்டியவர்கள், சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஊடாகத்தான் தீர்வு காணமுடியும் என்று முக்கிக் காட்டினர். சொந்த மக்களை பார்வையாளராக நிறுத்தி வைத்திருப்பவர்கள், சிங்கள மக்களை தமிழ்மக்களின் எதிரியாக காட்டி நிராகரித்தனர்.

இந்த அரசியல் பின்னணியில் தான் அன்னிய நாடுகளின் தலையீட்டுடன் கூடிய பேரங்கள், பேச்சுவார்தைகளை நடத்துகின்றனர். இதை விட்டால் தமிழ் மக்களுக்கு வேறு வழி இல்லை என்ற அரசியல் சூழலை உருவாக்கி வைத்துக்கொண்டு, நாளை இதைவிட்டால் வேறு தீர்வை தமிழ்மக்கள் பெற முடியாது என்று கூறும் எல்லைக்குள் தான், தமிழ் மக்களை மொட்டை அடிக்கும் வங்குரோத்து அரசியலைத்தான், தொடர்ந்து தமது இனவாத தமிழ் அரசியலாக நடத்துகின்றனர்.

 

பி.இரயாகரன்

10.09.2011