ஏதோ இவர்கள் எல்லாம் தமிழ் மக்கள் நலன் சார்ந்து தான், தாங்கள் தங்கள் நிலையைத் தெரிவிப்பதாக கூறிக் கொண்டு தமிழ் மக்கள் பிரச்சனையை கையில் எடுக்கின்றனர். பாவம் தமிழ்மக்கள். அன்று புலிகளின் அடாவடித்தனத்துக்கு முன்னால் அடங்கி ஒடுங்கி வாய் பொத்தி வாழ்ந்த மக்கள், இன்று ஈ.பி.டி.பி என்ற அரச எடுபிடி கும்பலின் ஒடுக்குமுறைக்குள் வாழ்கின்றனர். கிழக்கில் கருணா மற்றும் பிள்ளையானின் கண்காணிப்பின் கீழ் தான், மக்கள் வாழ்கின்றனர். அக்கம் பக்கம் பார்க்காமல், மக்கள் சுதந்திர மூச்சை விடுவது கிடையாது. புலிக்கு முன், புலிக்கு பின் என, இதுதான் மக்களின் வாழ்நிலை. இந்த நிலையில் ஈ.பி.டி.பி கூறுவது போல் அது ஒரு அரசியல் கட்சியல்ல. அரசுக்காக வாலாட்டி குலைக்கின்ற, கடிக்கின்ற எடுபிடி லும்பன்கள்.

 

 

இந்த நிலையில் இலங்கை அரசின் மனிதவிரோத பாசிச இராணுவத்தன்மையை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகள் முன்னிறுத்தித்தான், தம் மூக்கை நுழைக்கின்றது. இதற்கான காரணம் என்ன? தென்னாசிய பிராந்தியத்தில் இராணுவரீதியாக உலகை கட்டுப்படுத்தும் புவியியல் ரீதியான இராணுவ மையத்தில், இலங்கை இருக்கின்றது. உலகை இராணுவ பொருளாதார மேலாண்மை மூலம் அடக்கியாள விரும்பும் ஏகாதிபத்தியத்துக்கு, இலங்கை இராணுவ ரீதியான புவியியல் மையத்தில் இருக்கின்றது. மேற்கைப் பொருத்தவரையில் பிராந்திய மேலாதிக்க சக்தியான இந்தியா ஊடாகவே இதை கையாண்டது, கையாள்கின்றது. புலிகளின் அழிவு வரை இலங்கையை இந்தியாவின் ஆளுமைக்கு ஊடாக கையாண்ட நிலை, இன்று படிப்படியாக கேள்விக்குள்ளாகி வருகின்றது. மேற்கு மற்றும் இந்தியாவுக்கு எதிரான மற்றைய ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு மண்டலமாக இலங்கை மாறிச் செல்லுகின்றது.

இந்த நிலையில் இதை தடுத்து நிறுத்த சமரசமான, ஆனால் மிரட்டும் பாணியில் மக்கள் பிரச்சனை சார்ந்து இதில் தலையிடுகின்றது. இலங்கை மேற்குடன் சமரசம் காணத்தவறினால் கெடுபிடி யுத்தம் வரை இட்டுச் செல்லக் கூடிய வகையிலான எச்சரிக்கையை மறைமுகமாக அமெரிக்கா விடுத்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் பத்து வருடத்தில் மீண்டும் ஆயுதப் போராட்டம் நடக்கும் என்ற அமெரிக்காவின் கூற்று இதை எடுத்துக் காட்டுகின்றது. இங்கு தமிழர் பிரச்சனை மூலம், ஏகாதிபத்திய நலனை இலங்கையில் நிலைநிறுத்தும் யுத்தத்தை மேற்கு ஏற்கனவே தொடங்கிவிட்டது.

தம் செல்வாக்கை இலங்கையில் நிலைநாட்ட, அமெரிக்காவின் தலைமையிலான மேற்கு முனைகின்றது. இந்த அணியில் இந்தியாவும் உள்ளது. இலங்கை அரசு மேற்கு அல்லாத ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சிநிரலுக்குள் தன்னை இட்டுச்செல்லுகின்ற நிலையில், மேற்கு முதல் இந்தியா வரையான தலையீடு அதிகரிக்கின்றது. இவை தமிழ் மக்களின் நலனின் போர்வையில் தலையிடுகின்றன. இந்த வகையில்தான், அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உதவி செயலர் றொபேர்ட் ஓ பிளேக் கருத்துகள் கூட வெளிவருகின்றது.

உண்மையில் நாட்டின் அரசும் அதன் பின்னால் செயல்படும் கூலிக்குழுக்களும், தமிழ் மக்களுக்கு எதிராக கையாளுகின்ற பொது உண்மைகளைத் தான் இங்கு மேற்கு தனக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்கின்றது.

இந்த வகையில் அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய நோக்கமும், இந்தியப் பிராந்திய நலனும் மூடிமறைக்கப்பட்ட நிலையில், மக்களின் பிரச்சனை ஊடாகத்தான் இதை அணுகுகின்றது. ஆக இங்கு தமிழ்மக்கள் குறித்து இவர்கள் பேசும் விடையங்கள் பொய்யானதல்ல. ஆனால் இது முழுமையானதல்ல. ஆனால் இங்கு இதன் பின்னுள்ள நோக்கம் மூடிமறைக்கப்பட்டு இருப்பது தான் உண்மை. அன்று புலிகளைத் தடைசெய்து அழிக்க உதவிய போது, இது போன்று புலிகளின் மனிதவிரோத கூறுகளை எடுத்துக்காட்டி அதை புலிகளை கைவிடக்கோரிய பின்னணியில்தான அனைத்தையும் செய்து முடித்தது. இன்று இலங்கை அரசுக்கு எதிராகவும் அதைத்தான் செய்கின்றது.

ஆக இப்படி தமிழ் மக்களின் உண்மையான அவலங்களின் மேல்தான், தங்கள் சொந்த நோக்கை அடையமுனைகின்றனர். இந்த வகையில் ஈ.பி.டி.பி. "துணை இராணுவக்குழு" தான் என்று கூறியது ஒரு பொது உண்மையாகும். இங்கு இதுவும் கவுரவமாக கூறிய கூற்றுத்தான். உண்மையில் ஈ.பி.டி.பி. எடுபிடி கூலிக் கும்பல். தமிழ்மக்களை அரசுக்காக, அரசுடன் சேர்ந்து கண்காணிக்கின்ற ஐந்தாம் படை. இதற்கு வெளியில் அதற்கு எந்த முகமும் கிடையாது. அரசுக்கு வெளியில் என்றும் சுயாதீனமாக மக்களை சார்ந்து இயங்கியது கிடையாது.

அரசு தன் பாசிச இராணுவ அரச பயங்கரவாதத்தை இல்லாதாக்கினால், ஈ.பி.டி.பி. என்ற எடுபிடி கூலிக் கும்பல் ஒரு நாள் கூட உயிர்வாழ முடியாது. 1990 கள் முதல் ஈ.பி.டி.பி. அரசின் பின்னால் நக்கி வாழ முடிந்ததே ஒழிய, ஒரு நாள் கூட எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக இருக்க முடியவில்லை. 1990 பின்னான தமிழ்மக்களுக்கு எதிரான அரசின் அனைத்து குற்றங்களுடனும் ஈ.பி.டி.பி.யும் இணைந்து தான் இயங்கியது மட்டுமின்றி தன் பங்குக்கு அதை முன்னின்று செய்துள்ளது. புலியின் பின்னான தமிழ் மக்கள் மேலான அடக்குமுறையுடன் கூடிய அடாவடித்தனம் முதல் கண்காணிப்பு வரையான அனைத்து மனிதவிரோத குற்றங்களிலும் ஈ.பி.டி.பி. தொடர்ந்து ஈடுபடுகின்றது.

மக்களை மிரட்டியும் அச்சுறுத்திக் கொண்டும் அரசின் பொதுத் திட்டங்களை ஜனநாயக விரோதமாக சிபார்சு செய்தும், தனக்கு தேவையானவர்களுக்கு சலுகைகளாக கொடுத்தும், பேரினவாத அரசுக்காக மாமா வேலை செய்வதைத் தவிர வேறு எதையும் அது செய்வது கிடையாது.

அரசு செய்ய வேண்டிய பொதுச் சேவைகளை கொண்டு, மக்களை அடிமைப்படுத்தும் போக்கிரித்தனத்தைத்தான் ஈ.பி.டி.பி. அரசியலாக செய்கின்றது. சலுகை, சிபார்சு.. என்ற மக்களை இதற்குள் வழிநடத்துகின்ற போக்கிரித்தனத்தைத்தான், தங்கள் அரசியல் என்கின்றனர்.

இப்படிப்பட்ட இந்த கூலிக்குழு இலங்கையில் காணாமல் போனவர்கள் பின்னணியில் இருக்கின்றது. பல கொலைகளுடன் தொடர்புடையது. ஆம் புலிகள் எதைச் செய்தனரோ அதை அரசுக்காக செய்வதைத் தாண்டி, எந்த தனித்துவமும் இதற்கு கிடையாது. 1986 க்கு முன்னான தங்கள் நிலையை, அதன் பின்னான காலத்துக்கு ஒப்பிடுவதன் மூலம், தங்கள் பொறுக்கித்தின்னும் பொறுக்கித்தனத்தை ஒப்புக் கொள்கின்றனர். 1986 முன் ஈ.பி.டி.பி.யே இருந்தது கிடையாது. ஈ.பி.டி.பி. கூலி குழுவாகத்தான் உருவாக்கப்பட்டது. இதைத்தாண்டி அது என்றும் செயல்பட்டது கிடையாது.

மக்களுடன் சுயமாக சுயாதீனமான இருக்க முடியாதவர்கள் பின் மக்கள் நலன் என்பது எதுவும் இருக்கமுடியாது. இந்த நிலையில் "தமிழ் பேசும் மக்களின் அங்கீகாரம் பெற்ற பொறுப்பு வாய்ந்த ஒரு அரசியல் கட்சியே" என்று கூறுகின்ற கேலிக்கூத்தையும் நாம் காண்கின்றோம். நீங்கள் அரசை விட்டு வெறியேறி அரசை எதிர்த்து அதை நிரூபியுங்கள். அது உங்களால் ஒருக்காலும் முடியாது.

அரசின் பின் இராணுவ எடுபிடி கூலிக்குழுவாக இருந்த ஈ.பி.டி.பி., இன்று அரசின் அரசியல் எடுபிடியாக தமிழ்மக்களுக்கு எதிராக செயல்படுகின்றது. அரசுக்கு ஆள்காட்டி வேலை செய்வது முதல் அரசின் குற்றங்களை பாதுகாக்கின்ற பினாமி அறிக்கை விடுவதும் தான், இந்த எடுபிடி கும்பலின் செயல்பாட்டு எல்லை.

இந்த வேலை செய்யும் கருணா, இராஜாங்க அமைச்சின் உதவி செயலர் றொபேர்ட் ஓ பிளேக்குக்கு பதில் அளிக்கும் வகையில் இலங்கையில் தமிழ் சிங்கள முஸ்லிம் பொலிஸ் என்ற என்ற ஒன்று கிடையாது என்கின்றார். இதைத்தான் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயவும் கூறுகின்றார். ஆம் உண்மைதான். இலங்கையில் இருப்பது, சிறுபான்மை இனங்களை ஒடுக்கும் பேரினவாத சிங்கள படைதான். நடந்த யுத்தம் இன யுத்தம் என்பதும், அரச படைகள் அப்படியேதான் இருந்தன, இருக்கின்றது.

அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உதவி செயலர் றொபேர்ட் ஓ பிளேக் தமிழ் பகுதியில் தமிழ்பொலிசை நியமிக்கக் கோரியவுடன் கருணா வள் என்று குரைக்கின்றார். இன்று இப்படி அரசுடன் நின்று செய்வதைத்தான், முன்பு புலியில் இருந்த போது செய்தவர் என்பது இங்கு வெளிப்படையான உண்மை. மக்களைச் சார்ந்து நிற்க, சொந்தக் கருத்து எதுவும் கிடையாது. இந்த விடையம் மீதான கோத்தபாயவின் சீற்றமும், அமெரிக்காவில் அதை செய்யக் கோரியதும் இதன் பின்னான கெடுபிடியை எடுத்துக்காட்டுகின்றது.

1. மீண்டும் கூட்டமைப்பு - அரசு பேச்சுவார்த்தையின் அரசியல் உள்ளடக்கத்தை இது இல்லாதாக்கியுள்ளது.

2. அமெரிக்காவுடன் சர்வாதிகாரிகளுக்கே உரிய கெடுபிடியான யுத்தத்தை இது பிரகடனம் செய்திருக்கின்றது.

ஆக இராணுவத்தை பயன்படுத்தி ஒடுக்குவதன் மூலம், நாட்டின் இறையாண்மையைக் காட்டி தங்களை பாதுகாக்க முடியும் என்று நம்புகின்றனர். இந்த முட்டி மோதும் முரண்பாடு, தமிழ்மக்கள் மத்தியில் இருந்து மீண்டும் ஆயுதமேந்திய வடிவில் வெளிப்படும் என்று கருகின்ற அரசு, அங்கு இராணுவத்தை மேலும் பலப்படுத்தியும் விரிவாக்கியும் வருகின்றது.

ஆனால் கட்டாயம் இப்படித்தான் நடக்கும் என்று இல்லை. இராணுவத்தின் உள்ளான பிளவுகள் முதல் பலமுனைகளில் இது வெளிப்படும். ஆளும் கட்சியில் பிளவுகள், எதிர் கட்சிகளை அரசுக்கு எதிராக கொண்டு வருதல் என்பது முதல் பலமுனையில் இந்த ஏகாதிபத்திய முரண்பாடு கூர்மையாக வெளிப்படும்.

இராஜாங்க அமைச்சின் உதவி செயலர் றொபேர்ட் ஓ பிளேக்கின் பலமுனையிலான அத்துமீறிய சந்திப்புகள், நாளை சிறையில் சரத்பொன்சேகாவை சந்திக்கின்ற அளவுக்கு இருக்காதா என்று சொல்லும் அளவுக்கு அமெரிக்காவின் தலையீடு உள்ளது. ராஜாதந்திரிகளின் சந்திப்புகளை, நடமாட்டத்தை கட்டுப்படுத்த முனையும் அரசின் அறிக்கைகள், மேற்கு ஏகாதிபத்தியத்தின் கவிழ்ப்பு அரசியலுக்குள் மகிந்தாவின் நிகழ்ச்சிநிரல் பொருந்திப் போவதை எடுத்துக்காட்டுகின்றது.

இந்த நிலையில் இதை எதிர்கொண்டு போராடும் மக்கள் திரள் அமைப்புகளும், கட்சிகளும் இல்லையென்பது எம்முன்னுள்ள மற்றொரு உண்மை. இதற்காக போராட வேண்டியது எமது பொறுப்பும் மட்டுமின்றி, இதுவே இலங்கையில் உள்ள மார்க்சியவாதிகளின் உடனடியான அரசியல் கடமையுமாகும்.

பி.இரயாகரன்

17.09.2011