08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

செப் 11 10 வருட கொண்டாட்டமும், ஊடகங்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலும்

2001 இல் அமெரிக்கக் கோபுரங்கள் மேலான தாக்குதல் பயங்கரவாதம் என்றால், அதற்கு முன்பின் அமெரிக்கா உலகெங்கும் நடத்தியது எல்லாம் என்ன? செப் 11க்கு முன்பின் ஈராக்கில் 15 இலட்சம் பேரை அமெரிக்கா கொன்றுள்ளது. இது பயங்கரவாதமில்லையா!? இது போன்ற பயங்கரவாதத்தின் எதிர்வினைதான், அமெரிக்கக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதமாக மாறியது.

 

 

 

உண்மை இப்படி இருக்க, செப் 11 தாக்குதலின் 10 வருட நாளை உலக ஆக்கிரமிப்பாளர்களின் மகிழ்ச்சிக்குரிய தினமாக கொண்டாடுகின்றனர். ஊடகவியல் மூலம், தாங்கள் நடத்திய ஆக்கிரமிப்பை மட்டுமின்றி, அங்கு வரைமுறையின்றி மக்களைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்த 10 வருடக் கொண்டாட்டம். செப் 11யும், அதன் பின்னான மக்கள் மேலான தங்கள் பயங்கரவாதத்தினையும் மூடிமறைத்தபடி ஊடகங்கள் இயக்கப்படுகின்றது. பயங்கரவாதமாக ஒரு பக்கத்தை மட்டும் காட்டுவதன் மூலம், அமெரிக்காவின் தலைமையிலான பயங்கரவாதத்தை மூடிமறைத்து அதை நியாயப்படுத்துகின்றனர். இதன் அடிப்படையில்தான் புலிப் பயங்கரவாதத்தை மட்டும் காட்டும் இலங்கை அரசு, தன் சொந்த பயங்கரவாதத்தை மூடிமறைத்து அதை நியாயப்படுத்துகின்றது. இன்று செப் 11 இரட்டைக் கோபுர தாக்குதலின் 10 வருடக் கொண்டாட்டத்தின் அரசியல் சாரம், தங்கள் ஆக்கிரமிப்பையும் அங்கு நடத்திய படுகொலைகளையும் மூடிமறைத்து நியாயப்படுத்துவதுதான். ஊடக சுதந்திரம் என்று பீற்றிக்கொள்ளும் ஊடகங்கள், மக்கள் மேல் நடத்திய, நடத்துகின்ற தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல் இது.

உலகைச் சூறையாடியும், ஒடுக்கியும் உருவாக்கிய அமெரிக்காவின் திமிர்த்தனமான பிரமைகள் மீது, செப் 11 தாக்குதல் பாரிய அதிர்வை ஏற்படுத்தியது. நாங்கள் தான் உலகெங்கும் தாக்க முடியும், வகைதொகையின்றி மக்களைக் கொல்ல முடியும் என்ற அமெரிக்கனின் பொது மனப்பாங்கை செப் 11 தகர்த்தது. அமெரிக்கா தன் உலக ஆதிக்கத்தை நிலைநாட்ட, மற்றைய நாடுகள் மேல் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தவென உருவாக்கிய இஸ்லாமிய பயங்கரவாத அடிப்படைவாத இஸ்லாமியக் குழு தான், செப் 11 அன்று அமெரிக்கக் கோபுரம் மீதான தாக்குதலை நடத்தியது. தான் உருவாக்கி வளர்த்த குழு தன் மீதே தாக்குதல் நடத்தியவுடன், ஐயோ பயங்கரவாதம் என்ற கூச்சல் போட்டுக் கொண்டு ஈராக், மற்றும் ஆப்;கானிஸ்தானை ஆக்கிரமித்தது. அங்கு அப்பாவி மக்கள் மேல் நடத்திய அமெரிக்க பயங்கரவாதத்தில் இறந்தவர்கள் பற்றி அக்கறையற்ற வக்கிரங்களே, இன்று ஊடக சுதந்திரமாகின்றது.

செப் 11 அமெரிக்கா கட்டமைத்திருந்த பிரமாண்டமான பிரமைகள் மீதான தாக்குதலின் பின்னணியில், அமெரிக்கக் கனவுடன் வாழ்ந்த அப்பாவி அமெரிக்கர்களும் பலியானார்கள். அண்ணளவாக 3000 பேரின் மரணம், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு எதிரான பின்னணியில் தான் அரங்கேறியது.

இப்படி செப் 11 முன், பின் என்று உண்மைகள் பல இருக்க அதை மூடிமறைத்தபடி, பத்தாவது வருடக் கொண்டாட்டங்கள் நடத்துகின்றனர். இதை பின் இதைச் சுற்றிய 10 வருட நிகழ்வுகள் மூலம், உலகை ஆக்கிரமித்து அங்குள்ள மக்களைக் கொல்லுகின்ற அமெரிக்கப் பயங்கரவாதத்தை ஊடகங்கள் பெருமெடுப்பில் நியாயப்படுத்தின.

அமெரிக்காவில் கொல்லப்பட்ட 3000 பேரைச் சுற்றிய சோகக் கதைகள் முதல் அதைக் கண்டு அதிர்ந்த அமெரிக்கரின் உலக மேலாதிக்க வாழ்வில் ஏற்பட்ட அதிர்ச்சியைக் காட்டி, உலக மக்கள் மேலான பயங்கரவாதத்தை ஊடகங்கள் ஏவி வருகின்றது.

இந்த வகையில் செப் 11 இன் பின்னான பயங்கரவாத ஒழிப்பின் பெயரில், அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மேல் போர் தொடுத்து அதை ஆக்கிரமித்தது. இன்று வரை இந்தப் போரில் 6300 அமெரிக்கப் படைகள் கொல்லப்பட்ட நிலையில், இதற்கு ஆதரவாக சென்ற மேற்கு நாட்டுப் படைகளைச் சேர்ந்த 1200 கொல்லப்பட்டனர். 3000 அமெரிக்கரின் உயிரைக்காட்டி 6300 அமெரிக்கரைக் கொன்றவர்கள் வேறு யாருமல்ல, அமெரிக்கா தான். அமெரிக்கா என்றால், அமெரிக்க மூலதனம் தான். இப்படிக் கொல்லப்பட்ட 6300 அமெரிக்கக் குடும்பங்களின் சோகம், அதன் பின்னணி எல்லாம் மூடிமறைக்கப்பட்ட நிலையில் தான் ஊடகங்கள் உலகப் பயங்கரவாதம் பற்றிய பொய்களை புனைந்து உரைக்கின்றது. மேற்கைச் சேர்ந்த 7500 பேரின் மரணம் மட்டுமல்ல, இ;தன் பின்னால் தான் உருவாக்கிய கூலிப்படையைச் சேர்ந்த 35000 பேரையும், இந்த ஆக்கிரமிப்பு தான் கொன்று குவித்துள்ளது.

இதுமட்டுமல்ல குறைந்தபட்சம் 225000 அப்பாவி மக்களை கொன்றவர்கள், 550000 பேரை காயப்படுத்தினர். 78 இலட்சம் (78 00 000) பேரை அகதியாக்கிய இந்த யுத்தம், மக்கள் மேலான பயங்கரவாத ஆக்கிரமிப்பாகும்.

இந்த ஆக்கரமிப்பு யுத்தத்துக்கான மொத்த 3,2 முதல் 4 ரிலியன் (ஒரு திரிலியன் என்பது நூறு இலட்சம் கோடி) டொலரை இதுவரை அமெரிக்கா முதலிட்டு இருக்கின்றது. இதன் மூலம் ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் முதல் யுத்த இராணுவத்துக்கு குடிபானம் வழங்கும் பெப்சி வரை இலாபம் அடைகின்றது. இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் தம் வியாபாரத்தை நடத்த, யுத்தம் தேவை என்ற நிலைக்குள்ளும் யுத்தம் நடத்தப்படுகின்றது. இதைவிட அங்குள்ள எண்ணை, எரிவாயுவைக் கொள்ளையிட பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் பயங்கரவாத யுத்தமாகும்.

இந்த வகையில் அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவு யுத்தத்தின் பின் 160 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 2000 ஆண்டும் 6.67 ரிலியன் டொலராக இருந்த தொகை 2011 இல் 14.7 திரிலியன் டொலராக மாறிவிட்டது. இந்தப் பணம் யுத்தம் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சென்றடைகின்றது. மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையிட யுத்தம். இந்தளவுக்கும் இரட்டைக் கோபுர தாக்குதலின் பின்னான பாரிய பக்கவிளைவுகளை அனுபவிக்கும் அமெரிக்க மக்கள் நிவாரணம் மற்றும் மருத்துவம் கோரிப் போராடும் அவலம். அமெரிக்க தீயணைப்புப் படை உள்ளிட்ட பலர், சுவாசித்த தூசால் நோயில் சிக்கி நூற்றுக்கணக்கில் மரணத்தை சந்தித்து வருகின்றனர். இதைக் கண்டுகொள்ளாது, அவர்களைக் கொல்லும் அமெரிக்கப் பயங்கரவாதம் தான் இன்று உலகம் தளுவிய பயங்கரவாதமாக இருப்பதுடன் இலட்சக்கணக்கில் மக்களைக் கொன்று குவிக்கின்றது. இந்த அமெரிக்கப் பயங்கரவாதத்தின் பின்னால் இருப்பது மூலதனத்தின் நலன்தான்.

இந்தப் பாரிய யுத்தப் பொருளாதாரம் என்பது அமெரிக்க மக்கள் மேல் வரிச்சுமை அதிகரிப்பதுடன், ஏழை அமெரிக்க மக்களின் வாழ்வு மீதான சமூக வெட்டுகள் மூலமும் அமெரிக்க மக்கள், அமெரிக்க மூலதனத்தால் சூறையாடப்படுகின்றனர். யுத்தத்தை நடத்த பாரிய கடனை வாங்குவதன் மூலம் நாட்டை திவாலாக்கியபடி, மக்களைக் கொல்லும் அமெரிக்காவின் பயங்கரவாத ஆக்கிரமிப்பு யுத்தம் மூலதனத்துக்காக நடத்தப்படுகின்றது. மக்களை வகைதொகையின்றி கொல்லும் தங்கள் பயங்கரவாதம் பற்றிய செய்திகளை ஊடகங்கள் வெளியிடாத வண்ணம், மேற்கு நாடுகளின் கூட ஊடகங்களுக்கு எதிரான புதிய சட்டங்களைக் கொண்டு ஊடகச் சுதந்திரம் நசுக்கப்படுகின்றது.

தன் ஆக்கிரமிப்பையும் பயங்கரவாதத்தையும் நியாயப்படுத்துகின்ற, தகவல் பயங்கரவாதத்தை ஊடகங்கள் மூலம் மக்கள் மேல் ஏவுகின்றனர். செப் 11 பின்னான 10 வது தின கொண்டாட்டம், ஆக்கிரமிப்பை நியாயப்பபடுத்தும் தங்கள் சொந்தத் தினமாக ஆளும் வர்க்கங்கள் கொண்டாடியது. மக்களின் பிணங்கள் மேல் நின்று, ஊடகங்கள் பயங்கரவாதம் பற்றி மக்கள் மேல் வாந்தி எடுத்தனர். தகவல் பயங்கரவாதம் மூலம் மக்களை ஓடுக்குவதுதான், இன்றைய ஊடகச் சுதந்திரமாகும். இந்த பயங்கரவாதத்தைத்தான், செப் 11 இரட்டை கோபுரத் தாக்குதலின் 10 ஆண்டு நினைவாக ஊடகங்கள் அரங்கேற்றியது.

பி.இரயாகரன்

13.09.2011


பி.இரயாகரன் - சமர்