Language Selection

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியாவில் இராணுவப் பயிற்சி பெற்று தளம் திரும்பிய முதற் பெண் போராளி - ஜென்னி

சுழிபுரம் ஆறு இளைஞர்கள் படுகொலை எம் முன்னால் கொழுந்துவிட்டெரியும் பிரச்சனையாக மாறிவிட்டிருந்த வேளையில், அத்தகைய கொடும்பாதகச் செயல்களைச் செய்தவர்கள் யாரென்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருந்த வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எமது அமைப்புக்குமிடையேயான பகைமை நிலை அரும்புவிடத் தொடங்கிய வேளையில், தள இராணுவப் பொறுப்பாளர்களுக்கும் தளநிர்வாகத்துக்குமிடையிலான முரண்பாடுகள் தீர்வில்லாமல் வளர்ந்துகொண்டிருந்த வேளையில், ஜென்னி அல்லது கருணா என்று அழைக்கப்பட்ட ரஜனி இந்தியாவிலே தனது இராணுவப்பயிற்சியையும், தொலைத்தொடர்பு பயிற்சியையும் முடித்த பின்பு உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் ரகுமான்ஜானால் (காந்தன்) தளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

 

 

 

 

(வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்விகற்று புளட்டுக்கு இராணுவப் பயிற்சி எடுக்கச் சென்று பின்னர் புளட்டில் இருந்து ஒதுங்கியதால் புளட்டால் உட்படுகொலை (கடலில் வைத்து) செய்யப்பட்டவர்கள். இதில் இன்னும் ஒருவர் சுதன் இயக்கப் பெயர் கனதேவகுரு இயற்பெயர். இவரையும் கொலைசெய்து கடலில் வீசினர்.)

 

1983 மட்டக்களப்பு சிறையுடைப்பின் பின்னர் திருகோணமலையில் அரசபடைகளால் தேடப்பட்டவர்களில் ஜென்னியும் ஒருவர். இதனால் அன்று திருகோணமலை மூதூர் பகுதியில் அரசபடைகளால் தேடப்பட்ட நிலையிலும் முன்னணியில் நின்று செயற்பட்டவர்களான செல்வன், அகிலன், ரகு போன்றவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்ட ஜென்னி தள இராணுவப் பொறுப்பாளராக செயற்பட்ட பார்த்தனை பதிவுத் திருமணம் செய்து ஒரு சில நாட்களிலேயே இந்தியாவுக்கு இராணுவப் பயிற்சி பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டார். ஜென்னி இந்தியா சென்று சில வாரங்களிலேயே பார்த்தன் மட்டக்களப்பு சென்று இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் பொலிசாரின் கைகளில் சிக்கி உயிரிழந்தார்.

ஜென்னியினுடைய தளவருகையை நிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்கும் படைத்துறைச் செயலர் கண்ணனும் எமக்கு தெரியப்படுத்தியதோடு ஜென்னியை சந்தித்துப் பேசுவதற்கும் ஒழுங்கு செய்திருந்தனர். ஜென்னியுடனான எமது சந்திப்பின்போது மகளிர் அமைப்புப் பொறுப்பாளராக ஜென்னி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்குமாறும் நாம் தளநிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்கால் கேட்டுக்கொள்ளப்பட்டோம்.

1984 பிற்பகுதியில் இந்தியாவிலிருந்து ஜென்னி தளம் வந்து மகளிர் அமைப்புப் பொறுப்பாளராக பொறுப்பேற்கும் வரை மகளிர் அமைப்புப் பொறுப்பாளராக செல்வி (செல்வநிதி தியாகராஜா, சேமமடு - வவுனியா) செயற்பட்டு வந்தார். 1983 யூலை க்குப் பின்னர் தோழர் தங்கராஜாவின் முன்முயற்சியிலும், வழிகாட்டலிலும் புளொட்டின் மகளிர் அமைப்பு அமைப்புவடிவம் பெற்றிருந்தது. நாம் இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தை வெறுமனவே தேசியவிடுதலைப் போராட்டமாகவோ அல்லது தமிழ், முஸ்லீம், மலையக மக்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளும் ஒரு போராட்டமாகவோ கருதியிருக்கவில்லை, மாறாக, இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டமானது, அதன் வெற்றியானது, தமிழ், முஸ்லீம், மலையக மக்களுடன் குறுக்கிக் கொள்ளப்பட முடியாதென்பதிலும், சிங்கள முற்போக்கு மற்றும் உழைக்கும் மக்களுடனுமான ஜக்கியத்துக்கூடாகவும், ஒரு வர்க்க விடுதலையுடன் கூடிய சமுதாய மாற்றத்துடனுமே நடைமுறையில் சாத்தியமாகும் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தோம்.

எனவே, தேசியவிடுதலைப் போராட்டமானது வர்க்க விடுதலையுடன் கூடிய சமுதாய மாற்றத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும்போது எமது சமுதாயத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் மீதாக ஒடுக்குமுறைக்கெதிராகவும், அவர்களின் சம உரிமைக்காகப் போராடுவதும், தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதும், சமுதாயத்தில் நிலவுகின்ற நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்களில் ஒன்றான சாதிய ஒடுக்குமுறைகெதிராகப் போராடுவதும் எமது கடமையாகும்.

இதன் அடிப்படையில் தான் தோழர் தங்கராஜாவினால் மகளிர் அமைப்பு , தொழிற்சங்க அமைப்பு போன்றவை உருவாக்கப்பட்டதோடு, எமது அமைப்பின் செயற்பாடுகளை சாதியரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

மகளிர் அமைப்பின் உருவாக்கத்தின் ஆரம்பகாலங்களில் செல்வியுடன் இணைந்து யசோதா(கொக்குவில்), நந்தா(அளவெட்டி), ரஞ்சி(கொக்குவில்), வனிதா(உரும்பிராய்), செல்வம் (கொக்குவில்),சாரதா(கொக்குவில்), புவனா(கொக்குவில்), ரஞ்சி(கொக்குவில்), சீதை(கொக்குவில்), ராதை(கொக்குவில்) போன்றவர்கள் மகளிர் அமைப்பின் வளர்ச்சிக்காக செயற்பட்டுக் கொண்டிருந்தபோதிலும் பின்பு சுன்னாகத்தைச் சேர்ந்த மீரா, மித்திரா, குப்பிளானைச் சேர்ந்த சக்தி(கரோலின்), மலையகத்தை சேர்ந்த சந்தியா, திருநெல்வேலியைச் சேர்ந்த ரீட்டா, சுந்தரி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சத்தியா போன்றோரும் இணைந்து கொண்டனர். இவர்களில் சத்தியா இராணுவத் தகவல் சேகரிப்புக்குப் பொறுப்பாக செயற்பட்டு வந்த ரமணனுடன் குறுகிய காலம் இராணுவத்தகவல் சேகரிப்பில் ஈடுபட்டுவந்த போதிலும் 1984 நடுப்பகுதியில் ரமணன் இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டதையடுத்து மீண்டும் செல்வியுடன் மகளிர் அமைப்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தார்.

மகளிர் அமைப்பு அதன் சரியான திசைவழியிலும் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியைக் கண்டு கொண்டிருந்த வேளையில் இந்தியாவில் இராணுவப் பயிற்சியும், தொலைத்தொடர்பு பயிற்சியும் முடித்து தளம் வந்த ஜென்னி மகளிர் அமைப்புக்குப் பொறுப்பாக உமாமகேஸ்வரனால் நியமிக்கப்பட்டது சில கேள்விகளை எனக்குள் எழுப்பியிருந்தது.

செல்வி (செல்வநிதி தியாகராஜா, சேமமடு - வவுனியா)

ஏனெனில் செல்வி முழுநேரமாக மகளிர் அமைப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததோடு கடின உழைப்பாளியாகவும் அதேவேளை எந்தப் பிரச்சனைகளையும் அல்லது விமர்சனங்களையும் யாருடனுமே வெளிப்படையாகப் பேசுபவராகவும் காணப்பட்டார். உமாமகேஸ்வரன் சென்னையிலிருந்து தளம் வந்திருந்தபோது ஜீவன், விபுல், சிவானந்தி போன்றோர் தமது விமர்சனங்களையும் கேள்விகளையும் வெளிப்படையாக முன்வைத்தது போலவே செல்வியும் கூட தனக்கிருந்த விமர்சனங்களையும் கேள்விகளையும் வெளிப்படையாக உமாமகேஸ்வரனிடம் முன்வைத்திருந்தார். எனவே விமர்சனங்களையும் கேள்விகளையும் தலைமையிடம் முன்வைப்பதை ஜீரணித்துக் கொள்ள முடியாத காரணத்தால்தான் செல்வியின் இடத்துக்கு ஜென்னியை உமாமகேஸ்வரன் நியமித்தாரோ என எண்ணத் தோன்றியது.

இதே காலப்பகுதியில் குமரனுடன் (பொன்னுத்துரை) கடற்போக்குவரத்துக்குப் பொறுப்பாக செயற்பட்டுவந்த போத்தாரின் இடத்துக்கு இந்தியாவில் இராணுவப் பயிற்சி பெற்றுவந்த பாபுவை உமாமகேஸ்வரன் நியமித்திருந்தார். போத்தாரும் கூட தனது விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. டொமினிக் தளநிர்வாகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் கண்ணாடிச்சந்திரனை உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் சங்கிலி என்ற கந்தசாமி இந்தியாவுக்கு அழைத்துச் சென்றதும் அதன் பின்னரான தள இராணுவப் பொறுப்பாளர்களின் நியமனங்கள் போன்றவற்றின் தொடர்ச்சியாகவே செல்வி, போத்தாரின் இடங்களுக்கு புதியவர்களை உமாமகேஸ்வரன் நியமித்ததை என்னால் பார்க்க முடிந்தது.

மகளிர் அமைப்புப் பொறுப்பாளராக புதிதாக பொறுப்பேற்ற ஜென்னிக்கு நாம் எமது முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கினோம். திருகோணமலை மாவட்டத்தில் தனது அன்றாட வாழ்வில் இனவன்முறைகளை முகம் கொடுத்து அதன் தாக்கத்தை நேரடியாக அனுபவித்து அதற்கெதிராக போராடப் புறப்பட்டு தள இராணுவப் பொறுப்பாளராக செயற்பட்ட பார்த்தனை பதிவுத்திருமணம் செய்தபின், சிலவாரங்களிலேயே பார்த்தனை இழந்துவிட்டிருந்த ஜென்னி, இளமைத்துடிப்புடன் கூடிய உத்வேகத்துடன் மகளிர் அமைப்பை வழிநடத்தும் செயற்பாடுகளில் இறங்கியிருந்தார்.

ஆனால் புதிதாக மகளிர் அமைப்பு பொறுப்பாளராக நியமனம் பெற்று தளம் வந்திருந்த ஜென்னி, தளத்தில் இராணுவப் பிரிவுக்கும் தளநிர்வாகத்துக்கும் இடையில் விரிவடைந்து கொண்டிருக்கும் முரண்பாடுகளையோ, சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை அமைப்புக்குள் கொழுந்துவிட்டெரியும் பிரச்சனையாக மாறிக்கொண்டிருந்ததையோ, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எமக்குமிடையே பகைமை நிலை அரும்புவிடத் தொடங்கியிருந்ததையோ உடனடியாக இனம் கண்டுகொண்டிருக்கவில்லை.

உமாமகேஸ்வரனின் தள வருகையோடும் அதனைத் தொடர்ந்தும் இந்தியாவில் பயிற்சிபெற்ற எமது இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் தளம் வரத் தொடங்கியிருந்தனர். இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேசத்துக்கும் இராணுவப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதேநேரம் அனைத்துமாவட்டங்களுக்கும் கூட இராணுவப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் இந்தியா வழங்கிய ஆயுதங்களின் உதவியுடன் உள்ளுரிலேயே பயிற்சி முகாம்களை ஆரம்பித்து இராணுவப் பயிற்சி அளித்தல் ஆரம்பிக்கப்பட்டது.

1984 நடுப்பகுதியில் கண்ணாடிச் சந்திரனால் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவப் பயிற்சிமுகாமை மூடி அதில் பயிற்சி பெற்று வந்தவர்களை இந்தியாவுக்கு அனுப்பிவைத்த படைத்துறைச் செயலர் கண்ணன், 1984 பிற்பகுதியில் உள்ளுரிலேயே பயிற்சி முகாம்களை ஆரம்பிப்பதில் பெரும் ஆர்வம் உள்ளவராகக் காணப்பட்டார். இந்தியாவில் பயிற்சி பெற்றவர்களின் தொடர்ச்சியான தளவருகையால் எமது இராணுவப் பிரிவினரின் பிரசன்னம் தளத்தில் அதிகரித்துக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.

சக விடுதலைப் போராட்ட இயக்க அழிப்பை ஆரம்பித்து வைத்த புளொட்

1983ம் ஆண்டு யூலை கலவரத்துக்குப் பின் இந்திய அரசால் ஈழவிடுதலை இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட "தார்மீக ஆதரவும்" அதனுடன் கூடவே இராணுவப் பயிற்சியும், அதன் பின்னான காலப்பகுதியில் இந்திய அரசினால் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களும், ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள் வீக்கத்தை ஏற்படுத்த ஒரு காரணமாகவிருந்தது. சிறிய குழுக்களாக இருந்த ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் இந்த வீக்கமானது அரசியல் மற்றும் கருத்து முரண்பாடுகளை நோக்கி இட்டுச் சென்றது. ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள்ளேயான அரசியல் மற்றும் கருத்து முரண்பாடுகள் துப்பாக்கிக் குண்டுகள் மூலம் தீர்த்துவைக்கப்பட்டன அல்லது இயக்கங்களுக்குள்ளான பிளவுகளில் முடிவுற்றன. தமிழீழ விடுதலை இயக்கத்துக்குள் (TELO) தோன்றிய உள்முரண்பாடுகளால் மனோமாஸ்டருடன் ஒரு குழுவினர் தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து வெளியேறியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் தோன்றிய உள்முரண்பாடுகளால் ராகவன் தலைமையில் ஒரு குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேறியிருந்தனர்.

ஒபரோய் தேவனால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒபரோய் தேவன் படுகொலை செய்யப்பட்டதன் பின் காஸ்ரோவாலும் அதன் பின் முரளிமாஸ்டரினாலும் தலைமை தாங்கப்பட்டு வந்தது. தமிழீழ விடுதலை இராணுவத்துக்குள் தோன்றிய முரண்பாடுகளால் தமிழீழ விடுதலை இராணுவம் இரண்டாகப் பிளவுற்றது. பிளவுபட்டவர்களின் ஒருபகுதியினர் இந்தியாவில் புளொட்டுடன் இணைந்துகொண்டுவிட்டதாக எமக்குச் சொல்லப்பட்டது. ஆனால் மற்றொரு பகுதியினரோ தமிழீழ விடுதலை இராணுவம் என்ற பெயரிலேயே தளத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். இவர்களில் ராஜன், அராலியைச் சேர்ந்த கூச், குப்பிளானைச் சேர்ந்த சேகர் ஆகியோர் முன்னணி உறுப்பினர்களாக இருந்தனர். புளொட்டுக்கும் - குறிப்பாக புளொட் இராணுவப் பிரிவுக்கும் - தளத்தில் செயற்பட்ட தமிழீழ விடுதலை இராணுவத்தினருக்குமிடையே ஒருவித பகைமைநிலை அதன் உச்சநிலையை அடைந்திருந்தது. எமது இராணுவப் பிரிவினரும் தமிழீழ விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்களும் பல்வேறு இடங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலை இராணுவத்தை (TELA) சேர்ந்தவர்கள் எமது இராணுவத்தால் கடத்தப்பட்டனர். பதிலுக்கு தமிழீழ விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எமது இராணுவப்பிரிவைச் சேர்ந்தவர்களை கிளிநொச்சிப் பகுதியில் வைத்து கடத்தினர். துப்பாக்கி மோதல்கள் ஆரம்பமாகின. கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழீழ விடுதலை இராணுவத்தினரை(TELA) சேர்ந்தவர்கள் எமது இராணுவத்தால் கைதிகள் ஆக்கப்பட்டனர். தமிழீழ விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த கூச் (அராலி) சேகர்(குப்பிளான்) ஆகிய இருவரும் எமது இராணுவப் பிரிவினரால்- நாம் "புரட்சிகர இராணுவம் எனப் பீற்றிக்கொண்ட எமது இராணுவப் பிரிவினரால் -அவர்களின் குரல்வளை வெட்டப்பட்டு கொல்லப்பட்டதாக அறிந்தோம். எமது இராணுவப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தோர் வேறு சிலரும் கொலை செய்யப்பட்டிருந்தனர். எதற்காக தமிழீழ விடுதலை இராணுவத்தினரின் மீதான அழிப்பு நடவடிக்கை? யாருடைய உத்தரவின் பேரில் எமது இராணுவப் பிரிவினர் இத்தகைய கொடூரத்தனத்தில் ஈடுபட்டனர்? நிட்சயமாக தள நிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்கின் உத்தரவின் பேரில் அல்ல. ஏனெனில் டொமினிக் ஏற்கனவே கூறியதுபோல் அனைத்துமே அவர் கைகளுக்கு வெளியே நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அப்படியாயின் தமிழீழ விடுதலை இராணுவம் மீதான கொடூரச்செயலுக்கு, தமிழீழ விடுதலை இராணுவத்தினரை அழிப்பதற்கு எமது இராணுவப் பிரிவினருக்கு உத்தரவு இட்டது யார்?

இந்தக் கேள்விக்கு சின்ன மென்டிசிடம் இருந்து வந்த ஒரே பதில்: "பெரிசு"(உமா மகேஸ்வரன்).

உமா மகேஸ்வரனின் நேரடி உத்தரவின் பேரில் தளத்தில் சக விடுதலை இயக்க உறுப்பினர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட கோரத்தனமான கொலைகளையும், சக விடுதலை இயக்கம் - அது எவ்வளவுதான் சிறிய விடுதலை இயக்கமாக இருந்தாலும் கூட - ஒன்றை ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன் முதலில் அழித்தொழித்த "பெருமை" யை எமது இராணுவப் பிரிவினர் பெற்றுக்கொண்டனர்.

ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுத போராட்டமாக உருப்பெற்றெழுந்த காலத்தில் இருந்து பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய இயக்க தலைவர்களையே குறிவைத்து அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தினர். தமிழீழ விடுதலை இராணுவத்தின்(TELA) ஸ்தாபகரும் அதன் தலைவருமான ஒபரோய் தேவன் படுகொலை, தமிழீழ விடுதலைத் தீவிரவாதிகள் இயக்க(TELE) ஸ்தாபகரும் அதன் தலைவருமான ஜெகன் படுகொலை போன்றவை இதன்பாற்பட்டவையே.

ஆனால் எமது இராணுவப் பிரிவினரோ சக விடுதலை இயக்கமொன்றை முழுமையாக அழித்தொழித்ததன் மூலம் வரலாற்றில் தமது முத்திரையை பதித்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சக விடுதலை இயக்கங்களை எப்படி அழித்தொழிப்பது என்பதில் வழிகாட்டியாகவர்களாகவும் இருந்தனர். தமிழீழ விடுதலை இராணுவத்தையும் அதன் முன்னணி உறுப்பினர்களையும் அழித்ததன் மூலம் - அதுவும் உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் அழித்ததன் மூலம் - எமது அமைப்பின் செயலதிபரும் அவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இராணுவப் பிரிவும் எவ்வழியில் செல்கின்றனர் என்பதையும், செயலதிபர் உமாமகேஸ்வரன் உத்தரவிட்டால் எமது இராணுவப் பிரிவினர் எந்தக் கோரத்தனத்தையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதையும் வெளிப்படுத்தியிருந்தனர். இந்திய அரசால் வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் கூட சக விடுதலைப் போராட்ட இயக்கத்தையும் அதன் போராளிகளையும் அழிப்பதற்கே எமது இராணுவப் பிரிவினரால் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.

தமிழீழ விடுதலை இராணுவத்தின் மீதானதும் அதன் உறுப்பினரும் மீதான அழிப்பு பற்றி புளொட்டின் தள நிர்வாகப் பொறுப்பாளர் டொமினுக்குக்கோ அல்லது மாவட்ட அமைப்பில் அரசியற்பிரிவில் செயற்பட்ட எமக்கோ எதுவுமே தெரிந்திருக்கவில்லை.

அனைத்து சம்பவங்களும் நடந்து முடிந்த பின்பே எமது கீழணி அங்கத்தவர்கள் மூலமோ அல்லது மக்களிடமிருந்தோ நாம் உண்மையான தகவல்களை அறியவேண்டிய நிலை இருந்தது. தள இராணுவப் பொறுப்பாளர்களும் இராணுவப்பிரிவினரும் உமா மகேஸ்வரனின் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். தளத்தில் ஒரு நிர்வாகம் இருப்பது பற்றியோ அல்லது மக்கள் அமைப்புக்கள் செயற்படுவது குறித்தோ எமது இராணுவப் பிரிவினர் கருத்தில் கொள்ள தயாராக இருக்கவில்லை.

எமது இராணுவப் பிரிவின் தவறான மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் நியாயப்படுத்தவே மக்கள் அமைப்புக்களும் தள நிர்வாகமும் இருப்பதாகக் கருதினர். தள நிர்வாகப்பொறுப்பாளர் இராணுவப்பிரிவினரின் தவறான மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு மறுப்பறிக்கைகள் துண்டுப்பிரசுரங்கள் வெளியிட ஒரு கருவியாக இருப்பதாகவே கருதப்பட்டது. ஒரு விடுதலை இயக்கத்தின் அரசியல் இலக்கை அடைவதற்கு இருக்கும் தடைகளை அகற்ற அந்த விடுதலை இயக்கத்தின் இராணுவத்தை பயன்படுத்தும் நிலை மாறி இராணுவப் பிரிவினரின் தவறான மக்கள் விரோத நடவடிக்கைகளையும், அவர்களது தவறான இலக்குகளையும் அடைவதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு எமது அரசியல் பிரிவு (மக்கள் அமைப்பு) செயற்படும் நிலையாக மாற்றமடையத் தொடங்கியது.

தளத்தில் எமது இரானுவப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலை இராணுவ(TELA) அழிப்பு நடவடிக்கையால் மக்கள் அமைப்பில் செயற்பட்டு கொண்டிருந்த பெரும்பாலானவர்கள் - எமது இராணுவப் பிரிவில் ஈரநெஞ்சம் கொண்ட ஒரு பகுதியினரும் கூட - குழப்பங்களுடனும் ஒருவித கலக்கத்துடனும் காணப்பட்டனர். ஏனெனில் எமது இராணுவப் பிரிவினர்தான் இத்தகைய கோரத்தனமான செயல்களை செய்து முடித்திருந்தனர் என்பது எம்மில் பலரால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு விடயமாக இருந்தது.

(தொடரும்)

 

தவறுக்கு வருந்துகிறோம்


இந்தத் தொடரில் குறிப்பிடப்படும் தமிழீழ விடுதலை இராணுவத்தின் கூச் என்ற நபரின் கொலையானது குப்பிளானில் நடைபெற்றதல்ல. அது இந்தியாவில் புளொட்டினால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சேகர் குப்பிளானில் கழுத்துவெட்டப்பட்டு கொல்லப்பட்டார். எது எவ்வாறிருப்பினும் இங்கு நடந்த இடங்கள் காலங்கள் என்பனவற்றை தாண்டி புளொட் சக இயக்கப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்து தமிழீழ விடுதலை இராணுவம் என்ற அமைப்பை துடைத்தழித்தது என்பதே இங்கு குறிப்பானதாக வரலாற்றில் பதியப்படுகிறது. இவற்றைக் குறித்துக் காட்டிய வாசகர்களுக்கு நன்றி.
- நேசன்

 

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18

19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19

20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20