08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

பிரிந்து செல்லும் உரிமையற்ற சுயநிர்ணயம் என்பது மார்க்சியமல்ல (சுயநிர்ணயம் பகுதி : 02)

இலங்கை மார்க்சியவாதிகள் நீண்டகாலமாக, சுயநிர்ணயத்தை மறுத்ததும், பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை மறுத்ததும், தொடரும் இன அவலத்துக்கு அடிப்படைக் காரணமாகும். பாட்டாளி வர்க்கத்தின் கொள்கைரீதியான இந்த முடிவு, அரசியல் ரீதியாக இனமுரண்பாட்டில் இருந்தும் தன்னை ஓதுக்கிக் கொண்டது. இதனால் பிரிவினை வாதமும், பிரிவினை மறுப்புவாதமும் கொண்ட அரசியல், இனப்பிளவுகளையும், இன அவலங்களையும் உருவாக்கியது.

 

 

 

இனப்பிரச்சனையில் மார்க்சியம் வழிகாட்டிய கடந்தகால அனுபவம் எமக்கு இன்று பொருந்தாது என்று கூறிய பின்னணியில், ஜனநாயகக் கோரிக்கையை மறுப்பது பொது நடைமுறையாகியது. லெனின் கூறுவது போல் கடந்தகால வர்க்கப் போராட்டத்தை "… மறந்துவிடுவது என்பது நம்மை நாமே மறந்து விடுவதற்கு ஒப்பாகும். ….. வரலாற்று வேர்களினின்றும் சித்தாந்த வேர்களிலிருந்தும் நம்மைத் துண்டித்துக் கொள்வது.." மாகும் என்றார். கடந்தகாலத்தில் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயம் என்பதை, குறுக்கி விளக்க முடியாத வண்ணம் அதை மாhக்சிய அனுபவம் சிறந்த முறையில் தன் வரலாற்று அனுபவத்துடன் விளக்கியுள்ளது.

இங்கு பிரிந்து செல்லும் உரிமை என்பது முரணற்ற ஜனநாயகத்தாலானது. பிரிவினை என்பது முரணான ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது. ஜனநாயகமற்ற தீர்வு, தேசிய இனப்பிரச்சனையில் சாத்தியமில்லை. இங்கு சுயநிர்ணயம் இதைத்தான் வரையறுக்கின்றது.

இதை மறுத்து பிரிவினைக்குள்ளும், பிரிவினை மறுப்புக்குள்ளும் சுயநிர்ணயத்தை முடக்கிவிடும்போது, மார்க்சியம் இயல்பிலேயே பூர்சுவா வர்க்கத்துக்குச் சேவை செய்யும் கோட்பாடாக சீரழிந்து விடுகின்றது.

இதைப்பற்றி லெனின் இனப்பிரச்சனை தொடர்பான தனது நூலில் மிக அழகாகவே கூறுகின்றார். "மார்க்சியத்துக்கான போராட்டம் என்று கூறுவதை விட "கிட்டத்தட்ட மார்க்சியச்" சொற்றொடர்களுக்குப் பின்னால் ஒளித்து வைக்கப்பட்டுள்ள குட்டிபூர்ஷ்வா தத்துவங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நடத்தப்படும் போராட்டம் என்று கூறுவது பொருத்தமாகும்" என்றார். இலங்கை மார்க்சியம் சுயநிர்ணயத்தைக் கைவிட்டு, பூர்சுவா வர்க்கத்தின் பின் ஆதரவாகவும் எதிராகவும் இயங்கிய இயங்குகின்ற வரலாற்றுக் கட்டத்தின் ஊடாகவே இன்றுவரை தொடருகின்றது.

இன்று எம் முன்னுள்ள கடமை, மார்க்சியத்தை அதன் சரியான அர்த்தத்துக்கு மீட்க வேண்டும். பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயத்தை, பிரிவினைவாதத்துக்கும், பிரிவினை மறுப்புவாதத்துக்கும் எதிராக முன்னிறுத்தவேண்டும். எமது 70 வருட மார்க்சிய வரலாற்றில் இதை நாம் செய்யவில்லை. இதை நாம் சுயவிமர்சனமாக செய்தாக வேண்டும்.

பொதுவாக இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில், பூர்சுவா மற்றும் குட்டிபூர்ஷ்வா வர்க்க அரசியல் பாத்திரத்தை பிரித்து அணுகாத பாட்டாளி வர்க்கப் போக்கு, மார்க்சியத்தையே அரித்துவிடுகின்றது. இனப்பிரச்சனை தொடர்பான தனது நூலில் லெனின் கூறுவது போல் "பூர்சுவா, குட்டி பூர்ஷவா ஜனநாயகத்திலிருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை வேறாகப் பிரிப்பதற்கான தவிர்க்க முடியாத போராட்டம் .." அவசியமானதும் முன்நிபந்தனையானதுமாகும். இதைத் தான் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயம் வேறுபடுத்தி அணுகுகின்றது.

இங்கு தான் பூர்சுவா வர்க்கத்தின் பிரிவினையும், பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய பாட்டாளிவர்க்க சுயநிர்ணயமும் வேறுபடுகின்றது. இது போல் பிரிந்து செல்லும் உரிமையை மறுக்கும் பிரிவினை மறுப்புடன் வேறுபடுகின்றது. இதை மாhக்சியம் மறுத்துக் கொண்டு இருக்கும் வரை, இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை பாட்டாளிவர்க்கம் தலைமை தாங்க முடியாது. பிரிந்து செல்லும் உரிமையல்ல சுயநிர்ணயம் என்று கூறும்போதும் இதுதான் நடக்கின்றது.

இங்கு லெனின் ".. உரிமையை (சுயநிர்ணயத்தில் பிரிந்து செல்லும் உரிமையை) அங்கீகரிப்பதானது, பிரிவினையை எதிர்த்துப் பிரச்சாரம், கிளர்ச்சி செய்வதையோ அல்லது பூர்ஷ்வா தேசியவாதத்தை அம்பலப்படுத்துவதையோ சற்றும் விலக்கிவிடாது" என்றார் இங்கு மிகத் தெளிவாக தெரிகின்றது, பிரிவினையை எதிர்த்து கிளர்ச்சி செய்ய, பிரிந்து செல்லும் சுயநிர்ணயம் தான் உதவுகின்றது. அதுபோல் பிரிவினைவாத எதிர்ப்புவாதத்தையும் எதிர்த்து கிளர்ச்சி செய்ய பிரிந்து செல்லும் சுயநிர்ணயம் தான் உதவுகின்றது.

பிரிந்து செல்லும் சுயநிர்ணயம் என்ற ஆயுதமின்றி தேசிய இனப்பிரச்சனையை பாட்டாளி வர்க்கம் தன் கையில் எடுக்க முடியாது. பிரிந்து செல்லும் உரிமையற்ற சுயநிர்ணயம் என்பது, பொருளற்ற வெறும் சொல்தான். மார்க்சியம் சுயநிர்ணயத்தை முன்வைக்கும் போது, அதன் அர்த்தத்தை இழந்த வெற்றுச் சொற்களைக் கொண்டு ஒருநாளும் மக்களை வழிநடத்த முடியாது. சுயநிர்ணயத்தை பிரிந்து செல்லும் உரிமையற்ற, பொருளற்ற ஒன்றாக காட்டும் போது, மார்க்சியம் பூர்சுவா வர்க்கத்திற்கு உதவும் கோட்பாடாகி விடுகின்றது. பிரிவினை மறுப்பும், பிரிவினைவாதமும் பாட்டாளி வர்க்கத்தை அரசியல்ரீதியாக தனிமைப்படுத்தி ஓதுக்கிவிடுகின்றது. பிரிந்து செல்ல உரிமையற்ற சுயநிர்ணயம் மூலம், பாட்டாளி வர்க்கம் ஜனநாயக மறுப்பு கோட்பாடாக தன்னைச் சீரழித்து விடுகின்றது.

ஒடுக்குமுறைக்கு எதிரான பிரிவினைவாதம் என்பது பூர்சுவா வர்க்கத்தின் சொந்த அரசியலாக இருக்கும் போது, இது இயல்பில் ஜனநாயகக் கோரிக்கையாகவும் இருக்கின்றது. இதை பாட்டாளி வர்க்கம் ஏற்க மறுப்பது, அரசியல் தவறு மட்டுமின்றி, செயலூக்கமுள்ள அரசியல் நடைமுறைகளில் இருந்து விலகிவிடுவதுமாகும். இங்கு ஜனநாயகக் கோரிக்கையை ஏற்கும் போது, அதில் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையை மட்டும் அது ஆதரிக்கின்றது, ஜனநாயகக் கோரிக்கை அல்லாத அனைத்தையும் எதிர்க்கின்றது.

இந்த வகையில் பாட்டாளி வர்க்கம் பூர்சுவா வர்க்கத்தின் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கைகளை தன் சொந்தத் திட்டத்தில் உள்ளடக்குவதன் மூலம், முரணுள்ள பூர்சுh வர்க்கத்தின் கோரிக்கைகளை தனிமைப்படுத்தும் அரசியல் வழிகாட்டலைத்தான், தன் சொந்த புரட்சிகரமான திட்டமாகக் கொண்டு இயங்க வேண்டும். இதை இலங்கை மார்க்சியவாதிகள் அன்றில் இருந்து இன்று வரை செய்யவில்லை.

இந்த வகையில் தான் முரண் மற்றும் முரணற்ற அடிப்படையான அரசியல் எல்லைக்குள் நின்றுதான், பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையாக அதை வரையறுக்கின்றது. பாட்டாளி வர்க்க அரசியலைத் தாண்டி இதை அணுகவில்லை.

 

பி.இரயாகரன்

08.09.2011

பிரிவினைக்கும், பிரிவினை மறுப்புக்கும் எதிரானது சுயநிர்ணயம் (சுயநிர்ணயம் பகுதி : 01)


பி.இரயாகரன் - சமர்