சுழிபுரத்தில் காணமல் போன ஆறு இளைஞர்களின் படுகொலை செய்யப்பட உடல்கள் புதைகுழிகளிலிருந்து மீட்பு
படைத்துறைச் செயலர் கண்ணன் சுழிபுரம் சென்று விசாரணை நடாத்தியதில் சுவரொட்டி ஒட்டச் சென்று காணாமல் போன ஆறு தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் சம்பவத்துக்கும் எமது அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்ததால், இது குறித்து துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டு எமது அமைப்பில் உள்ளவர்களுக்கும், மக்களுக்கும் உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று எம்மால் கருத்து முன்வைக்கப்பட்டது. ஏனெனில் நாளுக்கு நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறுபேர் காணாமல் போன விவகாரம் எமது செயற்பாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகவும், நாம் அமைப்பு வேலைகளுக்குச் செல்லும் இடமெல்லாம் முகம் கொடுக்கும் முதன்மையான பிரச்சனையாகவும், எமது அமைப்புக்குள்ளேயே உணர்வலைகளை கிளப்பியிருந்த விவகாரமாகவும் மாறியிருந்தது. இந்தக் காலப்பகுதியில் மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் அசோக்கும் (யோகன் கண்ணமுத்து) நீர்வேலிப் பகுதியில் எம்முடன் தங்கியிருந்ததால் அவரும் துண்டுப்பிரசுரவெளியீடு பற்றிய கலந்துரையாடலில் எம்முடன் பங்குபற்றியிருந்தார். டொமினிக்கும் கண்ணனும் கூட துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளிக்கொணருவதன் அவசியத்தை உணர்ந்திருந்ததால் நிலைமைகளை தெளிவுபடுத்தி துண்டுப்பிரசுரம் வெளியிடுவது என முடிவானது.
டொமினிக்கை இதுபற்றி ஒரு துண்டுப்பிரசுரத்தை எழுதும்படி படைத்துறைச் செயலர் கண்ணன் கேட்டுக்கொண்டதற்கிணங்க "ஒன்றுபட்டு செயற்படுவோம்" என்ற தலைப்புடன் டொமினிக்கால் துண்டுப்பிரசுரம் எழுதப்பட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது.
இந்தத் துண்டுப்பிரசுரத்தில் சுழிபுரத்தில் சுவரொட்டி ஒட்டச்சென்று காணாமல் போன தமிழீழவிடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பற்றி நேரடியாக குறிப்பிடவில்லை என்ற போதிலும் நெருக்கடிகள் நிறைந்த காலகட்டத்தில் இனவாத அரசுக்கு எதிராக போராடும் விடுதலை இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை இன்றியமையாததும் அவசியமானதும் என்பது அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எமக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை அல்லது பகைமை நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கும் இந்தத் துண்டுப்பிரசுரம் பெரிதும் துணைபுரியும் என்று எம்மால் கருதப்பட்டு இந்தத் துண்டுப்பிரசுரம் யாழ் மாவட்டம் உட்பட அனைத்துமாவட்டங்களிலும் விநியோகிக்கப்பட்டது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளோ தமது ஆறு உறுப்பினர்களைக் காணவில்லை என்ற விடயத்திலிருந்து பின்வாங்காதவர்களாகவும் அவர்களை தேடும் பணியிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
தளத்தில் பலத்த பாதுகாப்புடன் வட்டுக்கோட்டையில் தங்கியிருந்த உமாமகேஸ்வரன் மிகக்குறுகிய காலத்துக்குள்ளேயே தன்னால் முடிந்த அளவுக்கு அமைப்பாளர்களுடனும் அவர் முக்கியமானவர்கள் எனக் கருதிய புளொட் உறுப்பினர்களுடனும் சந்திப்புக்களை நிகழ்த்தி முடித்திருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் உமாமகேஸ்வரனுடன் வேலுப்பிள்ளை பிரபாகரன் இணைந்திருந்த போதும் சரி, தமிழீழ விடுதலைப் புலிகள் பிளவுற்றபின் புளொட் உருவான காலங்களிலும் சரி, இளைஞர்களைக் கொண்ட சிறுகுழுக்களாக இருந்த நிலை மாறி புளொட் என்ற அமைப்பு வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மக்கள் மத்தியில் வேரூன்றி விட்டிருந்ததை வடக்கு கிழக்கு பிரதேசங்களிலிருந்து சந்திக்க வந்த அமைப்பாளர்கள் மூலம் உமாமகேஸ்வரன் அறிந்து கொண்டார்.
உமாமகேஸ்வரன் தளம் வரும்போது சிறிதளவேனும் எதிர்பார்த்திராத விமர்சனங்களையும் கேள்விகளையும் முகம் கொடுத்திருந்தபோதிலும் பல புதிய முகங்களை சந்தித்ததன் மூலம் பல புதிய அனுபவங்களையும் கூட பெற்றுக் கொண்டார். எது எப்படி இருப்பினும் தனது தளவருகையின்போது குறுகிய காலத்துக்குள்ளாகவே அனைத்துமே மாறிவிட்டிருந்ததையும் புளொட் என்ற அமைப்பு இப்பொழுது ஒரு விருட்சம் போல் வளர்ந்து விட்டிருந்ததையும் அவர் நேரில் கண்டுணர்ந்து கொண்டு திருப்தி பட்டவராக உமாமகேஸ்வரனது பேச்சுக்கள் அமைந்திருந்தன. ஒட்டுமொத்தத்தில் உமாமகேஸ்வரனின் தளவருகையானது அவருக்கு மிகுந்த மனநிறைவைக் கொடுத்ததுமட்டுமின்றி, தனது தலைமைத்துத்துவத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் கருதுவதாகவும் தெரிவித்து மீண்டும் சென்னைக்குத் திரும்பியிருந்தார். ஆனால் தளநிலைமைகளோ நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருந்ததை எம்மால் உணர முடிந்தது.
அமைப்புக்குள்ளே எமது இராணுவப் பொறுப்பாளர்களுடனான முரண்பாடுகளுக்கும் அவர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கும் முகம் கொடுத்துவந்த அதேவேளை இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறுபேர் காணாமல் போன விவகாரமும் கூடவே சேர்ந்து கொண்டது.
அமைப்புக்கு வெளியே தமிழீழ விடுதலைப் புலிகளின் காணாமல் போன ஆறுபேர் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ஏனைய இயக்கங்களும் மக்களும் கூட எம்மீது கேள்விக்கணைகளை தொடுத்த வண்ணமிருந்தனர். உமாமகேஸ்வரன் வட்டுக்கோட்டையிலிருந்து சென்னை திரும்பிய பின் உமாமகேஸ்வரனுக்காக வட்டுக்கோட்டை மற்றும் சுழிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் இல்லாமல் போயிருந்தன. உண்மையிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் புளொட் இராணுவத்தினர் சனநெரிசல் மிக்க சந்தைப்பகுதிகளிலும் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் நடமாடும் தெருக்கள் என கருத்தில் கொள்ளாது புழுதிகிளப்பும் வேகத்துடனும் அலட்சிய மனோபாவத்துடனும் வட்டுக்கோட்டைப் பகுதியில் தமது வாகனங்களை செலுத்தி சாகசம் புரிந்திருந்தனர். இது பற்றிய வட்டுக்கோட்டை பகுதி மக்களின் விசனமும், ஒரு மக்களை மதிக்கின்ற விடுதலை இயக்கமாக தன்னைச் பிரச்சாரம் செய்கின்ற அமைப்பின் இராணுவப்பிரிவு செய்கின்ற அட்டகாசமும், எங்களை அடக்குகின்ற இலங்கை இராணுவத்தின் நடத்தையை ஒத்ததாக இருப்பதாக முறைப்பட்டுக் கொண்டனர். உமாமகேஸ்வரன் அப்போது வட்டுக்கோட்டைப் பகுதியில்தான் தங்கியிருந்தார். உமாமகேஸ்வரன் வட்டுக்கோட்டையில் பாதுகாப்பாக தங்குவதற்கான ஒழுங்குகளை வட்டுக்கோட்டை சுகந்தன்(சிறி) செய்து கொடுத்திருந்ததால் வட்டுக்கோட்டை பகுதியில் மக்களை மோதிச் செல்லும் கண்மண் தெரியாத வாகன ஓட்டத்தைப் பற்றிய கடுங்கோபத்தையும் முறைப்பாடுகளையும் வட்டுக்கோட்டை மக்கள் சுகந்தனிடம்(வட்டுக்கோட்டை சிறி) தெரிவித்திருந்தனர்.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் சுழிபுரம் பகுதியில் தமது காணாமல் போன ஆறுபேரை தேடும் நடவடிக்கையை தொடர்ந்த வண்ணமிருந்தனர். உமாமகேஸ்வரன் வட்டுக்கோட்டை பகுதியில் தங்கிநின்ற போது சித்தங்கேணி, சங்கானை, சுழிபுரம் வட்டுக்கோட்டை பகுதிகளில் எமது இராணுவப் பிரிவினர் பகிரங்கமாக ஆயுதங்களுடன் நடமாடியமை, மோட்டார் சைக்கிள்களிலும் வாகனங்களிலும் துப்பாக்கிகளுடன் வீதிகளில் பெரும்புழுதி கிளம்பும் வேகத்துடன் சாகசங்களில் ஈடுபட்டமை போன்ற செயற்பாடுகளால் இலங்கை இராணுவம் தகவல் அறிந்து சுழிபுரம், சித்தங்கேணி, சங்கானை போன்ற இடங்களை சுற்றிவளைத்தது. இரண்டு நாட்கள் தொடர்ந்த ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து பெரும் எடுப்பிலான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இலங்கை இராணுவத்தின் இந்தச் சுற்றிவளைப்பில் சங்கானையில் இராணுவத்துடன் ஏற்பட்ட துப்பாக்கி மோதலில் பல புளொட் உறுப்பினர்கள் காயமடைந்தனர். இராணுவத்தினரால் சங்கானையில் சில கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த இராணுவ சுற்றிவளைப்பில் சுந்தரம் படைப்பிரிவில் செயற்பட்டவரும் உமாமகேஸ்வரனின் தளவருகையுடன் இந்தியாவிலிருந்து சுழிபுரம் திரும்பியிருந்த மீரான் மாஸ்ரரும் (சத்தியராஜன் சுப்பிரமணியம்) மாதகல் ரவியும் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர்.
வட்டுக்கோட்டை பகுதியில் உமாமகேஸ்வரன் தங்கிநின்றபோது எமது இராணுவப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட அநாவசியமான சாகச நடவடிக்கைகள், வீதிகளிலும், வாகனங்களிலும் பகிரங்கமாக துப்பாக்கிகளுடன் நடமாடியாமை போன்ற பல தவறான செயற்பாடுகளே இலங்கை இராணுவத்தினர் தகவல்களைச் சேகரித்து சித்தங்கேணி, சங்கானை, சுழிபுரம் பகுதியில் பெரும் எடுப்பிலான தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவதற்கு காரணமாக அமைந்திருந்தது.
சுழிபுரம் பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்குப் பின் அப்பகுதி மக்களால் மனித உடற்பகுதிகள் மணல் தரைக்கு மேல் வெளிப்பட்டுக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகவலை அறிந்து அப்பகுதிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளும், காணாமல் போன இளைஞர்களின் பெற்றோர்களும் விரைந்தனர். மனித உறுப்பு தரைக்குமேல் வெளிப்பட்டுக் கொண்டிருந்த இடத்தை தோண்டியபொழுது சுவரொட்டி ஒட்டச் சென்று காணாமல் போன ஆறுபேரின் உடல்களும், அதனுடன் அடையாளம் காணப்படாத ஒருவரின் உடலும் அவ்விடத்தில் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புதைக்கப்பட்டிருந்த அனைவரினதும் உடல்கள்களிலும் மிகவும் கொடூரமான சித்திரவதைகளின் பின்பே கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தன. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் காணாமல் போனவர்கள் என்று சொல்லப்பட்ட ஆறுபேரும் உண்மையிலேயே காணாமல் போனவர்கள்தான் என்பது உறுதியாகியது.
ஆனால் இப்பொழுது எம்முன் எழுந்த கேள்வி என்னவெனில், இத்தகைய கொடூரத்தனமான, ஈனத்தனமான செயலின் சூத்திரதாரிகள் யார் என்பதுதான். இலங்கையின் ஜெயவர்த்தனா தலைமையிலான பேரினவாத அரசால் திட்டமிட்டி மேற்கொள்ளப்பட்ட வெலிக்கடை சிறைப்படுகொலைகளையும் அதன் கொடூரங்களையும் நாம் வருடாவருடம் நினைவு கூர்ந்து வருகின்றோம். அப்படியாயின் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கென தம்மை அர்ப்பணித்து போராட முன்வந்த ஆறு இளைஞர்களை படுகொலை செய்யும் உரிமையை இந்தக் கொலையாளிகளுக்கு வழங்கியது யார்? இத்தகைய கொலைவெறி பிடித்தோர் தம்மை எப்படி விடுதலைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்ள முடியும்? இந்தக் கொலையாளிகளுக்கும், வெலிக்கடைச் சிறையில் கைதிகளை படுகொலை செய்த கொலையாளிகளுக்கும் இடையே என்ன வித்தியாசம்?
கண்ணன் சுழிபுரம் சென்று ஆறுபேர் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்திவிட்டுத் திரும்பி வந்து எமக்கும் ஆறுபேர் காணாமல் போனதிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்திருந்தார். ஆனால் இப்பொழுது ஆறுபேரின் கொலை செய்யப்பட்ட உடல்கள் சுழிபுரம் பகுதிலேயே புதைக்கப்பட்டிருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சுட்டுவிரலை எம்மை நோக்கியே காட்டிக் கொண்டிருந்த போதும் கூட, தமிழீழ விடுதலைப் புலிகளின் கடந்தகாலச் செயற்பாடுகளான சுந்தரம் படுகொலை, உமாமகேஸ்வரன் மீதான மரணதண்டனை குறித்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் தீர்மானம், சென்னை பாண்டிபஜாரில் உமாமகேஸ்வரனின் மீதான துப்பாக்கிப்பிரயோகம் என்பன எமக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதும் கூட சந்தேகத்தை ஏற்படுத்தியது. நாம் ஒன்றில் மட்டும் தெளிவாகவும் நிச்சயமாகவும் இருந்தோம். இத்தகைய கொடூரத்தனமான, மனிதநாகரீகமே வெட்கித் தலைகுனியும்படியான கொலைகளை யார் செய்திருந்தாலும் அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தின் விரோதிகள் மட்டுமல்ல, முழு மனிதகுலத்தின் விரோதிகளாகவும் கணிக்கப்பட வேண்டியவர்கள் என்பதே அது.
தளநிலைமைகள் அனைத்தும் முன்பையும் விட வேகமாகவும், சிக்கலானதானவும் மாறிக் கொண்டிருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறு உறுப்பினர்களைக் காணவில்லை என்றாக இருந்த விவகாரம், அவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டபின் கொலையாளிகள் யாரென்பதாக மாறிவிட்டிருந்தது. எமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட, அனைவருமே இதன் உண்மைநிலையை அறிய வேண்டியவர்களாக இருந்தோம். அனைவரினது கேள்விகளும் விமர்சனங்களும் எம்மைக் குறிவைப்பதாகவே இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எமக்கும் இடையிலான உறவில் மேலும் அதிக விரிசலை உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்ததுடன் மீண்டும் எமக்கிடையில் ஒரு முறுகல் நிலை அல்லது பகைமை நிலை அரும்புவிடக் தொடங்கியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் கூறுவதை நம்புவதா அல்லது எமது இராணுவப் பிரிவு கூறுவதை நம்புவதா என்பதில் இன்னமும் குழப்பகரமாகவே இருந்த காலகட்டம் அது. நாம் இந்தப் படுகொலைகளைச் செய்யவில்லை என்றால் அதனை மறுத்து உடனடியாக அறிக்கை விடவேண்டும் என்று மாவட்ட அமைப்பில் செயற்பட்டவர்கள் கேட்டவண்ணமிருந்தனர். படைத்துறைச் செயலர் கண்ணனும் கூட இந்தப் படுகொலைகளை நாம் செய்யவில்லை என மறுப்பறிக்கை விட வேண்டும் என தெரிவித்தார். சென்னையிலிருந்த உமாமகேஸ்வரன் இந்தப் படுகொலைகளை நாம் செய்யவில்லை என மறுத்து துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிடும்படி தளநிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்குக்கு தகவல் அனுப்பியிருந்தார்.
ஆனால், தளநிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்கோ இந்தக் கொலைகள் பற்றி சரியான விசாரணை மேற்கொள்ளப்படாமல் இக்கொலைகளை மறுத்து துண்டுப்பிரசுரம் வெளியிடமுடியாது என்ற கருத்தை தெரிவித்தார். என்னைப் பொறுத்தவரை டொமினிக்கினுடைய இந்தக் கருத்தும், இவ்விடயத்தில் அவரது நிலைப்படும் மிகவும் சரியானதாகும். ஏனெனில் சுழிபுரம் புளொட்டினுடைய ஒரு "கோட்டை" என்றே சுந்தரம் படைப் பிரிவினரால் அழைக்கப்பட்டு வந்தது. இதனால் புளொட் அமைப்பினர் அல்லாத வேறு எந்த இயக்கத்தினரும் சுழிபுரம் பகுதிக்குள் சென்று அரசியல் செய்வதை விரும்பாத அல்லது அனுமதிக்காத காலகட்டம் அப்போது இருந்தது. சில சமயங்களில் ஏனைய இயக்கத்தவர்கள் சுழிபுரம் பகுதியில் அரசியல் செய்ய முற்பட்டு சுந்தரம் படைப்பிரிவினரின் எதிப்பு காரணமாக தமது முயற்சியை கைவிட்ட சம்பவங்களும், ஈ.பீ.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் துண்டுப் பிரசுரம் விநியோகித்தபோது அவர்களின்மேல் வன்முறையை ஏவி விட்ட சம்பவமும் நடந்திருந்தது. உமாமகேஸ்வரன் தளம் வந்திருந்தபோது கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வட்டுக்கோட்டை மற்றும் சுழிபுரம் பகுதியில் எமது இராணுவப் பிரிவினர் உமாமகேஸ்வரனுக்கு செய்திருந்தனர். எனவே இத்தகைய நிலையில் சுழிபுரம் பகுதியில் கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதொன்றாகும் என டொமினிக் கருதியது சரியானதாகும்.
யாழ் மாவட்ட அமைப்புக்குள் செயற்பட்டுக்கொண்டிருந்த கீழணி அங்கத்தவர்களிடமிருந்து வந்த விமர்சனங்களும், கேள்விகளும் கூட எம்மை நோக்கி நேரடியாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இப்பொழுது அவர்களது விமர்சனங்களிலும் கேள்விகளிலும் கடுமையான தன்மைகளை உணரக்கூடியதாக இருந்ததோடு அவர்களின் விமர்சனங்களிலும் கேள்விகளிலும் நியாயத்தன்மையும் கூட இருந்தது. நாம் அமைப்புக்குள் முகம் கொடுத்த புதிய, அதேவேளை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனையாக சுழிபுரம் இளைஞர்கள் படுகொலை மாறியிருந்தது.
(தொடரும்)
1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1
2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2
3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3
4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4
5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5
6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6
7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7
8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8
9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9
10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10
11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11
12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12
13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13
14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14
15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15
16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16
17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17
18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18
19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19