சுதந்திரமாக இலங்கையில் இயங்குவது என்பது, கைதுக்கும் சித்திரவதைக்கும், ஏன் மரணத்துக்கும் கூட ஒப்பானது.
அண்மையில் யசிகரன் கைதும், அவரின் துணைவியாரான வளர்மதியின் கைதும், இதை மறுபடியும் நிறுவியுள்ளது.
அவர்களின் சுதந்திரமான செயற்பாட்டை, புலிகள் என்ற முத்திரை குத்தியே பேரினவாதிகளால் கைது செய்யபட்டுள்ளார். புலியெதிர்ப்பு பேசும் ஜனநாயகவாதிகள் மௌனம் காக்க, கிழக்கின் விடிவெள்ளிகள் சாமரம் வீச, இந்தக் கைது அரங்கேறியுள்ளது. அவர்களின் ஜனநாயகமோ, இதைப் பற்றி பேசவே மறுத்துவிட்டது.
இந்தளவுக்கு யசிகரன் கிழக்கைச் சேர்ந்தவர். துணைவியார் வடக்கைச் சேர்ந்தவர். இவர்கள் செய்த குற்றம், சுதந்திரமாக செயற்பட்டதுவே. புலியுடனோ அல்லது அரச கூலியாகவோ இயங்க முற்படாமை தான், கைதுக்கான காரணம். இதனால் 'ஜனநாயகம்" பேசுபவர்கள், இந்தக் கைதையிட்டு அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களும் இதை ஆதரவளித்து, இதை திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தனர்.
யசிகரன் ஒரு கலைஞனாக, இலக்கியம், நாடகம், புகைப்படம், எழுத்து, நிருபர் என்று பல்துறை சார்ந்த, ஒரு சமூக செயற்பாட்டாளன். சமூகம் மீது, ஆழமான அக்கறை கொண்டவன். சத்துருக்கொண்டான் படுகொலையை முதலில் உலகறியச் செய்தவன். அதில் உயிர் தப்பிய ஒருவரை, உலகின் முன் கொண்டு வந்ததும் அவர் தான்.
மறுபக்கத்தில் சமாதானமும் அமைதியும் நிலவிய காலத்தில், கருணா - பிரபா புலி இவரை மிரட்டி தமக்கு ஒரு கூலியாக அடிபணிய வைக்க முயன்றனர். இதற்கு காலக்கெடு விதித்த ஒரு நிலையில், இதில் இருந்து தப்பி கொழும்பு வந்தவர். இவரின் அச்சக உடைமைகள் அனைத்தையுது, புலிகள் அன்று பலாத்காரமாகவே சூறையாடிச் சென்றனர்.
இதன் பின் கருணா – பிள்ளையான் கோஸ்டி, தொடர்ந்து கொழும்பு வரை இவரைத் தொந்தரவு செய்து வந்தது. இதன் பின்னணியில், இன்று இந்தக் கைது என்ற கூத்து நடந்துள்ளது.
இந்தக் கைதைத் தொடர்ந்து 4 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இவர் அவுட் ரீச்.கொம் என்ற இணையத்தளத்தை நடத்தியதுடன், இவரோ உதவி என்ற சிறுவர் பராமரிப்பு அமைப்பின் இலங்கை பிரதிநிதிகளில் ஒருவர். இது புலிகளுடன் எந்த தொடர்புமற்றது. புலிகள் இதற்கு எதிரான, இழிவான மலிவான பிரச்சாரங்களை செய்து வந்துள்ளனர். இந்த உதவிக்கு நான் கூட நிதி வழங்கியுள்ளேன். சில நண்பர்களை கொடுக்கத் தூண்டி, கொடுத்துமுள்ளனர்.
யாரும் கண்டு கொள்ளாத, ஏன் கிழக்கு விடிவெள்ளிகள் கூட கண்டு கொள்ளாத கிழக்கு வாழ் அனாதைச் சிறுவர்களை இது பராமரிக்கின்றது இந்த அமைப்பு, புலிகளுடன் தொடர்பற்றது. சர்வதேச நிதியாதாரத்துக்கு அப்பாற்பட்டது. உண்மையில் சமூகம் மீது ஆர்வமுள்ள நண்பர்களின் உதவியில் அது இயங்கியது. அதை அவர்களின் இணையத்தில் காண முடியும். 100 ஈரோ கொடுத்த ஒருவர், அதன் அங்கத்தவராகவும், ஏன் முழுத் தகவலையும் இணையத்தின் உள் சென்று கூட பெறமுடியும். இன்று புலி முத்திரை குத்தியே இந்த கைது நடந்துள்ளது. இந்த உதவியின் கீழ் இயங்கிய குழந்தைகள் தங்குமிடத்தைக் கூட, முன்னாள் கிழக்கு புலிகள் அபகரித்த வரலாறும் எம்முன் உண்டு.
இப்படிப்பட்ட ஒரு அமைப்பின் இலங்கை தொடர்பாளரை புலி முத்திரை குத்தி, இந்த அரசு கைது செய்துள்ளது. உண்மையில் மக்களின் வாழ்வில் அக்கறையுடன் செயற்பட்ட ஓரே குற்றம், கைதுக்கான காரணமாகி நிற்கின்றது. இது நடந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும், இதுவரை நீதி மன்றத்தின் முன் கூட கொண்டுவரப்படவில்லை.
குத்திய முத்திரையை நிறுவ, புலிச் சல்லடை போட்டு தேடுகின்றனர். இவரின் அச்சகத்தில் தான் சரிநிகர் பத்திரிகை அச்சானது. அதன் ஆசிரியர் சிவகுமார் கைதும், இதைத் தொடர்ந்து நடந்தது. சர்வதேச ரீதியாக அம்பலப்படுவதை தடுக்கவே, அவரை விடுவித்தனர். தொடர்ந்தும் அவர்கள் இனம் தெரியாத கடத்தல், படுகொலை என்ற அச்ச எல்லைக்குள், இந்த சூழலுக்குள் தான், அவர்கள் அந்த மண்ணில் உயிர்வாழ முடிகின்றது.
உண்மையில் இவர்கள் புலியல்லாதவர்கள். புலியின் பிரதேசத்தில் வாழமுடியாதவர்கள். புலிகளால் மரணத்தை எதிர்நோக்கியவர்கள். இதனால் தான புலியல்லாத பிரதேசத்தில் வாழ முற்பட்டவர்கள்.
தமிழ் மக்களின் உரிமைகளின் பால், அரசு மற்றும் புலிகள் கடைப்பிடிக்கின்ற போக்குகளுக்கு எதிராக, குறைந்தளவில் குரல் கொடுக்க முனைந்தவர்கள் அல்லது தமது தனித்துவத்தை பாதுகாக்க முனைந்தவர்கள்.
குறிப்பாக சிவகுமார் புலிகள் வதை முகாமில் 100 நாட்களுக்கு மேலாக சித்திரவதைக்கு உள்ளானவர். நான் அந்த புலிகளின் வதை முகாமில் இருந்து தப்பியதால், இன்று அவர் புலிகளிடம் தப்பி உயிர் வாழ்கின்றார். இப்படி அவர்கள் சொந்த மண்ணில் வாழமுடியாதவர்கள்.
இன்று புலியல்லாத பிரதேசத்திலும் வாழ முடியாத நிலை. சுதந்திரமான சிந்தனை கொண்டவர்களின் நிலை இதுவாகிவிட்டது. இலங்கையின் ஜனநாயகம், சுதந்திரம் என்பது, சுதந்திரமான சிந்தனையற்ற அரச கூலிக்கும்பலாக வாழ்தல் என்பதையே இச் சம்பவங்கள் மறுபடியும் கூறமுனைகின்றது.
உதவி அமைப்பின் அறிக்கை
பத்திரிகை அறிக்கை
06.03.2008 இல் ஈக்குவாலிற்றி பதிப்பக உரிமையாளரும், பத்திரிகையாளரமான வெ.யசிகரன் கொழும்பில் கைது செய்யப்பட்டார். கூடவே, அவரது வாழ்க்கைத் துணை வளர்மதியும் கைது செய்யப்பட்டார். இலங்கை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால், இவர்களைத் தொடர்ந்து, அதே வாரத்தில், பிற 4 பத்திரிகையாளர்களும் கைதானார்கள். யசிகரன் உதவியின் (http://www.uthawi.net/) தொடர்பாளராகக் கடமையாற்றியவர்.
ஜேர்மனியைக் மையமாக கொண்டுள்ள, உதவி அரசியல், மதசார்பற்ற ஓர் ஊடகக் கூட்டுவேலை ஆகும். 2003இலிருந்து உதவி கிழக்கிலங்கையிலுள்ள 4 சிறுவர் இல்லங்களிற்கு ஆதரவளித்து வருகிறது. யசிகரன் உதவியின் இவ் வேலைக்கு உதவும் மிக முக்கியமான நபராவார்.
இலங்கை அரச அதிகாரிகள் கைதான அனைத்து பத்திரிகையாளர்களையும், கைதான முதல் வாரத்தில், சித்திரவதை செய்துமுள்ளார்கள்.
இப் பத்திரிகையாளர்களது கைதானது, சிறுவர் இல்லங்களையும் வெகுவாய்ப் பாதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இச் சிறுவர் இல்லங்கள் உடனடிப் பணப் பற்றாங்குறையை எதிர்நோக்கியுள்ளன. கிழக்கிலங்கையில் அமைந்துள்ள இந்த சிறுவர் இல்லங்களிலுள்ள 200 இற்கும் மேற்பட்ட அநாதரவான சிறுவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி கைதுகள் பற்றிய மேலதிக தகவல்களை கீழுள்ள இணைய முகவரிகளில் காணலாம்:
http://www.rsf.org/article.php3?id_article=26200
http://news.bbc.co.uk/2/hi/south_asia/7293303.stm
http://www.cpj.org/news/2008/asia/sri11mar08na.html
யசிகரன் மற்றும் அவரது வாழ்க்கைத் துணையான வளர்மதியின் கைது தொடர்பாக நாம் மிகுந்த கவலை அடைந்துள்ளோம்.
அத்துடன் யசிகரன் தொடர்பாளராக இயங்கிய 4 சிறுவர் இல்லங்கள் குறித்தும் நாம் பாரிய கவலை கொள்கின்றோம்.
இலங்கை அரசாங்கம், சிறுவர் இல்லங்களுக்கான பணமும், உதவியும் அநாதரவான குழந்தைகளுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த கோருகின்றோம்.
பத்திரிகையாளர்கள் மீதான சித்திரவதைகளை நிறுத்தி உடனடியாக அவர்களை விடுவிக்க அல்லது இந்த விடயத்தில் எவ்விதப் பாரபட்சமுமற்ற சீரான விசாரணையை நடத்த இலங்கை அரசை கோருகிறோம்.
மனிதாபிமான, மனித உரிமை அமைப்புகளை இவ் விடயத்தில் தலையிட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளர்களை விடுவிக்கவும், உணவு, மற்றும் பிற உதவிகள் அநாதரவான இந்தக் குழந்தைகளுக்குக் உடனடியாக கிடைக்கவும் உதவும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
நாங்கள் ஆதரவளிக்கிற சிறுவர் இல்லங்களைப் பற்றியதும் உதவி பற்றியதுமான தகவல்களை அறிவதற்கான இணைய முகவரி: http://www.uthawi.net/
இப்பத்திரிகை அறிக்கை உதவி.நண்பர்கள்.இங்கிலாந்து (
பி.இரயாகரன்
18.03.2008