"துரோகி" என்ற முத்திரை குத்திய புலி அரசியலைப் போலவே, "புலி" என்ற முத்திரை குத்தும் அரசு அரசியல்

சமூகவிடுதலைக்கான அரசியலை மறுக்க, அரசு - புலி இரண்டும் ஒரே மாதிரியான அணுகுமுறையைத்தான் கையாளுகின்றன. 16.10.2011 அன்று கனடாவில் செல்வியை முன்னிறுத்தி நடந்த நினைவுக் கூட்டத்தை கொச்சைப்படுத்தி, செல்வியை கொலை செய்த புலிகளே தாமே தமக்கு எதிராக இக் கூட்டத்தை நடத்தியதாக கூறியுள்ளனர். அதை அவர்கள்

"செல்வியைக் கொலை செய்தவர்களின் பினாமியாகச் செயற்படும் சிலரே இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்கிறார்கள் எனத் தெரிய வந்ததைத் தொடர்ந்து, ... கூட்டத்தில் பங்குபற்றாது, தமது நிலைப்பாட்டை கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு விளக்கிவிட்டு விலகிக் கொண்டார்கள். பின்னர் கிடைத்த தகவல்களின்படி, புலிகளின் புலனாய்வுப் பிரிவினரே இந்தக் கூட்டத்தை திட்டமிட்டு ஒழுங்கு செய்ததாகத் தெரிய வருகிறது."

என்று கூட்டத்தை புலிகள் பாணியில் முத்திரை குத்துகின்றனர்.

இப்படியாக புலிகளின் உளவுப் பிரிவு தான் கூட்டத்தை நடத்தியதாக "செல்வியின் நண்பர் குழாம்" கூறியுள்ளனர். வேடிக்கை என்னவென்றால் புலிகளின் உளவுப் பிரிவு தனக்கு எதிராக தான் செய்த கொலைக்கு எதிராக தானே கூட்டம் நடத்தியதாம்! நம்புங்கள். இப்படி இலங்கை அரசுக்குச் சார்பாக புலத்தில் திட்டமிட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் தேனீ இணையம் "எச்சரிக்கை" என்ற தலைப்பில் "செல்வியை கடத்திச் சென்று படுகொலை செய்த சக்திகளே அவருக்கு நினைவுக்கூட்டம் நடாத்தும் அயோக்கியத்தனம் நடந்துள்ளது." என இதனைக் கூறியுள்ளது. 1990 களில் செல்விக்காக கனடாவில் குரல்கொடுத்து போராடியவர்களை பார்த்து "அயோக்கியர்கள்" என்கின்றது. இதில் நாங்கள் கலந்து கொண்டது மட்டுமன்றி கட்டுரையும் (பார்க்க செல்வி முன்னெடுத்த அரசியலை முன்னிறுத்தாத அனைத்தும் நேர்மையற்றவை,) உரையும் கூட ஆற்றினோம்.

 

இப்படி இருக்க தேனீ இணையத்தில் கும்மியடிக்கும் கூட்டங்கள், மக்களைச் சார்ந்து எந்த அரசியல் வழியையும் முன்வைத்ததோ, முன்வைப்பதோ கிடையாது. இலங்கை அரசை சார்ந்து நிற்றல் தான், அவர்களின் அரசியல் என்று கூறிவருகின்றது. புலிக்கு எதிராக சொந்த மக்களை அணிதிரட்டாது, புலியை அழிக்க அரசின் பின் நின்றவர்கள் தான் "எச்சரிக்கை" விடுகின்றனர். மக்களை அணிதிரட்டக் கூடாது என்று "எச்சரிக்கை" விடுகின்றனர். மக்கள் தங்கள் சொந்த விடுதலைக்கான வழியை தேடுவதை தடுப்பதற்கு, புலி என்று முத்திரை குத்துகின்றனர். செல்வியோ அரசு - புலி முதல் அனைத்து இயக்கத்தையும் எதிர்த்து போராடியவர். இப்படி இருக்க, "செல்வியின் நண்பர் குழாம்" கூட்டம் கூறுகின்றது

"இதில் ஒரு நல்லதும் மெச்ச வேண்டியதுமான விடயமென்னவெனில், சுமார் 30 பேர் வரையில் பங்குபற்றிய இந்தக் கூட்டத்தில், எந்தவொரு நல்ல மனிதரும் பங்குபற்றவில்லை. அமைப்பு ரீதியாகப் பார்த்தால் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி, ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, இடதுசாரிகள் என யாருமே பங்குபற்றவில்லை. பங்குபற்றியவர்கள் எல்லோருமே புலிப் பினாமிகள்தான்."

என்கின்றனர்.

செல்வி யாரை எதிர்த்து போராடினாரோ அவர்கள் யாரும் வரவில்லை.

புலிகள் முதல் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி, ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, போலி இடதுசாரிகள் என யாரும் வரவில்லை. இவற்றில் இருந்து விலகியவர்கள், அரசு - புலிக்கு எதிராக மக்களை நேசிப்பவர்கள் தான், பெரும்பான்மையாக இதில் கலந்து கொண்டனர்.

இப்படி அரச - புலியுடன் இல்லாதவர்கள் அதிகம் கலந்து கொண்ட கூட்டத்தை எதிர்த்து "செல்வியின் நண்பர் குழாம்" கூறுகின்றது

"கனடாவில் இரண்டு அணிகள் தெளிவாக இனங்காணப்பட்டுள்ளன. ஒன்று, தமிழ் தேசிய வெறி, புலிச்சார்பு சக்திகள். மற்றது, முற்போக்கு ஜனநாயக சக்திகள். சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒருபோதும் ஒட்ட முடியாது."

என்கின்றனர். இதன் மூலம் தாங்கள் யார் என்பதை இங்கு தெளிவாக்கியுள்ளனர். அரசு தரப்பு ஓரு தனி அணியாக இல்லை என்றதன் மூலம், அது தாங்கள் தான் என்பதை இங்கு போட்டு உடைத்துள்ளனர்.

இதன் மூலம் மிகத்தெளிவாக மூன்றாவது அணி ஒன்று இல்லை என்று கூறியுள்ளனர்.

அதாவது

1.தமிழ் தேசியும் புலி அரசியல்

2. புலியெதிர்ப்பு அரசு சார்பு அணி மட்டும் தான் உண்டு. அரசு -புலி எதிர்ப்பு அணி கிடையாது என்று கூறியுள்ளனர்.

இப்படி அரசுக்கு சார்பாக புலிக்கு மட்டும்: எதிராக இயங்குகின்ற அணி, புலி அல்லாத அனைவரையும் ஒரேயணியாக காட்டுவதும், மற்றவர்களை எவரையும் புலியாக முத்திரை குத்துவதும் இங்கு பக்குவமாக அரங்கேறுகின்றது.

இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் அரசு - புலி இரண்டையும் எதிர்க்கின்ற அணிதான். செல்வியின் அதே அரசியலை சார்ந்து முன்னெடுத்தனர். இங்கு புலி மற்றும் அரசு தரப்பு பரஸ்பரம் அரசுக்கு சார்பானதாகவும் புலி சார்பானதாகவும் முத்திரை குத்துவது, அவர்களின் வழமையான அரசியல் தான். இந்த "எச்சரிக்கை" மூலம் அரசை எதிர்க்காத அரசு தரப்பு முழுமூச்சாக தன்னை இன்று வெளிப்படுத்தி நிற்கின்றது.

இதன் மூலம் கடந்தகால புலி அல்லாத தரப்பு அனைவரும், புலிக்கு எதிராக ஒரே அணி என்ற மாயை களைந்திருக்கின்றது. இப்படி களைந்ததன் மூலம், அங்குமிங்கும் நின்றவர்கள் இனி தெளிவாக ஒன்றை தேர்ந்தெடுக்க வைத்துள்ளது. "எச்சரிக்கை" மூலம் கூறுகின்றனர் "கனடாவில் செல்வியின் பெயரால் கள்வனே கள்வனைத் தேடிய நாடகம்!" என்று கூறுவதன் மூலம், உங்கள் நேர்மையை மட்டுமல்ல, உங்கள் அரசியல் நேர்மையையும் கொச்சைப்படுத்தி இருக்கின்றனர். ஒன்றாகப் பழகியவர்கள், கூடி அரசியல் நடத்தியவர்களை கள்ளனாக்கி இருக்கின்றனர். உங்கள் உணர்வுகளை எல்லாம் "நாடகம்" என்று சொல்லி இருக்கின்றனர். இதன் மூலம் செல்வியின் அரசியல் தூற்றப்படுகின்றது. "நல்ல மனிதரும் பங்குபற்றவில்லை" என்றதன் மூலம் பங்குபற்றியவர்களை கெட்டவர்களாக தூற்றி இருக்கின்றனர்.

இப்படி அரசின் பின் தாங்கள் நின்று திட்டமிட்டு செய்கின்ற காரியத்தை மூடிமறைக்க அதை மற்றவன் மேல் சுமத்துகின்றனர்.

"புலம்பெயர் நாடுகளில் புலிகள் பல காரியங்களைத் திட்டமிட்டுச் செய்து வருகின்றனர். ஆனால் அண்மைக்காலமாக புலிகளின் எதிர்ப்புரட்சிகர செயல்பாடுகளை புலம்பெயர் நாடுகளிலுள்ள முற்போக்கு - ஜனநாயக சக்திகள் உரிய முறையிலும் துணிகரமாகவும் முகம் கொடுத்து பதிலடி கொடுத்து வருவதால், புலிகள் தற்பொழுது இந்த சக்திகளுடன் உறவாடும் சில உதிரிகளை தமது தேவைகளுக்குப் பயன்படுத்த முயன்று வருகிறார்கள். ஆனால் தகுந்த நேரத்தில் அந்த சக்திகள் நிலைமையை சாதுரியமாகக் iயாண்டு அவர்களது சதியை முறியடித்துவிட்டார்கள்."

என்று தங்களைத் தாங்கள் அம்பலமாக்கியுள்ளனர். இப்படி அரசு - புலி இரண்டையும் எதிர்த்து நிற்பவர்களை புலி மட்டுமல்ல அரசும் தான் கொச்சைப்படுத்தியும், அவதூறு புரிந்தும், அதை அழிக்கவும் முனைகின்றது. அந்த வகையில் அரசு தரப்பும் புலத்தில் புலிக்கு நிகராக களமிறங்கி இருக்கின்றது.இதை செல்வியின் அரசியல் வழியில் நின்று உறுதியாக முறியடிக்கும் தொடர்ச்சியான போராட்டத்தில் இதுவொரு அங்கம்தான்.

பி.இரயாகரன்

19.10.2011