மக்கள் போராடியதால் தான் நீதிமன்றம் தூக்கை நிறுத்தி வைக்கும் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது என்று கூறினால், இதே காரணத்தைக் கொண்டு இந்திய நாடாளுமன்றம் அண்ணா ஹசாரேயின் ஜோக்பாலலின் ஒரு பகுதியை ஏற்றதாக கூறலாம். இரண்டும் மக்கள் போராட்டத்தை திசைதிருப்பும் முடிவுகளும், தீர்ப்புகளுமாகத் தான் வழங்கப்பட்டது. இதை மக்களின் வெற்றி என்று கொண்டாடுவது, இதை முதல் வெற்றி என்று சொல்வது, மக்களை திசைதிருப்புவதாகும்.

 

 

1. ஆளும் வர்க்கங்களுக்குள் முரண்பாடு இருப்பதையும், அது ஒவ்வொரு தீவிர பிரச்சனையிலும் முரண்பாடாக முடிவெடுக்கின்றது என்பதையும் அடிப்படையாக கொண்டு அணுகாத கண்ணோட்டங்கள் மக்களை தவறாக வழிநடத்தும்.

2. ஆளும் வர்க்கத்தின் முடிவுகள், தீர்ப்புகள் எந்த வகையில் மக்களைச் சார்ந்ததாக (ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சார்ந்ததாக), அடுத்த கட்ட போராட்டத்துக்கு உதவுகின்றது என்பதை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளையும், தீர்ப்புகளையும் அணுகவேண்டும்.

வர்க்க அமைப்பில் ஒரு முடிவு, தீர்ப்பு இரண்டு தரப்பும் தத்தம் நலனுக்கு ஏற்ற வகையில் அல்லது எதிரான வகையில் இதைக் காண்கின்றது. இந்த அடிப்படையில் இதை அணுக வேண்டும்.

இந்த வகையில் தூக்குதண்டனைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதி திசைதிருப்பியதன் மூலம், போராட்டத்தை உடைத்திருக்கின்றது. இந்த உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லாது, ஆளும் வர்க்கத்தின் நோக்கத்தை மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக காட்டுவது சந்தர்ப்பவாத சீர்திருத்தல்வாத அரசியலாகும்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் மீதான தூக்குத்தண்டனையை எதிர்த்த போராட்டங்களில் மக்கள் சார்ந்த கண்ணோட்டம்

1. அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதும், அவர்களை அந்தக் குற்றத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதும்

2. ராஜீவ் கொலை, இலங்கை மீதான இந்தியா ஆக்கிரமிப்பும், அங்கு மக்களை ஒடுக்கிய குற்றத்தின் பின்னணியிலும் தான் நடந்தது என்பதால், இந்தப் பொதுக் குற்றத்தில் இருந்து விடுவிக்கவேண்டும் என்பதும்

3. இந்தியாவின் பிராந்திய நலன் சார்ந்து உருவாக்கிய கூலிக்குழுவினால் ராஜீவ் படுகொலை நடத்தப்பட்டதால், அதற்கான பொறுப்பும் குற்றமும் இந்திய அரசைச் சாரும்.

இந்த வகையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மீதான குற்றத்தில் இருந்து அவர்களை விடுவிக்கவேண்டும்; என்பதுதான் மக்களின் கோரிக்கை. இதன் அடிப்படையில் எழுந்த இந்தப் போராட்டம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மறுத்து, அதைக் கேள்விக்குள்ளாகியது. ஆளும் வர்க்கம் இதில் இருந்து வெளியேற வழங்கிய தீர்ப்பு, மக்களின் கோரிக்கை சார்ந்ததல்ல. ஆளும் வர்க்கத்தின் தீர்ப்பை நீர்த்துப் போகாத வண்ணம் பாதுகாத்து இடம்மாற்றியிருக்கின்றது.

மக்களின் கோரிக்கையை முறியடிக்கவும், மக்கள் போராட்டத்தை பிளக்கவும், ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதி இந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை முன்னிறுத்தி தீர்வு கண்டது. இந்த தூக்கை நிறுத்து என்ற கோசத்தைக் கொண்டு, ஆயுள் தண்டனையாக்கி மீண்டும் தொடர்ந்து தண்டிக்கும் சதியில் வெற்றிபெற்று இருக்கின்றது. இதை அம்பலப்படுத்தாது "மூவர் தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டம் வென்றது!" என்று கூறுகின்ற அரசியலை, மார்க்சியத்தின் பெயரில் முன்தள்ளுகின்றனர்.

சட்டசபைத் தீர்மானம், தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக்க கோருகின்றது. நீதிமன்றத்தின் தலையீடு இந்தத் தூக்குதண்டனைக்கு பின்னாலான நடைமுறைகள் பற்றிய கேள்விகள் ஊடாக இதை இடைநிறுத்துகின்;றது. இது நாளை ஆயுள் தண்டனை தீர்ப்பாக எதிர்பார்க்கலாம் அல்லது காலவரையற்ற வகையில் தூக்குத் தண்டனையை ஒத்திப்போட்டு தொடர்ந்து தண்டிப்பார்கள். இங்கு நீதிமன்றத்தின் தலையீடு, தீர்ப்பை எடுத்தால், இது ஏற்கனவே இந்தியச் சட்ட நடைமுறைகளின் எல்லைக்குள் நடந்திருக்கின்றது. இங்கு இந்த போராட்டங்கள் இன்றி பொதுச் சட்ட நடைமுறையில் இந்த தீர்ப்பு வந்திருக்கின்ற வாய்ப்பு இருப்பதை இங்கு நிராகரிக்க முடியாது. இப்படியிருக்க இதை எப்படி "மக்கள் போராட்டம் வென்றது!" என்று மட்டும் கூற முடியும்?

"இறுதி வெற்றியல்ல என்றாலும் முக்கியமான வெற்றிதான். ஏனெனில் நீதிமன்றங்களும், நீதிபதிகளும் எப்போதும் சட்டப்படி மட்டும் தீர்ப்புகள் வழங்குவதில்லை. சட்டங்களுக்கான விளக்கங்களே ஆளும் வர்க்கங்களுக்கேற்ப மாற்றி மாற்றி அளிக்கப்படும். இந்த வழக்கில் கூட இது ஒரு முக்கியமான அரசியல் ரீதியான வழக்கு, இந்திய இறையாண்மைக்கு சவால் விட்டிருக்கும் வழக்கு என்று கூட சொல்லி இந்த விசாரணை மனுக்களை நிராகரித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் அதுவும் சட்டப்படி சரிதான் என்று நீதிபதிகள் பொழிப்புரை அளித்து நியாயப்படுத்தலாம். .. இப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏன் இத்தகைய தீர்ப்பை வழங்க வேண்டும்? இதற்கு ஒரே நியாயமான பதில் தமிழக மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்கள்தான். அந்தப் போராட்டங்கள் உருவாக்கிய அரசியல் மேலாண்மைதான் இத்தகைய இடைக்கால உத்திரவு வந்ததற்கு காரணம் என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ளலாம்." என்கின்றனர். ஆக இங்கு இந்த தீர்ப்பு இந்திய இறையாண்மைக்கு எதிரான தீர்ப்பா? இல்லை. இந்திய இறையாண்மையை பாதுகாக்கும் தீர்ப்பு. ஆளும் வர்க்கத்தின் முரண்பட்ட அணுகுமுறைக்கு உட்பட்ட தீர்ப்பு. "இந்திய இறையாண்மைக்கு சவால் விட்டிருக்கும் வழக்கு" அல்ல. இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட வழக்கும், தீர்ப்பும். "விசாரணை மனுக்களை நிராகரித்திருக்கலாம்" என்றவாதம், சட்டத்தைக் கடந்தது ஏற்றதல்ல. சட்டத்துக்கு உட்பட்டது இந்த வழக்கு. அதுவும் தூக்கு பின்னான நடைமுறை மீதானதே இந்த வழக்கு. சோ போன்ற எண்ணம் கொண்ட நீதிபதிகள் அல்லாத நீதிபதிகள் ஆளும் வர்க்கத்தில் இருப்பதை நிராகரித்துக்கொண்டு இதை இப்படி விளக்க முடியாது. இதை சந்தர்ப்பவாத அரசியல் மட்டும்தான் செய்யும்.

இந்த வகையில் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதி (பார்ப்பனியத்தின் தீவிர பிரிவு முன்னின்று கோரும்) தூக்கில் போடு என்ற விருப்பத்தை, நீதிமன்றம் அங்கீகரிக்காது போனதற்கு மக்கள் போராட்டம் தான் காரணம் என்ற கருதுகோள் சரியானதா!? இங்கு இரண்டு பிரதான விடையங்களை தவறாக இந்த கருதுகோளுடன் அணுகுகின்றது.

1. நீதிமன்றத்தில் வைத்த வாதம் என்ன? தூக்குதண்டனைத் தீர்ப்பு வந்ததன் பின்னான அதன் பொது நடைமுறைகள் பற்றிய சட்டச் சிக்கல் மீதானதே இந்தத் தீர்ப்பு

2. ஆளும் வர்க்கத்தில் முரண்பட்ட, இதன் அரசியல் அமைப்பை பாதுகாக்கின்ற ஒடுக்குமுறை முதல் சீர்திருத்தம் வரையான வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டது என்பதை இது அரசியல் ரீதியாக பார்க்க மறுக்கின்றது.

ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவைக் காட்டி "மக்கள் போராட்டம் வென்றது!" என்று வாதிடும் போது, ஆளும் வர்க்கத்தின் மிதவாதப் பிரிவு இதை எப்படி அணுகுகின்றது என்பதை மூடிமறைக்கின்ற சந்தர்ப்பவாத அரசியலை சார்ந்து சீர்திருத்தத்தை முன் நிறுத்துகின்றது.

இந்த இரண்டு உண்மைகளையும் கடந்து, மக்கள் போராட்டம் தான் இந்த தீர்ப்பைத் தந்ததாகக் கொண்டால், இது எப்படி மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்? இது ஆளும் வர்க்கத்துக்குக் கிடைத்த வெற்றி. இந்த அரசியல் அமைப்பு சட்டத்தை கேள்வியின்றி, தண்டனையை தற்காலிமாக இடைநிறுத்தி மீண்டும் தூக்கு அல்லது ஆயுள்தண்டனை என்ற தீர்ப்பை தான் மீண்டும் வழங்கும். இதை "மக்கள் போராட்டத்துக்கு" வெற்றி என்பது, மிதவாத ஆளும்வர்க்கத்தின் வெற்றியை மீளக் கொண்டாடுவது தான்.

"மக்கள் போராட்டம் வென்றது!" என்றவர்கள் தடுமாறியபடி "இறுதி வெற்றி கிடைக்கும் வரை போர்க்குணமிக்க போராட்டங்களை தொடருவோம்." என்பது, இதில் இறுதி வெற்றி எது? தூக்குத்தண்டனையில் இருந்து மட்டும் விடுவிப்பதா!? செய்யாத குற்றத்தில் இருந்து விடுவிப்பதா!?

தூக்குத்தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக விடுவிப்பது ஆளும் வர்க்க ஒரு பிரிவின் தீர்வுதான். செய்யாத குற்றத்தில் இருந்து அவர்களை விடுவிப்பது, அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து விடுவிப்பது. இந்த வகையில் பொதுவாக தூக்குதண்டனையை காலவரையற்ற வகையில் நிறுத்துவது, அல்லது ஆயுள்தண்டனையாக மாற்றுவதுக்குள், மக்களை வழிநடத்துவது சந்தர்ப்பவாத அரசியல் சார்ந்து வெளிப்படும் சீர்திருத்தல்வாதமாகும். இதை வெற்றி என்பதும், ஆளும் வர்க்கத்தின் நோக்கை மீள வழிமொழிதல் தான்.

 

பி.இரயாகரன்

31.08.2011