பேரினவாத பேயோ யுத்தத்தை வெல்லும், உச்சக் கொப்பளிப்பில் கொக்கரிக்கின்றது. தமிழ் மக்களை நாயிலும் கீழாக தாழ்த்தி முடிந்தளவுக்கு சிறுமைப்படுத்துகின்றனர். பேரினவாதத்தை ஊர்ந்து நக்கும் கூட்டம், தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் கிடைத்து வருவதாக ஊளையிட்டுக் கூறுகின்றனர்.
இந்த புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்பது, புலியல்லாத பிரதேசத்தில் புலிக்கு நிகரான பாசிசம். எங்கும், எதற்கும் படுகொலை, கடத்தல், காணாமல் போதல், கைது, புலியென முத்திரை குத்தல், இழிவுபடுத்தல் என அனைத்தும், இந்த ஜனநாயகத்தில் அரங்கேறுகின்றது. இதுவே ஜனநாயகமாக, இந்த பாசிசம் அரசியல் அரங்கில் நுழைந்துள்ளது.
முன்பு புலிகளின் பகுதியில் இருந்து தப்பிப் பிழைத்து வாழ முனைந்தவர்கள், புலியல்லாத பிரதேசத்தில் குறைந்தபட்ச சுதந்திரத்துடன் வாழமுனைந்தனர். ஆனால் இன்று, புலியல்லாத பிரதேசத்தில் சுதந்திரமாக வாழமுடியாது என்ற நிலை. அரசின் கூலிக் கும்பலாக எடுபிடிகளாக மட்டும் தான், யாரும் வாழமுடியும் என்ற நிலை. அரசுக்கு கைக்கூலியாக இருந்தல் தான், சுதந்திரம் என்றளவுக்கு நிலைமை மாறிவிட்டது. எதையும் சுதந்திரமாக பேசவும், சொல்லவும், செய்யவும் முடியாதளவுக்கு, பாசிசம் மனித சுதந்திரத்தை வேட்டையாடுகின்றது. இதையே தமிழ் மக்களின் ஜனநாயகம் என்கின்றனர். இதைத் தான் தமிழ் மக்களின் தீர்வு என்கின்றனர்.
தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, இரண்டு பாசிசங்கள் தமிழ் மக்களையே விலங்கிட்டுள்ளது. கண்காணிப்பும், படுகொலை அரசியல் வெறியாட்டமும், சுயமான மானமுள்ள மனிதர்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை. அச்சத்தையும் பீதியையும் மனித உணர்வாக விதைத்தபடி, சுயஆற்றல் நலமடிக்கப்பட்டுள்ளது.
சமூகத்துடன் எந்த தொடர்பையும் சுயமான சுதந்திரமான மனிதர்கள் கொண்டு இருக்கக் கூடாது, என்பதே, இந்த பாசிட்டுகள் சொல்லுகின்ற தெளிவான செய்தி. இதுமட்டுமல்ல சுயநலத்தை மூலமாகக் கொண்டு, இந்தப் பாசிசத்தை பயன்படுத்தி அற்ப உணர்வுகளையும் கூட தீர்த்துக்கொள்ளும் வக்கிரமாக இது அரங்கேறுகின்றது.
கடத்தல், காணாமல் போதல், கைது, இனம் தெரியாத படுகொலைகள் சித்திரவதையின் பின்னால் பல நோக்கம் உண்டு. தனிப்பட்ட பழிவாங்கல்கள், பணத்திற்கான கைதுகள், அற்ப பாலிய உணர்வை தீர்க்க கைதுகள், தமது குற்றங்களை மூடிமறைக்க கைதுகள் என்று, வரைமுறையற்ற இவை பலவடிவில் தொடருகின்றது. இது புலியொழிப்பின் பெயரில், சிலரின் சர்வாதிகார பாசிச ஆட்சியாக ஏகாதிபத்திய சதியாக அரங்கேறுகின்றது.
இதை ஜனநாயகம் என்று காவித் திரிகின்ற புலியெதிர்ப்பு உண்ணிகள். ஜனநாயகத்தின் பெயரில் ஊர்ந்து நக்கி மக்களையே தின்ன முனைகின்றது. பேரினவாத கூலிப்படைகளாக வளர்க்கப்பட்ட இந்த கூட்டம், பேரினவாத பாசிச பயங்கரவாதத்தை ஜனநாயகமென்று கூறி அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை எங்கும் சுயமரியாதையுள்ள, சிந்தனைச் சுதந்திரம் கொண்ட மனிதர்கள் யாரும் சுயமாக வாழ முடியாது என்பது தான் இன்றைய பொதுவான நிலை.
இரத்தம் குடிக்கும் புலியெதிர்ப்பு உண்ணிகள்
இலங்கையில் நடக்கும் புலியல்லாத ஒவ்வொரு கொலையிலும், புலியெதிர்ப்பு அரசியலுக்கு பங்கு உள்ளது. பேரினவாத பாசிச வெறியாட்டத்தில், அங்குமிங்குமாக புலி ஒழிப்பின் பெயரில் பங்களிக்கின்றனர். பேரினவாதத்தின் ஒவ்வொரு செயலையும், புலியெழிப்பாக காட்டி நக்கும் கூட்டம் தான் இந்தக் கூட்டம்.
அதன் அரசியல் மக்களை வென்று எடுத்ததல்ல. மக்களை கொன்று போடும் பேரினவாத சூழ்ச்சிக்கு துணையாக இருத்தல் தான். தமிழ் மக்களின் ஜனநாயகத்தின் பெயரில் இலண்டனில் இருந்து சென்றாலும் சரி, கிழக்கில் ஜனநாயகத்தின் பெயரில் நக்கினாலும் சரி, பேரினவாத சூழ்ச்சிக்கு கம்பளம் விரிக்கின்ற எட்டப்பர்கள் தான் இவர்கள். இவர்கள் தமது எட்டப்பத்தனத்தை மூடிமறைக்க, புலிப் பாசிசத்தை துணைக்கு வைத்துக் கொண்டுள்ளனர். இதுவே தமிழ் மக்களுக்கு எதிரான சதிக் கூத்து. புலிப் பாசிசத்தை தமது கமக்கட்டில் வைத்துக்கொண்டு, தம்மை தாம் முற்போக்குவாதிகள் என்று காட்டிக்கொள்ளும் வேஷதாரிகள். இவர்களோ மனித விரோதத்தையே அரசியலாக கொண்ட துரோகிகள் ஆவர்.
பேரினவாத பாசிச பயங்கரவாத கொலைகளுக்கு முண்டு கொடுக்கும் இந்த புலியெதிர்ப்புக் கூட்டம், படுபிற்போக்கான வலதுசாரிய பாசிச சிந்தனையையும் செயலையும் அடிப்படையாக கொண்ட கும்பல். இதற்கு வெளியில் மாற்று அரசியல், ஏன் சுயம் கூடக் கிடையாது.
கடந்த காலத்தில் ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனங்கள் புலிகள் பற்றி வெளியிட்ட குற்றச்சாட்டுகளை எல்லாம் முன்னிலைப்படுத்தி புலியொழிப்பு பேசியவர்கள். இன்று அரசு மீதான அவர்களின் குற்றச்சாட்டுகளை, 'ஏகாதிபத்திய சதி" என்று கூறுகின்ற அற்பத்தனத்தை செய்கின்றனர். பச்சோந்தித்தனத்தை ஆன்மாவாக கொண்ட பிழைப்புவாத நக்குத்தனம்.
புலியெதிர்ப்பு, புலியொழிப்பையும் இப்படியும் முக்கி முனங்குகின்றனர். காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப, ஏகாதிபத்தியம் முதல் ஜே.வி.பி. வரை ஆதரித்தும் எதிர்த்தும் கயிறு திரிக்கின்ற முடிச்சு மாத்திப் பேர்வழிகள். யாரெல்லாம் புலியை ஒழிக்க முனைகின்றனரோ, அவர்கள் ஜனநாயகவாதிகள் என்பதே, காலத்துக்காலம் இவர்களின் புலியொழிப்பு சித்தாந்தமாகும்.
இந்த கூட்டத்துக்கு ஏற்ற பேரினவாத சர்வாதிகார கொடுங்கோலர்கள் தான், இன்று இலங்கையில் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். இதுவோ மிக சதித் தன்மை கொண்டது. தனக்கு எதிரான அனைத்தையும், புலி முத்திரை குத்தி அழித்தொழிக்க சங்கற்பம் கொண்டுள்ளது. எதையும் எப்படியும் முத்திரை குத்தவும், நியாயவாதம் பேசவும், தர்க்கம் செய்யவும் கூடிய, பாசிச சிந்தனையையும் ஆற்றலையும் பெற்றுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத சதி தான், கிழக்கின் தேர்தல்
மாபெரும் ஜனநாயக மோசடி. சிங்கள பேரினவாதத்தை நிறுவ, தமிழ் இனத்தை அழிக்க, நடத்துகின்ற திருகுதாளங்கள் இவை. தனது கூலிபடைகளை கொண்டு, ஜனநாயக பாசிசக் கூத்துகள்.
இராணுவ பாசிச சர்வாதிகாரத்தை நிறுவி, யாரும் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூனியத்தை உருவாக்கி, கூலிப்படைகளை கொண்டு தேர்தலை நடத்தி, அவர்களே ஜனநாயக காவலராகின்றனர்.
கூலிக்கு மாரடிக்கும் கொலைகாரக் கும்பலாக, ஆள் காட்டிகளாக திரிந்த அராஜக கும்பலுக்கு, சட்ட அந்தஸ்து கொடுத்து விடுகினற கூத்துத் தான் இந்த ஜனநாயகம். இலங்கை அரசின் கூலிப்படைகள், தேர்தல் என்ற மோசடி மூலம் ஜனநாயக காவலராக்கி வேடிக்கை, இப்படி இலங்கையில் அரங்கேறியது.
இந்த மண்ணில் சுதந்திரமான எண்ணம் கொண்ட, சுதந்திரமான செயலைக் கொண்ட எந்த மனிதனும் உயிருடன் நடமாட முடியாது. அரசை எதிர்க்கின்ற யாரும், இந்த ஜனநாயக பூமியில் வாழமுடியாது. இது தான் இவர்கள் இங்கு படைத்துள்ள ஜனநாயகம்.
இந்த பாசிச ஜனநாயகம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் யார்? ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள், மக்களை கொள்ளையடித்து வாழ்பவர்கள், கற்பழிப்புகள் செய்தவர்கள், அடிதடிப் பேர் வழிகள், கட்டைப் பஞ்சாயத்து செய்பவர்கள், என்று சமூகத்துக்கு எதிரான இழிவான செயல்களைச் செய்பவர்கள் அல்லது அதற்கு துணையாக நின்றவர்கள் இவர்கள். இதற்குள் துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்தி தேர்தலில் நிறுத்தப்பட்ட அப்பாவிகள் மறுபுறம். இப்படி பாசிசம் பலவழியில் செழித்து நிற்கின்றது.
ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி இது. உணர்வு ரீதியாக, சித்தாந்த ரீதியாக, கூலிப்படை அரசியல். ஜனநாயக வித்தைகள் மூலம், அரங்கேற்றுகின்ற அரசியல் சதிகளும் திருகு தாளங்களும் மட்டுமே அரங்கேறின. வென்றவர்கள் முன்னாள் பாசிசப் புலி, இன்னாள் பாசிசக் கூலிப்டை. அரச புலனாய்வுப் பிரிவின், தொங்கு சதைகள். ஆள்காட்டிகள் மூலம், முழு சமூக ஜனநாயக கூறுகளையும் அழிதொழித்தபடி, ஜனநாயகத்தை பாதுகாப்பதாக கூறுவதுதான், இந்த பாசிச மோசடி.
எஞ்சி இருக்கின்ற ஜனநாயகத்தை சிதைக்க, அதன் கூறுகளை அழித்தொழிக்க, தேர்தல் மோசடிகள். இது தமிழ் மக்களின் பெயரில், பேரினவாதிகளால் அரங்கேற்றப்படுகின்றது. தமிழ் மக்கள் இந்த தேர்தலுக்காக ஏங்கி நிற்பதாக காட்டுகின்ற மோசடி தான், கூலிக்கு மாரடிக்கும் கும்பலின் பிழைப்புவாத அரசியல்.
மக்களின் வாயைப் பூட்டி விட்டு, இவர்கள் தாம் நடத்துகின்ற கூத்துத் தான் இந்த தேர்தல்கள். புலி எதைச் செய்ததோ அதையே இவர்கள் அரசின் கூலிப்படையாக செய்தபடி, அதை வெட்கமானமின்றி புலியின் பெயரில் ஜனநாயகம் என்கின்றனர்.
இந்த அரசு இன்று செய்யாததையா அன்று புலிகள் செய்துவிட்டனர். எத்தனை படுகொலைகள், எத்தனை கடத்தல்கள், காணாமல் போன நிகழ்ச்சிகள். அனைத்தும் இவர்களுக்கு தெரியும். இவர்களின் துணையும் ஆதரவுமின்றி அவை நடக்கவில்லை. ஆனால் எதுவும் நடவாவது போல் நடந்து கொள்கின்ற பக்காத் திருட்டு அரசியல். அதையே இவர்கள் ஜனநாயகம் என்கின்றனர்.
சில ஏகாதிபத்திய எதிர்வினைகள் எதனால்!
சர்வதேச ரீதியாக ஏகாதிபத்திய முரண்பாடு முற்றிவருவதன் விளைவு, இலங்கையிலும் எதிரொலிக்கின்றது. இலங்கை அரசின் யுத்த முனைப்பை உருவாக்கி, இந்த போட்டி ஏகாதிபத்திய ஊடுருவல்கள் நடக்கின்றது.
இலங்கை அரசுக்கு எதிரான சில ஏகாதிபத்திய எதிர்வினைகள், இலங்கை சந்தை தொடர்பானதே. அமெரிக்கா – ஐரோப்பிய ஏகாதிபத்தியுடன் முரண்படுகின்ற ஏகாதிபத்தியங்கள், அரசின் யுத்தமுனைப்பை பயன்படுத்தி இலங்கையில் ஊடுருவத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா – ஐரோப்பிய நாடுகள் தமது சுரண்டல் கட்டமைப்பை பாதுகாக்க, தற்காப்பு நிலையெடுத்து, அரசின் மனித உரிமை மீறல் பற்றி ஊளையிடுகின்றது.
மனித உரிமை மீறல் பற்றிய இலங்கை விவாதம், ஏகாதிபத்திய முரண்பாடுகளில் இருந்து வெளிவருகின்றது. இது யுத்தத்துக்கு ஆதரவாக, ஒருபுறம் யுத்த வளங்களை வழங்க, மறுபக்கம் யுத்த வெளிப்பாடான மனிதவுரிமை மீறல்களைப் பற்றி மற்றைய ஏகாதிபத்தியங்கள் பேசுகின்ற நிலையை உருவாகியுள்ளது.
புலிகளின் பாசிச பயங்கரவாத நிலையால், இதில் தடுமாற்றங்களும் உண்டு. இரண்டையும் செய்ய முனைகின்ற தன்மை வெளிப்படுகின்றது.
ஏகாதிபத்தியங்கள் விரும்பியவாறு, நிலைமையை பரஸ்பரம் ஆட்டுவிக்கின்றது. யுத்த முனைப்பை முன்தள்ளி, அதை கொண்டு மற்றய ஏகாதிபத்தியத்தை புறந்தள்ள முனைவதும் போட்டி ஏகாதிபத்தியங்கள் தான்.
இலங்கை யுத்த செய்யும் சுய ஆற்றலும், வளமுமற்றது. ஏகாதிபத்திய நலனுக்கு ஏற்ற யுத்த சர்வாதிகாரர்களை உருவாக்கியுள்ளது. அவர்களின் குறுகிய குடும்ப நலனை முன்னிறுத்தி, யுத்த வழி ஊழல் இலஞ்சம் மூலம் முன்னேற வழிகாட்டி, யுத்தத்தை மற்றைய ஏகாதிபத்த்pயத்துக்கு எதிராக திணித்துள்ளது.
இப்படி இலங்கையில் இரண்டு யுத்தம் நடக்கின்றது.
1. புலி ஒழிப்பு யுத்தம்
2. அமெரிக்கா – ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மற்றைய ஏகாதிபத்திய யுத்தம்.
ஒரு சூக்குமமான, வெளித் தெரியாத நிழல் யுத்தம் பல முகத்துடன் அரங்கேறுகின்றது. இந்தியாவின் அதிகளவிலான தலையீடும், சீனா, ரூசியா, ஈரான் போன்ற நாடுகளின் தலையீடும், ஏகாதிபத்திய முரண்பாடுகள் விளைவால் அதிகரிக்கின்றது. யப்பான் அங்குமிங்கும் நெளிகின்றது.
மொத்தத்தில் இதன் விளைவால் யுத்த வளம் கிடைப்பதுடன், யுத்தத்தை பயன்படுத்தி வாழ்கின்ற கூட்டத்தின் பாசிச அரசியல் மூர்க்கமாகி, யுத்த வெறியுடன் கொட்டமடித்து நிற்கின்றது.
இப்படி ஏகாதிபத்திய முரண்பாடுகள், இலங்கையின் பொருளாதாரம் மீதான ஆதிக்கப் போட்டியாக, தமது இராணுவ செல்வாக்குக்குட்பட்ட மண்டலமாக வைத்திருக்கும் போட்டியாக மாறி நிற்கின்றது.
புலிகள் தாமே உருவாக்கிய சொந்த அழிவில் துரிதமாகின்றனர்
சர்வதேசத்தில் மாறிவரும் போக்குகளை பயன்படுத்தும் நிலையில் கூட, புலிகள் இல்லை. அரசியலை, போராட்டத்தை இராணுவவாதத்தில் மூழ்கடித்து சிதைந்து போனார்கள் புலிகள். தமது பாசிச வெறியாட்டம் மூலம் பயங்கரவாத இயக்கமாக, தமக்கு தாமே உலக அங்கீகாரம் பெற்று நிற்கின்றனர். இதனால் ஏகாதிபத்திய முரண்பாடுகள், புலிக்கு சாதகமாக கூடிய எந்த வழியும் கிடையாது. மாறாக அரசுக்கு சார்பாகியுள்ளது. ஒருபுறம் யுத்தம் செய்ய புலியை தடைசெய்யாத ஏகாதிபத்திய ஆதரவையும், மறுபக்கம் புலியை தடைசெய்த ஏகாதிபத்தியங்களையும் பேரினவாதம் பயன்படுத்துகின்றது. புலிப்பாசிசம் என்ற ஒரு கல்லில், இரண்டு மாங்காய் என்ற உத்தி இங்கு பேரினவாதிகளால் நிகழ்த்தப்படுகின்றது.
புலிகள் ஏகாதிபத்திய முரண்பாட்டை பயன்படுத்தி இனியும் மீள முடியாது.
1. புலிகள் அதற்கான சர்வதேசக் கூறுகளை முன் கூட்டியே அழித்துவிட்டனர்.
2. யுத்தத்தை முனைப்புடன் நடத்த முடியாத வகையில், மக்கள் மத்தியில் முற்றாக அம்பலப்பட்டு, மக்களிடம் தோற்றுக்கொண்டு இருக்கின்றனர். இது பேரினவாதிகளிடமான தோல்வியாக மாறிவிட்டது.
தமிழ் மக்களின் கதி என்பது மோட்சமல்ல, நரகம் தான். எந்த மீட்சிக்கும் இடமில்லை. மொத்தத்தில் இலங்கை ஏகாதிபத்திய சூறையாடலுக்குள் சிதைக்கப்பட்டு அழிகின்றது. மக்களின் மீட்சிக்கான பாதைகள், மேலும் மேலும் ஆழமாக சிதைந்து சுருங்கி வருகின்றது என்பதே உண்மை.
பி.இரயாகரன்
16.03.2008