05222022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

முரண்பாடான தனது சர்வதேச சக்திகளுக்கு எதிரான அரசியல் சூதாட்டம்தான், அவசரகாலச் சட்ட நீக்கம்

தனக்கு எதிரான உலக முரண்பாட்டுக்கு தீர்வுகாண முனையும் அரசு, அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றது. மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கத் தவறுகின்ற ஒடுக்குமுறைகளை வைத்துக்கொண்டு, மக்களை ஒடுக்கியாள சர்வதேச முரண்பாடுகளைச் சார்ந்து தன்னை இராணுவமயப்படுத்துகின்றது இலங்கை அரசு. இதற்காக பிராந்திய மற்றும் ஏகாதிபத்திய முரண்பாட்டை, தனக்கு ஏற்ற அரசியல் சூதாட்டமாக்குகின்றது.

 

இதனால் உள்நாட்டில் பாரிய அரசியல் பிளவுகளை தொடர்ந்து உருவாக்கி வருகின்றது. உலக மற்றும் பிராந்திய ஆதிக்கப் போட்டியில் பலவீனமான தரப்பைச் சார்ந்து தனிமைப்படும் அரசு, உள்நாட்டில் கொடூரமாக நடப்பதன் மூலம் தான் தன்னை நிலைநிறுத்த முனைகின்றது. இதை மூடிமறைக்க, அரசு அவசரகாலச் சட்டத்தை நீக்குகின்றது. இப்படி உலக்கு நாடகமாடும் இந்த அரசு பயங்கரவாத சட்டத்தை நீக்கவில்லை. "பயங்கரவாதத்தை" ஓழித்ததாக கூறி அரசியல் செய்யும் அரசு, பயங்கரவாதச் சட்டத்தை நீக்கவில்லை. மாறாக அரச பயங்கரவாதத்தை மக்கள் மேல் தொடர்ந்து ஏவிவருகின்றது. நீக்கும் சட்டத்துக்கு பதில், புதிய சட்டங்களைக் கூடக் கொண்;டு வரவுள்ளது.

அவசரகாலச் சட்டம் இருந்தபோது, அந்த சட்டத்தைக் கூட இந்த அரசு மதித்து நடந்தது கிடையாது. இதனால் சட்டத்தை நீக்குவதால் எந்த மாற்றமும் வந்துவிடாது. இரண்டு வருடங்களுக்கு முன் கைதானவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் பற்றி எந்த விபரத்தையும் இதுவரை முன்வைக்காதவர்கள், தங்கள் சொந்த அவசரகாலச் சட்டத்தைக் கூட இந்த அரசு மதித்தது கிடையாது.

இதன் பின்னணியில் கைதானவர்கள் மற்றும் சரணடைந்தவர்களை தொடர்ந்து சித்திரவதை செய்வதுடன், அவர்களைப் படுகொலையும் செய்கின்றது இந்த அரசு. இதுதான் இதன் பின்னுள்ள வெளிப்படையான அரசியல் உண்மை.

அவசரகாலச்சட்டம் நிலவிய காலத்தில், இந்த சட்டத்துக்கு புறம்;பான ஆள்கடத்தல், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், படுகொலைகள் என்று ஆயிக்கணக்கானவர்களை இந்தச் சட்டத்துக்கு புறம்பாக வேட்டையாடியது இந்த அரசு. என்ன நடந்தது என்ற, எந்த நீதி விசாரணைக்கும் கூட இந்த நாட்டில் இடமில்லை. இப்படியிருக்க இந்தச் சட்டத்தை நீக்குவதன் மூலம், நாட்டில் தொடரும் அரச பயங்கரவாதம் தன் ஒடுக்குமுறையை இல்லாதாக்கிவிடாது.

இங்கு பயங்கரவாத சட்டத்தை நீக்குவதன் அரசியல் பின்னணி, பிராந்திய மற்றும் ஏகாதிபத்திய முரண்பாட்டில் சிக்கி தனிமைப்பட்டு வருவதில் இருந்து திசைதிருப்பவே இந்த சட்ட நீக்கமாகும். தனக்கு எதிரான பிராந்திய மற்றும் ஏகாதிபத்தியத்தை இதன் மூலம் திசைதிருப்ப முடியும் என்ற, அரசியல் சுத்துமாத்துடன் தான் இந்த கூத்துக் கூட இங்கு அரங்கேறுகின்றது.

இலங்கை மக்களையிட்டு எந்த அக்கறையும் இந்த அரசுக்கு கிடையாது. இந்த சட்டத்துக்கு பதில், இதையொத்த வேறுபட்ட சட்டங்களை வேறு வடிவில் கொண்டு வருவதை உறுதி செய்து கொண்டு தான், இந்தச் சட்டம் கூட நீக்கப்படுகின்றது. ஆக இங்கு இந்த சட்டச் சரத்துகள் வேறுவடிவில் அமுல்படுத்தப்பட உள்ளது. ஆகவே இங்கு சட்ட நீக்கம் என்பது, மக்கள் சார்ந்ததல்ல என்பது வெளிப்படையாகின்றது.

இன்று வரை சட்டத்துக்கு புறம்பாக தடுத்து வைத்திருப்போர் விபரத்தை வெளியிடாது கொன்று வரும் இந்த அரசு, சட்டத்தை நீக்குவதால் அதைக் கூட நிறுத்திவிடப் போவதில்லை. குடும்ப சர்வாதிகாரத்தை கொண்டு நாட்டை பாசிசமயமாக்கி வரும் அரசு, இராணுவ ஆட்சியை படிப்படியாக அனைத்துத் துறையிலும் இன்று திணித்து வருகின்றது.

போலி பாராளுமன்றத்தின் "ஜனநாயகத்தின்" துணை கொண்டு, மக்களை ஓடுக்கி ஆளும் அனைத்துவிதமான நயவஞ்சகத்தையும், திட்மிட்டே இந்த அரசு கைக்கொள்கின்றது.

பி.இரயாகரன்

27.08.2011

 


பி.இரயாகரன் - சமர்