08142022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

வடக்கில் பாலியல்ரீதியான நுகர்வுவெறி சமூக சீரழிவாகின்றது

தேவை கடந்த ஆடம்பரமும், வரைமுறையற்ற நுகர்வுவெறியும பாலியலிலும் (செக்ஸ்) அவற்றைக் கோருகின்றது. நுகர்வைக் கடந்த வாழ்க்கை நெறிமுறையை, சமூகம் இழந்துவிட்டது. பெருந்தொகையான பாடசாலை மாணவிகளின் கர்ப்பங்கள் கண்டு அதிர்ந்து போகும் சமூகப் பரிமாணங்கள், இதைக் குறுக்கிக் காட்டுகின்றனர். தேவை கடந்த மிதமிஞ்சிய அனைத்து நுகர்வின் பொதுவெளிப்பாட்டில் உள்ளடங்கித் தான், அது பாலியல் நுகர்வாக வெளிப்படுகின்றது. உலகில் எங்குமில்லாத அளவில், வடிவில் அது வெளிப்படுகின்றது.

 

இந்த நுகர்வு எப்படி நடக்கின்றது? இதற்கான பணம் எங்கிருந்து எப்படி கிடைக்கின்றது?. இதுவொரு பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கூட உருவாக்குகின்றது. புலம்பெயர் தமிழன் அனுப்பிய பணத்தில் பொருளை ஆடம்பரமாக வரைமுறையின்றி நுகர்ந்தவன் தான், உடலையும் நுகருகின்றான். உழையாது வாழவும் நுகரவும் உன் பணம் உதவியதுபோல் தான், பாலியல் சீரழிவுக்கும் உதவுகின்றது. உழையாது வாழும் சமூகத்தை உருவாக்கியிருக்கின்றது. உன் பணமின்றி வாழ முடியாத, ஊனமுள்ள சோம்பேறிச் சமூகத்தை உருவாக்கியுள்ளது. உன் பணம் தான், உன்னிடமே உன் உறவினர் பணம் பிடுங்கும் இயந்திரமான உறவை உருவாக்கியுள்ளது. பணம் தான் உறவு. இதைக் கடந்து உறவுக்கு இடமில்லாமல் போய் இருக்கின்றது. இதற்காகவா நீ பணம் கொடுத்தாய். உன் சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள் உன் பணத்தில் தேவை கடந்து நுகரும் வாழ்வு அவர்களைச் சீரழித்திருக்கின்றது. இதுதான் பாலியல் வக்கிரம் பிடித்து வாழ்வதற்கு ஏற்ற பண்பாட்டை உருவாக்கியிருக்கின்றது. இதற்காகவா நீ ஓய்வின்றி மாடாய் உழைத்தாய்? தின்னாமல் குடியாமல், உழைத்து உழைத்து அனுப்பியது எதற்காக? நீ அனுப்பிய பணத்துக்கு என்ன நடத்தது, என்ன நடக்கின்றது என்று எப்போதாவது நீ கேட்டது உண்டா?

புலம்பெயர்ந்தோர் பணம் போராட்டத்தை அழிக்க உதவியது போல் தான், சமூக சீரழிவுக்கும் புலம்பெயர் பணம் உதவுகின்றது. புலம்பெயர்ந்தவர்கள் தன் குடும்ப உறுப்பினர்களின் வாழ்வை மேம்படுத்த என எண்ணி கொடுக்கும் பணம், பாலியல் சீரழிவுக்கும் உதவுகின்றது. புலம்பெயர்ந்தவன் தின்னாமல் குடியாமல், இரவு பகலாக ஓய்வின்றி உழைத்துக் கொடுக்கும் பணம், மண்ணில் உழையாது வாழ்கின்ற வக்கிரத்தை உருவாக்குகின்றது. வரைமுறையற்ற நுகர்வும், ஆடம்பரமும் கூடிய வரைமுறையற்ற வாழ்வு, பாலியலில் நுகர்வுவெறியாக மாறுகின்றது.

இந்தப் பாலியல் நுகர்வின் விளைவால் 2011 மே வரையான முதல் 5 மாதத்தில் யாழ் குடா நாட்டில் 211 பாடசாலை மாணவிகள் கர்ப்பம் தரித்திருந்ததை யாழ் மருத்துவ பிரிவு அறிவித்துள்ளது. இதைவிட திருமணமாகாத பெண்களின் கர்ப்பங்கள் 69ம், சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்கள் 242யும் பதிவாகியுள்ளது. இந்த மருத்துவக் குறிப்பின் பிரதேசரீதியான விபரத்தை, கீழ் உள்ள இந்த அட்டவணையில் நீங்கள் விரிவாகப் பார்க்க முடியும்.

  

இது ஏன் ஏற்படுகின்றது? பேரினவாதம், உலகமயமாதல் காரணங்களை மட்டும் காரணம் காட்டி, எம்மை நாம் சரிசெய்து விடமுடியாது. இவை எம் தவறான வாழ்வியல் போக்கின் மேல் சவாரி செய்கின்றது. இதைக் காரணம் காட்டிக்கொண்டு, எம்மை நாம் தேற்றிக்கொள்ள முடியாது. வடக்கின் நுகர்வின் அளவுக்கு உலகில் எந்த பகுதியும் கிடையாது. பணம் அனுப்பும் நீயே, இதில் ஒரு பங்கைத் தன்னும் நுகர்ந்தது கிடையாது. இது பாலியலிலும் வெளிப்படுகின்றது.

இதில் இருந்து சமூகத்தை மீட்பது என்பது, உழைத்து வாழும் சமூகமாக வடக்கை வாழ அனுமதிக்க வேண்டும். உன் உறவுகளை இதற்குள் வாழக் கோர வேண்டும்;. உழையாது வாழும் வாழ்வுக்கு உதவுவதை நிறுத்து. உழைத்து வாழக் கோரு. தேவைக்கு தன் சொந்த உழைப்பில் இருந்து மட்டும் நுகரக் கோரு. அவர்கள் பாட்டில் அவர்களை உழைத்து வாழ விடு.

இதுவல்லாத உழைத்து வாழாத நுகர்வு, பண்பாட்டை அழிக்கின்றது. நுகர்வு சார்ந்த அராஜகப் பண்பாட்டை உருவாக்குகின்றது. எந்தப் பண்பாடும், கலாச்சாரமும் உழைப்புடன் பின்னிப் பிணைந்தது. உழைப்பில் இருந்து அன்னியமாகும் போது, பண்பாடும் கலாச்சாரமும் அன்னியமாகின்றது. இரவல் பணத்தில் நுகரும் கலாச்சாரம், சமூகக் கலாச்சாரத்தை இல்லாததாக்கி அதனிடத்தில் அராஜகத்தை உருவாக்குகின்றது. இதுதான் வரைமுறையற்ற பாலியல் நுகர்வை நாடி நிற்கின்றது.

இதற்கு அமைய நுகர்வுக்கு வந்துள்ள இன்ரநெற், கைத்தொலைபேசி … போன்ற தொடர்பாடல் மூலமான புதிய உலகம், வரைமுறையற்ற பாலியல் நுகர்வுக்குரிய திறந்த வெளியை நிர்வாணமாக்கி அகல திறந்துவிடுகின்றது. ஒரு புதிய தொழில் நுட்பம் ஏற்படுத்தும் சமூகத் தீமைகளை ஒட்டி சமூக விழிப்புணர்வுகள், மற்றைய நாடுகளில் அக்கம்பக்கமாக உருவாக்கிவிடும் இயங்கியல் போக்கு காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கையில் யாழ்குடாநாட்டில் இது கிடையாது. புதிய தொழில்நுட்பம் வீங்கி வெம்பிய வடிவில், புலம்பெயர் பணத்தின் துணையுடன், வேகமான நுகர்வு வெறியுடன் தான் அறிமுகமானது.

புதியதொழில் நுட்பத்தில் உள்ள தேவை சார்ந்த பயன்பாட்டு அம்சம் குறைந்த அளவே யாழ்குடா நாட்டின் சமூக அமைப்பில் காணப்படுகின்றது. தேவை சாராத நுகர்வு மூலமான சீரழிவு அம்சமே, இந்த புதிய தொழில் நுட்பத்தில் முதன்மை பெற்று வெளிப்படுகின்றது. இதுவும் வேகமான சீரழிவுக்கு வழிகாட்டுகின்றது.

உழைப்பைக் கைவிட்ட நுகர்வை மையமாகக் கொண்ட சமூகத்தின், பின்தங்கிய சமூக சூழல் இதற்கான விளைநிலமாகியது. புலிகள் சமூகம் சார்ந்த கூறுகளை கடந்த 30 வருடத்தில் அழித்த பின்னணியிலும், அரசு இதை தன் பங்குக்கு செய்ததன் மூலமும், சமூகம் தனது சமூகம் சார்ந்த உணர்வுகளை இழந்து கிடக்கின்றது. சமூகத்தை வழிகாட்டக் கூடிய சமூகப் பொறுப்பை, ஒட்டுமொத்த சமூகமும் இழந்துவிட்டது. உழைத்து நுகரும் வாழ்வை சமூகம் மறுதலிக்கின்றது.

யாழ் குடாவில் வாழும் உறவினர்கள் புலம்பெயர் தம் உறவினரிடம் பணத்தைப் பிடுங்கிவாழும் வாழ்வையே, தன் பண்பாட்டு அம்சமாக கொண்டு அணுகுகின்றனர். உறவுகள், கடமைகள் என்பதை, யாழ்குடா மக்கள் தாம் உழையாது வாழும் வாழ்வை அடிப்படையாக கொண்ட உறவாக சீரழிந்து கிடக்கின்றது.

 

இதன் பின்னணியில் வரைமுறையற்ற நுகர்வு, பாலியலிலும் அரங்கேறுகின்றது. வீட்டுக்கு வீடு பல மோட்டார் சைக்கிள், பல தொலைபேசிகள் … என்று தொடங்கும் தேவையற்ற நுகர்வுவெறிக் கண்ணோட்டம், பாலியலிலும் வரைமுறையற்ற நுகர்வை முன்தள்ளுகின்றது. எல்லாவற்றையும் வரைமுறையின்றி நுகர்ந்துவிட முனையும் வாழ்க்கை முறைதான், பாடசாலை கர்ப்பங்கள் மூலம் உலகுக்கு தன்னைப் பறைசாற்றி நிற்கின்றது.

 தம் உறவுக்கார பெண்கள் கர்ப்பமாக, தம் உறவுகார ஆண்கள் காரணமாக இருக்க, புலம்பெயர் உறவினர் தான் அனுப்பிய பணம் தான் உதவியது என்பதை உணர்வதில்லை. அங்கு பாலியலும் ஒரு நுகர்வுதான் என்பதை, உன் பணம் தான் வழிகாட்டியிருக்கின்றது. தன் உறவினர் உழைத்து வாழாத வாழ்வுக்கு பணம் கொடுப்பது, ஏன் எதற்கு என்று கேள்வி இன்றி கொடுப்பது, தான் அனுப்பிய பணத்துக்கு என்ன நடக்கின்றது என்று தெரியாது கொடுப்பது, எதை எப்படி ஏன் நுகருகின்றனர் என்று தெரியாது கொடுத்து வாழ்வது என்பது தான், அங்கு நடக்கும் சீரழிவுக்கு துணைபோவதாகும்.

 உங்கள் தங்கைகள், உங்கள் சகோதரர்கள், உங்கள் நெருங்கிய உறவினர் மூலம், பாடசாலையில் 211 கர்ப்பங்கள் அம்பலமாகியுள்ளது என்றால், இது பல மடங்காக இருக்கும் என்பதை நாம் அனுமானிக்க முடியும். சில ஆயிரம் பேரைக் கொண்ட இந்த பாலியல் வயதை எட்டிய யாழ்குடாநாட்டில், இந்தப் புள்ளிவிபரம் சமூக அராஜகத்தை எடுத்துக் காட்டுகின்றது. உழைத்து தன் தேவையை பூர்த்திசெய்யாத வரைமுறையற்ற நுகர்வுக் கலாச்சாரம் சமூகத்தை சீரழித்து அழிக்கத் தொடங்கியுள்ளது. இதன் மேல் பேரினவாதமும், உலகமயமாதலும் தன் பங்குக்கு செழித்து வாழ்கின்றது.

பி.இரயாகரன்

24.08.2011

 


பி.இரயாகரன் - சமர்