10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

எசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம்

ஈக்கள் மொய்க்கும் சின்னஞ் சிறுசுகளின்
வறண்டு வெடித்துப்போன உதடுகள்
தொலைக்காட்சி செய்திகட்காய் படமாக்கப்படுகிறது
மொய்க்கும் ஈக்களை எப்பொழுதாவது
இந்தக் குழந்தைகள் பசியில் விழுங்குமாவென
ஒளிப்பட பதிவாளர்கள்
விருது பெறுவதற்காய் காத்துக் கிடக்கிறார்கள்

 

வறண்டுபோன விழிகள்
கண்ணீர் விட முடியாது ஏழ்மையில்
கருகிப் போய்க் கிடக்கிறது
நேர்காணல்களை முழுமையாக ஒளிபரப்ப முடியாமல்
வருமான விளம்பரங்கள் காசு கறக்கிறது
எஞ்சிய நேரத்தில்
முபாரக் தண்டிக்கப்பட வேண்டியவராயும்
புஸ்சும் பிளேயரும்
போற்றப்பட வேண்டியவர்களாய் பாடம் புகட்டப்படுகிறது

அழுகி நாறும் முதலாளித்துவம்
குழந்தைகளை தெருவில் வீசி எறிந்திருக்கிறது
முச்சுவிடவும் இயக்கமற்று
முதுமைத் தோற்றத்தொடு சாகடிக்கிறது
இயற்கை வளங்களை வறுகியெடுத்த பின்பாய்
தாயிடம் பாலூட்ட மிஞ்சமென்ன  இருக்கிறது


ஒரு முறடு தண்ணிக்கு
பச்சிளம் குழந்தைகள் பரிதவிக்கின்ற போதும்
நீச்சல் தடாகங்களிலும் நிமிரும் கட்டிடங்களிலும்
பன்றிகள் குளித்துப் படுத்துறங்குகின்றன
ஒலிம்பிக் மைதானங்கள்
ஒவ்வொரு நாட்டிலும் புதிதாய்த் தான் பளிச்சிடுகிறது
வறுமையில் தவிக்கும் குழந்தைகட்கு
வயிறாற்ற  ஜநா அழுது வடிக்கிறது
எசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம்
படை நகர்த்தலுக்கும்
மகிந்தக் கொலையாளிகளின் பாதுகாப்புக்குமாய்
எதிரும் இணைவுமாய்
மக்கள் சக்திக்கு சவால் விடுகிறது

வீட்டோ அதிகாரம்
மக்கள் கரங்களிற்கு மாறும் யுகத்திற்கு….
குழந்தைகள் அவலம்
உழைக்கும் வர்க்கத்தை அழைத்துச் செல்லுக
மழலைகள் ஏழ்மையறியா
சிரிக்கும் உலகு என்று பிறக்கும் வாழ்வு சிறக்கும்….

கங்கா

09/08/2011


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்