09292023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

சிங்கள மக்களுடன் உரையாட முனையாத அரசியல் குறுகிய இனவாதமாகும்

தமிழ்மக்கள் தங்கள் நியாயமான உரிமைகளைப் பற்றி சிங்கள மக்களுடன் பேசாத வரை, அதன் நியாயத்தன்மையை சிங்கள மக்கள் உணரவோ புரிந்து கொள்ளவோ முடியாது. சிங்களப் பேரினவாத அரசு, தமிழ்மக்களின் உரிமைகளை நியாயமற்ற கோரிக்கையாக சிங்கள மக்களிடம் கூறுவதை நாம் தொடர்ந்து அனுமதித்து இருக்கின்றோம். இந்த எல்லையில் தான், தமிழ் மக்களை குறுந் தமிழ்தேசியமும் கூட சிறையிட்டு இருக்கின்றது. குறுகிய இனவாதம், மற்றைய இனத்துக்கு எதிராக தன் இனத்தை அணி திரட்டுகின்றது. இதைத்தான் பேரினவாதமும், குறுந்தேசியமும் செய்கின்றது. இதற்கு எதிரான உரையாடலை, போராட்டத்தை நடத்தாத வரை, நாமும் இனவாதிகளுக்கு துணை போபவர்கள் தான்.

இனவாதிகள் தான் அல்லாத இனத்தை எதிரியாக காட்டி இதையே பரஸ்பரம் செய்கின்ற நிலையில், அவர்கள் தமக்குள் பேசி மோதுகின்ற அரசியலுக்குள் நாம் செயலற்றவராக மாறி வால் பிடிக்கின்றோம்;. இதைக் கடந்து நாம் எம் இன மக்களுடன் பேசுவது போல், எம் எதிரியின் இன மக்களுடன் பேச வேண்டும்;. இதுவோர் அரசியல் முன்நிபந்தனை. எமது இன மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை முன்வைத்தும், அதன் நியாயமற்ற கோரிக்கைளை அம்பலப்படுத்தியும், சிங்கள மக்களுடன் நாம் உடன்பாடு காணும் போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தியாக வேண்டும். இதுவல்லாத தேசியப் போராட்டம் என்பது படுபிற்போக்கானது.

எம்மைப் பற்றி, எதிரி தன் இன மக்களுக்கு சொல்வதை தொடர்ந்தும் நாம் அனுமதிக்க முடியாது. எமது சரி பிழை என இரண்டையும், எதிரியின மக்களிடம் நாம் பேசியாக வேண்டும்;. எமது பிழைகளையும், எமது குறுந்தேசிய வக்கிரங்களையும் முன்னிறுத்தி, எதிரி தன் இன மக்களிடம் இனவெறுப்பை தூண்டுவதற்கு பதில், நாம் அதை எதிர்த்துப் போராடுவது அவசியம். அதே போல் அதை எதிரி இன மக்களுக்கு நாம் எடுத்துச் செல்வதன் மூலம், எதிரியை தனிமைப்படுத்த வேண்டும். எதிரி தன் இன மக்களுக்கு சொல்வதைத் தாண்டி, நாமும் சொல்லவேண்டும். இதற்கான அரசியல் முயற்சியில் எவரும் இன்றுவரை ஈடுபடவில்லை. இதற்கு தடைகளை ஏற்படுத்தும் குறுந்தேசிய முயற்சிகள் தான், எம்மை சுற்றிய இடதுசாரியமாக வெளிப்படுகின்றது.

 

தமிழ் மக்கள் பற்றி, அங்கு நடக்கும் மக்கள்விரோத போக்குகள் குறித்து, சிங்கள மக்களிடம் மகிந்த ராஜபக்ச அரசும், பேரினவாதிகளும் கூறுவதற்கு துணைபோகும் வண்ணம், அதைப்பற்றி அந்த மக்களுக்கு நாம் சொல்வது கிடையாது. இது இரண்டு தரப்பு இனவாதிகளுக்கும் வாய்ப்பாக உள்ளது. இதை முறியடிக்க நாம் அவர்களுடன் உரையாடுவது அவசியமானது. இதை நிராகரிக்கின்ற அரசியல் இனவாத தேசிய அரசியலாகும். சிங்கள மக்களுடன் உரையாடல் என்பது, இன்று இரண்டு பிரதான போக்குகள் சார்ந்து செய்ய வேண்டும்.

1. தமிழ் மக்களின் முரணற்ற கோரிக்கைகளை மையப்படுத்தி, அது அந்த மக்களின் உரிமை என்பதையும், அது சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல, சார்பானது என்பதை விளக்க வேண்டும்.

2. தமிழ் குறுந்தேசியத்தின் முரணான கோரிக்கைகளையும், அதன் தவறான போக்குகளையும், இதன் மனிதவிரோத கூறுகளையும் இனம்காட்டி, அதற்கு எதிராக தமிழராகிய நாம் போராடுவதை எடுத்துக்காட்டி விளக்கவேண்டும்;.

உண்மையில் இந்த வகையில் நாம் சிங்கள மக்களுடன் உரையாடாத வரை, நாம் அவர்களுடன் இணைந்து போராடாத வரை, பேரினவாதம் தன் இன மக்களை தன் பின்னால் அணிதிரட்டிவிடும். இதுதான் கடந்த இனவாத வரலாறு. இந்த வகையில் பேரினவாதம் தன்சொந்த அரசியலுக்குக் கீழ், தமிழ் மக்களுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திவிடுகின்றது.

குறுந்தேசியத்தின் மக்கள்விரோத வன்முறைகளையும், அதன் தேசவிரோத கைக் கூலித்தனத்தையும் எடுத்துக் காட்டி, சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கு எதிராக பேரினவாதம் அணிதிரட்டுகின்றது. இராணுவ இயந்திரத்தைக் கொண்டு மட்டும் தமிழ்மக்களை ஓடுக்கவில்;லை, சிங்கள மக்களை இதற்கு ஆதரவாக அணிதிரட்டிக் கொள்கின்றது. இதைத் தகர்க்க எதையும் செய்யாது, இனவாதிகளுக்கு துணைபோபவர்களாக நாம் நீடிக்கின்றோம்.

அரசுக்கு எதிரானதாக கூறிக் கொண்டு குறுந் தமிழ் தேசியம் கையாளுகின்ற அனைத்து வகையான மக்கள்விரோத கூறுகளைப் பற்றியும், பேரினவாதம் சிங்கள மக்களுக்கு தன் இனவாத அரசியல் ஊடாகக் கூறுகின்றது. தமிழ் இனவாதிகள் நடத்துகின்ற தமிழர் மீதான வன்முறையைக் கூட, அது சிங்கள மக்களுக்கு தன் இனவாதத்தின் ஊடாக எடுத்துச் செல்லுகின்றது. புலிகள் புலத்தில் தொடர்ந்து நடத்தும் வன்முறையைக் கூட, பேரினவாதம் தனக்கு சாதகமாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லுகின்றது.

இதை நாம் தொடர்ந்து அனுமதிக்கும் வரை, இனவாத பிரச்சாரத்துக்குள் சிங்கள மக்களை வைத்திருக்கும் அரசியலுக்கு நாம் துணை போபவர்களாகவே தொடர்ந்தும் இருப்போம். எப்படி தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மக்கள் பற்றிய தவறான அபிப்பிராயத்தை குறுந் தமிழ்தேசியவாதம் உருவாக்குகின்றதோ, அதைத்தான் அரசு சிங்கள மக்கள் மத்தியில் செய்கின்றது. பேரினவாத அரசும் – குறுந்தேசிய வாதிகளும் (புலிகளும்), அந்தந்த இன மக்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்பதையும், அதன் மக்கள் விரோத போக்கையும் அம்பலப்படுத்தாத வரை, இனவாதிகள் தான் சமூகப்போக்கை தீர்மானிக்கும் சக்தியாக நீடிப்பர்.

நாம் எம்மின மக்களுடன் மட்டும் பேசுவதல்ல, எதிரியின மக்களுடனும் பேச வேண்டும்.

இந்த வகையில் நாம் சிங்கள மக்களுடன் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் உரையாட வேண்டும்;. இதற்கான இணையத்தை நாம் உருவாக்கவும், மொழி பெயர்ப்புக்கான முயற்சிகளை மையமாக வைத்து செயல்பாட்டை கூர்மையாக்கியுள்ளோம்;. இதற்கு உங்கள் அனைத்துவிதமான ஓத்துழைப்பையும், பங்களிப்பையும், ஆலோசனைகளையும் கோரி நிற்கின்றோம்;.

பி.இரயாகரன்

12.08.2011

 


பி.இரயாகரன் - சமர்