09272023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

பேச்சுவார்த்தையின் பெயரில் புலிகளின் அதே அரசியல் முட்டாள்தனத்தை செய்த கூட்டணி

தமிழ் மக்களை அணி திரட்டிப் போராடாத, சிங்கள மக்களுள் பேசாத, ஆளும் வர்க்கங்கள் நடத்துகின்ற பேச்சுவார்த்தை வெறும் அரசியல் நாடகங்கள் தான். “காலக்கெடுவும்” “எழுத்து பூர்வமான” பதிலையும் கோரி இந்த நாடகத்தில் இருந்து விலகுவது, புலிகளின் அதே அரசியல் வங்குரோத்து தான். இரகசியமான பேரங்கள் மூலமான தீர்வு என்று நம்பிக்கை ஊட்டிய, தாங்கள் உருவாக்கிய அத்திவாரத்தை தங்களே தகர்த்து விட முன்வைத்த நிபந்தனை பேரினவாதத்துக்கு சாதகமானது. குறைந்தது இதிலிருந்து வெளியேறுவதற்கு கூட, தெரியாத குறுகிய அரசியல் முட்டாள்தனத்தைத் தான், தமிழ் மக்களுக்கு எதிராக கூட்டமைப்பு செய்துள்ளது.

 

எந்த தீர்வையும் முன்வைத்து பேச முன்வராத அரச தரப்பின் பேச்சுவார்த்தை எப்படியோ, அப்படித் தான் நாங்கள் என்ன பேசுகின்றோம் என்பதை மக்களிடம் சொல்லாது பேச்சுவார்த்தையை நடத்துகின்றனர். இரு தரப்பும் ஒரே விதமான ஒரே அரசியல் நாடகத்தையே நடத்துகின்றனர். அரசு கூட்டமைப்புக்கு செய்வது போல், கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு செய்கின்றது. பேச்சுவார்த்தையை சிறப்பாக நடத்த, தீர்வைக் காண என்று கூறிக் கொண்டு தான் அனைத்தையும் இரு தரப்பும் அரங்கேற்றுகின்றனர். தமிழ் மக்கள் கூட்டணியிடம் “காலக்கெடுவையும்” “எழுத்து பூர்வமான” பதிலையும் கோரவில்லை. ஆனால் அரசிடம் கூட்டணி கோருகின்றது. ஆக இதிலிருந்து என்ன தெரிகின்றது, கூட்டணி அரசிடம் கோரியிருக்க வேண்டியது இதுவல்ல என்பது.

இந்த அரசியல் எல்லைக்குள் பேரினவாதம் தேசியம் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை கோர முடியாதவாறு இன அடையாளத்தை அழிப்பதும், குறுந்தேசியம் தன் இன மக்களை ஒடுக்க உதவுவதுமான ஒரு பேச்சுவார்த்தையையும் நடத்துகின்றனர்.

இதன் அரசியல் வெளிப்பாடு தான் அரசு – கூட்டணி அரசியல் நெருக்கடி. முதலில் எந்ந  பேச்சுவார்த்தையும் வெளிப்படைத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும். இல்லாத அனைத்தும் தோல்வி பெறும் என்பதை இலங்கை இன வரலாறு சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது. மக்களின் உரிமைகளை முன்வைத்து பேசாத இடத்தில், இரகசியத் தன்மை என்பது குறிப்பாக பேரினவாத இனவழிப்பு தொடரும் இன்றைய சூழலில் அதற்கு தொடர்ந்து உதவது தான்.

ஒருபுறம் இனவழிப்பு நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்திக் கொண்டு இருக்கின்ற அரசுடன் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகள், இனவழிப்புக்கு துணை போவது தான். குறிப்பாக பேச்சுவார்த்தையில் என்ன பேசினார்கள் என்பது மர்மாக இருக்க, மறுபுறத்தில் “காலக்கெடுவும்”, “எழுத்து பூர்வமான” பதிலையும் முன்வைத்து, பேச்சுவார்த்தை அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது என்பது, புலிகளின் பேச்சுவார்த்தை போல் தன்னைத் தான் குறுகிய வட்டத்துக்குள் முடக்கி, தன்னை அம்பலமாக்கி தனிமைப்படுத்தியுள்ளது.

இங்கு அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை என்ற தங்கள் நாடகத்தை விட்டு வெளியில் வர முன்வைத்த  “காலக்கெடுவும்”, “எழுத்து பூர்வமான பதிலையும்” முன்வைக்க கோரிய கோரிக்கை தவறானது. இதற்கு மாறாக முன்வைத்திருக்க வேண்டியது என்ன? தமிழ் பகுதிகளில் தொடர்ந்து நடக்கின்ற இனவழிப்பை (சிங்களக் குடியேற்றம், நிலப் பறிப்பு, திடட்மிட்ட மத வெறுப்பைத் தூண்டக் கூடிய மத அடையாளங்களை ஆங்காங்கே நிறுவுவது, வெளியில் இருந்து கொண்டு சிங்களவருக்கு வேலைகளை வழங்குவது, தொழில் உரிமைகளை சிங்களவருக்கு வழங்குவது  …) நடத்திக் கொண்டு, அரசு  பேச்சுவார்த்தையை நடத்துவது என்பது போலியானது என்ற காரணத்தை காட்டி, இதை நிறுத்தும்படி கோரி பேச்சுவார்த்தையில் அரசின் போலித்தனத்தை உலகறிய அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். இதை செய்யாதவர்கள் எப்படி தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குவார்கள்?

இங்கு பலஸ்தின பகுதியில் இஸ்ரேலிய இனக் குடியேற்றத்தை நடத்துகின்ற அதே பாணியில் அரசு இயங்கிக் கொண்டு, பேச்சுவார்த்தை நடத்துகின்றது. இன அதிகாரப் பகிர்வு குறித்து பேசிக் கொணடு இருக்கும் போது, தமிழ் மக்களுக்கு எதிராக வடக்குகிழக்கில் இனவழிப்பை நடத்துகின்ற அரசுடன் இரகசியமாக பேசுவது என்பது தன் கண்ணை தன் கையால் குத்துவதுதான்.

தொடர்ச்சியான அரசின் இனவழிப்புப் போக்கை அம்பலப்படுத்தி சொந்த மக்களை அணிதிரட்டி அவர்களைக் கொண்டு போராடுவதும், சிங்கள இனவாத ஆட்சியாளர்களுடன் பேசுவதற்கு பதில் சிங்கள மக்களுடன் பேசுவதின் மூலம் தான், இந்த இனப்பிரச்சனைக்கு நேர்மையான அரசியலை முன்வைத்து இயங்குவதை எவராலும் உறுதி செய்ய முடியும்.

இதற்கு மாறான குறுந்தேசிய அரசியல், பொதுவான அரசுக்கு எதிரான தமிழ் மக்களின் பொது அபிப்பிராயம் மட்டும் தான், இங்கு கூட்டமைப்பினரின் அரசியல் முட்டாள்தனத்தை தொடர்ந்து காப்பாற்றுகின்றது.

தாங்கள் உருவாக்கிக் கொண்ட அரசியல் நெருக்கடியில் இன்று கூட்டணி சிக்கியுள்ளது. புலியைப் போல் முட்டுச் சந்தியில் வந்து இன்று நிற்கின்றது. அன்னிய நலன் சார்ந்து இதற்கு  வழிபிறக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதன் மூலம், தீர்வைக் காணமுடியும் என்ற பிரமையை ஊட்ட முனைகின்றனர். அன்னிய வழிகாட்டலை நம்பி முள்ளிவாய்க்காலில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலி முட்டாள்கள் போல், கூட்டணி அன்னியத் தலையீட்டை  நம்பி கையை உயர்த்திக் கொண்டு  நிற்கின்றது.

சொந்த மக்களை நம்பி, அவர்களை அணிதிரட்டிப் போராடும் அரசியல் பாதை மட்டும், தீர்வைத் தரும் என்பதை மறுப்பது தான், “காலக்கெடுவும்” “எழுத்துபூர்வமான” பதில் தா என்ற அரசியலின் அரசியல் சாரமாகும்.

பி.இரயாகரன்
08.08.2011


பி.இரயாகரன் - சமர்