கொசோவோவின் பிரகடனத்தை பொதுவாக புலிகள் தரப்பு ஆதரிப்பவர்களாகவும், பேரினவாதிகள் எதிர்ப்பவர்களாகவும் உள்ளனர். நாம் இதை எப்படி பார்ப்பது?, புரிந்து கொள்வது?
கொசோவோ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான, அவர்களின் சொந்த சுதந்திரப் பிரகடனம் அல்ல இது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான சதியும், அவர்களுக்கு இடையிலான சொந்த நரித்தனங்களுமே, இந்த சுதந்திரப் பிரகடனமாகும். இதனால் இதை நாம் எதிர்கின்றோம். இந்த ஏகாதிபத்திய பிரிவினையை எதிர்க்கின்றோம் என்பதால், இதற்கு எதிரானவற்றை ஆதரிக்கின்றோம் என்பதல்ல. இவையனைத்தும் ஏகாதிபத்திய நலன்களுக்கு உட்பட்டதே. இதற்கு வெளியில், மக்களுக்கு இதனால் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பது தான் உண்மை.
ஏகாதிபத்தியத்தின் ஒரு பகுதி இந்த பிரிவினையை நடத்துவது ஏன்? மற்றைய பகுதி இதை எதிர்ப்பது ஏன்? இந்த அடிப்படையிலான புரிதல் தான், இதற்கான தெளிவான பதிலுமாகும்.
கொசோவோ மக்கள் சுதந்திரமாகவே தமது சொந்த சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டியிருந்தால், அதை ஆதரிப்பது, மனிதம் மீது அக்கறையுள்ள எல்லோரினதும் கடமை. அதுவல்லாத ஏகாதிபத்திய சதியிலான பிரிவினையை (இது சுயநிர்ணயமல்ல) நாம் ஆதரிப்பது, அந்த மக்களுக்கே எதிரானது.
ஏகாதிபத்தியங்கள் கொசோவொ மக்களின் கடந்தகால துயரங்களை, தமது சொந்த மூலதனமாக்கிக் கொண்டதன் விளைவு தான் இது. இதன் மூலம் மக்களை முட்டாளாக்கி, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி பிரிவினையை விதைக்கும் ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம், அந்த மக்களுக்கு தெரியவர அதிக காலம் செல்லாது.
கொசோவோ மக்கள் தொடர்பான கருசனையா, இதன் பின்னணியில் உள்ளது. நிச்சயமாக இல்லை. அப்படி கருதும் யாரும், அடிமுட்டாள் தான். மக்கள் மேலான கருசனையும், அந்த மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய அக்கறையும் உண்மை என்றால், இது உலகம் தளுவியளவில் பொதுவானதாக இருக்கும், இருக்க வேண்டும். எல்லோருக்கும் நன்கு தெரியும் இதுவல்ல என்று. கொசோவோ பிரிவினை மீதான ஏகாதிபத்திய நிலைப்பாடுகள் என்பது, ஏகாதிபத்திய உள் முரண்பாட்டுக்கு உட்பட்டது. அவர்களின் சொந்த நலன் சார்ந்து தான், சுதந்திர பிரகடனத்தை ஏகாதிபத்திங்கள் ஆதரிப்பது, ஏன் எதிர்ப்பதும் கூட இதற்குள்ளானதே.
மக்களின் ஐக்கியம், மக்கள் நலன், மக்களின் சுயநிர்ணயம் என்ற எதையும் இது கொண்டதல்ல. இது தான் எதார்த்தமான உண்மை. முட்டாள்கள் மட்டும் தான் இந்த உண்மையை பார்க்காமல், வேறுவிதமாக இதை அணுகுகின்றனர்.
எதற்காக ஏகாதிபத்தியத்துக்கு இடையில் இந்த பிரிவினையும், எதிர்ப்புகளும் எழுகின்றது.? அறிவுள்ள ஒவ்வொருவரும், சுயமாக சிந்திக்கக் கூடிய ஒவ்வொரு மனிதனும், இதற்குரிய விடையைக் காணமுடியும். ஏகாதிபத்தியங்கள் தமக்கிடையிலான சதி, சூழ்ச்சிகள், கவிழ்ப்புகள், தமக்கு சார்பான அதிகார மையங்கள் ஊடாக உலகை சதா மறுபங்கீடு செய்கின்றன. இதில் ஒன்று தான் இந்தப் பிரிவினை.
உண்மையில் அந்த மக்கள் மத்தியில் பிளவை விதைத்து, அவர்களை மோதவிட்டவர்களும் இவர்கள் தான். முன்னாள் சோவியத் முதல் கிழக்கு நாடுகளின் கம்யூனிசத்தை குழி தோண்டி புதைக்க, ஏகாதிபத்தியங்கள் அந்நாடுகளினுள் ஆழமாகவே தலையிட்டன. இதில் ஒரு வடிவம் தான், இனங்களுக்கு இடையில் பிளவையும், ஏன் பிரிவினைவாதத்தையும் கூட தூண்டினர். மறுபக்கத்தில் கம்யூனிசத்தை முதலாளித்துவ மீட்சியாக்கினர். இதை மூடிமறைக்கவும், அதன் பலத்தை உடைக்கவும், இனங்கள் மேலான ஒடுக்குமுறையையும் ஏகாதிபத்தியங்கள் தூண்டிவிட்டன.
கம்யூனிசம் மனிதம் தொடர்பாக கொண்டிருந்த இணக்கமான ஜக்கியத்தையே உடைத்தனர். மனித ஜக்கியத்தை வைக்கும் கம்யூனிசத்துக்குப் பதில், மனிதப் பிளவை முன்வைக்கும் முதலாளித்துவமே சிறந்தது என்று ஏகாதிபத்தியம் வலியுறுத்தி, இனங்களை மோதவிட்டனர். இப்படி ஏகாதிபத்திய சதிகளுடன் உருவான முதலாளித்துவ மீட்சி, அந்த நாடுகளை பல துண்டுகளாகப் பிய்ந்து போட்டது. அத்துடன் உள்நாட்டு பொருளாதாரத்தை சிதறடிக்க வைத்து, தமது பிரதான எதிரியின் பொருளாதார பலத்தை தரைமட்டமாக்கினர். தம்மையும், தமது நிலையையும் சார்ந்து இருக்குமாறு, மொத்த சூழலையும் மாற்றினர்.
பிரிவினைகளை ஊக்குவித்து, பிரிந்த நாடுகளில் தமது செல்வாக்கையும், ஏன் தமது இராணுவ தளங்களையும் நிறுவிக்கொண்டனர். தமது சந்தைக்கேற்ற பொருளாதார மண்டலங்களாக, தமது கடன் என்ற சிலந்தி வலையை திணித்து, அந்த நாடுகளை தமக்கு அடிமைப்படுத்தினர்.
கம்யூனிசத்தை கைவிட்டு முதலாளித்துவ மீட்சியைச் செய்த இந்த சமூக ஏகாதிபத்திய நாடுகள், போட்டி ஏகாதிபத்தியமாக தம்மை தகவமைத்துக் கொண்டு மீண்டும் களத்தில் இன்று மோதுகின்றது. இதன் விளைவாலும் உலகில் ஏகாதிபத்திய முரண்பாடுகள் கூர்மையாகி நிற்கின்றது. இதை உடைக்கும் வகையில் தான், ஏகாதிபத்திய செல்வாக்கு மண்டலங்களில் பிரிவினையையும், பிரிவினைவாதத்தையும் விதைத்து வருகின்றனர். இந்த வகையில் நடந்தேறியது தான், கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனம்.
கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனமும், கொசோவோ மக்களும்
இந்தப் பிரகடனத்தால் கொசோவோ மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா? நிச்சயமாக இல்லை. மாறாக கொசோவோ மக்களின் சுயநிர்ணயம் மறுக்கப்படும். அவர்கள் ஏகாதிபத்திய கைக்கூலிகளாக பயன்படுத்தப்படுகின்றனர். இனிவரும் மோதலுக்குள் வெறும் பகடைக் காய்களாகி மிதிக்கப்படுவர். கொசோவின் சுதந்திரம், சுயநிர்ணயம் என்பது, ஏகாதிபத்தியத்தின் நலன் சார்ந்த விளையாட்டுப் பொம்மை தான்.
உண்மையில் இந்த பிரிவினையின் பின் காணப்படும் மகிழ்ச்சி என்பது தற்காலிகமானது. ஏகாதிபத்திய மோதல்கள் ஏற்படுத்த உள்ள துயரங்களுக்கு ஏற்ற, முன்னோடியான அற்ப மகிழ்ச்சி. இரண்டாம் உலக யுத்தத்தின் முன்பு கிட்லரின் வெற்றிகளைக் கொண்டாடிய அதே மகிழ்ச்சி தான், இதுவும்.
மூன்றாவது உலகமகா யுத்தம் மூலம் தான் உலகை மறுபடியும் ஏகாதிபத்தியம் பங்கிடுகின்ற தயாரிப்புக்கான, ஒரு நிழல் யுத்தம் தான் இது. அதில் பலியாகும், முதல் பலியாகப் போகும் மக்கள், வேறு யாருமல்ல, இந்த கொசோவோ மக்கள் தான். ஏகாதிபத்திய நலன்கள் என்பது மொத்த மக்கள் கூட்டத்துக்கும் எதிரானது. இதில் மோதல்கள் ஏற்படும்போது யாரை முதலில் பயன்படுத்துகின்றரோ, அவர்கள் களப்பலியாவது தான் இயல்பு.
இப்படி கொசோவோ மக்கள் இன்று உண்மையான சுதந்திரத்தைப் பெறவில்லை. ஆளும் வர்க்கமும் ஏகாதிபத்தியமும் கூட்டுச் சேர்ந்து உலகை பங்கிடுகின்ற விளையாட்டில் தான், இந்த சுதந்திர பிரகடனம் நடந்தது.
இதனால் ஏற்படும் சர்வதேச தாக்கங்கள் என்ன?
பொதுவாக உலக ஒழுங்கை பல தளத்தில், பல கூறாக மாற்றிவிடுகின்றது. மோதல் நிறைந்த ஏகாதிபத்திய சர்வதேசக் கொள்கை என்பது வெளிப்படையாகிவிட்டது. மோதல்கள் அதிகரிப்பது என்றுமில்லாத அளவுக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட ஏகாதிபத்திய முகாம்களில் அரங்கேறும்.
1. பிரிவினைப் போராட்டம் நடக்கின்றதும், கோருகின்றதுமான நாடுகள், இயல்பாக இந்த பிரிவினையை ஆதரிக்கின்ற ஏகாதிபத்திய அணியில் சேர்ந்து விடுவது நிகழும்.
2. இதனால் பிரிவினை வாதம் பெறும் உற்சாகத்தை தடுக்க, உண்மையான சுயநிர்ணயத்துக்கு பதில் அற்ப தீர்வுகளை திணிப்பது அற்ப சதியாகவே அரங்கேறும்.
3. ஏகாதிபத்திய பொருளாதார சூறையாடலால் ஏற்படும் நெருக்கடியை, ஏதாவது ஒரு பிரிவினை மூலம் தீர்க்க முடியும் என்ற அடிப்படையிலான பிரிவினைவாதங்கள் முன்னுக்கு வரும்.
4. ஏகாதிபத்திய நலன் சார்ந்த பிரிவினை வாதங்கள் ஊக்கப்படுத்தப்பட்டு, மூர்க்கமான மோதலாக மாறும்.
5. உலகமெங்கும் ஆயத மோதல்கள் அதிகரிக்கின்ற சூழல், எங்கும் அதிகரிக்கும்.
உலகில் மோதல்கள் அதிகரிப்பதுடன், ஏகாதிபத்திய முரண்பாட்டால் அவை கூர்மையடைகின்றது. உலகை ஏகாதிபத்தியங்கள் பங்கிடும், ஒரு உலக யுத்ததைத் நோக்கி நகருகின்றது. மிகக் கொந்தளிப்பான ஒருகட்டத்தை தான், ஏகாதிபத்தியத்தின் சுதந்திர பிரகடனம் காட்டுகின்றது.
இலங்கையில் இதன் விளைவு என்ன?
இலங்கையின் தனித்துவமான இறைமை என்பது, மேலும் ஏகாதிபத்திய தன்மைக்குள் செல்வதை துரிதமாக்கும். இலங்கை இந்தியா மயமாவதும், அதன் நிலைப்பாட்டுடன் இறங்கி தனது தனித்துவமான சுயத்தை மேலும் இழந்துவிடும். ஏகாதிபத்திய மோதல் இலங்கை இனப்பிரச்சனையில் ஏற்பட்டால், இலங்கை இந்தியாவின் முழுமையான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும். அதைத் தடுக்க முடியாது.
ஆனால் ஏகாதிபத்திய மோதல் ஏற்படும் வாய்ப்பு, இலங்கையில் கிடையாது. இது நேரடியாகவே இந்தியாவுடன் தொடர்புடையது. இந்தியா ஒரு ஏகாதிபத்தியம் சார்ந்து நிலை எடுக்கவில்லை. இந்தியாவே ஏகாதிபத்தியங்களின் பொருளாதார சுரண்டலுக்கு உள்ளாகும் புதிய சந்தையாகவுள்ளது. சந்தை பங்கிடப்பட்டு இறுகிவிடவில்லை. ஏகாதிபத்தியங்கள் போட்டியற்று உள்ள நுழைவை கொண்ட, ஒப்பீட்டளவில் அமைதியான திறந்த சந்தைப் பிரதேசமாக உள்ளது.
இந்தியா அமெரிக்காவின் நலன்களுடன் இணங்கிச் செல்வதால், இலங்கை விடையத்தில் இதற்கு முரணாக அமெரிக்க நலன்கள் இருக்காது. இலங்கை தனித்துவமாக இந்தியாவை மீறி செயல்படாது என்பது தெளிவானது. இலங்கையில் பிரிவினைகளை எதிர்க்கின்ற ஏகாதிபத்திய உதவிகளை நாடுவதும், ஆதரவைப் பெறுவதும் இந்தியாவை மீறியவையல்ல.
அந்தளவுக்கு அதுவும் இந்தியாவுக்கு உட்பட்டது தான். கொசோவோவை முன்மாதிரியாக கொண்டு, ஏகாதிபத்திய ஆதரவுடன் ஒரு பேட்டை ரவுடியாக மாறுவதற்கான எந்த சூழலும் கிடையாது. இந்தியாவுக்கு உட்பட்ட இலங்கையில், ஏகாதிபத்திய முரண்பாடு தனித்துவமாக கிடையாது. இப்படி எந்த ஏகாதிபத்தியத்தையும் சார்ந்து புலிகள் நிற்க முடியும் என்று கருதுவது, கற்பனைக்குரியது. அதற்கான குறிப்பான சூழல் எதுவும் கிடையாது.
புலிகள் மிகத் தனிமைப்பட்ட நிலையில் சிக்கி நிற்பது, இதனால் தான். புலிகளின் பாசிச நடத்தைகள் அல்ல, ஏகாதிபத்தியத்திடம் இருந்து அவர்களை தனிமைப்படுத்துவது, சர்வதேச சூழலே ஒழிய, புலிப் பாசிசமல்ல.
மறுபக்கத்தில் கொசோவோ பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழீழத்துக்கான மக்களின் சுயநிர்ணயத்தை முன்னிறுத்தும் உரிமையை புலிகள் இழந்துவிட்டனர். மக்கள் மத்தியில் அந்த உணர்வையும், அரசியல் பார்வையையும் கூட புலிகள் அழித்துவிட்டனர்.
அந்தளவுக்கு மக்கள் மேலான புலிகளின் பாசிசம், சுதந்திரமான தனித்துவமான செயல்கள் அனைத்தையும் இல்லாததாக்கிவிட்டது. மக்களைச் சார்ந்து நின்று சுதந்திரப் பிரகடனத்தை செய்யுமளவுக்கு, அதனிடம் எந்த தார்மீக மக்கள் பலமும் கிடையாது.
ஏன் கொசோவோவைக் காட்டி, ஒரு மக்கள் ஆர்ப்பாட்டத்தை புலம்பெயர் நாடுகளிலும் சரி, மண்ணிலும் சரி, புலிகளால் இன்று நடத்த முடியாது என்பதே உண்மை.
இப்படி எல்லாத் தளத்திலும் ஏகாதிபத்திய நலன்களும், மோதல்களும் தான் அரங்கேறி வருகின்றது. இதற்கேற்ப குலைப்பதும், ஊளையிட்டு அழுவதும், அரசியலாக அரங்கில் நிற்கின்றது. இதைக் களையாது, எந்த வெற்றியையும் மனிதர்கள் பெறமுடியாது.
பி.இரயாகரன்
20.02.2008