08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

"வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லை" என்று கூற வர்க்கத்தின் பெயரில் ஒரு நூல்

இலங்கை ஆளும் வர்க்கங்கள் வர்க்கப் போராட்டத்தை தடுக்க இனமுரண்பாட்டை ஆணையில் வைத்திருக்கின்றது. இந்த இனமுரண்பாடு இருக்கும் வரை, இலங்கையில் வர்க்கப்போராட்டம் சாத்தியமில்லை என்று கூறி, வர்க்கப் போராட்டத்தை மறுக்க மார்க்சியத்தை புரட்டிப் போடுகின்றது நூல். "வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்.." என்று கூறிக்கொண்டு "சிங்கள பேரகங்காரவாதம் கோலோச்சும் வரை வர்க்கப் போராட்டப் பாதையில் இலங்கை மக்கள் அனைவரையும் இனவேறுபாடுகளை மறந்து வர்க்கப் போராட்டப் பாதையில் ஓரேகுடையின் கீழ் அணிதிரட்டுவது சாத்தியமில்லாதது. பிற மக்கள் சிலவேளைகளில் மிகத் தயக்கத்துடன் முனைந்தாலும் பௌத்த-சிங்கள பேரங்கார போதையில் மிதந்து கொண்டிருக்கும் சிங்கள மக்கள் வரமாட்டார்கள்" (பக்கம் 285) என்கின்றது. "போராட்டம் தொடரும்" என்பது, இங்கு வர்க்கப் போராட்டத்தையல்ல. அதைச் சொல்ல இடதுசாரிய சொல்லடுக்குகள், இடதுசாரிய வாதங்கள், இடதுசாரிய தர்க்கங்கள். இதன் அரசியல் பின்னணியில் "முதலாளித்துவ ஜனநாயகத்துக்கான இயக்கமே இன்று இலங்கையில் பிரதானமானதும் உடனடியானதுமான வேலைத்திட்டமாக அமைகின்றது" (பக்கம் 212) என்று கூறுவதன் மூலம், வர்க்க அரசியலில் இருந்து ஜனநாயகத்தை கூட பிரித்து அணுகுகின்ற வர்க்க அரசியலை நிராகரிக்கின்ற அரசியல் கோட்பாட்டை இந் நூல் முன்வைக்கின்றது.

 

 

இனமுரண்பாட்டை ஆளும் வர்க்கம் இந்த சமூகத்தில் திணித்திருக்கும் போது, அதை எதிர்த்துப் போராடுவது தான் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கடமை. மக்களை வர்க்கரீதியாக ஆளும் வர்க்கத்துக்கு எதிராக அணிதிரட்டுவதைக் கடந்து, நேர்மையான மக்கள் அரசியல் என வேறு எதுவும் கிடையாது. எந்த முரண்பாட்டையும், எப்படி அணுகினாலும், எந்த வகையில் தீர்க்க முற்பட்டாலும், அது வர்க்கப் போராட்டம் தான். "அணிதிரட்டுவது சாத்தியமில்லாதது" என்பது மாறுகின்ற அரசியல், இயங்கியல் மறுப்பு அரசியலாகும். இது உள்நோக்கம் கொண்டதும், நேர்மையற்ற அரசியலுமாகும்.

இந்த அரசியல் கூறுகின்றது "முற்போக்கு உள்ளடக்கம் கொண்டதோர் தேசியம் எந்த வர்க்கத்தினதும் தலைமையில் இருக்கலாம்" (பக்கம் 136) என்கின்றது. இங்கு வர்க்கம் கடந்த அரசியல் மற்றும் தேசியப் பார்வை முன்தள்ளப்படுகின்றது. இந்த இடதுசாரியப் புரட்டு வர்க்கம் கடந்த தேசத்தை காட்ட முற்படுகின்றது. "மக்கள் திரள்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று தேசம். மற்றையது வர்க்கம்" (பக்கம் 158) என்று கூறி, தேசத்தை அடிப்படையாக கொண்ட "முதலாளித்துவ ஜனநாயகத்துக்கான இயக்க" த்தின் முற்போக்கு பாத்திரம் உட்பட, அதற்கு எந்த வர்க்கமும் தலைமை தாங்க முடியும் என்று வர்க்கம் கடந்த பிற்போக்கு அரசியலை முன்வைக்கின்றது. இதை தனது நழுவல்தனத்துடன் அணுகி, மூடிமறைத்துக் கொண்டு கூற முற்படுகின்றது.

இந்த வகையில் ”கைமண்” தன் அரசியலை முன்வைத்துள்ளார். "வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்.." என்ற இந்த நூலில், மகிந்த சிந்தனையிலான இராணுவ கட்டமைப்பைப்பற்றி குறிப்பாக அணுகி கருத்துரைக்கும்படி என்னைக் கோரியுள்ளனர். நூல் பற்றிய பொது மதிப்பீட்டில் இருந்து தான், குறிப்பாக இதை அணுகி ஆராய முடியும்.

இந்த வகையில்

1. நூலின் பொது அரசியல் நோக்கம் என்ன என்ற கேள்வி இங்கு இயல்பாக எழுகின்றது.

2. அதை எப்படி எதை முன்வைத்து அடைய முனைகின்றனர் என்பதை குறிப்பாக ஆராயக் கோருகின்றது.

3. கடந்த வரலாற்றை எப்படித் திரும்பிப் பார்த்து, எதை எமக்கு காட்ட முனைகின்றனர் என்று கூர்ந்து அணுகக் கோருகின்றது

4. இதற்காக அவர்கள் திரட்டிய தகவல்கள், அதன் நோக்கம் என்னவென்ற கேள்வி எழுகின்றது.

இதன் அடிப்படையில் நாம் நூல் பற்றிய சுருக்கமான விமர்சனத்துக்குள் நுழைவோம்.

1. இந்த நூல், தெரிந்த மற்றும் தெரியாத பல தகவல்களை தன் அரசியல் நோக்கிற்காக தொகுத்திருக்கின்றது. தொடர்ச்சியான நிகழ்வுகளையும், சம்பவங்களையும் கூர்ந்து அவதானித்து வந்தவர்களுக்கு பரிச்சயமான தகவல்களையும், அதையொட்டி புதிய தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பை தந்திருக்கின்றது. இந்த வகையில் இந்த நூல் குறிப்பாக சமூக நோக்கில் பயன்பாட்டுக்குரிய பல தகவல்களைத் தொகுத்துத் தந்திருக்கின்றது

2. தன் அரசியல் நோக்கில் கடந்தகால நிகழ்வுகளைப் பற்றிய அரசியல் அனுமானங்கள், மற்றும் தர்க்கங்கள் மேல் சார்ந்த அரசியல் முன்மொழிவு, விவாதத்துக்குரிய விமர்சனத்துக்குரிய பல முரண் கொண்ட நூலாக தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றது.

3. வர்க்கப் போராட்டத்துக்குரிய சூழலில், அதற்கு எதிராக உள்ளிருந்து குழிபறிக்கும் அரசியல் தர்க்கங்கள் எப்படி எந்த வடிவில் வரும் என்பதையும், இதை முன்கூட்டியே முறியடிக்கும் வண்ணம், அரசியல் விவாதத்துக்குரிய பல தகவல்களை இந்த நூல் எம்முன் நழுவிய வண்ணம் மூடிமறைத்துக் கொண்டு கொண்டு வந்துள்ளது.

அரசியல் ரீதியாக இதை நாம் அணுகினால்

1. நூல் சொல்லவரும் அரசியல் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியாத வண்ணம் மூடிமறைத்து, ஒரு கலங்கிய குட்டையாக தன்னை மாற்றி அள்ளிப் பருகக் கோருகின்றது. இதன்பின் நழுவல் போக்கு இதன் சாரமாக உள்ளது.

2. ஆசிரியர் கருத்து எது, மற்றவர்களின் கருத்து எது என்று பிரித்தறிய முடியாதவாறு, எல்லாமாகவும் தன்னை அரசியலில் இருத்த முனைகின்றது.

3. இந்தத் தரவுகள் ஒருதலைப்பட்சமானவை. இந்த நிகழ்வுகள் நடந்த எல்லா காலகட்டத்திலும், இதற்கு எதிரான இடதுசாரிய போராட்டங்களும், மார்க்சிய விமர்சனங்களும் இருந்திருக்கின்றது. நூலோ எதுவுமற்ற அரசியல் போக்காக, வரலாற்றைக் காட்ட முற்பட்டிருக்கின்றது. ஒன்றிலிருந்து ஒன்றை பிரித்து தனித்தனியாகக் காட்டுவதன் மூலம், எல்லாவற்றையும் தான் பார்ப்பது போன்ற அரசியல் பிரமையை உருவாக்கியிருக்கின்றது.

4. வர்க்கக் கண்ணோட்டம் சார்ந்த அரசியல் விமர்சனமாக, தன்னை அறிமுகப்படுத்தி வர்க்க அரசியலை சிதைக்க முனைகின்றது.

5. அரசியல்ரீதியான மார்க்கிய சொல்லாடல்களையும் அதன் அரசியல் அடிப்படைகளையும் நீக்குவதில் தொடங்கி வர்க்கக் கண்ணோட்டமற்ற இடதுசாரிய "மார்க்சியத்தை" இதில் நுழைக்கின்றது.

உதாரணமாக 1980 களில் புலி, புளாட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ், ரெலோ ….. முன்வைத்த இடதுசாரிய வரையறைகள் உள்ளடங்கிய "மார்க்சிய" சொல்லாடல்கள் மூலமான வர்க்கப் புரட்சியை நடத்தப்போவதாக கூறி முன்வைத்த திட்டங்கள் போன்றது. இவர்கள் முன்வைத்த சோசலிச தமிழீழம் போன்றது இந்த நூல்.

சிவத்தம்பி, கேசவன் (இந்தியா), கணேசலிங்கம் … போன்றவர்கள் முன்வைத்த மார்க்சியத்தையே, தன் விமர்சனத்தில் புகுத்தி அதை இடதுசாரியமாக காட்டுவது போன்றது.

இந்த நூலின் தரவுகளை ஒட்டி "முறிந்த பனைகள்" என்ற நூலை ஒப்பிட்டு ஆராய்ந்தால், "முறிந்த பனைகள்" நூல் மார்க்சிய அடிப்படையைக் கொள்ளாவிட்டாலும், முரணற்ற முதலாளித்துவத்தின் அடிப்படையிலான விமர்சனத்தை சமரசமின்றி வெளிக்கொண்டு வந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, வர்க்கம் மற்றும் மார்க்சிய அடிப்படையில், இது தன்னை நேர்மையான ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாக வெளிப்படுத்தவில்லை.

6. கட்டுரையின் இயல்பான ஓட்டத்தில் அதனை வாசிப்பதன் மூலம், இதன் அரசியலை இனங்காணாது தடுக்கும் வண்ணம் தடங்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பிரிவை அடையாளப்படுத்த ஆங்கில குறிச்சொல்லை அவசியமின்றி வில்லங்கமாகப் போட்டு, இடையீடு மூலம் அரசியல் புகுத்தப்படுகின்றது.

7. கடந்தகால போராட்டங்களில் தன்னை அரசியல் ரீதியாக வெளிப்படுத்தி அதை ஒருங்கிணைக்கவில்லை. தான் அதில் எந்த அரசியலை கொண்டுள்ளேன் என்பதை பிரதிபலிக்காத பார்வை, அதாவது வர்க்கத்தின் ஒரு பிரதிநிதியாக இருப்பதை கருத்துகள் மேல் வெளிப்படுத்தாத நழுவல் அரசியல் என்பது சமூகத்தை வழிகாட்ட எந்தவிதத்திலும் தகுதியற்றதாகின்றது.

8. ஆசிரியரின் கடந்தகால அரசியல் பாத்திரம் என்ன? அதில் அவரின் மார்க்சிய மற்றும் நடைமுறைகள் பற்றிய விமர்சனம், சுயவிமர்சனமற்ற பார்வை என்ன? இவற்றைச் செய்யாத வரை, இது கடந்தகால அதே அரசியலின் நீட்சியாகின்றது. இதற்கு வெளியில் இதை அணுக முடியாது. தூய்மையான கோட்பாட்டை வெற்றிடத்தில் யாரும் படைக்க முடியாது.

8. புலிகள் மற்றும் உலகநாடுகள் முதல் ஏகாதிபத்தியங்கள் வரை இலங்கை அரசியல் சூழலில் ஆற்றிய பங்கை இங்கு கவனத்தில் கொள்ளாத நிலையில், வெளிப்படும் பார்வைகளைக் கவனத்தில் கொள்ளாத பிரிவுக்கு அக்கம் பக்கமாக சார்ந்து வெளிப்படுகின்றது.

9. இனமுரண்பாடு கூர்மையடைவதற்கு முந்தைய வர்க்கப் போராட்ட காலம் முதல் பேரினவாதம் - குறுந்தேசியவாதம் நிலவிய காலங்கள் எங்கும், வர்க்கப் போராட்டம் நடந்திருக்கின்றது. அதை இந்த நூல் தன் அரசியல் உணர்வாக பிரதிபலிக்கவில்லை. அதை மூடிமறைத்தும் இருக்கின்றது. அதை மறுதலித்திருக்கின்றது. அதைச் சார்ந்தும், அதில் உள்ள தவறுகளை விமர்சித்தும் தன்னை வெளிப்படுத்தவில்லை. இந்த இடதுசாரியம் "வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்.." என்று கூறும் போது, கடந்த போராட்டத்தை, அது சார்ந்த தியாகங்களை நிராகரிக்கின்;றது. இங்கு குறிப்பாக "வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்.." என்று கூறும் போது, போராட்டத்தின் பெயரில் மக்களை ஏமாற்றி முன்வைத்த இடதுசாரிய அரசியல் போக்குகளை சரியாக வெளிக்கொண்டு வராத வரை, போராட்டம் என்பது மறுபடியும் ஏமாற்று தான். நூல் பற்றிய பொது மதிப்பீடு இதுவாகும்.

நூலின் உள்

நூலின் தலையங்கம் முன்வைக்கும் உள்ளடக்கம் அரசியல்ரீதியாகவே தவறானது. "வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்.." என்பதில் "வடிவங்கள் மாறலாம்" என்பது எதில் இருந்து எது? எங்கிருந்து எப்படி? வடிவங்கள் என்பது என்ன? அதன் அரசியல் வரையறைதான் என்ன?

1. ஆயுதப் போராட்டம் என்பது அரசியல் போராட்டத்தின் ஒரு வடிவமே ஓழிய, அவை இரண்டும் இரு வேறுபட்ட போராட்ட வடிவங்களல்ல. "வடிவம் மாறலாம்" என்றால், அரசியல்ரீதியாக தவறானது.

2. "போராட்டம் தொடரும்" என்றால், "வடிவங்கள் மாறலாம்" என்றால் பாராளுமன்றம், தேர்தல், இணங்கிப் போதல், பேரம் பேசுதல் … என்று தொடரும் மாறுபட்ட இந்த போராட்ட வடிவங்களா?. இல்லை என்றால் எது?. "வர்க்கப் போராட்டப் பாதையில் ஓரேகுடையின் கீழ் அணிதிரட்டுவது சாத்தியமில்லாத" "வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்.." என்ற அந்த வடிவம் எது? போராட்டம் தான் எது?

3. வர்க்க அடிப்படையை கைவிட்ட தேசியம், வர்க்கம் … தான் மாறுபட்ட வடிவம், அது தான் போராட்டம் என்று, இந்த தலையங்கமும், நூலின் உள்ளடக்கமும் வழிகாட்டுகின்றது.

சரி வடிவங்கள் மாறலாம் என்பது, எதன் நீட்சியில் எந்த அரசியல் நீட்சியில் இருந்து? இது எதை நியாயப்படுத்தி, எதைப் போராட்டமாகக் காட்டி தொடர முனைகின்றது? விமர்சனத்துக்குரிய இந்த நூலின் உள்ளடக்கம், தெளிவைத் தராத கலங்கிய குட்டையாக, தன் நழுவல் போக்கின் ஊடாக தன்னை அறிமுகம் செய்து வர்க்கப் போராட்டத்தை மறுக்கக் கோருகின்றது.

நூல் ஆசிரியர் தன் உரையில் "குறைந்தது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாவது இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படுகின்றது. இலங்கை மக்கள் எப்போது இந்த அவலத்தில் இருந்து மீள்வார்கள்.. " என்று கூறுகின்ற கூற்றில், நழுவல் போக்கு ஊடான குழப்பம். நூலின் உள்ளேயுள்ள குறிப்புகள், அதுவும் இதுவுமாக அங்குமிங்குமாக நழுவித் திணிக்கின்றது. "முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி" என்று எதைக் கூறுகின்றார்? ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, உள்ளூர் நிலப்பிரபுத்துவ மற்றும் தரகு முதலாளித்துவத்துக்கு எதிரான (புதிய) ஜனநாயகப் புரட்சியை, அதாவது முதலாளித்துவ தேசியத்தையா என்பதை இங்கு தெளிவாக்கவில்லை. இது தனித்து பூர்சுவா வர்க்கத்தால் அல்லது அதன் தலைமையில் அது நடக்க முடியாது. ஒரு புதிய ஜனநாயக புரட்சி ஊடாகத்தான், அதுவும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தான், ஜனநாயகப் புரட்சி நடக்க முடியும். இதுதான் சாராம்சத்தில் வர்க்கப் போராட்டம். வர்க்கப் போராட்டத்துக்கு இதற்கு வெளியில் வேறு நிகழ்ச்சி நிரல் தனித்துக் கிடையாது. (புதிய) ஜனநாயகப் புரட்சியைக் கடந்த வர்க்கப் போராட்டம் என்பது, அரசியல் திரிப்பாகும். இப்படியிருக்க "குறைந்தது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாவது" என்பது, இன்றைய கெடுபிடிக்கு பதிலான, இந்த அமைப்பில் ஜனநாயகம் என்றால் அது என்ன? அது "குறைந்தது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி" என்றவாறாக இங்கு சுட்டிக்காட்டுவது எதை? "வர்க்கப் போராட்டப் பாதையில் ஓரேகுடையின் கீழ் அணிதிரட்டுவது சாத்தியமில்லாத." "குறைந்தது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி" என்பது எந்த வர்க்கத்தின் குரல் என்பது தெளிவாகின்றது. அந்த வர்க்கம், வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லை என்று கூறுவது இங்கு இயல்பானது. அது "முற்போக்கு உள்ளடக்கம் கொண்டதோர் தேசியம் எந்த வர்க்கத்தினதும் தலைமையில் இருக்கலாம்" என்று கூறுவது இங்கு நூலின் அரசியலாகின்றது.

மகிந்த சிந்தனையும், இராணுவ மயமாக்கலும்

ஆசிரியர் உரையில் "மகிந்த சிந்தனையின் கருத்துக்கட்டுமானம் மகாவம்சமேயாகும்" என்ற அடிப்படைக் கருதுகோள் முற்றிலும் தவறானது. மகிந்த சிந்தனை என்பது ஓரு வர்க்கத்தின் சிந்தனை. அந்த வர்க்கம் சுரண்டுவதற்கு எந்த வகையான வடிவத்தைக் கொண்டு, எதை அடிப்படையாகக் கொண்டு அதைக் கையாளுவது என்பதை தாண்டி, இந்த சிந்தனைக்கு வேறு அரசியல் விளக்கம் இருக்க முடியாது. இதனடிப்படையில் மகிந்த சிந்தனை உருவாகின்றது. இதற்கு ஏற்ப சமூகத்தின் பல்வேறு சமூகக் கூறுகளை தன்னுடன் இணைத்துக் கொள்கின்றது.

இங்கு "மகிந்த சிந்தனையின் கருத்துக்கட்டுமானம் மகாவம்சமேயாகும்" என்றால், இந்த மகாவம்சம் ஏற்கனவே நிலப்பிரபுத்துவ சமூகத்தின் தொடர்சியூடாக அதன் தொங்குதசையான புத்த மதத்துடன், அதன் நம்பிக்கைகளுடன் தொடர்ந்து இணைந்து வந்திருக்கின்றது. புதிதாக இது மகிந்த சிந்தனையால் தோண்டி எடுக்கப்படவில்லை. இதில் ஒரு கூறை எடுத்துக் காட்டுவது என்பது கூட, இதன் வரலாற்றுக்கு புதிதல்ல. இது காலாகாலமாக நடந்து வந்ததுதான். இந்துமதம் போல், அதன் சாதிய நிலப்பிரபுத்துவ கட்டமைப்பு போல் தான் மகாவம்சமும். தமிழ் குறுந்தேசியத்தின் பின் இந்துமதக் கூறுகள் இணைந்திருப்பது போல் தான், சிங்கள பேரினவாதத்தின் பின் மகாவம்சமும் இயங்குகின்றது. இங்கு இரண்டு பிற்போக்கான தேசியக் கூறுகளின் பின்னும், அரை நிலப்பிரபுத்துவ சமூகக் கூறுகள் உள்ளடங்கிய மதம் சார்ந்த அதன் உள்ளடக்கமும் இணைந்தே உள்ளது. பிற்போக்கு தேசியத்தின் அரசியல் சமூக பொருளாதார கட்டுமானத்தின் பின், இதன் இருப்பானது இயல்பாகின்றது. இங்கு மகாவம்சத்தை எடுத்தால்

1. மகாவம்சம் வரலாறு பற்றிய ஒரு தொகுப்பு. ஓரு சிந்தனையோ, சித்தாந்தமோ அல்ல.

2. மகாவம்சம் சிங்கள இனம் என்ற அடிப்படையில், இனவாத அடிப்படையில் தொகுக்கபட்ட ஒரு நூலல்ல.

3. இது பௌத்தத்தை முதன்மைப்படுத்திய வரலாற்றைச் சொல்லும், குறுகிய மதநூல் அல்ல.

மகிந்த சிந்தனைக்குரிய அரசியல் அடிப்படையை வழங்கும் சிந்தனை எதையும் மகாவம்சம் கொண்டிருக்கவில்லை. இங்கு தொகுக்கப்பட்ட காலத்தின் சூழல் சார்ந்து, இதை நாம் குறிப்பாக அணுக வேண்டும். மகாவம்சம் மகிந்தாவின் சிந்தனைக்குரிய கோட்பாட்டு அடிப்படையை கொண்ட நூலல்ல. மகிந்த சிந்தனை இன்றைய சமூக பொருளாதார அமைப்பில் இருந்து உருவானது. இது பிரபாகரனின் சிந்தனைக்கு மாறுபட்டதல்ல. இதன் சித்தாந்தம் என்பது பிரபாகரன், மகிந்தா …என்ற அனைத்து வலதுசாரிகளினதும் அடிப்படையான வர்க்க கோட்பாடாகும். இந்த வர்க்கம் தன் ஜனநாயக வடிவங்கள் மூலம் சுரண்டி ஆளமுடியாத போது, கையாளும் பாசிச வடிவம் தான் அதன் சித்தாந்த தத்துவ அடிப்படையாகும்.

இப்படியிருக்க "ஜனாதிபதி மகிந்தாவை இராணுவவாதத்தையும், பௌத்த சிங்கள மத அடிப்படைவாதத்தையும் தனது இரு பெரும் சகாக்களாக வைத்துக் கொள்ள வைத்துள்ளது. இதுவே மகிந்த சிந்தனையின் இராணுவக் கோட்பாடுகளின் அடிப்படையாகும்" (பக்கம் 74) இப்படி மகிந்தா சிந்தனையை, அதன் வலதுசாரிய சுரண்டும் வர்க்கத்தின் பாசியமயமாக்கலின் வெளிப்பாடாகக் காட்டாது, சிங்கள பௌத்த மதவாதமாக காட்டும் அரசியல் என்பது திரிபாகும்.

தன் சுரண்டும் வர்க்க நலன் சார்ந்த பாசிசமயமாக்கலுக்கு சமூகத்தின் பிற்போக்கான சமூகக் கூறுகளில் இருந்து, தன்னை பலப்படுத்தும் வண்ணம் பல கூறுகளை உள்வாங்கிக் கொண்டுதான் அது இயங்குகின்றது. இது பிற்போக்கான சமூக இருப்பில் எங்கும் தளுவியது. இது மகிந்த சிந்தனையின் விதிவிலக்கான ஒரு அரசியல் கூறல்ல. இதை முதன்மைப்படுத்தி, விதிவிலக்கான கூறாக காட்டுவது அரசியல் கண்கட்டு வித்தையாகும்.

இங்கு மகிந்த சிந்தனை என்பது ஒரு வர்க்கத்தின் பாசிசமயமாக்கல் தான். அது தன்னை நிலைநிறுத்த, இனவொடுக்குமுறையைதான் மையப்படுத்தியது. அதேநேரம் புலிப் பாசிசத்தைக் காட்டித்தான், தன் பாசிசமயமாக்கலை அனைத்துத் துறையிலும் விரிவாக்கியது. இங்கு புலிப்பாசிசமும் இல்லையென்றால், மகிந்த சிந்தனையும் இல்லை. அதாவது ஒரு பாசிசத்தை முன்னிறுத்தி மற்றொரு பாசிசம் தன்னைப் பலப்படுத்தியது.

மகிந்த சிந்தனையிலான பாசிசமயமாக்கலும், அதன் இருப்பு சார்ந்த இராணுவமயமாக்கலுக்குமான அடிப்படையான சமூக பொருளாதார அரசியல் கட்டுமானத்தை இனமுரண்பாடும், அதில் இயங்கிய புலிப் பாசிச பயங்கரவாதமும் தான் உருவாக்கி கொடுத்தது. இந்த எல்லைக்குள் தான் இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை, மகிந்தவின் பாசிச சிந்தனையை பலப்படுத்தியது. இங்கு மகிந்தாவின் தலைமைக் கூறோ, அவரின் குடும்பத்தினது அதிகாரமோ, மகாவம்சமோ, சிங்கள சாதிக் கூறுகளோ, … இந்த மகிந்தவின் பாசிசத்தை (சிந்தனை) உருவாக்கவில்லை. இவை அனைத்தும் இனமுரண்பாட்டைச் சுற்றியும், புலி பாசிசப் பயங்கரவாதத்தைக் காட்டியும் பாசிசமயமாக்கிய போது, அக்கம் பக்கமாகவே இவை உதவின. இங்கு மகிந்தாவுக்கு பதில், எக்ஸ் என்று யாராக இருந்தாலும் இதுதான் இலங்கை ஆளும் வர்க்கத்தின் அரசியல் தெரிவாகும்.

இது இந்த சமூக அமைப்பில், இப்படித்தான் சுரண்ட முடியும் என்ற அடிப்படையான அந்த வர்க்கத்தின் நிபந்தனையின் பின் உருவானது. இங்கு ஆளும் வர்க்கங்களுக்கு உள்ளான முரண்பாடுகள், குடும்ப அதிகாரம் சார்ந்த முரண்பாடுகள், ஏகாதிபத்திய முரண்பாடுகள் … அனைத்தும் சிறுசிறு மாற்றங்களை வெளித்தோற்றங்களில் மாறுபட்டதாக வெளிப்படுத்துமே ஓழிய, பாசிசமயமாக்கல் என்பது மகிந்தவுக்கு முன்னமே இருந்து வருவதுதான். இதன் குறிப்பான குணாம்சரீதியான வெளிப்பாடுகள் தான் இங்கு மாறுபடுகின்றதே ஒழிய அதன் அடிப்படை சமூகப்பொருளாதாரக் கூறல்ல.

இங்கு இக்காலத்தில் இதற்கு தலைமை ஏற்றவர் மகிந்த என்பதைத் தாண்டி, இந்த சிந்தனை அவரால் உருவாக்கப்பட்டதல்ல. அவர் தன்பெயரால் அதைக் கூறுவதால், அதன் அடிப்படையில் அதைக் காண்பது வேறு. இந்தச் சித்தாந்தம் ஏற்கனவே இருந்து வந்தது தான். இது ஆளும் வர்க்கத்தின் அரசியல் சித்தாந்தம்.

அதன் இராணுமயமாக்கல் என்பது, யுத்தத்தின் போக்கில் நிகழ்ந்த ஒன்று. புலிப் பாசிசப் பயங்கரவாதம், இதன் அடிப்படையில் ஏகாதிபத்தியம் வரை கையாண்ட அணுகுமுறை தான் இராணுவமயமாக்கலில் குறிப்பாக பங்காற்றியது. இந்த அரசியல் நிபந்தனையின்றி இது நடந்திருக்க முடியாது. "வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்.." என்ற கட்டுரையாளர் வர்க்கரீதியான மதிப்பீட்டைக் கடந்து, மகாவம்சம், சாதியம் போன்ற கூறுகளுக்கு ஊடாக மகிந்த சிந்தனையைக் காட்ட முற்படுகின்றார். அடிப்படையான மார்க்சிய அடிப்படைகளையும் அதன் வர்க்க கூறுகளையும் மறுத்து தான், இந்த நூல் எழுதப்பட்டு இருக்கின்றது.

இங்கு "மகாவம்சக் கருத்துக் கட்டுமானத்துக்கு எதிராக ஒரு கலாச்சாரப் புரட்சியே தேவைப்படும் நிலையில்" என்று ஆசிரியர் தன் உரையில் கூறுகின்ற கூற்றை இங்கு இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க முடியும். அனைத்துப் பிற்போக்கு சமூக கூறுகள் மீதும் போராட்டம் என்பது, ஒரு வர்க்கப் போராட்டத்தின் உள்ளார்ந்த அரசியல் கூறாகும். இப்படி இருக்க மகாவம்சத்தை முதன்மைப்படுத்துவதும், அதை நோக்கி சமூகத்தின் கவனத்தைக் குவிப்பதும் இனமுரண்பாட்டை தீவிரமாக்குவதுதான். மதரீதியான முரண்பாட்டை (தமிழ்) மார்க்சியவாதிகள் முன்னிலைப்படுத்தக் கோருகின்ற அரசியல் கண்ணோட்டம், சுயநிர்ணயத்தை முன்னிலைப்பபடுத்திய இன ஐக்கியத்தை குழிபறிக்க முன்வைக்கும் அரசியல் அடிப்படையைக் கொண்டது. "இலங்கையில் சித்தாந்தக் களத்தில் மகாவம்சக் கருத்துக் கட்டுமானத்துக்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தை மார்க்சியர்கள் நடத்த வேண்டும்" என்று கூறும் ஆசிரியர், இதைச் செய்யாத போராட்டத்தை "சப்பாத்து' மார்க்சியம் என்று கூறுகின்றார். இப்படி இலங்கை மார்க்சியவாதிகள், மதம் ஊடாக இனமுரண்பாட்டைக் கூர்மையாக்கக் கோருகின்றார். குறிப்பாக இதை "… சித்தாந்தப் போராட்டம் சிங்கள மக்கள் மத்தியில் நடத்தப்பட வேண்டும்" என்கின்றார். இப்படி இனப்பிளவை மதப்பிளவாக்க கோரும் அரசியல், மகாவம்சம் போன்ற பிற்போக்கு கூறுகளுக்கு எதிராக மார்க்சியம் செயலாற்ற வேண்டிய பொதுக்கூறுகளில் ஓன்றை முதன்மையாக்கி, அதன் மூலம் மார்க்சியத்தையும் அதன் அடிப்படையிலான வர்க்க சிந்தனை மற்றும் போராட்டத்தையும் சிதைக்க கோருகின்றது நூல்.

இந்த அடிப்படையில் தான் மகிந்த சிந்தனையை, இது சார்ந்த ஒன்றாக காட்டிவிட முனைகின்றது இந்த நூல். மகாவம்சத்தை தகர்ப்பதன் மூலம், மகிந்த அரசையும் அதன் சிந்தனையையும் இல்லாதாக்க முடியும் என்ற ஏமாற்றை இந்த நூல் செய்கின்றது.

இலங்கை கடந்த மற்றும் நிகழ்கால அரசியல் களம் மீதான பார்வைகள், விளக்கங்கள் அனைத்தும், வர்க்க அரசியலை அரசியல் நீக்கம் செய்வதில் இருந்துதான் அணுகுகின்றது. 1960 களில் சர்வதேசரீதியாக மார்க்சியம் தன்னை புரட்சிகரமான கூறாக வெளிப்படுத்திய அரசியல் அடிப்படைகளை மறுக்கும் வண்ணம் அதை "சப்பாத்து' அரசியலாக காட்ட அக்கால கட்சிகளின் தவறுகளை பயன்படுத்தி விடுகின்ற போக்கு இந்த நூல் முழுக்க விரவிக் கிடக்கின்றது.

ஒரு கட்சி வர்க்கக் கட்சியாக இருக்க, அந்த வர்க்கத்தை சார்ந்த மக்களை அணிதிரட்டி வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டிராதவரை வர்க்கரீதியான சொல்லுக்குள் எந்த நேர்மைக்கும் இடமில்லை.

"வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்.." ஆசிரியர் கூறுகின்றார் "சிங்கள பேரகங்காரவாதம் கோலோச்சும் வரை வர்க்கப் போராட்டப் பாதையில் இலங்கை மக்கள் அனைவரையும் இனவேறுபாடுகளை மறந்து வர்க்கப் போராட்டப் பாதையில் ஓரேகுடையின் கீழ் அணிதிரட்டுவது சாத்தியமில்லாதது. பிற மக்கள் சிலவேளைகளில் மிகத் தயக்கத்துடன் முனந்தாலும் பௌத்த-சிங்கள …. மக்கள் வரமாட்டார்கள்" (பக்கம் 285) இப்படி மார்க்சியத்தின் பெயரில், வர்க்கப் போராட்டத்தின் பெயரில் கூறப்படுகின்றது. இங்கு இந்த நூலின் நோக்கம் மிகத் தெளிவானது. புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய மாவோயிச கட்சிக்கு எதிராக இது முன்வைக்கப்படுகின்றது. இங்கு சிங்கள மக்கள் வரமாட்டார்கள் என்று கூறுகின்ற, மார்க்சியத்தையும் வர்க்கப்போராட்டம் பற்றி நூல் எழுதுகிற அரசியல் யோக்கியத்தையும் நாம் காண்கின்றோம். இதைத்தான் தமிழ்தேசிய வலதுசாரிய குழுக்கள் கூறின, கூறுகின்றன. இந்த அடிப்படையில்தான் புலிகள் சிங்கள மக்களை கொன்றனர். மகாவம்சத்தை தகர்க்க கண்டி தலதா மாளிகை மேல் குண்டுத் தாக்குதலும் நடத்தினர்.

"பௌத்த-சிங்கள …. மக்கள் வரமாட்டார்கள்" என்ற கூறும் ஆசிரியர் தன் முன்னுரையில் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே, தனித்தோ அல்லது ஒன்றிணைந்தோ, குறைந்தது முதலாளித்துவ தேசிய ஜனநாயகப் புரட்சியாவது நிச்சயமாக நடைபெறும்" என்று கூறுகின்றதைப் பாருங்கள். இங்கு முரணான, அதே நேரம் "தேசிய ஜனநாயகப் புரட்சி" என்பது வர்க்கப் போராட்டமற்ற ஒன்றாக முன்வைக்கபடுகின்றது. இது புதிய ஜனநாயகப் புரட்சிக்கு முரணாக, 1960 களில் சோவியத் முன்தள்ளிய "தேசிய ஜனநாயகப் புரட்சிக்" கோட்பாடாகும். "தேசிய" மற்றும் "புதிய" என்ற வேறுபட்ட வர்க்கத்தின் ஜனநாயக புரட்சி அடிப்படையில், வர்க்க சாரத்தைக் கொண்டது. "தேசிய" ஜனநாயக புரட்சியில் வர்க்க அடிப்படையை மறுக்கின்ற, இந்த சமூக அடிப்படையில் தேர்தல் மூலமான புரட்சியைக் கோரும் சமாதான சகவாழ்வு கோட்பாடாகும்.

இங்கு உள்ள அடுத்த திரிபு "வர்க்கப் போராட்டப் பாதையில் இலங்கை மக்கள் அனைவரையும் இனவேறுபாடுகளை மறந்து" வரமாட்டார்கள் என்ற கூற்று, இலங்கையில் வர்க்கப் போராட்டத்துக்கான அரசியல் தளத்தை இல்லாதாக்குகின்றது. இதை மார்க்சிவாதியாக தம்மைக் கூறிக்கொண்டு கூறுகின்றனர். குறைந்தது இனங்களுக்கு உள்ளே கூட தனித்தனியாக வர்க்க அடிப்படையில் அணிதிரட்ட முடியாதா என்ற கேள்வியும், வர்க்கரீதியாக அணிதிரட்ட முடியாது என்றால் இந்த நூலின் நோக்கம், அணிதிரட்ட முனைகின்ற போக்கை அரசியல் ரீதியாக இல்லாதாக்குவது தான். இங்கு அணிதிரட்ட முடியும் என்றால் அல்லது இரு தனிதனிப் பகுதியாக அணிதிரள முடியும் என்றால், இவ் இரண்டு வர்க்க அணியும் ஒன்றிணைந்து செயல்படுவதை வர்க்கப் போராட்டத்தின் அரசியல் முன்நிபந்தனையாக்குகின்றது.

இங்கு "தேசிய ஜனநாயகப் புரட்சி" பற்றி ஆசிரியரின் ஜனநாயக கண்ணோட்டத்தை புரிந்து கொள்ள எகிப்தில் நடந்ததைப்பற்றி கூறுகையில் "…அமெரிக்க உதவியுடன் இராணுவ எதேச்சதிகாரம் நிலவிவந்த நாடுகளாகும். இதன் இராணுவ சர்வாதிகார குணாம்சத்தை முடிவுக்கு கொண்டுவந்து முதலாளித்துவ ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் இவை நிறைந்த பலனைத் தந்துள்ளது. இனியும் தரவுள்ளது" (பக்கம் 282) என்று கூறுகின்ற எல்லைக்குள் தனிமனிதனை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்த அமெரிக்காவிற்கு ஏற்ற மீள் இராணுவ ஜனநாயகத்தை இங்கு ஜனநாயகமாக்கி விடுகின்ற அரசியலே இங்கு அரங்கேறுகின்றது.

முதலாளித்துவ ஜனநாயகம் என்பது, சாராம்சத்தில் தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்களையும் தரகு முதலாளித்துவத்தையும் தூக்கியெறியாத ஜனநாயகம் என்பது, போலியானது மோசடித்தனமானது. ஆட்களை நீக்குவது, மாற்றுவது, பண்புரீதியான மாற்றங்களை கொண்டுவருவது ஜனநாயகமல்ல. "தேசிய ஜனநாயகம் என்ற பதப் பிரயோகம் இங்கு சற்று மயக்கத்தைத் தருகின்றது. அதற்கு இரு அர்த்தங்களுண்டு. ஒன்று ஒரு தேசத்தின் ஜனநாயகம் சம்மந்தபட்டது. மற்றையது ஒரு நாட்டினில் (ஒரு தேசத்திலல்ல) உள்ள தேசிய இனங்கள், மற்றும் பிறபிரிவு மக்களின் தேசிய ஜனநாயக உரிமைகள் சம்மந்தப்பட்டது" (பக்கம் 283) இங்கு ஜனநாயகம் என்பது எந்த வர்க்கத்தினது, எந்த சமூக பொருளாதாரம் சார்ந்தது என்பதை, அரசியல் ரீதியாக மறுப்பதில் இருந்து இது தொடங்குகின்றது. அதனால் தான் புதிய ஜனநாயகத்துக்கு பதில் "தேசிய ஜனநாயகம்" என்ற வர்க்க நீக்கம் செய்த, 1960 களில் சோவியத் முன்வைத்த சமாதான சகவாழ்வு கோட்பாடு இங்கு மீள முன்வைக்கப்படுகின்றது.

"இலங்கை மக்கள் அனைவருக்கும் உரிய தேசிய ஜனநாயகம் என்பது எது? ….ஜனநாயக உரிமைகளை மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையேயான பிரச்சனை. அவ் ஆக்கிரமிப்பாளர்கள் உள்நாட்டினராகவும் இருக்கலாம், அன்னியராகவும் இருக்கலாம்." (பக்கம் 283) இப்படி ஜனநாயகம் பற்றி குறுக்கி காட்டும் இந்த அரசியல், பாராளுமன்ற மற்றும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டம் சாராம்சத்தில் தேசியமாக இருப்பதை மறுதலிக்கின்றது. அதை ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டும் காட்டி, நிலவும் தேசவிரோத ஆட்சியை தக்க வைக்கின்ற அரசியலை இங்கு முன்தள்ளுகின்றது. .

"ஒரே நிலப்பரப்பை எவ்விதம் தமக்குள் சகோதரத்துவத்துடன் பங்கிட்டுக் கொள்வது என்பதே இன்று இலங்கைத் தீவின் முன்னுள்ள கேள்வியாகும். இதனால்தான் புதிய தலைமுறை இடதுசாரிகள் அனைவரும் ஒற்றையரசை முழுமையாக நிராகரிக்கின்றனர்" என்பது சுயநிர்ணய உரிமையை அரசியல்ரீதியாக நிராகரித்த பின்னணியில், பிரிவினையை இங்கு முன்னிறுத்துகின்றது. ஆளும் வர்க்கத்தின் ஒற்றை ஆட்சி, பாட்டாளி வர்க்கத்தின் ஓன்றுபட்ட ஆட்சியில் இருந்து வேறுபட்டது. பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட ஆட்சி சுயநிர்ணயத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு இடதுசாரிகள் ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியைத்தான் தான் கோருகின்றனர். ஆளும் வர்க்கத்தின் ஒற்றை ஆட்சியை நிராகரிக்கின்றனர். இங்கு "… புதிய தலைமுறை இடதுசாரிகள் அனைவரும் ஒற்றையரசை முழுமையாக நிராகரிக்கின்றனர்" என்பது ஒன்றுபட்ட பாட்டாளிவர்க்கத்தின் ஆட்சியை நிராகரிப்பதாக "புதிய தலைமுறை இடதுசாரிகள்" பெயரால் கூறப்படுகின்றது. "இலங்கைத் தீவின் முன்னுள்ள கேள்வி" பிரிவினையை எப்படி நடத்துவது என்பதை பற்றியதாக இலங்கை அரசியலை குறுக்கிக் காட்டிவிடுகின்ற பிரிவினைவாத குறுந்தேசிய அரசியல் இடதுசாரியத்தின் பெயரில் மீள "வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்.." என்ற கோசத்தின் கீழ் முன்வைக்கப்படுகின்றது. இதுதான் கூறுகின்றது. "இனவேறுபாடுகளை மறந்து வர்க்கப் போராட்டப் பாதையில் ஒரேகுடையின் கீழ் அணிதிரட்டுவது சாத்தியமில்லாத" ஒன்று தான் வர்க்கப் போராட்டம் என்கின்றது இந்த நூல்.

இந்த நூலில் அரசியலை புரிந்து கொள்ள மேலும் சில உதாரணங்கள்

1. "புலிகளின் 'தேசியத் தற்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வால்" காலாகாலமாக இருந்து வந்த இஸ்லாமியக் குடியிருப்புகள் தற்போது இல்லை. இலங்கைத் தீவில் தனது மொழிசார் இனவழித்தூய்மையை இழக்காமல் இன்றுவரை இருந்து வரும் ஓரே மாவட்டம் யாழ்ப்பாணம்தான்." (பக்கம் 5) இப்படி இந்த நூல் புலிப் பாசிட்டுகள் இன்னொரு சிறுபான்மை இனப்பிரிவுக்கு எதிராக நடத்திய இனவாதக் கொடூரங்களுக்கு பாசிச விளக்கமும், யாழ் மாவட்ட இனத்தூய்மை பற்றி பாசிச நச்சுக் கருத்துகளையும் இந்த நூல் இப்படி முன்வைக்கின்றது.

2.".. தண்ணீர் பிரச்சனைக்காக தமிழரும் சிங்களவரும் தமக்குள் மோதிக் கொண்டிருந்தார்கள்" (பக்கம் 33) இப்படி மாவிலாறில் புலிகள் யுத்த முனைப்புக்காக நடத்திய கூத்தை, இந்த நூல் இப்படித் திரித்து "தமிழரும் சிங்களவரும் தமக்குள் மோதி"யதாக முன்வைக்கின்றது.

3. "தமிழ்ப் போராளிகளைப் பொறுத்தவரை அவர்கள் தேசிய இன அடக்குமுiறைக்கு அடிப்படையான வர்க்கக் காரணிகளையும் இதன் இயக்க போக்கையும் தவிர மீதமெல்லாவற்றையும் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டவர்களாகும்." (பக்கம் 60) என்று நூல் கூறும் போது, அதன் வலதுசாரிய அரசியல் வக்கிரத்தையும், அதன் பாசிசத்தையும் அரசியல் நீக்கம் செய்து மீள அரங்கேற்ற முனைகின்றது. "மிகத் தெளிவாகப் புரிந்து கொண்ட" கொலைகள் முதல் பேச்சுவார்த்தையில் நடத்திய கேலிக்கூத்துகள் அனைத்தும், காதுக்கு பூவைக்கத்தான் உதவும். "தேசிய இன அடக்குமுறைக்கு அடிப்படையான வர்க்கக் காரணிகளையும் இதன் இயக்க போக்கையும் தவிர" என்பது, இது வலதுசாரி அரசியலின் புரிதல் என்பதை மறுதலிக்கின்றது.

4. "அவர்கள் வளரும் சக்திகள், ஆகவே வீழ்த்தப்பட்டவர்கள் வீழ்ந்தே இருக்க மாட்டார்கள்" (பக்கம் 61) என்று புலியைப் பற்றி கூறுகின்ற அரசியல் நீட்சியை இந்த நூல் தன்ளுள் பிரதிபலிக்கின்றது.

5. "விளிம்பு நிலையோரின் வறுமைக்கு காரணங்கள்" (பக்கம் 57) வகைப்படுத்தி 11 காரணத்தில் சுரண்டல் காரணமாக இருக்கவில்லை. சுரண்டல் காரணமல்ல என்பதுதான் இந்த நூலின் கண்டுபிடிப்பு. அன்னிய மூலதனமோ, அன்னியக் கடனோ, அன்னிய சூறையாடலோ காரணமல்ல என்பது இந்த நூலின் மற்றொரு கண்டுபிடிப்பு. இங்கு ஏகாதிபத்தியம் பற்றிய இருட்டடிப்பு இந்த நூல் எங்கும் நிறைந்து வெளிப்படுகின்றது.

6. "இந்திய மீனவர்களிடம் மீன்பிடி உயர் கருவிகளும், தொழில் நுட்பமும், மீனவமும் உண்டு?. தமது இப் பலத்தை வைத்துக்கொண்டு அவர்கள் போட்டி போடுகிறார்கள்." (பக்கம் 19) அத்துமீறிய மீன்பிடியையும், தடைசெய்யப்பட்ட வள்ளம் மற்றும் வலையையும் கொண்டு, கச்சதீவு சுற்றிய மீன்பிடி உரிமையை கொண்டு, எல்லை கடந்து இலங்கை கடலில் நடத்தும் சூறையாடலை, சுதந்திரமான போட்டியில் கடலை சூறையாடக் கோரும் முதலாளித்துவ அரசியல் பித்தலாட்டத்தை இந்த நூல் இப்படி முன்வைக்கின்றது.

7. "தமிழ் பகுதிகளில் நடந்த சிங்களக் குடியேற்றங்களின் நோக்கம் சிங்களக் கட்சிகளின் பாராளுமன்ற ஆசனங்களை அதிகரிப்பதாகவே இருந்தது" (பக்கம் 292) என்கின்றது. சுரண்டும் வர்க்கங்கள் மக்களை சுரண்ட இனமுரண்பாட்டை முன்தள்ளியதை மறுத்து, அதன் விரிவான இனவழிப்பு கூறுகளை மறுத்து இது முன்வைக்கப்படுகின்றது.

8. "2005 ல் இருந்தே தரகுமுதலாளித்துவ அணியினர் இலங்கையின் மூலவளங்களை அபகரிக்கும் முயற்சியும் ஆரம்பமானது. இனவழிப்பின் போதும் இது நடந்து முடிந்தபின்னும் தொடருகின்றது" (பக்கம் 294) என்ற கூறுகின்ற கோட்பாடு இரண்டு பிரதான போக்;கை மறுக்கின்றது.

1. 2005 முன் தரகு முதலாளித்துவம் மூலவளங்களை அபகரிக்கவில்லை என்று கூறுகின்றது.

2.ஏகாதிபத்தியங்கள் முதல் இந்தியா வரை மூலவளங்களை அபகரித்ததை, அபகரிப்பதை இது மறுக்கின்றது.

9. "மகிந்த தனது இராணுவத்தை பலப்படுத்துவதற்கு இந்தியாவை ஒட்டிய அச்சம் பிரதான காரணமாகவுள்ளது என்று கருதுவது தவறல்ல." (பக்கம் 192) இப்படி மகிந்தாவின் வர்க்க பாசிசத்தை மூடிமறைத்து, காரணம் கூறுகின்ற இடதுசாரி புரட்டை இந்த நூல் முன்வைக்கின்றது.

10. "இலங்கையில் அவல நிலைக்குக் காரணம் பண்பாட்டுக் கட்டுமானமா அல்லது அரசுக் கட்டுமானமா என்றோர் கேள்வியை எழுப்பி ஆராய முற்படுவது ஒன்றும் தவறல்ல. தவறோ, தவறில்லையோ பண்பாட்டுக் கட்டுமானத்தில் அடிப்படை மாற்றம்..." பக்கம் 230) என்று அரசு கட்டுமானமாக உள்ள வர்க்க அடிப்படை அல்லாத பண்பாட்டு கூறாகவும் இருக்கலாம் என்று கூறி வர்க்கக் கூறை மறுதலிக்கின்றது.

11. "1977இல் ஜே.ஆர் தலைமையில் நடந்த எதிர்ப்புரட்சி, இலங்கையின் ஏகாதிபத்திய எதிர்ப்பு வரலாற்றுக்கொரு பின்னடைவாக இருந்தது." (பக்கம் 231) இப்படி 1977 முன் ஒரு புரட்சிகர அரசு இருந்ததாக கூறுகின்ற புரட்டையும் அதன் அரசியல் அடிப்படையையும் காண்கின்றோம்.

12. "இராசதுரையிலும் இதைக் காணலாம். கருணா அம்மானிலும் இதைக் காணலாம். இது ஊசாலாட்டமோ, சந்தர்ப்பவாதமோவல்ல. கிழக்கு மக்களின் வர்க்க, தேசிய நட்புறவின் விளைவான இராஜதந்திரமாகும்." பக்கம் 267) என்று கூறுகின்ற கூற்று, துரோகத்தை நியாயப்படுத்துகின்ற தங்கள் அரசியலை இனம் காட்டுகின்றனர். தம்மை யார் என்பதை, தாங்கள் என்ன செய்வோம் என்பதை அரசியல் ரீதியாக வெளிப்படுத்துகின்றது இது.

இப்படி பல, இந்த நூலில் காணமுடியும்

பி.இரயாகரன்

06.08.2011


பி.இரயாகரன் - சமர்