புளொட்டுடன் இணைந்த சுப்பையா என்ற கௌரிகாந்தன்

டொமினிக் (கேசவன்) அரசியல் வகுப்புகளையும் அரசியல் பாசறைகளையும் நடத்திக் கொண்டிருந்த அதேவேளை, தள நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். தளம் வந்திருந்த படைத்துறைச் செயலர் கண்ணன் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச பிரிவுகளையும் சேர்ந்த அமைப்பாளர்களையும் மற்றும் மகளீர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்பு போன்றவற்றில் செயற்படுபவர்களையும் சந்தித்து பேச விரும்புவதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச பிரிவுகளிலும் செயற்படுபவர்களையும் தனித்தனியே சந்திப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டது. மகளீர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்புக்களும் தனித்தனியேயான சந்திப்புக்களை ஏற்பாடு செய்திருந்தனர். கண்ணனுடனான சந்திப்புக்களில் பெரும்பாலும் புளொட்டின் நடைமுறை சம்பந்தமான விடயங்களே கலந்துரையாடப்பட்டன. அரசியல்ரீதியான கேள்விகளுக்கு பதிலளிக்க கூடியளவுக்கு கண்ணனிடம் அரசியல் அறிவு இருந்திருக்கவில்லை. இருந்தபோதிலும் புளொட்டின் படைத்துறை செயலரை சந்தித்ததில் பெரும்பாலானவர்கள் திருப்தி கொண்டவர்களாக காணப்பட்டனர்.

 

 

 

டொமினிக்(கேசவன்)

இந்த காலப்பகுதியில் டொமினிக்குடனான(கேசவன்) சந்திப்புக்களின் பின் சுப்பையா என்றழைக்கப்பட்ட கௌரிகாந்தன் டொமினிக்கால் புளொட்டுக்குள் உள்வாங்கப்பட்டார். கௌரிகாந்தன் இடதுசாரிஇயக்க பின்னணியை கொண்டவர் என்பதோடு "கிராமிய உழைப்பாளர் சங்கம்" என்ற அமைப்பிலும் செயற்பட்டு வந்த ஒருவர். டொமினிக்கால் புளொட்டுக்குள் உள்வாங்கப்பட்ட கௌரிகாந்தனுக்கு அரசியல் வகுப்புக்கள் அரசியல் பாசறைகள் நடத்துவதற்கான விடயங்களை தொகுப்பதற்கான வேலைகள் வழங்கப்பட்டது. கண்ணாடிச்சந்திரனால் எப்படி எஸ்ஆர் என்றழைக்கப்பட்ட புவிராஜகீர்த்தி சிவராம் உள்வாங்கப்பட்டவுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் செயற்பட்டவர்களுக்கு அரசியல் வகுப்புக்கள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டதோ அதேபோல, டொமினிக்கால் உள்வாங்கப்பட்ட கௌரி காந்தனும் அமைப்புக்குள் உள்வாங்கப்படவுடனேயே அரசியல் வகுப்புகளுக்கும் பாசறைகளுக்குமான தயாரிப்புகளை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்.

அரசியல் - இடது சாரி அரசியல் - ரீதியாக வளர்ச்சி அடைந்தவர்கள் அல்லது இடதுசாரி அரசியல் பின்னணியை கொண்டவர்கள் பெருமளவுக்கு புளொட்டில் அங்கம் வகிக்காததால் ஏற்பட்ட வறுமை நிலையே இடதுசாரி அரசியல் பேசும் அல்லது இடதுசாரி அரசியலில் பேச்சுவன்மை கொண்டோரை புளொட்டுக்குள் உள்வாங்குவதில் ஒருவகை அவசரத்தன்மை காணப்பட்டதற்கு காரணமாய் அமைந்திருந்தது என எண்ணுகிறேன். கௌரிகாந்தன் டொமினிக்கால் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து கொண்டிருந்த அதேவேளை, பாசறைரவி, ரகு, பிரசாத் போன்றவர்களும் எஸ்ஆர் என்று அழைக்கப்பட்ட சிவராமும் அரசியல் வகுப்புக்களை நடத்திக் கொண்டிருந்தனர். குறிப்பாக எஸ்ஆர் என்றழைக்கப்பட்ட சிவராம் படைத்துறை செயலர் கண்ணனின் வருகையை அடுத்து கண்ணனை சந்தித்து பேசியிருந்தார். எப்பொழுதும் சூழ்ச்சியே உருவான கண்களுடனும், பதவி மோகத்துடனும், புளொட் மகளீர் அமைப்பினர் உட்பட சகல பெண்கள் மீதான காமம் படர்ந்த பார்வையுடனும், புளொட்டுக்குள் வலம்வந்த சிவராமால் படைத்துறை செயலர் கண்ணனை இலகுவாக தனது பேச்சுவன்மையால் தனது வலைக்குள் விழுத்த முடிந்தது. தொடர்ச்சியாக கண்ணனுடனான சந்திப்புக்களை மேற்கொண்ட சிவராம் கண்ணனுக்கு மிகவும் நெருக்கமான ஒருவராக மாறினார்.

படைத்துறை செயலர் கண்ணன்

(எஸ்.ஆர் என்று புளொட்டினுள்ளும் ஊடகத்துறையினரால் பின்நாட்களில் தராக்கி என்றும் அழைக்கப்பட்ட சிவராம் )

மட்டக்களப்பு மாகாண அமைப்பாளரும், மத்தியகுழு உறுப்பினரும், பிரதேசவாதத்தின் பிதாமகனுமான ஈஸ்வரனும், புளொட்டின் மாணவர் அமைப்பு பொறுப்பாளர் அசோக் என்று அழைக்கப்பட்ட யோகன் கண்ணமுத்துவும் கூட இந்தக் காலகட்டத்தில் சிவராமின் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். மாணவர் அமைப்பு, மகளீர் அமைப்பு உறுப்பினர்களுக்கு அரசியல் வகுப்புக்கள் நடாத்த சிவராம் ஆரம்பித்திருந்தார். தன்னை ஒரு பழுத்த அரசியல்வாதி என காட்டிக்கொள்வதற்காக அவரால் வளர்க்கப்பட்ட குறுந்தாடியும், தான் பாட்டாளிவர்க்க குணாம்சத்தை சுவீகரித்து கொண்டிருப்பதாக காட்டுவதற்கு அவரால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு ஒவ்வாத செயற்பாடுகளும், எஸ்ஆர் என்ற சிவராமை சுற்றி ஈஸ்வரனும், அசோக் என்றழைக்கப்பட்ட யோகன் கண்ணமுத்துவும் மட்டுமல்லாமல் ஒரு குழுவே உருவாகிக் கொண்டிருந்ததை காணமுடிந்தது.

 

மக்கள் அமைப்பினருடன் முரண்பட்ட புதிதாக பதவியேற்ற புளொட் இராணுவ பொறுப்பாளர்கள்

 

சுந்தரம் படைப் பிரிவினர் என்றழைக்கப்பட்டவர்களும் அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள் குறித்தும் படைத்துறை செயலர் கண்ணன் கூட எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுயும் எடுக்காததால், யாழ்ப்பாண மாவட்டத்தில் செயற்பட்ட நாம் தள நிர்வாக பொறுப்பாளர் டொமினிக்கை சுந்தரம் படைப்பிரிவினர் குறித்த விடயங்களை கையாளும்படி கேட்டுக் கொண்டோம். சுந்தரம் படைப்பிரிவினருடன் நேரடியாக பேசுவதன் மூலமே அவர்களின் தவறான செயற்பாட்டை முடிவுக்கு கொண்டுவரலாம் என தளநிர்வாக பொறுப்பாளர் டொமினிக் கருத்து தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் சுந்தரம் படைப்பிரிவில் செயற்பட்டுவந்த உடுவில் நித்தி உட்பட சிலருடன் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இச்சந்திப்புக்கு தள நிர்வாக பொறுப்பாளர் டொமினுக்கும் அப்போது யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்டுவந்த ஜீவனும் நானும் சென்றிருந்தோம். சுந்தரம் படைப்பிரிவை சேர்ந்தவர்களுடன் நாம் சுந்தரம் படைப்பிரிவினர் ஈடுபட்ட பல சம்பவங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது, நாம் பேசிக் கொண்டிருப்பதை அறிந்து அவ்விடத்துக்கு வந்த, புதிதாக தள இராணுவப் பொறுப்பாளராக உமா மகேஸ்வரனால் அனுப்பிவைக்கப்பட்ட ரமணன் தள நிர்வாக பொறுப்பாளர் டொமினிக்கை மோசமான வார்த்தை பிரயோகங்களால் அவமானப்படுத்தியதுடன், "இத்தகையதொரு சந்திப்பை சுந்தரம் படைப்பிரிவினருடன் நிகழ்த்துவதற்கு உமக்கு எந்த அதிகாரமும் இல்லை" எனக் கூறி, உடுவில் நித்தியையும் அவரின் சகாக்களையும் தான் வந்திருந்த வாகனத்தில் அழைத்து சென்றார்.

தள இராணுவப் பொறுப்பாளர் ரமணனின் இந்த செயலும், படைத்துறை செயலர் கண்ணனால் சுந்தரம் படைப்பிரிவின் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையும், யாழ்ப்பாண இராணுவப் பொறுப்பாளர் சின்னமென்டிசின் வாகனத்தில் சுந்தரம் படைப்பிரிவினர் வலம் வருவதும், ஒரு விடயத்தை எமக்கு தெளிவாக்கியது. சுந்தரம் படைப்பிரிவினர் என தன்னிச்சையாக செயல்பட்டவர்களின் பின்னால், அவர்களின் செயற்பாடுகளுக்கு ஆதரவாக புளொட்டின் படைத்துறை செயலர் தொடக்கம் புளொட்டின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் சின்னமென்டிஸ் வரை உள்ளனர் என்பதே அது.

(புளொட்டின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் சின்னமென்டிஸ்)

தள இராணுவப் பொறுப்பாளர் ரமணனின் அநாகரீகமான செயற்பாடு நாம் எவருமே எதிர்பார்த்திருக்காத ஒன்றாக இருந்தது. பார்த்தன் தள இராணுவப் பொறுப்பாளராக செயற்பட்ட காலத்தில் இருந்து கண்ணன், ரமணன், சின்னமென்டிஸ் போன்றோர் இந்தியாவிலிருந்து தளத்துக்கு வரும் வரை, தளத்தில் பணியாற்றிய இராணுவப் பிரிவினர் தளத்தில் செயற்பட்ட மக்கள் அமைப்பினருடன் மிகவும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் புரிந்துணர்வுடனும் பணியாற்றிய நிலவரம் இருந்து வந்தது.

தள இராணுவப் பொறுப்பாளர் ரமணன் தள நிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்குக்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டிய ஒருவர். குறைந்த பட்சம் பரஸ்பர புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டியவர். ஆனால் தள இராணுவப் பொறுப்பாளர் ரமணன் தள நிர்வாக பொறுப்பாளர் டொமினிக்கையும் எம்மையும் எதிரி போல எண்ணி செயற்பட்டிருந்தார். இந்த சம்பவத்தின் பின் அப்போது யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றிய ஜீவன் இத்தகையதொரு மோசமான அமைப்பில் இனியும் எம்மால் பணியாற்ற முடியாது என்ற கருத்தை முன்வைத்தார்.

தள நிர்வாக பொறுப்பாளரை அவமதிக்கும் ஒரு போக்கு, தள நிர்வாக பொறுப்பாளருக்கு எந்த அதிகாரமும் இல்லாத புளொட் இராணுவத்தின் கையோங்கும் ஒருபோக்கு தவறானது என யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் ஜீவன் வாதிட்டார். இதற்கு பதிலளித்த டொமினிக், உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டோ, அவரசரப்பட்டோ நாம் எந்த முடிவுகளையும் எடுக்க கூடாது என்றும் இந்த தவறான போக்குகளுக்கு எதிராக அமைப்புக்குள்ளேயே சரியான வழிமுறைகள் மூலம் போராடுவதை தவிர வேறுவழியில்லை என்றும் ஜீவனுக்கு கருத்து தெரிவித்தார்.

ஆனால் படைத்துறை செயலர் கண்ணனின் வருகையின் போது எமக்கு ஏற்பட்டிருந்த நம்பிக்கை இத்தருணத்தில் தகரத் தொடங்கியது. தள இராணுவப் பொறுப்பாளர் ரமணனினதும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் சின்னமென்டிசினதும் தளவருகையும் தளத்தில் அவர்களின் செயற்பாடுகளும் மேலும் அந்த நம்பிக்கையை தகர்ப்பதாக அமைந்தது. புளொட் இராணுவப் பிரிவினரின் இத்தகைய செயற்பாடுகள் மக்கள் அமைப்பில் செயற்பட்டுவந்த எமக்கு பெரும் பிரச்சினையாக மாறியது. முன்பெல்லாம் சுந்தரம் படைப்பிரிவு என செயட்பட்டவர்களால் நாம் பிரச்சினைகளை மக்கள் மத்தியில் இருந்தும் அமைப்பாளர்களிடமிருந்தும் எதிர் நோக்கவேண்டியிருந்தது. ஆனால் இப்போது பிரச்சினைகள் அனைத்துமே புளொட் இராணுவப் பிரிவில் இருந்து, எமது இயக்க இராணுவத்தின் செயற்பாடுகள் குறித்தே வருவதாக இருந்தது.

சுந்தரம் படைப்பிரிவினர் என்று தம்மை அழைத்துக் கொண்டவர்கள் புளொட் இராணுவத்தினருடன் ஒன்றாக கலந்து விட்டிருந்தனர். புளொட்டின் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையுமே மக்கள் அமைப்பில் செயற்படும் எவருடனுமே கலந்து பேசப்படுவதில்லை. தனியார் வாகனங்களை தமது தேவைகளுக்காக கடத்துதல், "சமூகவிரோதிகள்" ஒழிப்பு உட்பட அனைத்து நடவடிக்கைகளுமே புளொட் இராணுவத்தால் மக்கள் அமைப்பில் செயற்படுபவர்களின் கருத்தின்றியே மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதனால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முகம் கொடுப்பவர்களாகவும் அதற்கு பதில் சொல்ல வேண்டியவர்களாகவும் மக்கள் அமைப்பில் செயற்பட்ட நாமே இருந்தோம்.

புளொட் என்ற ஒரு அமைப்புக்குள்ளேயே இரண்டு விதமான போக்குகள் வெளிப்படடையாக தெரியத் தொடங்கின. மக்கள் அமைப்பில் செயற்பட்டு கொண்டிருந்த நாம், மக்கள், கொள்கை, கோட்பாடு என அரசியல் பேசிக் கொண்டிருந்தோம். இந்தியாவிலிருந்து தளம் திரும்பிய இராணுவப் பிரிவை சேர்ந்தவர்கள் வெறுமனே இராணுவக் கண்ணோட்டத்தை கொண்டிருந்தது மட்டுமல்லாமல் நாம் ஒரே அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற கண்ணோட்டம் இல்லாமலே செயற்பட்டுக் கொண்டிருந்தனர். படைத்துறை செயலர் கண்ணனுக்கு இது பற்றி எதுவித கரிசனையும் இருக்கவில்லை. இதை புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் தெளிவேதும் அவரிடம் இருக்கவில்லை.

மக்கள் அமைப்புக்கும் இராணுவப் பிரிவுக்கும் இடையேயான இந்த முரண்பாட்டை, இராணுவப் பிரிவின் தவறான போக்கை தள நிர்வாகப் பொறுப்பாளர் டொமினுக்கு சுட்டிக்காட்டிய நாம் இவற்றை முடிவுக்கு கொண்டு வரும்படி அழுத்தங்களை கொடுத்தோம். இதன் பின்னர் ஒவ்வொரு மாவட்ட அமைப்பு குழு கூட்டங்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் சின்னமென்டிசும் கலந்துகொள்ள வேண்டுமென்றும், யாழ்ப்பாண மாவட்ட அமைப்பு குழு முகம் கொடுக்கும் பிரச்சினைகளையும் அவற்றிற்கான தீர்வுகளையும் சின்னமென்டிசும் சேர்ந்தே எடுக்கவேண்டும் எனவும் டொமினிக்கால் முடிவு எடுக்கப்பட்டது. இதன் நோக்கம் இராணுவப் பிரிவினருக்கு மக்கள் அமைப்பினர் முகம் கொடுத்துவந்த அனைத்து பிரச்சினைகளும் சரிவரப் புரிய வேண்டுமென்பதேயாகும். இதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் குழு கூட்டங்களுக்கு சின்னமென்டிசும் சமூகமளிக்க வேண்டியிருந்தது.

தொடரும்.

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15