கிரிக்கெட் வெறும் விளையாட்டல்ல. வெறும் பொழுது போக்கும் அம்சமல்ல. கிரிக்கெட்டுக்கு குறுகிய மத இன சாதிய உணர்வு உண்டு. இப்படி அதற்கு ஒடுக்கும் பல உணர்வுகள் உண்டு. அப்படித் தான் அது விளையாட்டாகக் காட்டி வாழ்கின்றது. இதனால் தான் ஆளும் வர்க்கத்தால் அது போற்றப்படுகின்றது.
கிரிக்கெட் மக்களை அடிமை கொள்ளும் ஒரு போதைப் பொருள். ஆளும் வர்க்கத்துக்கு அடக்கியாளும் கருவி. மூலதனத்துக்கோ செல்வத்தை குவிக்கும் வியாபாரம். இதை சுற்றித்தான் தேசபக்திக் கூச்சல்கள். விளையாட்டு ரசனை பற்றி தர்க்கங்களும் வாதங்களும். தனிமனித சுதந்திரம் பற்றிய பிரமைகள், புலம்பல்கள் உருவாக்கப் படுகின்றன.
இலங்கை இந்தியாவை வென்றிருந்தால் இதை சிங்கள பெருமிதமாகக் காட்டி கொண்டாடும் வாய்ப்பை இலங்கை ஆளும் கூட்டம் இழந்து போனது. இந்த சிங்கள இனவாதத்துக்கு எதிரான தமிழ் உணர்வு, வடக்கில் இந்தியா வென்றதை கொண்டாடியது. சிங்கள இராணுவத்துடன் முறுகிக் கொண்டு கூச்சல் எழுப்பியது. மலையத்தில் தமிழ் சிங்கள மோதல். இலங்கை தோற்க வேண்டும் என்று கருதுமளவுக்கு, அடக்கு முறையின் கருவியாக உணருகின்ற எல்லையில் கிரிக்கெட் ஒரு தேசத்தின் இனம் சார்ந்த போதைப் பொருளாக உள்ளது. இங்கு அது விளையாட்டல்ல.
தன் நாடு தோற்க வேண்டும், மற்றைய நாடு வெல்ல வேண்டும் என்ற உணர்வு கூட இந்த அபினைக் கடந்ததல்ல. ஓர் எதிர்ப்பு என்ற அடையாளத்துக்கு அப்பால், வெல்லும் நாட்டில் அடக்குமுறைக்குப் பின்னால் அணிதிரள்கின்றனர். அங்கும் இங்;கும் ஒரே அரசியல் சமூக பொருளாதார அடிமைத் தனத்தைத்தான் இது உற்பத்தி செய்கின்றது. வாக்கு போடுவது போல், கிரிக்கெட் தேசிய எதிர்ப்பு உணர்வு. கிரிக்கெட் விளையாட்டை கடந்துவிட்ட நிலையில், அதை புறக்கணித்தும் அம்பலப்படுத்தியும் கிளர்ச்சி செய்ய வேண்டும்.
இன்று தென்னாசிய சமூகங்களில் காலனித்துவ போதைப்பொருளாகி விட்ட கிரிக்கெட் மூலம், அந்தந்த நாடுகளின் அரசியலிலும், பொருளாதாரத்திலும் இது செல்வாக்கு வகிக்கின்றது. இதன் மூலம் கிரிக்கெட் போதையில் போலியான தேச பக்தியை முன்நிறுத்தி, கிரிக்கெட்டை வழிப்பாட்டு பொருளாக்குகின்றது.
இதற்கமைய ஆளும் கட்சிகள், ஆளும் வர்க்கங்கள் இந்த தேசபக்தியை முன்நிறுத்திக் கொண்டாடுகின்றது. மூலதனமோ இந்த தேசபக்தியை முன்நிறுத்தி, கோடிகோடியாக சம்பாதிக்கின்றது. கிரிக்கெட் சூதாட்டம் முதல் சட்டப+ர்வ விளம்பரம் மூலம் புரளுகின்ற கோடிக்கணக்கான பணம், வியாபாரம் அனைத்தும் போதைக்குள்ளான கிரிக்கெட் ரசிகர்களின் மடியில் இருந்துதான் கறக்கப்படுகின்றது. உன் போதையில், உன்னிடம் இருந்துதான் உனக்குத் தெரியாமல் அவை கறக்கப்பட்டும் விடுகின்றது.
கன்றுக் குட்டியைக் காட்டி தாய் மாட்டிடம் பால் கறப்பது போல்தான், நீயும் கறக்கப்படுகின்றாய். தாய்க்குரிய தாய்மை உணர்வை தான், உனக்குத் தெரியாது அரசியல்வாதிகள் தமதாக்குகின்றனர். அவர்கள் உன்னை இந்த போதைக்குள் கட்டிவைத்துத்துதான் கறக்க உதவுகின்றனர்.
கிரிக்கெட் என்ற போதை மூலம் உருவாக்கும் உன் தேசபக்தி உண்மையானதா? உன் தேச உணர்வும், தேச பக்தியும் மக்களின் வாழ்வையும் தேச நலனையும் முன்நிலைப்படுத்துகின்றதா? ஒரு நாட்டின் முழுமக்களும் உனது உணர்வுடன் ஒன்றி நிற்கின்றனரா? இந்த தேசபக்தியை ரசிக்கின்ற அனைவரும் ஒரே விதமாக இதை உணரத்தான் முடியுமா?
இல்லை. இல்லை என்கின்ற போது, இந்தத் தேசபக்தி போலியானது. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால், இனத்தின் பெயரால், ஒடுக்கும் தேசம், அது சார்ந்த உன் தேசியம் போலியானது. தேச வளங்களை அந்நியரிடம் தாரை வார்க்கின்ற, தனியாரிடம் விற்கின்ற தேசத்தைச் சார்ந்த உன் தேசியமும் போலியானது. மக்களைச் சுரண்டி ஏழ்மையில் வதைக்கும் உன் தேசம், ஒரு நேர கஞ்சிக்கு பதில் மரணத்தையும் நோய்க்கு மருந்தின்றி மரணத்தையும் கொடுக்கின்ற தேசியம் உண்மையானதல்ல.
உன்னைச் சுற்றிய மனித வாழ்வில், மனிதர்கள் சந்திக்கின்ற அவலங்களுக்கும் கொடுமைகளுக்கும் யார் பொறுப்பு. ஆம் உன் தேசமும், தேசிய உணர்வும் தானே பொறுப்பு. இதை மறுப்பவன் ஒன்றில் இதன் ஆதரவாளன் அல்லது கிரிக்கெட் என்ற போதையில் இருக்க வேண்டும்.
கிரிக்கெட் என்ற போதை உனக்கு தொடர்ந்து தருபவன், தேசம் தேசியத்தின் பெயரில் மக்களை அடிமைப் படுத்துகின்றவன் தான். தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிகைகள் முதல் சாதித் தலைவன், மதத் தலைவன், மக்களை மொட்டையடிக்கும் ஜனநாயக அரசியல் வாதிகள், சினிமா நடிகர்கள் என்று இதன் பின் கோடிகோடியாக பெற்றுப் பிழைத்துக் கொள்ளும் கூட்டம்தான் உனக்கு கிரிக்கெட் என்ற அபினைத் தருகின்றது. கிரிக்கெட் என்ற போதையின் பின் விளம்பரமாகும் பெப்சிக்கும், கொக்கோ கோலாவுக்கும், மக்டொனஸ்சுக்கும் தேசியமும் தேசிய உணர்வுமுள்ளதா சொல்லுங்கள். உனது உணர்வு விளையாட்டு என்றால், அவனுக்கு என்ன வேலை இங்கு? இங்கு அவன்தான், தன் விளம்பரங்கள் மூலம், கிரிக்கெட்டை முன்நிறுத்தி உன்னை போதையாக்கி உன் உணர்வை தீர்மானிக்கிறான். அவன் உன் கிரிக்கெட் போதையில் தன் பொருளை உனக்கு தெரியாது உன்னிடமே விற்று, தன் விளம்பர பணத்தையும் அதை விட பல மடங்கு பணத்தையும் பெற்றுவிடுவான். இதுதான் அவனின் தேச பக்தி.
அன்று தென்னாசிய நாடுகளை ஆண்ட பிரிட்டிஷ் காலனித்துவ வாதிகள் கொண்டு வந்த சரக்கை, இப்போ தேசபக்தியின் பெயரில் நீ அடிக்கின்றாய். அன்று அவன் தென்னாசியக் கறுப்பு அடிமைகள் சுற்றியிருக்க, பொழுது போக்காக விளையாடிய விளையாட்டுத்தான் இன்று உனக்குத் தேசிய உணர்வைத் தருகின்றது என்றால், உனது தேசபக்தி அடிமை உணர்விலானது. இந்த நாடு, இந்த மக்கள் என்ற உணர்வு சார்ந்தல்ல. மக்கள் சார்ந்த தேசிய உணர்வு ஏற்படக் கூடாது என்பற்காக தரும் அபின்தான் கிரிக்கெட். இது உன் கண்டுபிடிப்பல்ல. அன்று பிரிட்டிஷ்
அடிமைகள் எஜமான் விளையாடிய விளையாட்டை தாமும் விளையாடி, அதைச் சுதந்திரத்தின் பெயரில் அடிமைகளான உனக்கு மீளத் தந்துள்ளான். உன்னை இந்த கிரிக்கெட் போதையில் வைத்திருக்க, தொலைக்காட்சிகள் முதல் பெப்சி கோக்கோகோலா வரை கோடிகோடியாக உன்னிடம் இருந்து உறிஞ்சியபடி, போதையில் உன்னை அடிமையாக வைத்;திருக்கிறான். நீ போதையேறி குரங்காட்டம் தலைகால் தெரியாது அங்குமிங்கும் குதிக்கின்றாய்.
மத வெறியேறி, இன வெறியேறி, சாதி வெறியேறி, சுரண்டல் வெறியேறி, விளையாட்டு ரசிகன் போர்வையில் கன்னாபின்னாவென்று உளறுகின்றாய். ஒரு மனிதனாக சக மனிதனை மதிக்காது ஒடுக்கியபடி, கிரிக்கெட் என்ற அபினை உண்டபடி தேசிய வெறியுடன் கூச்சல் போடுகின்றாய். இதைத்தாண்டி இது விளையாட்டாகவில்லை.
இரயாகரன்