கொட்டுகின்ற
ஒவ்வோர் குண்டும்அத்தனை குழந்தைகளினதும் பசியாற்றும்
சோமாலியப் பாலைவனத்தில்
இன்னோர்
முள்ளிவாய்க்கால் பிணத்தில் குவிகிறது
உலகின் தெருக்களில் எந்த அசைவுமில்லை.
மனித அவலம்
எந்தக் கோமகனையோ பேரரசையோ அசைப்பதாயில்லை.
பணவீழ்ச்சிக்கும் பயங்கரவாதத்திற்குமெதிராய்
கிலாரி அம்மையார்இந்திய-சீனக் கூட்டுக்கு அழைப்பு விடுகிறார்.
தாயின் எலும்பு துருத்தும் உடலொடு
ஒட்டிக்கிடக்கும் சோமாலியக் குழந்தைகளை
மனிதஉயிராக மதிப்பதற்கு
எந்த வல்லரசுகளின் கண்ணிலும் தென்படுவதாயில்லை
அணு ஆயுதம் இருப்பதாயும்
மக்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதாயும்
கூட்டுப்படை நகர்வுகள்
குண்டுகள் கொட்டிய வண்ணமேயுள்ளன.
இலக்குத் தவறா எய்யும் குண்டுகளால்
எஞ்சிய மக்கள் மீட்கப்பட்டதாய் சொல்கிறார்கள்.
தொண்டைவரண்டு குடலொட்டிய குழந்தைகளிற்காய்
அமைப்புக்கள் கோடிக் கணக்கில் கொட்டி
உயரிய மாளிகைகளில்
கூட்டத் தொடர்கள் நடந்த வண்ணமேயுள்ளன.
திவாலான வங்கிகளை
தூக்கி நிறுத்த மக்கள் வரிப்பணம் வழங்கப்படுகிறது.
தெருவிற்கு விரட்டப்படும் தொழிலாளாகள்
உதவித்தொகை நிறுத்தப்படுகிறது.
எதை நோக்கி நகர்கிறது உலகு?
மக்கள் எலும்பை உருக்கி
தங்கப்பாளங்கள் தயாரிக்கும் ஆட்சியில்
விண்ணுக்கு ராக்கெட்டும்,
கண் முன்னே பசியால் துடிக்கும் குழந்தைகட்கு
கந்தக நெடிலும் மூச்சுக்குளாய்க்குள் செலுத்தப்படுகிறது.
ஆக்கிரமிப்பதற்கான தேவையும்
ஆளுகைக்குள் வைக்க வேண்டிய வல்லரசுப் போட்டியும்
கிண்டியெடுக்கும் மண்டையோடுகளை காட்சிப் பொருளாக்குகிறது.
மனித உரிமை மீறப்பட்டதாய் விசாரணை நாடகங்கள்
அவலம் சொல்லும் காணொளிகள் வெளியாகிறது.
பாராளுமன்றப் பன்றிகட்கு இது தீனியாகிறது.
அழிப்பும் பேரவலமும் வாக்குப் பொறுக்கிகட்கு
எத்தனை காலம் வாய்ப்பாகப் போகப்போகிறது
-கங்கா
22/07/2011