01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

தனிமனிதர்கள் புரட்சியை நடத்த முடியாது

சமூக நடைமுறையில் இருந்து அன்னியமாகிய நிலையில் சமூகம் பற்றி எம்மளவில் நாம் சிந்தித்து மையப்படுத்திய சிந்தனைமுறையும், நாம் மட்டும் சரியாக இருக்கின்றோம் என்ற எம்மைச் சுற்றிய எம் சொந்த அனுபவம், இதைக் கடந்து கூட்டுவேலையை முன்னெடுப்பதில் முரண்பாடுகளை உருவாக்குகின்றது. இரு பத்து வருடங்கள், பழக்கப்பட்ட ஒன்றாக இதுமட்டும் தான் எம்முன் இருந்திருக்கின்றது. என்னை அல்லது எம்மைச் சுற்றி அனைத்தையும் காணுகின்ற கடந்தகால இந்த நடைமுறை, இதைச் சுற்றி இயங்குகின்ற முரண்பாடுகளும் சுய முரண்பாடுகளும் கூட, எம்மை நாம் கடந்து விட முடியாதவர்களாக மாற்றிவிடுகின்றது. இதன் அர்த்தம் அரசியலை கைவிடுதல் அல்ல, அரசியலை ஆணையில் வைத்தல். அரசியல்தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. தனிமனித செயல்கள் அனைத்தும் அரசியலுக்கு கீழ்ப்பட்டது. தனிமனித செயல், கூட்டுவேலைமுறை அனைத்தும் அரசியலுக்கு உட்படுத்தியதாக இருக்க வேண்டும். நாம் கடந்தகால நடைமுறையில் இருந்து கடந்து வருதல்;, மாற்றத்தின் முதல்படியாகும். எல்லாவற்றையும் மீளப் பார்க்கவும், சுயவிமர்சனம், விமர்சனம் செய்வதன் மூலமும் எம் காலடிகளை சரியாக முன்வைக்கமுடியும்.

 

 

 

நாம் தனியாக இருந்தவரை எமக்கு சரியானவையாக இருந்தவை, அதை கடக்கும் போது சரியாக இருப்பதைக் கூட்டாக உறுதி செய்ய வேண்டும். இல்லாத போக்கை நாம் எம்மில் இருந்து களைய வேண்டும்;. இதுதான் தனிமனித போக்கில் இருந்து கடந்து செல்லும் பாதை. சமூக இயக்கம் என்பது, தனிமனிதனைச் சுற்றியதல்ல. தனிமனிதன் சமூகத்தில் தான் இயங்க முடியும்;. அங்குதான் தனிமனிதனுக்குரிய சரியான இடம் தெரிவாகின்றது.

இதை மறுத்துத்தான் எம்மைச்சுற்றி கடந்த கால வரலாறு இருந்திருக்கின்றது. கடந்த சில பத்து வருடங்களாக வலதுசாரியம் முதல் இடதுசாரியம் வரை தனிமனிதர்களைச் சுற்றி இயங்கி இருக்கின்றது. தனிமனிதர்களை மையப்படுத்திய செயல்பாடுகளும், வழிபாடுகளும் மிகையானதாக கொண்ட ஒரு எல்லைக்குள், எம் சமூகம் சுருங்கியது. மறுபுறத்தில் தனிமனிதர்கள் நலன் சார்ந்த அதன் குறுகிய எல்லைக்குள் அனைத்தையும் முடக்கும் வண்ணம், சமூகம் மேல் வன்முறை ஏவப்பட்டது.

எம்மைச் சுற்றிய வரலாற்றில் 1970 களிலும் 1980 களிலும் தோன்றிய தேசியவாத இயக்கங்கள், தனிமனிதர்களை மையப்படுத்தி வளர்ச்சியுற்றது. அதன் வலதுசாரிய கூறு மக்கள்விரோதத் தன்மை கொண்ட போக்காக மாறிய போது, தனிமனிதர்களை பூசிப்பது தான் தேசிய அரசியலாக மாறியது. தனிமனித கதாநாயகர்கள் வரலாற்றை தீர்மானிக்கும் சக்தியாக காட்டப்பட்டனர். இந்த தனிமனிதர்களை மையப்படுத்திய வழிபாடே, அமைப்பின் சட்டதிட்டமாகியது. இதைக் கடைப்பிடிப்பது தான் அங்கத்தவர்கள் கடமையாகியது. இதை மறுப்பது, அமைப்பிற்கு எதிரான ஓன்றாக கருதப்பட்டு இதற்கு எதிரான வன்முறைகள் மூலம் தம்மைப் பேணினர்.

இதற்கு எதிரான குரல்களும் கூட, தனிமனிதர்களின் குறுகிய எதிர்ப்பாக வெளிப்பட்டது. இது அரசியல்ரீதியாக வெளிவந்த போது, இதே வகையில் தான் பொதுவில் வெளிப்பட்டது. விதிவிலக்காக ஓரு சில குழுக்களின் குரலாக அவை வெளிவந்த போதும், அவை தனிமனிதர்களை மையப்படுத்தியதாக இருந்தது. இதற்கு வெளியில் இடதுசாரிய சிறுகுழுக்கள் மட்டும் பலவீனமான நிலையில் இயங்கின.

தனிமனித வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட வலதுசாரிய போக்கு பல முனையில் ஆதிக்கம் பெற்று, அதன் முதல் இலக்கு இந்த இடதுசாரிய போக்குகள் மீதான அழித்தொழிப்பாக இருந்தது. இதனால் இடதுசாரி சிதைவும், அழிவும் படிப்படியாக அரசியலை துறந்தோடும் அரசியல் போக்கை உருவாக்கியது.

இந்த தனிமனித வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட வலதுசாரிய பாசி;ட்டுகளின் முன், ஒட்டுமொத்த சமூகமும் அடங்கி ஒடுங்கியது. தனிமனிதனை வழிபாடு கொண்ட ஒரேயொரு குழு சார்ந்ததாக மட்டும்தான் அது இருக்க முடியும் என்ற தனிமனித கோட்பாடு, மற்றைய அனைத்தையும் விட்டுவைக்கவில்லை.

இப்படி எம் சமூகத்தில் தனிமனித வழிபாடுதான் எம் தேசியப் போராட்டம் என்ற எல்லைக்குள், சில பத்தாண்டுகளாக மனித அறிவு புதைக்கப்பட்டது. தனிமனிதனையும், தனிமனித வழிபாட்டையும் கண்காணிக்கும் குழுவை, போற்றி வாழ்வது தான் தமிழ்த் தேசியமாக திணிக்கப்பட்டது.

தனிமனித வழிபாடு, தான் குழு வழிபாடாகவும் மாறியது. இதன்பின் பிழைத்துக்கொள்ளும் போக்கு முதல் புலமை சார்ந்து நக்கும் போக்கு வரை உருவானது. இது அரசியல் மீட்சிக்கு இடமற்ற பாசிசமாக, மாபியாத்தனமாக மாறியது.

இதற்கு எதிரான போக்குகள் மேலான ஒடுக்குமுறையும், அதை எதிர்கொள்ளமுடியாத நிலையில், முரண்பாடுகளை தோற்றுவித்தது. இது அரசியலை துறத்தல், அரசியல் நீக்கம் செய்தல், அரசியலை விட்டோடுதல் என்று இந்தப் போக்கு தனிமனித கூறாக மாறியதுடன், தனித்தனி கோட்பாட்டு ரீதியான சிதைவை முன்தள்ளியது. தன் இருப்புக்கேற்ற தனிமனித கோட்பாட்டை முன்தள்ளியது. இப்படி தனிமனிதனை மையப்படுத்திய சிதைவுகள், சீரழிவுகள் தான், தனிமனித வழிபாடு உருவாக்கிய பாசிச கட்டமைப்புக்கு எதிரான அரசியலாக சீரழிந்தது வெளிப்பட்டது. தனிமனிதனை மையப்படுத்திய சிதைவுகள், சீரழிவுகள், தனிமனித சமூக ஒழுக்கக்கேட்டைத்தான் புரட்சிகரமானதாக காட்டி தன்னை நியாயப்படுத்திக் கொண்டது. இங்கு பிழைப்புத்தனமும் புலமை சார்ந்த மோசடியும் மாற்று அரசியலாக வெளிப்பட்டது.

இதுதான் இடதுசாரியம், மாற்று அரசியல் என்று அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு சீரழிந்தது. இதனால் சமூகத்தில் இருந்து விலகிய, தனிமனித ஒழுக்கக்கேடுகளும் இணைந்;து கொண்டது. சமூகத்தில் இருந்து அன்னியமான தனிமனித நடத்தைகள், அதற்கேற்ற கோட்பாட்டு விளக்கங்கள் தான் இடதுசாரியம், மாற்று அரசியலாக காட்டப்பட்டது. இதை கேள்விக்குள்ளாகிய போது, விமர்சித்த போது, அதை தனிநபர் தாக்குதல் என்ற மூகமுடியைப் போட்டுக் கொண்டு தம்மை தற்காத்தனர். இப்படி தமக்கு இரண்டு முகம் இருந்தும், தனிமனித தாக்குதல் என்;று கூறியதன் மூலம் மூடிமறைக்க முடியவில்லை.

தனிமனிதனை மையப்படுத்திய பாசிசம், அதைச் சுற்றி எதிர்ப்பரசியலின் சீரழிவுகள் எங்கும் எதிலும் வெளிப்பட்டது. இதற்கு எதிரான போராட்டம் எஞ்சிய ஒரு விரல்விட்டு எண்ணக் கூடிய சிறு பிரிவின் முன்முயற்சியாக மாறி, இறுதியில் தனிமனிதக் கருத்தாக எஞ்சியது.

இப்படி ஒட்டுமொத்தப் போக்கும் தனிமனிதனைச் சுற்றிய ஒன்றாகவே எஞ்சியது. மக்களை ஒடுக்கிய பாசிசம் முதல் இடதுசாரி கருத்து வரை இப்படித்தான் சமூகத்தின் முன் வெளிப்பட்டது. தனிமனித கூறுகள் படுபிற்போக்காக இருந்தாலும் சரி, முற்போக்காக இருந்தாலும் சரி, சாராம்சத்தில் ஒன்றுதான். சூழலுக்கு ஏற்ப, அவர்களின் கொள்கைக்கு ஏற்ப தனிமனித பாத்திரங்கள் பயங்கரமானதாகவும், அறிவை புகட்டுவதாகவும் சமூகத்துக்கு வெளியில் இயங்குகின்றது.

இப்படித்தான் நாங்கள் சமூகத்துக்கு வெளியில் இருந்தபடிதான், சமூகத்தை நோக்கி குரல் கொடுத்தோம்;. இந்த நிலைக்குள் நாம் தள்ளப்பட்டோம். நாம் வாழ்ந்த அன்னிய சூழல், மாற்றுத் தளத்தில் நடந்த அரசியலை துறந்தோடிய சீரழிவுகள், எம்மைச் சுற்றிய பாசிசத்தின் கெடுபிடி என்ற பல, எம்மை சமூகத்தில் இருந்து அன்னியமாக்கியது. தனிமனிதர்கள் என்ற எல்லைக்குள், இதை நாம் மட்டும் எதிர்த்து நின்றதே எம்முன்னான வரலாறாகிவிட்டது.

இன்று பாசிசத்தின் கெடுபிடியை முன்னிறுத்தி நின்ற ஒரு பிரிவு அரசியல் அனாதையாகி சேடமிழுக்கும் நிலையில், எமது கடந்தகால நடைமுறையை தனிமனித தளத்தில் இருந்து கடக்க முனைகின்றோம். தனிமனித செயலைக் கடந்து சமூகத்தின் போக்காக மாற்ற போராடுவது தான் சரியான வர்க்க அரசியலாகும்;. எந்தக் கருத்தும் மக்களுக்கானது. மக்களால் அது முன்னெடுக்கப்பட வேண்டும்;.

இதை நாம் நடைமுறைப்படுத்தும் போது, எமது கடந்தகால தனிமனித கூறுகள் இதற்கு முரண்பாடாக மாறுகின்றது. எம்மை சுற்றிய சில பத்து வருடங்கள் கூட்டு வேலைமுறையை கற்றுத்தரவில்லை. நடைமுறையில் இருந்து விலகிய நிலையில் நாம் எம்மளவில் சிந்தித்து மையப்படுத்திய சிந்தனைமுறையும், நாம் மட்டும் சரியாக இருக்கின்றோம் என்ற எம் சொந்த வரலாற்று அனுபவம், கூட்டுவேலையை முன்னெடுப்பதில் முரண்பாடுகளை உருவாக்குகின்றது. எம் தனித்தன்மையை இழந்து கூட்டுவேலைமுறைக்கு பழக்கப்படுத்த, கருத்துகளை உள்வாங்கத் தடையாக தனிமனிதக் கூறுகள் செயல்படுகின்றது. கூட்டுவேலைக்கு உட்பட்டது தான் தனிமனித வேலைகள். இதை முரணாக அணுகினால், அது தவறானது. தனிமனிதர்களை மையப்படுத்திய போக்குகள், சிந்தனைகள், வேலைமுறைகள் அனைத்தும் சமூகத்தை வழிநடத்துவதற்கு பதில் அதற்கு எதிரானதாக மாறும். இதன் அதர்த்தம் அரசியலை துறந்தல்ல, அரசியலை உயர்த்திப் பிடித்தலாகும்;. இதன் மூலம் தனிமனிதக் கூறுகளை இல்லாதாக்குவதாகும். கூட்டுவேலைமுறையை அரசியல் மூலம் உருவாக்குவதாகும். இதன் மேல்தான் தனிமனிதர்கள் வரலாற்றில் பங்காற்ற முடியும்;.

 

பி.இரயாகரன்

30.07.2011

 

 

 

 


பி.இரயாகரன் - சமர்