நாற்றெழுந்து
கதிர் தள்ளிசோற்றுப் பருக்கை தரும் நெற்கதிரும்
காற்றில் சுளகெடுத்து தூற்றிய நெல்மணியும்
வயிறாற்றிய கஞ்சியும் அறியார்
சேற்று நிலம் அறியார்
ஏர் உழுத மண்வாசம் ஏதும் அறியார்
ஏன் நேற்றுத் தான்
குண்டுப் பேரவலத்துள் குஞ்சுகளும்
எஞ்சிய சனமும் நெஞ்சுப்படபடப்போடு
இன்னும் இடிக்கிறது ஏதறிவார்…
யுத்தவாள் புத்தராய்
எல்லாத் தெருக்களிலும் அச்சமாய் எழுகிறது
எப்பவோ சங்கிலியன் கையிருந்தவாள்
பேரினவாதிகளை அச்சுறுத்தியிருக்கிறது
மிச்சமாய் தப்பிய தலைமுறை
மீளெழுமென்பது கொடுநெஞ்சில் குத்தியிருக்கிறது
இதுபோதும்….
நீழும் குண்டாய் எறிகணையாய்
உயிரொடு வெட்டி வீசும் சுட்டும் தள்ளும்
களனிஆற்றிலும் நந்திக் கடலிலும்
இந்தியாவும் எல்லாத் தேசமும்
உயிரைக் குடித்து சொல்லியிருக்கிறது
இனியும் எந்த வெளவாலும் வராது…..
சிங்கத்து வாள்
வெட்டி வீசியதும் குத்திக் கிழிக்கப்போவதும்
எப்போதும் போலவே
உரிமை கேட்டெழும் ஒவ்வொரு உயிரையும்
இங்கு
தமிழர் சிங்களவர் முஸ்லீம்
மலையத்தவர் பேதம்
பேரினவாத வாளுக்குத் தூசு
இனியும் எந்த வெளவாலும் வராது
உழைப்பவர் கை
அரிவாள் மட்டுமே விடுதலையாக்கும்……
-கங்கா
17/07/2011