01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

மக்களை மிரட்டி வெல்லமுனையும் தேர்தல் பயங்கரவாதம்

மக்களை வகைதொகையின்றி கொன்று யுத்தத்தை வென்ற அரச பயங்கரவாதம், மக்களை மிரட்டி வெல்லமுனையும் தேர்தல் பயங்கரவாதத்தை மக்கள் மேல் ஏவிவிட்டுள்ளது. எங்கும் எதிலும் வடக்கின் "வசந்த"மாகி விட்ட அரச பயங்கரவாதமும், அது வழிகாட்டும் தேர்தல் "ஜனநாயக"த்தின் வெட்டுமுகமும் வன்முறைதான். மகிந்த வழங்கிய வடக்கின் "வசந்தமும்", தேர்தல் "ஜனநாயகமும்" எது என்பதை, தங்கள் சொந்த நடத்தைகள் மூலம் அவர்களே வெளிப்படுத்துகின்றனர்.

 

தாமல்லாத வேட்பாளர் வீட்டுக்குள் நாயை வெட்டிப் போடுகின்றனர். உனக்கு இதுதான்டா கதி என்று மறைமுகமாக மிரட்டுகின்றனர். வேட்பாளர் வீட்டுக்குள் கழிவுகளை வீசி அசிங்கமாக்கி மிரட்டுகின்றனர். இப்படி இவர்களை அனைப்போரை அச்சமூட்டி மிரட்டுகின்றனர். தேர்தல் கூட்டத்தை அடித்து நொருக்குகின்றனர். எதிர்க்கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களை இராணுவம் படம் எடுக்கின்றது. மக்களை கூட்டங்களுக்குச் செல்லவிடாது வீதித் தடைகளைப் போடுகின்றது. தீவிர ஆதரவாளர்களைக் குறிவைத்து அங்குமிங்குமாக விசாரிக்கின்றனர். எதிர்க்கட்சிப் பிரச்சாரங்களை குழப்ப இராணுவம் திடீர் மானியங்களையும் வழங்குகின்றது. கிராமத்தைக் கூட்டி திடீர் கூட்டங்களை நடத்துகின்றது. சில பிரதேசங்களுக்கு வேட்பாளர்கள் செல்ல முடியாத பிரதேசமாக இராணுவம் திடீரென அறிவிக்கின்றது. வேட்பாளர்கள் தொலைபேசி மூலம் மிரட்டப்படுகின்றனர். இராணுவமே நேரடிப் பிரச்சாரம் செய்கின்றது. இப்படி பற்பல.

பாரிய போர்க்குற்றம் செய்த அதே கும்பல், அதே பாசிச வெறியுடன் ஆட்டம் போடுகின்றது. இதைத்தான் "ஜனநாயகம்" என்று கூறி, தமிழ் மக்கள் மேல் திணிக்கின்றது. சுதந்திரமான சுயாதீனமான தேர்தலைக் கூட அனுமதிக்காத பாசிட்டுகள், தங்கள் வெற்றி மூலம் பேரினவாதத்தை உலகறிய சொல்லத் துடிக்கின்றனர்.

அரசு பயங்கரவாதம் மூலம் மக்களை அச்சுறுத்தி வெல்ல முனைகின்றது. இராணுவ ஆட்சியின் கீழ் உலகளவில் தேர்தல்களை எப்படி இராணுவம் வெல்லுமோ, அதைத்தான் வடக்கில் இன்று அரசு அரங்கேற்றுகின்றது.

மகிந்த சிந்தனை வடக்கில் இப்படித்தான் தேர்தலைக் கூட நடத்துகின்றது. இதைத்தான் அது "ஜனநாயகம்" என்கின்றது. மகிந்தவின் வடக்கு வசந்தம் போல், கைக்கூலி டக்ளஸ் வெள்ளையும் சொள்ளையுமாக வேஷம் போட்டுக்கொண்டு சுதந்திரமாக சுத்தி ஆடிக்காட்டுகின்றார். தாமல்லாத எவனும் வடக்கில் மூச்சுவிட முடியாத பாசிசத் திமிரில் நின்று, விதம் விதமாக கூத்தாடுகின்றது அரச பாசிசம்.

இப்படி வடக்கின் வசந்தம் அரங்கேற, கூட்டமைப்பும் - ஜே.வி.பியும் தேர்தல் என்ற "ஜனநாயக" மோசடியைக் காப்பாற்றும் களத்தில் தம்மைத்தாம் புனிதராக்கி தம்மை முன்னிறுத்துகின்றனர். ஓருபுறம் தம் மீதான அரச பயங்கரவாதத்தையும், மறுபுறம் மக்களை அடிமைப்படுத்தும் தேர்தல் புனிதத்தையும் காவிக்கொண்டு, வோட்டுக் கேட்டு மக்களை ஏய்க்கின்றனர்.

தம் மீதான, மக்கள் மீதான அரச பயங்கரவாதத்துக்கு எதிராக தமக்கு வாக்குப் போடும்படியும், உங்கள் இந்த வாக்குகள் மூலம் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராட முடியும் என்ற பொய்யைக் கொண்டு தம்மை வெல்ல வைக்க முனைகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் தமிழ் மக்களை மிரட்டி வெல்ல முனையும் பேரினவாத அரச பயங்கரவாதமும், இதைக்காட்டி வெல்ல முனையும் குறுந்தேசிய இனவாதமும் மக்களை அடிமை கொள்ளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

பேரினவாத அரச பயங்கரவாதத்தை எதிர்க்கும் தமிழ் மக்கள், இந்தத் தேர்தலில் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற பொதுவான உணர்வு, இனவாத குறுந்தேசியவாதிகளுக்கு தொடர்ந்து சாதகமாக உள்ளது. அரச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட, மக்கள் தமக்கான சொந்த அரசியல் வழியை வந்தடையாத அரசியல் வெற்றிடத்தின் விளைவால் இது தொடர்ந்து நடந்தேறுகின்றது.

மக்கள் பேரினவாத அரச பயங்கரவாதத்தை எதிர்த்து, தங்கள் சொந்த வழியில் அணிதிரண்டு போராடுவதை தடுப்பது தான், கூட்டமைப்பும் - ஜே.வி.பியும் கையாளும் தேர்தல் அரசியலாகும். இவர்கள் தங்கள் தேர்தல் கூத்து மூலம், பேரினவாத அரச பயங்கரவாதத்தை தொடர்ந்து சமூகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் உறுப்பாக மாற்றுகின்றனர். "ஜனநாயகம்" என்றால் இதுவின்றி இருக்காது, தேர்தல் என்றால் இவை உள்ளடங்கியது என்ற பொதுப் புத்தியை உருவாக்க முனைகின்றனர்.

மக்கள் வாக்குப் போடும் அரசியலைச் சுற்றியே மந்தைகள் போல் மேய வேண்டும் என்பதைத்தான் பேரினவாத அரச பயங்கரவாதமும், குறுந்தேசிய இனவாதமும், தேர்தல் வழியில் புரட்சி பேசும் இடதுசாரி போலிகளும் மக்களுக்கு கூறுகின்றனர்.

பி.இரயாகரன்

18.07.2011

 


பி.இரயாகரன் - சமர்