தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரி யார்?

தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு தான் நாம் போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டு, அவர்களுக்கு எதிராக அரசியலில் சித்துவிளையாட்டு காட்டுகின்றவர்கள் முதன்மையான உடனடியான எதிரிகள்.

 

கடந்தகால, நிகழ்கால வரலாற்றைப் பாருங்கள் புலிகள் தலித் மக்களின் விடுதலைக்காக தாம் உண்மையாக உழைப்பதாகக் கூறவில்லையா? பெண்விடுதலைக்காகவும், வர்க்க விடுதலைக்காகத் தான், தாம் போராடுவதாக புலிகள் கூறவில்லையா? ஏன் இந்திய இலங்கை அரசுடன் நிற்கின்ற கூலிக் குழுக்கள், அன்றும் இன்றும் இதைக் கூறவில்லையா?

 

நீங்கள் இதிலிருந்து இவர்கள் எல்லாரிடமிருந்தும் எப்படி ஏன் எவ்வழியில் வேறுபடுகின்றீர்கள். ஏன் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து இதைச் செய்ய முனையவில்லை. இப்படி நாங்கள் கேட்பதால், புலியெதிர்ப்பு ராகவன் முதல் சோபாசக்தி வரை வரட்டு மார்க்சியம் என்று சொல்லி, அரசியலில் வித்தை காட்டி பிழைக்க முனைகின்றனர்.

 

தமது அரசியல் சோரத்தை சோபாசக்தி இப்படிக் கூறுகின்றார் 'சென்ற தலித் மாநாட்டுக்கு வீ. ஆனந்தசங்கரியும், EPRLF (ப.நா) செயலாளர் சிறீதரனும் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தார்கள். மாநாட்டில் ஒருசில ENDLF, PLOTE, EPRLF உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். எனவே தலித் அரசியல் துரோக அரசியல் என்றொரு குற்றச்சாட்டுமுண்டு. என்னைப் பொறுத்தவரை நான் புலிகளைக் கண்டிப்பதைப் போலவே எப்போதும் கூட்டணியையும் மற்ற இயக்கங்களையும் கண்டித்து வந்துள்ளேன். அதே வேளையில் புலிகள் இயக்கத்திலும் சரி பிற அமைப்புகளிலும் சரி சாதிய விடுதலையில் அக்கறைகொண்ட தலித்துகளும் சொற்ப அளவில் தலித் அல்லாதவர்களுமிருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் மறந்துவிட முடியாது. ஒரு தலித் புலியாயிருக்கலாம், புளட்டாய் இருக்கலாம் கொம்யூனிஸ்டாக இருக்கலாம். ஆனால் அவர் தன்னளவில் சாதியத் தளையிலிருந்து விடுபடவே விரும்புவார். ஆதிக்கசாதியினருக்கு எதிரான தார்மீகக் கோபம் அவரது உள்ளத்தில் கனன்றுகொண்டுதானிருக்கும். எனவே இந்த இயக்க அரசியல்களுக்குப் புறத்தே சாதியொழிப்பு என்ற தளத்தில் சாதியத்திற்கு எதிரான சக்திகளைச் சாத்தியமான வழிகளிலெல்லாம் அய்க்கியப்படுத்த வேண்டும்." என்கின்றார். ஏன் ஜயா நீங்கள் அங்கே போகவில்லை. இப்படி அரசியல் வித்தை.

 

சரி இது எங்கிருந்து, எப்படி, எந்த அரசியல் ஊடாக வருகின்றது. வரலாற்றை பின்நோக்கிப் பாருங்கள். கருணா கிழக்கு பிரதேசவாதத்தை எழுப்பிய போது, பாலசிங்கம் எதைச்சொன்னாரோ அதுதான் இது. புலிகளின் 'மதியுரையர்" பாலசிங்கம் அன்று "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கட்டியெழுப்பியதற்காக" என்றார். அனைத்தையும் கடந்த தேசியம் என்றார். இன்று சோபாசக்தி அனைத்தையும் கடந்த தலித்தியம் என்கிறார். என்ன அரசியல் ஒற்றுமை.

 

புலி 'மதியுரைஞர்" பாலசிங்கம் மேலும் '.. தமது மக்களால் பெரிதும் விரும்பி ஏற்றப்படுபவர் பிரபாகரன். "பிரபாகரனுடன் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்தவன், இணைந்து தொழிற்பட்டவன் என்ற வகையில் அவரின் எண்ணத்திலோ, செயலிலோ பிரதேசவாதத்திற்கான சாயலைக்கூட நான் கண்டதில்லை. புலிகளின் தலைமைத்துவத்தின் மீது கருணா சுமத்தும் பிரதேசவாதக் குற்றச்சாட்டு இல்லாததொன்று அபாண்டமானது." என்கின்றார். இதையே சோபாசக்தி 'என்னைப் பொறுத்தவரை" என்று கூறிக்கொண்டு, தலித்துக்கு எதிராக இதை அரங்கேற்றுகின்றார். என்ன ஒற்றுமை. நான் அப்படியல்ல! உன் அரசியல் என்ன? அதுவல்லவா அனைத்தையும் தீர்மானிக்கின்றது.

 

பல்வேறு கட்சிகளில் இருக்கக்கூடிய பல்வேறு தரப்பட்டவர்களை உள்ளடக்கும் வகையில், கோட்பாட்டை வளைத்து நெளித்து அள்ளிக்கட்டும் தலித்தியம் பற்றி (தேசியம் பற்றி புலிகள்) சோபாசக்தி பேச முனைகின்றார்.

 

புலிகளின் அதே அற்புதமான அரசியல். மறுபக்கத்தில் அ.மார்க்ஸ்சின் மகிமையும் இதுதான். பாரிஸ் தலித் மாநாட்டில் தலித்துகள் மட்டும் பேசவேண்டும், கூட வேண்டும் என்றவர் சோபாசக்தி. இன்று புலி முதல் இலங்கை இந்திய கூலிக் குழுக்களில் உள்ள தலித்துகள் தான், இதை ஆதரிப்பதாக, பங்குபற்றுவதாக கூட கற்பனையில் பேசுகின்றார். அந்தக் கட்சிகள், அமைப்புகள் சாதியறியாதவர்கள் என்கின்றார். அதை அவர்கள் பயன்படுத்த முனையவில்லை என்கின்றார். நீண்ட நித்திரையாலே எழும்பி, இதை தமதாக்கும் சதியில் அலம்புகின்றார். சாதியவான்கள் தலித்துகளைக் கொண்டே தலித்துகளை ஒடுக்குகின்ற அதே தந்திரம், அதே ரவுடித்தனம் இது.

 

அரசியல் சமரசம், பிழைப்புவாதம், நட்புவாதம், மூடிமறைப்பு என்று, இவை எல்லாமாகி விடுகின்றது. இந்த அரசியல் என்ன செய்கின்றது. விடுதலைப்புலிகளும், இலங்கை இந்தியாவுடன் இயங்குகின்ற கூலிக் குழுக்களும், தலித்துக்கு எதிரானவர்களா இல்லையா என்பதை வெளிப்படையாக சொல்ல மறுக்கின்றது. அதை தெளிவுபடுத்த மறுக்கின்றது. அங்கே அவர்களின் தலித்துக்கு எதிரான அரசியலை முன்னெடுப்பார்கள். இங்கு தலித்துக்கு ஆதரவாக, குழிபறிக்கும் அரசியல் செய்வார்கள். இதுதான் தலித் மாநாடு.

 

தலித் உணர்வு இல்லாத அரசியல், அங்குமிங்குமாக இயங்க முடியும் என்பது வேடிக்கை. புலிக்குள், புலியெதிர்ப்புக்குள் தலித்தியத்தை உணர்வு பூர்வமாக வைக்க முடியுமா? இப்படி வைத்து உயிர் வாழத்தான் முடியுமா? சோபாசக்தியோ அனைவர் காதிலும் பூவைக்கின்றார்.

 

பார்ப்பனியம் இராமன் பாலத்தின் மகிமையைப்பற்றி பேசுவது போன்றது இது. இதற்கு தத்துவ மேதையாக வழிகாட்டும் அ.மார்க்ஸ் அன் கொம்பனிகள்.

 

சென்ற மாநாட்டில் புலியை மட்டும் தலித்தின் எதிரியாக புலியெதிர்ப்புவாதிகள் சித்தரித்தனர். இப்படி புலியெதிர்ப்புக் கும்பல் தலித்தியத்தின் பெயரில் குளிர் காய்ந்தது. இம்முறை சோபாசக்தி தலைமையில் தலித்தின் பெயரில், தலித்தின் எதிரி புலியுமல்ல, புலியெதிர்ப்புமல்ல எனகின்றார். இதனால் அங்கு வாருங்கள் என்கின்றார். நாம் அனைவரும் ஒன்றாக தலித்தின் பெயரில் குளிர்காய முடியும் என்கின்றார். இதைத்தான் மாநாட்டுக்கான அழைப்பில் சோபாசக்தி கூறுகின்றார். இப்படி அரசியலில் வித்தை காட்ட முனைகின்றார்.

 

நீங்கள் தலித்துக்கு எதிரான அரசியலுடன் கூட இருக்கலாம், ஆனால் இங்கு வரலாம் என்கின்றார். கூடிக் கும்மாளமடிக்காலம் வாருங்கள் என்கின்றார். உள்ளடக்கத்தில் நானும் ஒன்று நீயும் ஒன்று தான் என்கின்றார். இப்படி தலித்தின் எதிரியுடன், அதன் அரசியலுடன், ஐக்கியமுன்னணி கட்டுகின்றார். அதற்கு அவர் ஒரு உதாரணம் தருகின்றார். 'வரலாற்றில் நமக்கொரு முன்னுதாரணமும் இருக்கிறது. ஈழத்தில் சாதியொழிப்புப் போராட்டங்களைத் தொடக்கிக் கணிசமான வெற்றிகளைச் சாதித்த சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் கொம்யூனிஸ்டுகளும் இருந்தார்கள். தமிழரசுக் கட்சியினரும் இருந்தார்கள். எதிரும் புதிருமான அரசியல் நிலைகளுக்கு அப்பாலும் தலித் விடுதலை என்ற உணர்வு அவர்களை அய்க்கியப்படுத்தியது." வரலாற்றின் போக்கில் ஒருபகுதியை மட்டும் தமக்கு சார்பாக காட்டும் திரிபு.

 

இது தவறானது, தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு இது எதிரானது என்பதால், இது நீடிக்கவில்லை. இது நீடித்திருந்தால், தாழ்த்தப்பட்ட மக்களின் வீரம் செறிந்த போராட்டமே அன்று கிடையாது. சோபாசக்தி வரலாற்றுப் போக்கை, அதன் அனுபவத்தை நிராகரித்து நிற்பதால், அந்த போராட்டத்துக்கு எதிராகவே வெளிப்படையாக கையுயர்த்துகின்றார். நடந்த வரலாற்று அனுபவத்தை, உண்மையை நிராகரிப்பது தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு எதிரான வகையில் கட்டமைக்கும் திரிபாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மையான விடுதலைக்கு, அந்த ஐக்கியம் அந்த வழிமுறை சாத்தியமல்ல என்பதை, வரலாறு நிறுவிக் காட்டியது.

 

இந்த இடத்தில், இதைச் செய்யத்தான் தலித் மாநாடு என்றால், அது அவசியமற்றது.

 

பி.இரயாகரன்
14.02.2008