10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஒரு குழந்தையை வையாதே….!!!!

இங்கே நான் இருக்கிற இடத்திலே ஒரு பொடியன் இருக்கிறான். கிட்டத்தட்ட பதின்மூன்றோ, பதின்னாலு வயசு தான் இருக்கும். ஆள் நல்லா மொட்டையும் அடிச்சு இரண்டு காதிலே தோடும் குத்தி பார்க்கிறதுக்கு ஒரு மாதிரித் தான் இருப்பான்.


அவனின் குடும்பத்தையும் ஓரளவு எனக்குத் தெரியும். ஆனால் போய் வந்து அளவிற்கு நட்பும் பழக்கமும் இல்லை.

 

ஒரு நாள் என்னுடைய கடைசி மகளுக்கு ஏதோ பல்லு வைத்தியரிடம் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்பதற்காக  கார்தரிப்பில் நின்ற போது பள்ளிக்கூட வேலி ஒன்றுக்குப் பக்கத்தில் நின்று சிகரட் குடித்துக் கொண்டு நின்றான். இந்தப் பொடியன்.


அவனை நானும் என்னை அவனும் கண்டு கொண்டோம். அவன் எதுவித சலனமுமின்றி எது வித மாற்றமுமின்றி புகையை இழுத்து வெளியே தள்ளிக் கொண்டிருந்தான்.


அவன் எனக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று நான்  நினைக்கவும் இல்லை அப்படி நான் நினைக்கவும் முடியாது. ஆனால் இந்தப்பிள்ளை இந்தச் சின்ன வயதிலே இப்படிச் சிகரட் குடிக்கிறான்  என்றும் இவன் தகப்பனைக் கண்டால் சொல்ல வேணும்  என நினைத்துக் கொண்டேன். சின்ன வயசென்ன பெரிய வயசக்காரரும் சிகரட் குடிக்கக் கூடாது என்பது இன்று எல்லோரும் சொல்லுற விசையம்.

 

அந்த நாள் இரவு நேரம் எங்களுடைய வீட்டில் எல்லோரும் சாப்பாட்டுக் கொண்டிருக்கும் போது இந்தக் கதையை என்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் சொன்னேன். அப்போது அவர்கள் எதுவித வெளிப்பாடுமின்றி சாதரணமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.


இவர்கள் இது பற்றி பொருட்படுத்தாமல் இருக்க எனக்குப் பெரிய சங்கடத்தோடு கோபத்தையும் வரவழைத்தது.


ஒரு தமிழ்ப் பொடியன் அதுவும் ஒரு சின்னப் பொடியன் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் பேசாமல் இருக்கிறீர்கள் என நான் துள்ள இது பழங்கதையப்பா ஏதாவது புதிசு இருந்தாச் சொல்லப்பா என மூவரும் ஒருமித்தே கேட்க நான் கொஞ்ச நேரம் மௌனித்தப் போனேன்.


இரண்டு பெண் பிள்ளைகளையும் பெரிது பொருட்படுத்தாது மகனைப் பார்த்து நீ கவனமாய் இருக்க வேண்டும் அவனோடு பழகக் கூடாது அவனைக் கண்டாலும் விலகிக் கொள் என்று சொன்ன போது அவனும்  பேசாமல்  சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

இது ஒரு சம்பவம்.


பிறகு ஒரு நாள் நாங்கள் கொஞ்சத் தமிழர்கள் வொலிபோல் விளையாடி விட்டு வீடு
திரும்பிக் கொண்டு வருகையில் ஊர்க் கதை உலகக்கதை கதை,  என்று பலதும் பத்தும் கதைத்துக் கொண்டு வரும்போது இந்த தமிழ்ப் பொடியன் பற்றிய கதையும் வந்தது.


இங்கேயிருக்கின்ற சின்னக் குட்டியண்ணா குடும்பம் எங்கேயோ போகும் போது அந்தப் பொடியன் அவர்களுக்கு கல்லால் எறிந்து தூசண வார்த்தைகளாலும் பேசி அவர்களோடு சண்டைபிடிக்கவும் போனவனாம். அது மட்டுமில்லை அந்தப் பொடியன் இப்ப நல்லா கட்டை,  தூள், கஞ்சா, போன்ற போதைவஸ்த்துக்கள் எல்லாம் நல்லாப் பாவிக்கிறானாம் என்றும், அவனின் குடும்பத்துக்கும் அது பற்றித் தெரியும் என்றும் கொஞ்சம் சீரியசாகவே கதைத்தார்கள்.

 

அவன் பற்றி எனக்கும் எதுவும் தெரியும் என்பது போன்று நான் காட்டிக் கொள்ளவும்
இல்லை. அந்தக் கதைகளுக்குப் பதிலும் ஒன்றும் சொல்லவும் இல்லை. சும்மா பேசாமல் கேட்டுக் கொண்டே வந்தேன்.


ஆனால் ஏனோ தெரியவில்லை மனது பெரிதும் சங்கடமாகவே இருந்தது.
அந்த நாள் முளுதும் அந்தக் குழந்தை பற்றிய நினைவுகளும் என்னுடைய குழந்தைகள் பற்றிய நினைவுகளும் என்னைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது.


அடுத்த நாள் இரவு சாப்பிடும்போது நேற்று நான் வொலிபோல் விளையாடி விட்டு வரும் போது நடந்த சம்பவம் பற்றி எனது பிள்ளைகளக்கு மீண்டும் எடுத்துரைத்தேன்.
மகனைப்பார்த்து நீ தான் கவனமாய் நடந்து கொள் என்றும, அந்தப் பொடியனைக் கண்டால் தவிர்த்துக் கொள் என்றும் கூறிவிட கேட்டும் கேளாது போலும் என் மகன் நகர்ந்து விட்டான்.


இது இரண்டாவது சம்பவம்.


பிறகு ஒரு நாள் வோக்கின்ஸ்ரீற்றில் நடந்து கொண்டிருக்கும் போது எங்கேயோ போய்க் கொண்டிருந்த என்னோடு வேலை செய்த  மலினா ஓடிவந்து கட்டிப்பிடித்து குசலம் விரித்தாள்.

நானும் பதிலுக்கு விசாரித்த போது, தான் இங்கே ஒரு இளைஞர்களுக்கான விசேட பராமரிப்பு நிலையத்தில் பணிபுரிவதாகவும் பல வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்டவர்களுக்குப்பொறுப்பாயிருக்கிறாள் என்றும் னக்குஅந்தப் பொடியனைத் தெரியுமா என்றும், அவனும் ஒரு தமிழ்ப் பொடியன் தான் என்றும், அவன் பற்றிப் பல கதைகள்  குறிப்பிட்டும் அந்தப் பிள்ளை தான் இந்த இடத்திலுள்ள பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கே றக்ஸ் வழங்குகின்றான் என்றும் இங்கேயுள்ள பெரிய கிரிமினல் கூட்டங்களுடன் பெரிய தொடர்புடையவன் என்றும் ஆள் இப்பொழுது பெரிய புள்ளி என்றும், நீயும் இப்படியான பிள்ளைகளைப் பராமரிக்கும் நிலையத்தில் தானே வேலை செய்கின்றாய் என்பதனால்த் தான் இதை உனக்குச் சொல்லுகிறேன்  என்றும் என் தலையிலே பெரிய பாறாங்கல்லொன்றைத் தூக்கிப் போட்டு விட்டு நகர்ந்து விட்டாள்.

 

ஒரு வேலையென நினைத்து வந்த எனக்கு ஒன்றுமே செய்ய மனமில்லாமல் வீட்டை திரும்பி வந்தேன்.


ஏதோ விலை மதிக்க முடியாத ஒன்றை இழந்து விட்டது போன்ற ஓர் உணர்வும் சொல்ல முடியாத வர்ணிக்க முடியாத ஓரு சோகம் என்னை அறியாமல் கவ்விக் கொண்டது.


என்னுடைய மகனும் பாஸ்கற் போல், பாஸ்க்கற்போல, என்று இரவு பகலாய்த் திரிகிறான்.


அவனும் கறுப்பினத்து விளையாட்டு வீரர்களைப் போல் மயிரை நன்கு ஒட்ட வெட்டி தொள தொளத்த உடுப்புக்களும் போட்டுக் கொண்டு  குனிஞ்சு வளைஞ்சு கொண்டு அவர்களைப் போலவே திரிகிறான்.


நானும் முந்தி ஊரிலே இருக்கும் போது கமலகாஸனைப் போல் மயிரும் வெட்டி நிலமெல்லாம் கூட்டுவது போல் பெல்பொட்டமும் போட்டுக் கொண்டு திரிஞ்சவன் தான். ஒவ்வொரு வயதுக்கும் ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு ஸ்ரயிலும் அதற்கேற்ப உடுப்புக்களும் வருவது இயற்கை தானே என நினைத்து  இதை நான் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. இருந்தாலும் இந்த தோற்றமும் நடையும் எனக்கு விருப்பமானது அல்ல.


வழமை போல் இரவு நேரம் சாப்பிட இருந்த போது  இன்று அறிந்த கதையை என் மகனுக்குச் சொன்னேன். நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை சாப்பாட்டு மேசை ஆடிக் குலுங்கும் அளவிற்கு ஒரு உலுப்பு உலுப்பினான். அவன் ஒரு நாளும் அப்படி நடந்ததும் இல்லை அப்படிக் கோபப்பட்டதும் இல்லை.

 

அப்பா உனக்கு அவனைப் பற்றி என்ன தெரியும்…..? அந்தப் பொடியன் பற்றிய கதைகள் அனைத்தும் உண்மை தான் இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால் அவன் என்னுடன் படிக்கும் சக மாணவன் அல்ல. எங்களுடைய பள்ளிக்கூடத்தில் தான் படிக்கின்றான். மதிய நேரத்தின் போதும் விளையாட வரும் போதும் நான் அவனைச் சேர்த்து விளையாடுவேன். ஆனால் அவன் என்னுடைய நண்பனும் இல்லை ஆனால் அங்கே இவனுக்கென்று ஒரு நல்ல நண்பர்களும் இல்லையப்பா.. என்று கண்ணே கலங்கி விட்டான்.

 

என்னுடைய மகன் இப்படி ஒருநாளும் கலங்கியதையோ கோவப்பட்டதையோ நான் காணவில்லை.


அப்பா.. அந்தப்பொடியன் ஆரம்ப காலங்களில் தமிழ்ப்பொடியங்களுடன் தான் திரிந்தவன் பழகிழயவன். ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்து  சின்னக்குட்டி மாமா என்று சொல்லுறவரின் பொடியங்களோடு  வீட்டுக்கு வரும் வழியில் சில அரபுப் பொடியளும் சில சோமாலியப் பொடியளும் வேறு சில வெளிநாட்டுப் பின்னணி கொண்ட பொடியளும் சேர்ந்து இவனுக்கு அடிச்சவர்களாம்.

 

இதை அந்தச் சின்னக்குட்டி மாமாவும் அவரது பிள்ளைகளும் பார்த்துக் கொண்டு
நின்றவர்களாம். ஆனால் அவர்களால் ஒன்றும் அவர்களுக்குத் திருப்பியடிக்கவோ
சண்டைப்பிடிக்கவோ முடியாதது தான்.


ஆனால் இந்தச் சம்பவத்தையறிந்த அந்தப் பொடியனின் தாய் தகப்பன் சின்னக்குட்டியிடம் வந்து சாட்சி சொல்லக் கேட்ட போது எங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும் அத்தோடு கோடு கச்சேரி என்று ஏறி இறங்கி எங்களுடைய குடும்ப கௌரவத்தை இழக்கத் தயாரில்லை என்றும் மறுப்புத் தெரிவித்து விட்டார்கள்.

 

பின்னர் அதை தாய் தகப்பனும்  அப்படியே கைவிட்டு விட்டார்கள்.
ஆனால் இவன் அதை மறக்காமல் இவனுக்கு அடிச்ச குறுப்க்கு எதிரான ஆட்களுடன் சேர்ந்து தான் அது இது என்று பழகி இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறான்.

 

இதற்கு யார் காரணம் சின்னக்குட்டியா…? அல்லது அந்தப் பொடியனா…. சொல்லப்பா…

இப்படி ஒவ்வொரு குடும்பங்களும் ஒவ்வொருவரு மனிதர்களும் ஏதோ ஒவ்வொரு காரணங்களைச் சொல்லி ஆட்களையாட்கள் ஒதுக்கலமா..? இது சரியாப்பா..

 

வெட்கித் தலை குனிந்து வாயடைத்து வார்ததைகள் வெளிவராமல் திக்குமுக்காடிப் போனேன்.


அப்பா வீட்டுக்கள்ளே அடங்கிப் போய் இருந்து கொண்டு தாய்தகப்பனின் விருப்பு
வெறுப்பக்களுக்காக வெள்ளியிலே கணிதம் படிக்கவும் சனி ஞாயிறுகளில் பாட்டும் வீணையும் மற்ற நேரங்களில் சாமத்தியம் கலியாணம் என்று பெற்றோருடன் திரியும் பிள்ளைகளைத் தான், நீங்கள் நல்ல பிள்ளையென்றும் நினைத்தக் கொண்டிருக்கின்றீர்கள். நிலமையும் உண்மையும் அதுவல்ல.


அதுக்காக ஒரு பிள்ளை கெட்டுப் போகக் கூடா என்று தாய் தகப்பன் நினைப்பதும் அதற்கான முயற்சிகளை எடுப்பது பிழையென்றும் நான் சொல்ல வரவில்லை.


எப்படி உங்களுடைய பிள்ளை நல்லா வரவேண்டும் என்று நீங்கள் நினைப்பது போல் மற்றப் பிள்ளைகளும் நல்லா வரவேண்டும் என்று  நினையா விட்டாலும் பாதிப்பு வரக்கூடாது என்ற சிறு உணர்வாவது இருக்க வேண்டும் அப்பா…

 

இப்படியாக ஒவ்வொரு தாய் தகப்பனும் நினைத்தால் இந்தச் சமூகத்தில் நடைபெறும் எத்தனையோ தீங்கு செயல்களை ஓரளவாவது தடுத்து விடலாம்.


என்னையும் என் சமூகத்தையும் எண்ணி எண்ணி மனம் வருந்திக் கலங்கினேன்.
பொதுவாக எங்களுடைய இந்தத் தமிழச்  சமூகம் தன்னலம் கருதியும் சுயநலம் கொண்டே தங்களினது எல்லாச் செயற்பாட்டுகளிலும் சிந்தித்துக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.


தான் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் தான் என்றும் என்ரை என்றும்
எல்லாவற்றுக்குமாகவே அடிபட்டு அழிந்து கொண்டு போகின்றான்.  இந்த நிலைகள் எல்லாம் மாறி  பரந்து பட்டு எப்போ பொதுவாக நாம் சிந்திக்கத் தொடங்குகின்றோமோ அப்போ தான் எம்முடைய எல்லா விடிவுகளுக்கும் சிறு வித்தையாவது விதையிட முடியும்.

 

மகன் வேறு வேறு கதைகள் நிறையவே சொல்லிக் கொண்டிருந்தான். எனக்கு காதுமடைச்சு சாப்பிட்ட சாப்பாடு இறங்காமல் தொண்டையின் இடையில் இறுகிக் கொண்டது.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்