01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

"பிற்போக்கானதும், அடைய முடியாததுமான" கோசமா "தமிழ் ஈழம்"! இது கேலிக்குரியது

சுயநிர்ணயத்தை வரையறுக்கும் அரசியல்ரீதியான உள்ளடக்கம், என்றும் பிற்போக்கானதல்ல, அடையமுடியாதல்ல. இந்த வகையில் தமிழீழம் இதற்கு உட்பட்டது. இங்கு எந்த வர்க்கம் இதைத் தன் கையில் எடுக்கின்றது என்பதுதான், புரட்சிகரமானதா எதிர் புரட்சிகரமானதா என்பதைத் தீர்மானிக்கின்றது. இதற்குரிய அரசியல் சாத்தியப்பாட்டையும், அதன் அரசியல் போக்கையும் கூட இதுதான் தீர்மானிக்கின்றது. இங்கு இதன் வர்க்க அரசியல் தான் இதை வரையறுக்கின்றது.

 

இதுவல்லாது "பிற்போக்கானதும், அடையமுடியாததுமான தமிழ் ஈழம்" என்று வர்க்க அடிப்படையின்றிக் கூறுவது, சாராம்சத்தில் புலியெதிர்ப்பு அரசியல் சார்ந்தது. இது அரசு சார்பு அரசியலை அடிப்படையாகக் கொண்டது. இப்படியிருக்க, இதை மறுத்து "பிற்போக்கானதும், அடையமுடியாததுமான தமிழ் ஈழம்" என்று மார்க்சியம் இதைத்தான் சொல்வதாக கூறுவது அரசியல் புரட்டுத்தனமாகும். இதைத்தான் முன்னாள் இடதுசாரிகள் சமூக வெற்றிடத்தில் இன்று திணிக்க முற்படுகின்றனர்.

"தமிழ் ஈழம் அடைய முடியாத பிற்போக்கான" போராட்டம் என்று கூறுகின்றவர்கள், அடையக்கூடியதானதும் முற்போக்கானதுமான கோசத்தை முன்வைத்துப் போராடியிருக்கவேண்டும். அந்தவகையில் "தமிழ் ஈழம்" என்ற கோசத்தை அரசியல் ரீதியாக இல்லாதாக்கியிருக்க வேண்டும். இதுதான் மார்க்சிய அரசியல் மற்றும் அதன் நடைமுறை அரசியலாகும்.

இதை அரசியல் ரீதியாக செய்யாதவர்கள், இதற்காக போராடதவர்கள், இன்று இதை இப்படிக் கூறுவது அருவருக்கத்தக்க பேரினவாத அரசியல் பிரச்சாரமாகும். இலங்கையில் இடதுசாரிகள், குறிப்பாக புரட்சிகரமான மார்க்சியத்தை அடிப்படையாக கொண்டு இருந்த சண் தலைமையிலான கட்சியும், அதன் பின்பாக அதில் இருந்து உருவான கட்சிகளும் தேசிய இனப்பிரச்சனையிலான முரண்பாட்டை தங்கள் கையில் எடுக்காத அரசியல் வெற்றிடத்தில்தான் புலிகள் உருவானார்கள். ஆயிரம் ஆயிரம் பேர் இந்த அரசியல் பின்னணியில், தங்களைத் தியாகம் செய்தனர். இதே காலகட்டத்தில் ஜே.வி.பியிலும், இதே போன்று மற்றொரு முரண்பாடு சார்ந்து ஆயிரம் ஆயிரம் பேர் தியாகங்களைச் செய்துள்ளனர்.

இப்படியிருக்க முன்னாள் இடதுசாரிகள் தாங்கள் இன்னும் மார்க்சியவாதிகள், வர்க்கரீதியான நடைமுறைவாதிகள் என்று தொடர்ந்தும் கூறிக்கொண்டு, சமூகத்தில் எழும் முரண்பாடுகளைக் கண்டுகொள்ளாத சூனியத்துக்குள் தங்கள் இருப்புக்கேற்ற அரசியலைத் தொடர்ந்து நகர்த்துகின்றனர்.

இந்த எல்லையில்தான் "பிற்போக்கானதும், அடையமுடியாததுமான" "தமிழ் ஈழம்" பற்றியும் பேசுகின்றனர். தமிழீழம் என்ற கோசம் சுயநிர்ணயத்தின் அடிப்படையில் உள்ளார்ந்த ஓன்று. அது பிரிந்து செல்வதை அடிப்படையாகக் கொண்டது. இந்த வகையில் அடையக்கூடியதும் முற்போக்கான அரசியல் அம்சத்தையும் அது உள்ளடக்கியது. இலங்கையில் ஒரு வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு வர்க்கக்கட்சி, இனபிரச்சனைக்கான தீர்வாக சுயநிர்ணயத்தை அடிப்படையாக கொண்டு போராடும் போது, அதற்குள் பிரிந்து செல்லும் உரிமையை கொண்டதாக, அதாவது சாத்தியமான முற்போக்கான கோசத்தை உள்ளடக்கியது தான்.

ஆக இங்கு வர்க்க அடிப்படை தான், முற்போக்கானதா அல்லது பிற்போக்கானதா என்பதையும், சாத்தியமானதா சாத்தியமற்றதா என்பதையும் தீர்மானிக்கின்றது. ஆக இங்கு பாட்டாளி வர்க்கம் முரண்பாட்டை தீர்க்க முனையாத போது, பிற்போக்கு வர்க்கங்கள் அதனைத் தங்கள் கையில் எடுத்து சாத்தியமற்ற பிற்போக்கான கோசமாக அதை மாற்றுகின்றது.

இந்த நிலையில் 1976 களில் சண் கட்சியில் இருந்து உருவான "தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி" குறிப்பானதாக "தமிழ் மக்கள்" என மையப்படுத்திய போதும் ஜனநாயகப் பிரச்சனையான இனப்பிரச்சனையைக் கையில் எடுத்து தலைமை தாங்கத் தவறியது. இந்தப் பிரதான முரண்பாட்டை அரசியல் ரீதியாக அணுகி அது செயற்படவில்லை. மாறாக

1. கூட்டணியின் பழைய கோசமான "சுயாட்சி" யை முன்வைத்தவர்கள், இனங்களின் சுயநிர்ணய உரிமையை அரசியல் ரீதியாக மறுத்தனர்.

2. "சுயாட்சி" கோசத்துக்காகவும் கூட போராடாது, திண்ணை மார்க்சியம் பேசும் அமைப்பாகியது.

இந்த நிலையில் இவ்விரண்டு சந்தர்ப்பவாத அரசியல் போக்கையும் எதிர்த்து, விசுவானந்ததேவன் மட்டும் தீவிரமாக இயங்கத் தொடங்கினார். இப்படி "தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி" புதியதொரு தலைமுறையின் புரட்சிகர கூறுகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பாக மாறியது. அது சுயநிர்ணய அடைப்படையில் இனப்பிரச்சனையைத் தீர்க்கவும், இன முரண்பாட்டை பிற்போக்கு சக்திகள் கையில் எடுப்பதைத் தடுத்து செயலுள்ள புரட்சிகர அமைப்பாக தன்னை மாற்றவும் முனைந்தது. இங்கு "தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி" தமிழீழக் கோசத்தை வைத்ததாக கூறுவது பொய்யான இட்டுக்கட்டு. அது சுயநிர்ணயத்தைத்தான் கோரியது. இந்த அமைப்பு தன் பெயரை கைவிடும் தமிழீழக் கோசத்தை வைக்கவில்லை.

இந்த அமைப்பு தன்பெயரை கைவிட்ட போது, அது இரண்டு அமைப்புகளை உருவாக்கியது. ஒரு முன்னணியையும், ஒரு கட்சியையும் உருவாக்கியது. இங்கு முன்னணியில் தமிழீழக் கோசத்தையும், கட்சி சுயநிர்ணயத்தையும் முன்வைத்தது. கட்சி இலங்கைக்கான கட்சியாக இருந்தது.

"தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி" தன்னை "தமிழ் மக்கள்" என்று தன்னை மையப்படுத்தி அடையாளப்படுத்தி இருந்தது. இந்தக் குறுகிய அரசியல் போக்கை விடவும், அரசியல் ரீதியாக முன்னேறிய வகையில் இலங்கைக்கான ஓரு கட்சியையும், தனக்கான அரசியல் முன்னணியையும் உருவாக்கியது. இங்கு முன்னணியில் தான் தமிழீழக் கோசம் வைக்கப்பட்டது. கட்சி சுயநிர்ணத்தை தன் அரசியல் அடிப்படையாக கொண்டதுடன், கட்சி தனக்கு கீழ்தான் இராணுவப் பிரிவையும் உருவாக்கியது. முன்னணிக்கு கீழ் அல்ல.

என்.எல்.எப்.ரி. வெளிப்படையான முன்னணி அமைப்பாக இருந்தது. இங்கு தமிழீழக் கோசம் எந்த அடிப்படையில் முன்னணியில் வந்தது என்பதைப் பார்ப்போம்;. முரண்பாடுகளை தீர்க்கத் தவறிய இடதுசாரிகளின் தவறுகளால், வலதுசாரிய பிற்போக்குவாதிகள் முரண்பாடுகளை தங்கள் கையில் எடுத்து இருந்தனர். இது தமிழீழக் கோசத்தை மையப்படுத்தி, தன்னைத் தவிர வேறு யாராலும் இதைத் தீர்க்க முடியாது என்ற அடிப்படையில் இந்த கோசத்தை மையப்படுத்தி அரசியல் மயப்படுத்தியிருந்தது.

இந்த அரசியல் கோசத்தை முன்னணி ஊடாக கடப்பதன் மூலம் தான், பிற்போக்கான வலதுசாரிய வர்க்கத்தை தனிமைப்படுத்த முடியும் என்று கட்சி கருதியது. இது சரியான யுத்த தந்திரம் தான். ஆனால் நாம் இதில் வெற்றி பெறவில்லை என்பது ஒருபுறம் இருக்க, இந்தக் கோசம் மூலம் புதிதாக எம்மால் ஒருவரையும் இணைக்கவும் முடியவில்லை என்பதே எமது எதார்த்தமாக இருந்தது. இது காலம் கடந்த கோசமாக, அர்த்தமற்ற கோசமாக மாறியது இந்தியாவின் இராணுவப் பயிற்சி. வலதுசாரி பிற்போக்குவாதிகள் "தமிழீழக்" கோசம் மூலம் தங்களை நிலைநிறுத்திய அந்த சூழல், மிக வேகமாக கடந்து சென்றுவிட்டது. தமிழீழத்துக்கு பதில் இராணுவத் தாக்குதல், இராணுவப் பயிற்;சி, ஆயுதங்களை மையப்படுத்திய பிற்போக்கு சக்திகள் தங்களை நிலைநிறுத்தும் புதிய போக்கு உருவானது. இதைக் கடந்து முன்னேற, நாமும் அதையே செய்கின்ற நிலைக்குள் சென்றோம். இதன் மூலம் தான் அரசியல் ரீதியாக மேவி, பிற்போக்கான அரசியல் போக்கை முறியடித்து முற்போக்கான அரசியல் சூழலை மாற்ற முடியும் என்று நம்பினோம். இப்படி எண்ணியது சரியானதாக இருந்த போதும், அரசியல் ரீதியாக இது தவறாக இருந்தது. இந்த திடீர் வீக்கத்தை சார்ந்து நடத்தைகளின் அரசியல் விளைவுக்கு ஏற்ப, எம்மை நாம் தயார்படுத்தும் அரசியலை மையப்படுத்தி அதை செய்யத் தவறினோம். இதற்கு மாறாக நாமும் ஆயுதம், பயிற்சி என்று முன்னேறிய போது, பிற்போக்கு சக்திகள் புதிய வடிவில் தம்மை நிலைநிறுத்தும் வண்ணம் பாரிய தாக்குதலை நடத்தினர்.

இதன் பின்னணியில் அன்னியப் பணம் மற்றும் ஆயுதங்களுடன் போட்டி போட்டு முன்னேற முடியாத வகையில் பிற்போக்கு கூறுகளின் தலையீடுகள் மக்களை சிந்திக்க விடாது தடுத்தது. மக்கள் மற்றும் போராட முன் வருபவர்களின் அரசியல் தெரிவும் இதுவாக இருந்த போது, எம்மால் புதிதாக ஒருவரையும் கூட இணைக்க முடியவில்லை. ஒரு செயலற்ற நிலைக்குள் நாம் தள்ளப்பட்டோம். அமைப்பில் அதிருப்திகள் அதிகரிக்க, அமைப்புக்குள் இரண்டு அரசியல் போக்குகள் உருவானது.

1. இராணுவம் மேல் நாமும் தாக்குதல் நடத்துவதன் மூலம், தேசியப் போராட்டத்தில் எம்மை பலப்படுத்தி பிற்போக்கு சக்திகளை முறியடித்து எம்மை நிறுத்த முடியும்;. பழைய வழி.

2. எம் அமைப்பு சக்திகளை பாதுகாத்துக் கொள்ளவும், சமூக உள் முரண்பாடுகள் மற்றும் மக்களுக்கும் இயக்கத்துக்கும் இடையிலான முரண்பாடுகளை கையில் எடுப்பதல் மூலம், மக்களைச் சார்ந்து அமைப்பைப் பலப்படுத்தி பிற்போக்கான அரசியலை எதிர் கொள்ளுதல். புழைய வழிக்குப் பதில் புதிய வடிவில் எம்மை நிலைநிறுத்தல்

இந்த இரு போக்கும், அமைப்பை இரண்டாக உடைத்தது. பொதுவான இந்த அரசியல் நீட்;சியில் தான், தனிநபர்களின் பாத்திரங்கள், அவர்களின் குறைபாடுகள் தீhக்கமான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தியது.

மறுபக்கத்தில் என்ன நடந்தது? தமிழீழக் கோசம், ஆயுதம், ஆயுதப் பயிற்சி, பாரிய தாக்குதல் என்று முன்னேறிய பிற்போக்கு கூறுகள் தீர்மானகரமான சக்தியாக மாறிய அதேநேரம், இந்த எல்லைக்குள் தங்களை நிலைநாட்ட முடியாத அரசியல் உள் முரண்பாட்டுக்குள் சிக்கினர். அவை உடையத் துவங்கியது. எமது கடந்தகால அரசியல் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை நிராகரித்து வீங்கி வெம்பிய போராட்டத்தை நம்பிச் சென்ற ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் அதிருப்தியுற்ற நிலையில் எம் அரசியலைத் தேடினர். பயிற்சி பெற்று ஆயுதங்களை ஏந்திய நிலையில், எம் அரசியலுடன் வந்து சேர அவர்கள் எம்மைத் தேடிய போது நாங்கள் அதற்கு தலைமை தாங்க தயாராக இருக்கவில்லை.

நாம் அன்று சொன்னதை, அவர்கள் தங்கள் சொந்த அனுபவம் ஊடாக கற்று எம்மை நோக்கி வந்த போது, வெற்றிடம் தான் இருந்தது. நாம் எம்மை அரசியல் ரீதியாக மக்களுடன் ஓன்றிணைத்து இருக்கவில்லை. எதிர்ப்புரட்சியை எதிர்கொள்ளும் வகையில் புரட்சிகரமான அரசியல் கூறாக எம்மால் வழிகாட்ட முடியவில்லை. எமக்குக் கிடைத்த குறுகிய காலத்தை, பிற்போக்கு சக்திகள் தங்களை நிலைநிறுத்திய அந்த போக்கில் சென்று மேவுவதன் மூலம் அடைய முடியும் என்று கருதி, எம்மை நாம் அரசியல் ரீதியாக அழித்தோம். அவர்கள் அழிவார்கள் என்பதை முன்கூட்டியே தெளிவாக கணித்த நாம், அந்த இடத்தை நிரப்பும் அரசியல் வேலையை மையப்படுத்தியிருக்கவில்லை. இதன் விளைவு 1980 களில் எழுந்த புரட்சிகரமான அரசியல், அடுத்த பத்தாண்டுகளில் முடிவுக்கு வந்தது.

திட்டமிட்ட அன்னியத் தலையீடு மூலம் போராட்டத்தை வீங்கி வெம்பவைத்து அவர்கள் உருவாக்கிய அரசியல் மேலாண்மையை, நாம் மேவிக் கடக்கும் அரசியல்வழி மூலம் படுகுழியில் வீழ்ந்தோம். 2009 முள்ளிவாய்க்கால் வரை வலதுசாரி பிற்போக்கான எதிர்ப்புரட்சி அரசியல், புரட்சிகர அரசியலை ஓடுக்கியபடி தன்னை புரட்சிகர அரசியலாக முன்னிறுத்திக் காட்டியது. இதன் பின்னணியில் இதை மாற்றியமைக்கும் புரட்சிகர அரசியல் பணியை செய்யாத இடதுசாரியம், மார்க்சியம் என்பதும், தங்களை இடதுசாரிகள் மார்க்சியவாதிகள் என்று கூறுகின்ற அரசியல் புரட்டுத்தனத்தை இன்று நாம் இனம் காணவேண்டும்.

பி.இரயாகரன்

13.07.2011


பி.இரயாகரன் - சமர்