Language Selection

புலிகளின் வதைமுகாம் அனுபவத்தை, புலியெதிர்ப்பு அரசுசார்பு ஊடகமான தேனீயில் மணியண்ணை தொடர்ந்து எழுதி வருகின்றார். அதில் அவர் "தமிழ் ஈழ" கோசம் காரணமாகத் தான் "தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி"யில் இருந்து விலகினேன் என்று கூறுவது, அரசியல் ரீதியான புரட்டு. இதனால் தான் "நாம் அரசியல் ரீதியான தொடர்புகளைத் துண்டித்திருந்தோம்" என்று எழுதும் மணியண்ணை, அந்த "நாம்" யார்? அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் இப்போது எங்கே? அவர்கள் செய்த அரசியல் தான் என்ன? என்று கூறுவாரா? இங்கு "தமிழ் ஈழ" கோசத்தால் தான் தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியில் இருந்து விலகினேன் என்ற அரசியல் புரட்டும், அதனூடு சந்தர்ப்பவாத அரசியலையும் முன்வைக்கின்றார். "நான் எப்பொழுதும் மார்க்சிச – லெனினிச நிலைப்பாட்டிலிருந்தோ, கட்சி நிலைப்பாட்டிலிருந்தோ என்னை விலகாமல் பார்த்துக் கொண்டேன்." என்று எழுதும் அவர், இந்த கொள்கையின் அடிப்படையில் அவர் செயல்பட்ட அரசியல் நடைமுறைகளும், அவர் கொண்டிருந்த கருத்துகளும் தான் எவை எனக் கூறவேண்டும்.

 

 

இன்று மார்க்சிய அடிப்படையில் செயல்பட்டதாக இட்டுக்கட்ட முற்படுவது உட்பட, இதனால் தான் புலிகள் தன்னை வதைமுகாமுக்கு கொண்டு சென்றதாக வரலாற்றைப் புரட்ட முற்படுகின்றார். "தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி"யில் அவரின் செயற்பாடு தான் என்ன? செயலற்ற தனம் தான், அவரின் செயற்பாடு. அதற்கேற்ற அரசியல்.

1980 ஆண்டு நான் "தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி" என்ற அமைப்பில் உறுப்பினரானேன். இந்த அமைப்பின் மத்தியகுழுவில் இருந்த விசுவானந்ததேவன் மாத்திரமே, அந்த அமைப்பில் செயற்படும் உறுப்பினராக இருந்தவர். உண்மையில் விசுவுக்கு வெளியில் "தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி" யின் எந்த முன்னணி உறுப்பினரும் செயற்படவில்லை. விசுவுக்கு வெளியில் இந்த அமைப்பின் கிராமங்களில் வேலை செய்ய நான்கு பேர் (விசுவமடுவில் இருவர், ஊர்காவற்துறையில் இருவர்) குறைந்த மட்டத்தில் செயல்பட்டனர். இவர்கள் தவிர, பழைய எந்த உறுப்பினரும்; வர்க்க அரசியலை முன்வைத்து மக்கள் மத்தியில் இயங்கவில்லை. உண்மையில் இந்தக் கட்சி செயலற்ற, பெயரளவிலான அமைப்பாக இருந்தது. தமிழ்மக்கள் மேலான இனவொடுக்குமுறைக்கு எதிராக, சண் வழி வந்த கட்சிகள் இந்த முரண்பாட்டை தங்கள் கையில் எடுக்கவில்லை. என்ன நடக்கும் என்பதை கார்ல் மார்க்ஸ் கூற்று மிக சரியாக கூறுவது போல் "ஒரு சமுதாயத்தில் குவிந்து விட்ட முரண்பாடுகளை அதன் முற்போக்குச் சக்திகள் தீர்க்காவிட்டால், அந்த வேலை பிற்போக்கு சக்திகளால் செய்து முடிக்கப்படுகின்றது. இந்தக் கட்டத்தில் வரலாறு அதன் தவறான திசையில் வளர்கிறது" ஆம் இதுதான் நடந்தது. இந்த நிலையில் "நான் எப்பொழுதும் மார்க்சிச – லெனினிச நிலைப்பாட்டிலிருந்தோ, கட்சி நிலைப்பாட்டிலிருந்தோ என்னை விலகாமல் பார்த்துக் கொண்டேன்." என்று கூறுகின்ற கூற்று, மார்க்சின் மார்க்சியத்துக்கு எவ்வளவு நேர்மாறான நிலைப்பாடு என்பதும் மோசடித்தனமானது என்பதும் சொல்லத் தேவையில்லை.

செயலற்ற "தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி" இன முரண்பாடுகளை கையிலெடுக்காது, அறிவுசார் வெட்டி மார்க்சியம் பேசிக் கொண்டு இருந்தது. இப்படி தலைமையும், அதன் உறுப்புகளும் சமூகத்தை தலைமை தாங்கவும், வழிகாட்டவும் வக்கற்றுப் போனார்கள். இந்த நிலையில் அதில் இருந்த ஒரு உறுப்பினர் மட்டும், இதை மாற்றி அமைக்கும் வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாக கையில் எடுத்தார். விசுவானந்ததேவன் மட்டும் தான், செயல்படும் உறுப்பினர். இப்படி இருக்க தங்கள் செயலற்ற தனத்தை மூடிமறைத்து, விசுவின் செயலுள்ள அரசியல் பாத்திரத்தை கொச்சைப்படுத்தி, இலங்கை அரசுக்கு சார்பாக புலி எதிர்ப்பு இணையத்தில் அவதூறு பொழிகின்றார் மணியண்ணை.

விசு தன் முன்முயற்சியுடன், புதிய உறுப்;பினர்களை உள்வாங்கி "தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி" யை இயங்க வைத்தார். செயலற்ற அமைப்புக்கு வெளியில் உருவாக்கிய பிரதேச கமிட்டியே, அமைப்பை வழிகாட்டும் உறுப்பாகியது. 1983 வரை இந்தக் கமிட்டிதான் அமைப்பை வழிநடத்தியது. "தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி" யின் தலைமை முற்றாக செயலற்று திண்ணை அரசியலாகிப் போனது. இது தான் மணியண்ணையின் மார்க்சியமாகியது.

இங்கு விசுவானந்ததேவனின் தனித்த தீவிர செயற்பாடு தான் "தமிழீழ தேசிய விடுதலை முன்னணி" என்ற பெயர் மாற்றத்தின் ஊடான என்.எல்.எப்.ரி என்ற அமைப்பை உருவாக்கியது. இங்கு இந்த அமைப்பு "பிற்போக்கானதும், அடைய முடியாததுமான "தமிழ் ஈழம்" என்ற கொள்கைக்கு மாறியதுடன், முன்னணியின் பெயரையும் ‘தமிழீழ தேசிய விடுதலை முன்னணி’ (என்.எல்.எப்.ரி) என மாற்றிக் கொண்டனர் அதன் காரணமாக அந்த இயக்கத்துடனும் நாம் அரசியல் ரீதியான தொடர்புகளைத் துண்டித்திருந்தோம்" என்று கூறும் மணியண்ணையின் அரசியல் புரட்டுத்தனமானது. சரி விசு அல்லாத உங்கள் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு எங்கே!? இது தான் உங்கள் முரண்பாடு என்றால், தொடர்ந்து அந்த அமைப்பை முன்னெடுத்து சென்றிருக்க முடியும்.

ஆக அப்படி எதையும் செய்யாத திண்ணை மார்க்சியவாதியாகிய நீங்கள், "எப்பொழுதும் மார்க்சிச – லெனினிச நிலைப்பாட்டிலிருந்தோ, கட்சி நிலைப்பாட்டிலிருந்தோ என்னை விலகாமல் பார்த்துக் கொண்டேன்." என்று கூறுவது நகைப்புக்குரியது. இந்த அடிப்படையில் ஈழ அமைப்புகளுடன் முரண்பட்ட அரசியல் எதையும் நீங்கள் முன்வைத்து செயல்பட்டது கிடையாது. உங்கள் திண்ணை மார்க்சியம் என்ன என்பதை தங்கள் சுய வாக்குமுலம் அழகாக,

"பிரபாகரனும் உமாமகேஸ்வரனும் ஒன்றுபட்டு இருந்த காலத்தில் ஆரம்பித்த ‘உணர்வு’ பத்திரிகை, ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்க மாணவர் அமைப்பின் ‘ஈழ மாணவர் குரல்’, இப்பொழுது சிறையில் இருக்கும் தேவதாசின் ‘பலிபீடம்’, ‘உதயசூரியன்’, ‘சிம்மக்குரல்’, எமது கட்சியின் ‘போராளி’ என பல பத்திரிகைகளை நான் அச்சிட்டேன். அத்துடன் இயக்கங்களின் பிரசாரப் பிரசுரங்கள், யாழ்.பல்கலைக்கழகத்தில் செயல்பட்ட புலிகளின் மறுமலர்ச்சிக்கழக வெளியீடுகள் எனப் பலவற்றையும் அச்சிட்டேன்." என்று கூறுகின்றது. "அந்த நேரத்தில் என்னுடன் நல்ல உறவுகளைப் பேணியதில் புலிகளின் இயக்கமும் ஒன்று. அந்த இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் தவிர்ந்த ஏனைய முன்னணி உறுப்பினர்களான மாத்தையா, அன்ரன் பாலசிங்கம், திலீபன், கிட்டு, மூர்த்தி (அப்போதைய அரசியல் பொறுப்பாளர் – தமிழ்செல்வனின் அண்ணன்), யோகி, லோறன்ஸ் திலகர், சந்தோசம், புதுவை இரத்தினதுரை, பண்டிதர் என பலரும் என்னுடன் பழகி வந்தனர்."

என்று சாட்சியமளிகின்றது. இந்த உங்கள் திண்ணை மார்க்சிய அரசியல் தளத்தில் நீங்கள் நடத்திய நல்லுறவுக்கு வெளியில், மக்களுக்காக போராடியவர்களை இவர்கள் கொன்று குவித்து வந்தனர்.

மறுதளத்தில் படுபிற்போக்கான ஈழ வலதுசாரிய கும்பலுடன் கூடிக்குலாவிக் கொண்டவர் கூறுகின்றார் "பிற்போக்கானதும், அடையமுடியாததுமான "தமிழ ஈழம்" என்ற கொள்கைக்கு" எதிராகத்தான் "அந்த இயக்கத்துடனும் நாம் அரசியல் ரீதியான தொடர்புகளைத் துண்டித்திருந்தோம்." என்பது எவ்வளவு மோசடியானது. இன்று இதன் ஊடாக தாங்கள் பின்பற்றும் பேரினவாத அரசியலை முன்வைக்கின்றார். அன்று பிரபாகரன் தவிர்ந்த அனைத்து முக்கிய உறுப்பினருடனும் கூடிக் குலாவியவர், இன்று அதைத் தான் புலியெதிர்ப்பு தளத்தில் அரசுடன் செய்கின்றார்.

இப்படி செயற்படும் அவர் "என்னுடைய கொள்கைகள் மிகவும் வெளிப்படையானவை. நான் எப்பொழுதும் மார்க்சிச – லெனினிச நிலைப்பாட்டிலிருந்தோ, கட்சி நிலைப்பாட்டிலிருந்தோ என்னை விலகாமல் பார்த்துக் கொண்டேன். தமிழ் மக்களின் பிரச்சினை தீவிரமடைந்து, ஆயுதப் போராட்டமாக அது வெடித்த பின்பு, எமது கட்சியிலிருந்த பலர் – முன்னணித் தோழர்கள் உட்பட - பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து வேலைசெய்ய ஆரம்பித்தனர். எமது கட்சியால் உருவாக்கப்பட்ட "தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி" என்ற அமைப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட சிலர், அதன் அடிப்படைக் கொள்கையான "ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் பகுதிகளுக்கு சுயாட்சி" என்பதைக் கைவிட்டு, பிற்போக்கானதும், அடைய முடியாததுமான "தமிழ் ஈழம்" என்ற கொள்கைக்கு மாறியதுடன், முன்னணியின் பெயரையும் "தமிழீழ தேசிய விடுதலை முன்னணி" (Nடுகுவு) என மாற்றிக் கொண்டனர் அதன்காரணமாக அந்த இயக்கத்துடனும் நாம் அரசியல் ரீதியான தொடர்புகளைத் துண்டித்திருந்தோம். ஆனால் தனிப்பட்ட முறையில் அனைத்து இயக்க உறுப்பினர்களுடனும் நட்புடன் உறவாடி வந்தோம்." என்கின்றார்.

"பிற்போக்கானதும், அடைய முடியாததுமான "தமிழ் ஈழம்" என்று பிரயோகிப்பதற்கு, சொல்வதற்கு அருகதை மணியண்ணைக்கு கிடையாது. முற்போக்கானதும் அடையக் கூடியதுமான ஒரு அரசியலை முன்னெடுத்துக் கொண்டு செல்லாத படுபிற்போக்கான அரசியல். புலியெதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட, இலங்கை அரசு ஆதரவை அடிப்படையாகக் கொண்ட படுபிற்போக்கான கூற்று. "தமிழ் ஈழம்" முற்போக்கானதா இல்லையா என்பதை, அதன் வர்க்க அரசியல் தான் தீர்மானிக்கின்றது. "தமிழ் ஈழம்" அடைய முடியுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதும், அதன் வர்க்க அரசியல்தான். வர்க்க அரசியலை முன்னெடுக்காத ஒருவரின் கூற்று, படுபிற்போக்கானது. "தமிழ் ஈழம்" என்ற கோசம் பற்றி தனியாக பார்ப்போம்.

 

பி.இரயாகரன்

11.07.2011